பக்கங்கள்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

வண்ணாரஸ் பட்டு கட்டி

வண்ணாரஸ் பட்டு கட்டி


டைலாமோ டைலாமோ, நாக்க மூக்க, மச்ச மக தந்நவாக (ஆத்திச்சூடி) போன்ற புரியாத வார்த்தைகளைத் தன் பாடல்களுக்கு மையமாகக் கொண்டு இசையினூடே அதைப் பிரபலபடுத்த தெரிந்தவர் விஜய் அந்தோணி. அண்மையில் திரையேறி பரபரப்பாக இயங்கும் பாடல்களில் ஒன்று விஜய் அந்தோணியின் “மேரே பியா”. ஏதோ இந்தி சொல் மாதிரி இருக்கேன்னு இந்தி தெரிந்த நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்னாரு – “என் அன்பே” என்று.

விருவிருப்பான பாட்டு. கேட்கும் போதே கை கால்களை ஆட்டத் தோனும் வகை.




இசை, வரிகள் முக்கியம் என்றாலும் இந்த பாட்டுக்குக் கண்டிப்பாக பாடகரின் குரல், தொணி இரண்டும் பிரதான பலம்.

நான் கேட்டு எனக்கு இனித்த பாடல், உங்களுக்கும் இனிக்கும் என்ற எண்ணத்தில் இதோ!

(இதுவரை கேட்டிராதவர்களுக்காக மட்டும்)

நினைத்தாலே இனிக்கும் ~ விஜய் அந்தோணி



யூ நோ லேடிஸ், இட் ஸ்டார்ட் தி ஷோ ஒப் ரியல் லவ்.. மேரே பியா! எஹா
(You know ladies, it starts the show of real love… merre piya! Eh ha)
பும்பா அலக்கடி பும்பா... பும்பா அலக்கடி பும்பா

வண்ணாரஸ் பட்டு கட்டி மல்லிப்பூ கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா

அவ முந்தான பூவ கண்டு என் உயிரு புட்டுக்கிச்சு
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா

மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா

வண்ணாரஸ் பட்டு கட்டி - பட்டு கட்டி
மல்லிப்பூ கொண்டை வெச்சி - கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா

சோ... ஃபோ சக்குரியா
சீ... ஃபோ லக்குரியா
சொல்லு, குத்த வெச்சி குத்திக்கவா சொல்லுடி என் லதா... வனிதா... தா....தாதாதாதாதா

உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் down down
hock down hock down hock down hock down


உன்னுடைய பேச்சினிலே ringtoneகள் down down
hock down hock down hock down hock down


உன் விழியின் போதையிலே டாஸ்மார்க்கே down down
hock down hock down hock down hock down


மயிலே உன் மாராப்பில் மல்கோவா down down
hock down hock down hock down hock...


மேரே பியா - பிரியா
மேரே பியா பியா ஹோ
மேரே பியா - freeயா
மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா

வண்ணாரஸ் பட்டு கட்டி - பட்டு கட்டி
அல்லிப்பூ கொண்டை வெச்சி - கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா

பளபளக்குது உன் மேனி கண்ணாடி down down
hock down hock down hock down hock down


ராத்திரி நீ கண் முழிச்சா நட்சத்திரம் down down
hock down hock down hock down hock down


பக்கத்துல நீ வந்தா pulse rateடு down down
hock down hock down hock down hock down


ஒன்ன பாத்த நாள் முதலா full mealsசு down down
hock down hock down hock down hock...

மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா

வண்ணாரஸ் பட்டு கட்டி - பட்டு கட்டி
அல்லிப்பூ கொண்டை வெச்சி - கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா




படம் சன் பிக்ச்சர் வெளியீடு. விளம்பரம் செய்ய தெரிந்த மிகச் சிறந்த நிறுவனம். அதை நிரூபிக்கும் வண்ணம் சன் மியூசிக்கில் தனது சேட்டையை இம்முறையும் காட்ட மறக்கவில்லை. அடிக்கடி இந்த பாட்டை ஒளிபரப்புவதும், அதைப் பாதியிலேயே நிறுத்தி மக்களின் ஆவலைத் தூண்டுவதுமாய்.



பாட்டு வரிய கேட்கும்போது, “நான் சிரித்தால் தீபாவளி” வகையில் சிவப்பு விளக்கு, ஜிகு ஜிகு பியூட்டிகள் என காட்சி அமைப்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இல்லை. இசையில் இருந்த வேகம் விருவிருப்பு நெருப்பு - எதிர் பார்த்த அளவுக்கு நடனத்துல இல்ல. பிருத்துவியும் ப்ரியாமணியும் ஆடுறாங்க. அவங்கள குத்தம் சொல்லி குத்திக்க முடியாது. அவங்களால முடிஞ்சத ஆடி இருக்காங்க. அதனால பாவம், காமிராவும் எடிட்டிங்கும் கூட சேர்ந்து நடனம் ஆட வேண்டியதாச்சு.

ஞாயிறு, 24 மே, 2009

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது

பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது





பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது

யாரு நம்ம இங்கு தடுக்குறது...

ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ!


ந்த பாட்டு வரிய படிச்சதுமே இது அந்த படம் தான்னு கண்டுப்புடிச்சி இருப்பிங்க. இருந்தாலும் கடமைக்குச் சொல்லிக்கிறேன். ஆமா, குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்.


நேத்திக்குத்தான் பார்த்தேன், தியேட்டர்க்கு எல்லாம் போகல. வீட்டுலேயே, திருட்டு டிவிடியிலத்தான்.

படம் தொடக்கத்திலேயே ரொம்ப பில்டப்பு போடுறாங்க. ஏதோ அசம்பாவிதம் நடந்திட்ட மாதிரியும், ஊரே அழுதுட்டு இருக்கிற மாதிரியும் காட்டுறாங்க. எழவு வீட்டுல பேசிக்கிற மாதிரி சில வசங்கள் ஓட, நமக்கு ஓரளவு ஊகிக்க முடிஞ்சிடுது. காதல் தோல்வி, இல்ல சாதி கலவரம். கிராமத்துக் கதைன்னா வேறென்ன புதுசா யோசிச்சிடப் போறாங்க?

கடந்த காலத்துல என்னதான் நடந்திருக்கும் என்பதை நாம யோசிக்கிறதுக்குள்ளாகவே, ஒரு நண்பன் மூலமா, அவன் பழச அசைப் போடுவதாய் நமக்கு கதைய சொல்றாங்க.

குசேலன் (ராமகிருஷ்ணா)– துளசி (தக்சனா). இவங்க ரெண்டு பேரும் தான் கதையில வர்ற காதலர்கள். குசேலன் அசப்புல பாண்டியராஜன ஞாபகப் படுத்துறதாலேயே என்னவோ, நம்ம பாண்டியராஜனோட “வந்தனம், வந்தனம்” பாட்டோட அவருக்கு அறிமுகம் தராங்க. துளசி அப்படியே சினேகாவையும் ஷ்ரேயாவையும் கலந்து செஞ்ச கலவை.

சரி கதைக்குப் போகலாம்

குசேலனுக்கு ஓர் அம்மா. அப்பா யாரு, இருக்காறா, இல்லையான்னு சரியா சொல்லல, அது முக்கியமாவும் தெரியல. ஊர்ல சதா லொட லொடன்னு ஏதாச்சும் வம்பு பண்ணுற செமி-வில்லன் கேரக்டர் அம்மாவுக்கு.

துளசிக்கு அம்மா அப்பா இருந்தும் இல்லாத நிலை, வயதான பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறாள். பாட்டிக்கு இந்த வயசுலத்தான் வாழ்வு வந்திருக்கு, செண்டிமெண்டல்ல செம்மையா கலக்குறாங்க. இந்த வயசுல கோடம்பாக்கத்துல ஒரு ரவுண்டு வந்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லை.



குசேலன் படிக்கும் பள்ளிக்குப் புதிதாய் சேர்கிறாள் துளசி. ஆண் நண்பர்களோடு சகஜமாய் பழகுபவள். உன்பெயர் என்ன என ஒருவன் வழிந்து கேட்கும்போது, தயக்கமோ அல்லது (பெண்களுக்கே உரிய) பந்தா/திமிரு/நாணம் இல்லாமல் ‘தொளசி’ என்று சொல்லிவிட்டு லேசாக புன்னகை காயாமல் பார்ப்பதில் பளிச்சென்று அவளது கதாப்பாத்திரத்தைச் சித்தரிக்கிறார்கள். படிப்பில் கெட்டி, விளையாட்டிலும்.

குசேலன், நம்ம ஹீரோ, படிப்பில மந்தம். பிட்டு அடிச்சி பாஸ் பன்ற கேஸ். ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன், என்று குதூகலித்து ஓடி வரும் குசேலனை, அம்மா கேட்கிறார் “காப்பி அடிச்சி தானே ராசா பாஸ் பண்ணே”ன்னு. இந்த கிண்டலுக்குப் பிறகு இயக்குனர் ராஜமோகனின் பெயர் உதயமாகுது.
ஒருதலையாக துளசியைக் காதலித்து பின் அவளைச் சம்மதிக்க வைப்பது சுவாரசியம். காதலிக்கும் போது இவங்களும் அவங்க கடமைக்கு நிலாவுக்குப் புதிய அர்த்தம் ஒன்னு சொல்லுறாங்க. காதலியத் தேடித்தான் நிலா பூமிய சுத்தி வருவதாய்.

முதல் பாதி படு சுவாரசியமா ஓடுது. பசுமையாய், இளமையாய், துள்ளலாய், நிதர்சனமாய், யதார்த்தமாய். இரண்டாம் பாதி அழுகை, கொடுமை, அசிங்கம் என செம்ம ஜவ்வு.

பட்டணத்தில் தினத்திருடனுக்கு வாக்கப் படுகிறாள் துளசி, என்று கதையில் திருப்பம். அங்கு அவள் படும் சங்கடங்கள் கணவனால் ஏற்படும் நிந்தனைகள் எல்லாம் கடுப்பு. விசயம் அறிந்த குசேலன், தேவதாசாய் மாறுகிறான். ‘ஆட்டோகிராப்’ சேரன், ‘காதல்’ பரத், ‘7ஜீ’ ரவிகிருஷ்ணா - இப்படி ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். சிறையில் கணவன் அகப்பட்டதும், துளசி கிராமத்துக்கே வந்து விடுகிறாள். அவளை ஏக்கத்தோடு காண ஓடி வரும் குசேலனைப் பார்க்க மறுக்கிறாள். அப்போது கூட அவளது மனப்பாட்டை சரியாக சொல்லவில்லை.



ஒரு கட்டதில், “அவன் செத்திருந்தாலும் என்ன பார்க்க வந்துருக்கனும், பாட்டி” என்று குமுறுவது அவளின் பக்குவப்படாத குழந்தை மனதைச் சித்தரிக்கிறது.

துளசியின் கணவனை வெளியே மீட்டு வர குசேலன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தியாகி காதலனின் வழக்கமான சினிமாத்தனம். Kira இவரு ரொம்ம்ம்ம்ப நல்லவராம்.

நாய் வாலு சும்மா இருக்குமா? வெளியே வந்ததுமே கணவன் ஒரு கொலை செஞ்சிடுறாரு. குசேலன் அதை தான் செஞ்சதா பலிய ஏத்துக்கிறாரு. ஊர் மக்கள் குசேலனை அடியா அடிச்சு துவைச்சி எடுத்துடுறாங்க, அப்புறமா போலிஸ் கூட்டிட்டு போகுது.

குசேலனின் இந்த தியாகத்தினால், எங்கே தனக்கு அவன் மீது காதல் கூடிவிடுமோ என்ற அச்சத்தில், கணவனைக் காட்டிக் கொடுக்க ஓடுகிறாள், துளசி. வாகனம் மோதி சாகிறாள்; குசேலன் போலிஸ் வண்டியிலிருந்து அதைப் பாஎத்துக் கொண்டே துவைத்த துணியாய் துவண்டு மாய்கிறான். இப்படி கதை முடிகிறது.

கதை புதுசு இல்லைன்னாலும், முதற் பாதி அமைந்த விதம் நம்மை கௌவி இழுக்குது. ராமகிருஷ்ணா ஆட்டத்திலும் நடிப்பிலும் டப்பிங்லயும் வெளுத்து கட்டுறாரு. ஹீரோயிஸம் அவ்வளவா தெரியல. தக்ஷ்னாவும் நல்லாவே பண்ணிருக்காங்க. அழுகைய குறைச்சிருக்கலாம், சரி அவங்க என்ன பண்ணுவாங்க, எல்லாம் இயக்குனர் சொல்ற மாதிரி தானே செய்யனும். அழுகையின் உச்சத்துக்கு போய் பின் சந்தோசத்த முகத்தில் கொண்டுவரணும். அந்த கட்டத்துல கொஞ்சம் சிரமம் பட்டிருக்காங்கன்னு நல்லாவே தெரியுது. யாருக்கும் ஒப்பனை அதிகமா இல்லை.

குசேலன் துளசியை விட சில செண்டிமீட்டர் குள்ளம் தான், ஆனால் இதை ஆசியமாகக் கூட சுட்டிக் காட்டலை. (ஏன், சூர்யா கூட சிம்ரன விட குள்ளமா தானே இருந்தாரு, ‘ஏங்கினேன் ஏங்கினேன்’ பாட்டுக்கு துரத்தி துரத்தி டூயட் பாடுலயா! ஹிஹிஹி...)

இரண்டாம் பாதியில் என்ட்ரீ ஆகிற துளசியின் கணவரும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குறார். அவரோட அக்கா பாகம் கொஞ்சம் நெருடலா இருக்கு

படத்தின் இசை, யுவனின் வழக்கமான ரகம் தான். “சின்னஞ் சிருசுக மனசுக்குள்” பாட்டு மனச அள்ளுது. பருத்தி வீரன் படப் பாடலை ஞாபகப் படுத்துது.

“கடலோரம் ஒரு ஊரு” என்ற பாட்டு ஆடியோவில் ரெண்டு பேரு தனித்தனியா பாடி இருந்தாங்க. யுவன் பீலிங் பிச்சிக்கிற அளவுக்குப் பாடி இருப்பாரு. சரண் ரொம்ப கூலா பாடி இருப்பாரு, இதுல எது திரை ஏறும் என்ற கேள்வி இருந்துக்கிட்டே இருந்திச்சு. ரொம்ப சாமர்த்தியமா, முதல் பாதி பாட்டு யுவன் குரல்லயும் ரெண்டாவது பாதி சரண் குரல்லயும் போட்டிருந்தாங்க.

கனவு பாடலகள் இல்லாததும் கவர்ச்சி இல்லாததும் ஆரோக்கியமான விசயங்கள். ரெட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் அதைக் கொச்சையாக தராத வரை பாராட்டலாம். காதலர்கள் முத்தம் பரிமாறிக் கொள்வதை மேகம் நிலவை மூடுவதைக் கொண்டு உவமானம் செய்திருப்பது கவிதை. (இது ஏற்கனவே வேற படங்கள்ல வந்திருக்கான்னு தெரியல)

குசேலனைச் ‘கொச்சி’ என்றும் துளசியைத் ‘தொளசி’ என்றும் அழைப்பதும், ஏதோ பகத்து வீட்டில் நடப்பதைப் போன்ற உள்வாங்கலைக் கொண்டுவருகிறது.


அதென்னவோ, கடைசியில காதலர்களைக் கொன்னுட்டா படம் வெற்றி அடைஞ்சிடும் என்ற எண்பதுகளின் senti'mental' formula இந்தப் படத்திலும் ஆளப்பட்டிருப்பது வருத்தம் தான். அண்மையில் வந்த வெண்ணிலா கபடிகுழு, பட்டாளம் போன்றவையும் பட இறுதியில் ஒரு பிரதான கதாப்பாத்திரத்தைக் காவல் கொடுத்திருக்கிறது இங்கே குறிப்பிட வேண்டிய விசயம்.


‘காதலர்கள் கொண்டாடும்’ கு.பூவும் கொ.புறாவும் அல்ல, காதலர்களைக் கொன்றாடும் ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’

வியாழன், 12 பிப்ரவரி, 2009

என்னமோ

என்னமோ

இருட்டு, குளிர். அதிகாலை ஆறு. மக்கள் கூட்டம். ஆண், பெண், இளைஞர், குமரி, பொடியன், பிள்ளை, குழந்தை, பெரியவர், கிழவர், காவல் அதிகாரி, சிறப்பு பாதுகாவல் அதிகாரி, தமிழர், ஆங்கில உரையாடல், வடமொழி பிரார்த்தனை, ரதம், காளை, வண்ணக் கொடி, முருகப்பாடல், தேங்காய் குவியல், ஆட்டக் காவடி, வேட்டி, சேலை, தாவணி, தங்க ஆபரணம், ஒப்பனை, பக்தர், வேடிக்கையாளர், அர்ச்சனை தாம்பளம், ஊதுபத்தி, சீனர், வெளிநாட்டவர், ஒளிப்படக் கருவி, ஊடகத்தார்.

ஆம், தைப்பூசத்தின் முதன் நாள், முருக ரத ஊர்வலம் விமரிசையாக அனுசரிக்கப் படுகிறது. அந்நாளைச் செட்டி பூசம் என்றும் அழைக்கப் படுவதுண்டு. இந்தியாவிலிருந்து வணிகத்தை நம்பி வந்தவர்கள் செட்டி என்ற இப்பிரிவினர். ஆரம்பக் காலங்களில் இவர்கள் துவக்கி வைத்த செட்டி பூசமானது, பிற்காலங்களில் மற்ற தமிழ் பக்தர்களாலும் வரையறு இன்றி கொண்டாடப் பட்டு வருகிறது. தைப்பூசத்தன்று வேடிக்கை பார்க்க நினைக்கும் மக்கள், வேண்டுதல் இருப்பின் அதை இந்த செட்டி பூசத்தன்றே செலுத்தி விடுபவர்களும் உள்ளனர்.

பினாங்கு மார்க்கெட் தெருவில் புறப்படும் இந்த முருகன் ரதம், பல மணி நேர பவனிக்குப் பிறகு நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயிலை அடைகிறது. ரதம் வரும் பாதைகளில் தேங்காய் உடைத்து, சாலையைக் குளுமை செய்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலையை நேர்த்தி செய்தனர். சிலர் பக்தர்களுக்குப் பானமும், அண்ணதானமும் வழங்கி புண்ணியம் தேடினர். சிலர் போட்டிக்காக தேங்காய் உடைத்தனர். வாங்கிய தேங்காயை உடைக்க ஆள்பலம் இன்றி சிலர் தத்தளித்தனர். வழக்கம்போல கொம்தாருக்கு எதிரே உள்ளே தெருவில் தேங்காய் குவியலுக்குப் பஞ்சம் இல்லை.
பொருளாதார சரிவு பக்தர்களைத் துளியும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது. அல்லது, பொருளாதார அடியை, கடவுளுக்கு முன் துட்சமாக எண்ணி விட்டனரோ என்னவோ? கல்வி நிதி என்றால் மூக்கால் அழுபவர்கள், கடவுள் நன்கொடைக்குப் பாரி வள்ளலாய் மாறுவது ஏனோ? சாமி கண்ணைக் குத்திடுமுன்னு ஒரு பயமா? கோயிலுக்கு செலவு பண்ண வேண்டாமுன்னு சொல்லலை, கல்விக்கும் அதே அளவு, அல்லது அதில் பாதியை செலவு அளிக்கலாமே?

சரி, நம்ம கதைக்கு வருவோம். சிறு சிறு மேகங்கள் சூரிய ஒளியை 11.30 மணிவரை வடிக்கட்டி அனுப்பி வைத்தன. அதற்குப் பின் அவற்றுக்குச் சோம்பல் வந்ததால் என்னவோ, வரும் என்ற எண்ணிய தூறல் ஓடி ஒழிந்துக்கொண்டது.

நண்பகலுக்கு மேல் வெயிலின் அட்டகாசம், பக்தர்களைப் பாடாய் படுத்தியது. எதற்கும் அஞ்சா நெஞ்சங்கள் முருக பக்தர்கள், தேங்காய் வீச்சில் பின் வாங்கவில்லை.

சுற்றுபயணிகளுக்கு எங்கிருந்து கிடைக்குமோ உயர்தர புகைப்படக்கருவிகள்... தோளில் ஒரு பை, அதில் வித விதமான ஒளிப்பெருக்கி லென்ஸ்கள். ஆளுக்கொன்று ஏந்திக் கொண்டு வளைந்து நெளிந்து போட்டோ எடுத்தனர். அவர்களுக்குப் போட்டியாக பத்திரிக்கையாளர்கள் மாய்ந்து மாய்ந்து போட்டோ எடுத்தனர், நமக்கா தெரியாது, எடுத்தது ஆயிரம் என்றாலும், போடப்போவது ஒன்றோ இரண்டோ...

பக்தர்கள் தார் சாலையைத் தேங்காயால் அடித்து நொறுக்கும் பணியில் திளைத்திருந்தனர், அவ்வப்போது சிறு ரக ட்ராக்டர், உடைப்பட்ட தேங்காய் பிரவாகத்தை ஒரு பக்கமாக குவித்தது. அப்போத்தானே நல்லா உடைக்கலாம். கருமமே கண்ணாய் இருந்த ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரர் மெய்மறந்து போட்டோ எடுத்து குவிப்பதில் மூழ்கி போய் இருந்தார். அதி அருகில் சென்று தேங்காய்க்கும் தார் சாலைக்கும் நடக்கும் யுத்தத்தைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வந்த ட்ராக்டரைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை, அவர் கவனித்த நேரத்தில் கால் அவர் வசம் இல்லை; ட்ராக்டரின் வட்டையின் அடியில் அது சிக்கிக் கொண்டது. பரபரப்பு. தெரித்துப் போயிருக்க வேண்டும் ஓட்டுனர், அவரது காலினை உடனடியாக விடுதலை செய்தார். வண்டியை விட்டு இறங்கி திருதிருவென விழித்தார், கலங்கி இருக்க வேண்டும், தவறு முழுக்க முழுக்க அவரோடது இல்லை என்றாலும் கூட.
அடிப்பட்டவரின் எலும்பு நிச்சயம் நொறுங்கி இருக்க வேண்டும். அவர் காலணியைக் கழற்றவே இல்லை. அவர் வலி தாங்காது பக்கத்தில் இருந்த சக நண்பர் தோளில் சாய்ந்தார். தோள் கொடுப்பான் தொழன் என்பது இதுதான் போல.

வடக்கிலும் தெற்கிலும் ஏகப்பட்ட நெரிசல், அம்புலன்ஸ் கூட்டி வருவது அசாத்தியமே, மிதித்த ட்ராக்டரே பரிகாரத்தைத் தேடிக்கொண்டது. அவரை அதிலேயே ஏற்றிக் கொண்டு முதலுதவி இடத்துக்குக் கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவரை வேறொரு சாலையில் பார்த்தோம், காமிராவில் அதே தேங்காய் உடைக்கும் அழகைப் பதிவு செய்துக் கொண்டிருந்தார். என்ன கடமை உணர்ச்சி. காலுக்கு ஒன்னும் ஆகலையா? நிச்சயம் கடவுளின் கிருபை என்றே முழங்கி இருப்பார்.

பிறகு உச்சி வெயில். சிவன் கோயிலுக்கு முன் சன்வே விடுதியின் அன்னதான பந்தல். “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” என்ற பக்தி பாடல், புதிதாய் மீள்கலவையில் (ரீமிக்ஸ்) அதிதுரித இசையில் எல்லா பந்தல்களிலும் துள்ளிக் கொண்டிருந்தது. அதிலும் வேடிக்கை, ஒரு நாடோடி வகை பாடல் ஹிப்ஹோப் ரகமாய் மாற்றப்பட்டிருந்தது. இடையிடையே, ரேப் (ஏகாரத்தைத் தவறாக உச்சரித்தால் நான் பொறுப்பிலை) குரல். என்ன கொடுமடா சாமி. (“ஏரிக்கரை ஓரத்திலே, தோசை ஒன்னாங்க, தோசை ரெண்டாங்க” இப்படித்தான் வரும்ன்னு நினைக்கிறேன், அந்த பாட்டு). இன்னொரு விசயம், முதல்ல 4 பையனுங்கத்தான் இந்த பாட்டுக்கு ஆடிச்சு இருந்தானுங்க, அப்புறமா ரெண்டு பொன்னுங்க வந்திச்சுங்க, சுமார் 15-16 வயசு இருக்கும். நெருப்பாட்டம். அதுங்கள பாத்துட்டு, கொஞ்ச நேரத்துல பசங்க குமிஞ்சிட்டாய்ங்க. எல்லார் பார்வையும் அங்கேதான். நல்லவேளை, முதல்ல சொன்ன கடமையான புகைப்படக்காரர் அங்கில்லை, இருந்திருந்தால் எல்லார் மானமும் கப்பல் ஏறியிருக்கும்.

மதியத்துக்கு அப்புறம் நான் வீடு திரும்பிட்டேன், கூட்டாளிங்க எல்லாம் அங்கேயே தங்கி மறுநாள் தான் கிளம்பி வந்தானுங்க, மிச்ச கதைய அவனுங்க கிட்டத்தான் விசாரிக்கனும்.

என்னவோ எழுத வந்து என்னமோ எழுதி முடிச்சிருக்கேன், அதனால தலைப்பு, “என்னமோ”ன்னே வெச்சிக்கலாம், தப்பில்லையே?














புதன், 4 பிப்ரவரி, 2009

இந்த தாகம் பெருசு...

இந்த தாகம் பெருசு!

தாகத்துக்குத் தண்ணி குடிக்கிறோமா? இல்ல சுகத்துக்காக குடிக்கிறோமா? இப்படி ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் போலுக்கு... ஏன்ன்னு கேக்குறிங்களா? படையே நடுங்கும்ன்னு சொன்னாங்க பாம்ப பத்தி. இங்க பாம்பையே படியெடுத்து உறிஞ்சி குடிக்கிறாங்க... திடமான மனம் உள்ளவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்...

பாம்பு வைன் என்பது ஒருவகை மதுபானம். ஒரு கண்ணாடி குடுவைக்குள் விஷம் பொருந்திய ஒரு முழு பாம்பு அடைக்கப்படுகிறது. இதுவகை பானம் வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்டு தென்கிழக்காசிய பல இடங்களில் கிடைக்கப் பெறுகிறது. பாம்புகள், குறிப்பாக விஷம் பொருந்தியவை, பெரும்பாலும், இறைச்சிக்காக பதம் செய்யப்படுவதில்லை. அவற்றின் விஷத்தை மதுபானத்தில் சேர்ப்பிக்கவே அவை பதப்படுத்தப் படுகின்றன. இருப்பினும், பாம்பின் விஷமானது புரதம் கொண்டிருப்பதால், அவை விரிக்கப்பட்டு (unfolded) செயல் இழந்து கிளாவு இழி (inactivate) நிலை அடைகின்றன. இதற்கு காரணம் எதனோலினால் (ethanol) ஏற்படும் இயற்கை நீக்கத்தின் (denaturation) தாக்கமாகும்.
(பாம்பு படம் எடுக்குது... உசாரய்யா உசாரு)


ஒரு பெரிய விஷப்பாம்பை ஒரு சுண்டக் கஞ்சிக்கான கண்ணாடி ஜாடியில் புகுத்துகின்றனர். பெரும்பாலும் அதனோடு சிறுவகை பாம்புகளும், ஆமைகளும், பூச்சிகளும், பறவைகளும் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப் படுகின்றன. இவ்வகை வைன்கள், நலம் ஊக்கி அல்லது உற்சாக பானமாக சிற்றளவில் பருகப் படுகின்றன.


பாம்பின் உடல் திரவங்கள் வைனில் கலக்கப்பட்டு, அது உடனேயே சிற்றளவில் பருகப்படுகிறது. பாம்பின் குருதி-வைன் எப்படி தயாரிக்கப் படுகிறது? பாம்பின் தசைப் புடைப்புகள் அரியப்பட்டு, அதிலிருந்து வழியும் குருதி சேகரிக்கப் படுகிறது. பிறகு அதைத் தூய எதனாலோடு அல்லது சோற்று வைனோடு (சுண்டக்கஞ்சி???) சேர்த்து கலவைக் கிடங்கில் கலக்கப்படுகிறது. இதே செய்முறையில் பாம்பின் பித்தப் பையிலுள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம்தான் பாம்பு பித்தநீர் வைன். பாம்பின் இறைச்சி, கல்லீரல், மற்றும் தோளால் ஆன உணவுப் பண்டங்கள் இந்த பானத்தோடு சேர்த்து உண்ணப் படுகின்றன.




(வெள்ளைக்கார பெருசு, குடிச்சிட்டு உசுரோட இருந்தியா?)

மேற்கண்ட செய்தி உண்மையா பொய்யான்னு என்னைக் கேட்காதிங்க... பன்னனுப்பி மடல்ல எனக்கு வந்திச்சு, இங்கே போட்டேன்... அவ்வளவுதான்

மொழியில குத்தம் குறை இருந்தா, கீழே மறுமொழியிட்டு குமுறுங்க...

புதன், 28 ஜனவரி, 2009

இரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்பு



இரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்பு


25 ஜனவரி 2009, ஞாயிறு. ஞாயிறைத்தான் தெளிவாகக் காண முடியவில்லை. வானம் மப்பும் (அதற்கு யார் ஊற்றிக் கொடுத்ததோ) மந்தாரமுமாய் சிறுசிறு தூறல்களைச் சிந்திக் கொண்டிருந்தது. அதென்ன மாயமோ மர்மமோ தெரியல, பதிவர் சந்திப்புன்னா, மழையும் அழையா விருந்தினராய் வந்திடுது.

மதியம் இரண்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, மூன்றுக்குத் துவங்கியது. அடிச்சி புடிச்சி ரெண்டு மணிக்கெல்லாம் ஏ.ஆர்.ரகுமான் உணவகத்துக்குப் போயிட்டேன். அங்க, விக்னேஷ் சொன்ன தமிழியல் நடுவம் இருக்கிற அறிகுறி ஏதும் தெரியல. சுத்தி சுத்தி மோட்டர்ல ஊர்வலம் அடிச்சி, அப்புறமா விக்னேசுக்குப் போன் பண்ணேன். அவர் சொன்னாரு, “நீங்களாவாது ஏ.ஆர்.ரகுமான் கடை வரைக்கும் போயிட்டீங்க, நாங்க இன்னமும் ஏ.ஆர்.ரகுமான் கடையைய தேடிட்டு இருக்கோம்.” இதுக்கு ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே... என்ன அது?

சரின்னுட்டு பைக்க ஓரமா நிப்பாட்டிட்டு அவங்களுக்குக் காத்திருந்தேன். பாரிட் புந்தார் (பேராக் மாநிலம்) நகரத்துல சீனப் பெருநாளுக்கான எந்த அலட்டலும் பாதிப்பும் தெரியல. ஒருவேளை அங்கே சீனர்கள் அதிகம் இல்லையோ என்னவோ.

இதற்கிடையில், கடையில் தமிழர்கள் கொஞ்ச பேரு கூட்டமா அமர்ந்து உணவருந்திக்கிட்டு இருந்தாங்க. அவங்க இவங்களா இருக்குமோ? போய் பேச்சு கொடுக்கலாமா? இவங்க அவங்களா இல்லாட்டி? அவங்கக்கிட்ட நீங்க அவங்க தானேன்னு கேட்டு அவங்க நீங்க எவுங்கள அவங்களானு கேட்குறிங்கன்னு கேட்டு குழப்பிட்டா? இப்படி தெளிவாக ஆய்ந்து, சிந்தித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன...? மனம் படர் தாமரையாய் விரிந்தது, சிந்தித்த மூளையை மெச்சியது.

பார்வை எதிரே வந்த மகிழுந்தின் மீது பாய்ந்தது. நான்கு பேர், உள்ளிருந்து விக்னேஷ் கையசைத்தார். அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து உணவகத்தின் உள் வரவேற்பு நடந்தது. தரை சிவப்பு நிறமுங்க. விக்னேஷ், து.பவனேஸ்வரி, குமரன், மற்றும் இன்னொரு புதிய நண்பர் வந்திறங்கினர்.

முன்னம் கடையினுள் பார்த்த தமிழ் அன்பர்கள், சந்திப்புக்காக வந்தவர்களே. தெளிவாகச் சொன்னால் – ‘அவங்க’த்தான். மதிய நேரம் இல்லையா, பசிக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தனர். நான் வீட்டிலேயே போதுமெனும் அளவுக்கு நிரப்பியதால், அங்கே சாப்பிடவில்லை. து.பவனேஸ் உண்ணாவிரதம் (அரசியல் நோக்கான்னு தெரியல). கிட்டிய சில நிமிடங்களில்கூட ஏதோ ஒரு நூலை வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டிருந்தார். படிக்கிற புள்ளைங்க.

அனைவரும் உண்டு மகிழும் வரை காத்திருந்தோம். அப்போது உணவருந்திய நம் பதிவர் நண்பர்களின் கட்டணச் சீட்டை ஒருவர் மர்மமாகச் சேகரித்து தாமே செலுத்துவதாக உணவக ஊழியரிடம் கிசிகிசுத்தார். அவர் வேறு யாரும் அல்லர், கோவி. மதிவரன் தான். கோவி நீங்க நிஜமாவே ரொம்ம்ம்ம்ப ரொம்ப நல்லவருங்க.

ஏற்கனவே சிலர் வந்திருக்க, மேலும் ஒரு சிலர் வந்தவுடன் சுப.நற்குணனின் ஆசியால் தமிழியல் நடுவத்துக்கு விரைந்தோம். உணவகத்தை அடுத்து இரண்டு கடைகள் தாண்டி, மூன்றாவது மாடியில் அந்த அறை.

வளமையான மேசை, நாற்காலி, குளிரூட்டி, ஒளிப்பெருக்கித் திரை என அமர்க்களமாக இருந்தது அந்த அறை. திரும்பும் திசை எல்லாம் ஆளுயர சுவரொட்டிகள். திருவள்ளுவரும் வல்லளாரும் கம்பீரமாக ஆங்காங்கே பொன்மொழிகளோடு வீற்றிருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு (ஒலிப்பதிவு வடிவில்) நிகழ்வு தொடங்கியது.

“கும்பிடப் போன தெய்வம்......“ என்ற ஒரு சினிமா பாடலில், முதலில் மெதுவாக ஆரம்பமாகி, “என்னடா இழுவ” என்ற மிரட்டலுக்குப் பிறகு, விறுவிறுப்பாக பாடல் தொடரும் இல்லையா? அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, ஓரிரு செய்யுள்கள் நிறுத்தி நிதானித்து வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டி ‘தொபக்கட்டி’யென சரிந்து விழுந்து கலவரத்தை ஏற்படுத்த, தமிழ்த்தாய் வாழ்த்தும் சூடு பிடித்து விறுவிறுப்புடன் இசைந்தது. (எதுக்கு எத முடிச்சி போடுறதுன்னு விவஸ்த இல்ல – அப்படின்னு நீங்க திட்டுறது காதுல விழுது, மனசுல பட்டத சொன்னேன், அவ்வளவுதான்....) எழுச்சியான வரிகள், ஆர்ப்பாட்டம் இல்லாத இசை. நண்பர்கள் சிலர் பாட்டோடு சேர்ந்து முணுமுணுத்தனர். இதற்கு முன் இப்பாடலைக் கேட்டதாய் ஞாபகம் இல்லை, ஏற்பாட்டு குழு இந்தப் பாடலை இணையத்தில் எப்படி பெறுவது என சொன்னால் நலம்.

அவைத் தலைவராய் கி.விக்கினேசு பொறுப்பேற்றி இருந்தார். நான் இதை சொல்லியே ஆகனும் (உபயம்: ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா) - கி.விக்கினேசு வேறு, விக்னேஷ்வரன் அடைக்கலம் வேறு. கி.விக்கினேசுவும் ஒரு பதிவு எழுதி வருகிறார். கவிதை பிரியர். அவர் பேசும்பொழுது மலேசிய செய்தி வாசிப்பு புகழ் பாண்டிதுரையின் தமிழ் உச்சரிப்பு பாணி ரொம்பவே எட்டிப்பார்த்தது. அழுத்த திருத்தமாக. முக சாயலும் லேசாக சந்தேகத்தைக் கிளப்ப, நிகழ்ச்சி முடியும் தருவாயில், அருகே சென்று கேட்டேன், நீங்க பாண்டிதுரையின் ரசிகரா என்று.... “ஆம்” என்று சொல்லி இருந்தால், உங்களுக்கு அவர் சொந்தமா என்று புரளியைக் கிளப்பி இருக்கலாம். சிரித்துக் கொண்டே அப்படி எல்லாம் இல்லை என சொல்லி நழுவி விட்டார். அடுத்த முறை பேட்டி எடுத்திட வேண்டியதுதான்.

வரவேற்புரை வழங்கியவர், திரு சுப. நற்குணன். நிறைய செய்திகளையும், கருத்துகளையும் பக்குவப்பட்ட பேச்சாளர் பாணியில் பகிர்ந்துக் கொண்டார். வலைப்பூக்களுக்கு சிலர் வைத்துள்ள வேடிக்கையான அல்லது காலித்தனமான பெயர்களைச் சுட்டி வந்திருந்த செம்பருத்தி இதழின் ஒரு கட்டுரையைப் படித்துக் காட்டினார். சிரிப்பலை பொங்கியது.

தமிழ்ப்பதிவர்களின் வலைப்பதிவுகளைச் சுமந்து பவர்பாயிண்ட் படைப்பு ஒன்று கணினித்திரையில் காட்டப்பட்டது. அதைச் சேகரித்தமைக்கும், ஒவ்வொரு பதிவுக்கும் கவிதையான அறிமுகத் தலைப்பு இட்டமைக்கும் நிச்சயம் ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்டியே தீரவேண்டும்.

பிறகு வழக்கம் போல அறிமுகச் சுற்று. ஒருவர் பின் ஒருவராக அறிமுகம். ஏறக்குறைய முப்பது பேர் கொண்ட கூட்டம். பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர் கல்லூரி மாணாக்கர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசு அதிகாரிகள்/ஊழியர்கள், பொது சேவையாளர்கள், தனியார் ஊழியர்கள் என பல தரப்பட்ட பதிவர்களும், பதிவ எண்ணம் கொண்டிருந்தோரும் அதில் அடங்குவர். போம்பா ரவியின் ஆய்வுக் கட்டுரை, தமிழ்மாறனின் குழந்தைகளுக்கான வலைப்பூ, இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முன் கருத்தை மட்டுறத்த வேண்டுமா என்ற பல ஐயங்களும், கேள்விகளும் வெளிக்கொணரப் பட்டன. (குறிப்பெடுக்க இயலவில்லை, எல்லார் பேசியதையும் நினைவில் வைக்க முடியவில்லை, வருந்துகிறேன்)

சிறப்புரை ஆற்றியவர் “மலேசிய இன்று” சி.ம.இளந்தமிழ். அப்பப்பா, என்ன தன்னடக்கம். இயன்றவரை தூய தமிழில் தகவல் தொழில்நுட்பத்தை அவர் பேச முற்பட்டது போற்றுதலுக்கு உரியது. பல விசயங்களைத் தடையின்றி மறைவின்றி பகிர்ந்துக் கொண்டார்.

விக்னேஷ்வரன் முந்தைய சந்திப்பின் மணித்துளிகளைப் பகிர்ந்துக்கொண்டார். உள்ளூர் நாளிதழில் தனக்கு நடந்த கசப்பான சம்பவத்தைச் சொன்னார். இணைய ஊடகத்தின்பால் அச்சு ஊடகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைக் கோடி காட்டினார்.

பிறகு விக்னேஷ்வரன் அடைக்கலம் சில நிமிட ஆசானாக வேடம் பூண்டார்; கையில் பிரம்பு தான் இல்லை. புதிதாய் வலைப்பதிவு துவங்க எண்ணும் அன்பர்களுக்கு வழிகாட்டினார்.

(நன்றி: புகைப்படம் - மலேசிய இன்று)


பிறகு சிறு அளவளாவல். சிரித்த முகத்தோடு முடிவுரை வழங்கியவர் ரொம்ப நல்லவர் - கோவி மதிவரன். திருக்குறள், செய்யுள் என அவரது உரை மிளிர்ந்தது. இவரது வலைப் பதிவில் கேள்வி அங்கம் இருக்கிறதாம். நண்பர்களே, கேள்வி இருந்தால் உடனே இவரை நாடுவோம். (விவேக் கேட்பது போன்ற ‘தாஸ்’ கேள்விகள் கேட்பதாயினும் கோவி கோவிக்காமல் பதில் சொல்லுவார்)

பிறகு விடை பெறும் நேரம். சுப நற்குணன் அனைவருக்கும் தமிழ் நாட்காட்டியையும், ‘நாள் வழிபாடு’ என்னும் கையடக்க நூலையும் அன்பளிப்பாக அளித்தார். அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டேன்.

து.பவனேஸ் அந்த கவிதாவைக் கூட்டி வரவே இல்லை, கேட்டதுக்கு அவரது தோள்பைக்குள்ளே இருப்பதாய் சொல்லி ஏமாற்றி விட்டார். விக்னேஷ் அடைக்கலத்திடம் இம்முறை அதிகமாகப் பேச முடியவில்லை. சென்ற முறை சந்தித்த பதிவ நண்பர்கள் டாக்டர் சிந்தோக், மு.வேலன், இனியவள் புனிதா, கவிஞர் பிரான்சிஸ், மூர்த்தி முதலியோர் மிஸ்ஸிங். விவேகானந்தர் சதீசு, தேடுபவன், மைஃப்ரண்ட் அனுராதா, ஆய்தன் போன்றோரை இம்முறையும் காண முடியவில்லை.

(எனது கட்டுரையில் ஏதும் அங்கம் அல்லது கருத்து விடுபட்டிருப்பின் அது எனது ஞாபக மறதியே தவிர, இருட்டடிப்போ அல்லது நுண்ணரசியலோ அல்ல.)

மேலும் விபரம் அறிய ஏனைய நண்பர்களின் வலைப்பதிவையும் வலம் வரவும்.

இந்த கட்டுரையைப் பொறுமையுடன் வாசித்தவரா நீங்கள்? அப்படியானால், உடனே கீழே ஒரு மறுமொழி இட்டு உங்கள் வருகையை அம்பலப் படுத்துங்கள்.

வெள்ளி, 23 ஜனவரி, 2009

உளறல் (2)

நீ
பாறையாய் பார்ப்பாரற்று கிடந்தேன்
என்னில் சிற்பம் செதுக்கினாய் நீ


தண்ணீராய்த் தவழ்ந்திருந்தேன்
மின்சாரம் கொணர்ந்தாய் நீ


பஞ்சாய் பறந்துத் திரிந்தேன்
ஆடையாய் நெய்தாய் நீ


சுண்ணாம்பாய் மதிப்பற்று கிடந்தேன்
என்னை முத்தாக்கி மெருகூட்டினாய் நீ


மணிகளாய்ச் சிதறி கிடந்தேன்
மாலையாய்த் தொடுத்தாய் நீ


கரிமம் என்று நகைத்தனர் பலர்
அதில் வைரத்தை ஊற வைத்தாய் நீ


சொற்களாய் மட்டும் இருந்தேன்
கவிதையாய் அடுக்கினாய் நீ


என்னுள் எனைத்
தேட வைத்தாய் நீ


தேடுகிறேன்


என் தேடலின் இறுதி வரை
காத்திருப்பாயா நீ...

புதன், 21 ஜனவரி, 2009

அப்பா அம்மா வீட்டில் இல்ல...

அப்பா அம்மா வீட்டில் இல்ல...
- பாட்டு உருவான கதை


ப்பா அம்மா ரெண்டு பேரும் கூட்டாளி சாவுக்குப் போயிட்டாங்க. போயிட்டு வர குறைஞ்சது ரெண்டு மூனு மணி நேரமாவது ஆகும். லில்லுக்கு வீட்டுல தனியா இருக்க ஒரே போர். என்ன பன்றதுன்னே தெரியல. நெட் முன்னுக்குப் போய் உட்கார்ந்தாள். யாரும் ஆன்லைன்ல இல்ல. மறுபடியும் கடுப்பு. திடீரென ஓர் இளிச்ச வாயன் ஆன்லைன்ல வந்தான். பேரு வில்லு. அவன் யாருன்னே சரியா ஞாபகம் இல்ல. சும்மா அவனுக்கு தண்ணி காட்ட ப்ளான் போட்டாள்.
பசங்க ஆவல தூண்டி வேடிக்கை பார்ப்பதே இந்த பொண்ணுங்க வேலை. ஹேட்போனை காதிலே மாட்டினாள், லில்லு வில்லுவை வாய்ஸ் கான்பிரன்சுக்கு கூப்பிட்டாள், பாவம் அவனும் சம்மதிச்சு வந்தான்...
அப்போ... அப்போ.. அப்போ... பாட்டாவே பேசிக்கிட்டாங்க...


முன்குறிப்பு : பச்சை நிற எழுத்துரு லில்லு பேசியது, நீல நிற எழுத்துரு வில்லு பேசியது. எஸ்ஜே சூர்யா மாதிரி நாங்க கலர்லயே கதைய சொல்லுவுவோம். அ... ஆ...

ஏய்... டேடி மம்மி வீட்டில் இல்ல
-அதனால என்னா? வீட்டுல மத்தவங்கல்லாம் இல்லையா? இல்ல மேல அனுப்பிட்டியா?
தடை போட யாரும் இல்ல
- அப்படியே போட்டுட்டாலும் நீங்க அடங்கி ஒடங்கி நடந்துப்பீங்கலாக்கும், மேல சொல்லு.
விளையாடுவோமா புள்ள வில்லாலா
- ஓ.. ஐயம் ரெடி..., என்ன விளையாட்டு?

ஏய்.. மைதானம் தேவையில்ல
- கம்பியூட்டர் கேமா?
அம்ப்பையரும் தேவையில்ல
- அது யாரு? உன் பழைய பாய்பிரண்டா?
யாருக்கும் தோல்வி இல்ல வில்லாலா
-அப்போ எதுக்கு விளையாடனுமாம்?

ஏய் கேளேண்டா மாமு,
-யக்கா சொல்லுக்கா
இது இன்னோரு கேமு
-இன்னும் ஒன்னுக்கூட ஆடல, அதுக்குள்ள இன்னொன்னா
தெரியாம நின்னா அது ரொம்ப ஷேமு
-தெரியாம வெள்ளாண்டா நீ ஏமாத்திடுவியே... அசுக்கு புசுக்கு
விளையாட்டு ரூலு, நீ மீறாட்டி ஃபூலு
-இப்போ எவன் ரூல் பிரகாரம் விளையாடுறான்? எல்லாத்திலயும் தான் அரசியல் இருக்கே...
எல்லைகள் தாண்டு அதுதாண்டா கோலு
-எது தாய்லாந்து எல்லையா, இல்ல சிங்கப்பூர் எல்லையா?

டேடி மம்மி, டேடி மம்மி
-எது, அதுக்குள்ள சாவுக்குப் போயிட்டு வந்திட்டாங்களா?
டேடி மம்மி வீட்டில் இல்ல
-ஓ... நல்ல வேளை... அப்புறம்
தடை போட யாரும் இல்ல
-இதையே எத்தன வாட்டி சொல்லுவ?
விளையாடுவோமா புள்ள வில்லாலா
-சரி வா, விளையாடாட்டி இதையேத்தான் கேட்டு கழுத்த அறுப்ப போல...

ஹ்ம்ம்... டேக்சிகாரன் தான் நான் ஏறும் போதெல்லாம்
அட மீட்டருக்கு மேல தந்து பல் இளிச்சானே
-சிரிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? பேச்ச கொற... பேச்ச கொற...

ஓஹோ பஸ்சில் ஏறித்தான் ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்து விட்டு ஓரம் நின்னானே

-அந்த சீட்டுத்தான் தாராளமா இருக்கும் உன் சைசுக்கு.

ஏய்... அளவான உடம்புக்காரி
-எது நானா?
ஏய்... அளவில்லா கொழுப்புக்காரி...
-ஏய்..!
ஏய்.. அளவான உடம்புக்காரி
-120 கிலோ இருப்பேன், பிரச்சனை இல்லியா?
அளவில்லா கொழுப்புக்காரி
- ரொம்ப புகழ்றீங்க

இருக்குது இருக்குது இருக்குது
வாடி உனக்கு ராத்திரி கச்சேரி
-கச்சேரியில நீ ஜால்றா போடுற கையிதானே?

டேடி மம்மி வீட்டில் இல்ல
தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா புள்ள வில்லாலா

-அது சரி, முதல்லேந்து புள்ளன்னு சொல்றியே, யார? என்னமோ போ... நீ தமிழ்லத்தான் பாடுறியான்னு டவுட்டு....

ஏய் வைரம் வியாபாரி என் பல்ல பார்த்தானே
-மாட்டுப் பல்லுன்னு விடைச்சானா?
தன் விற்கும் வைரம் போலி என்று தூக்கி போட்டானே
-அத பாக்கெட்ல போட்டுகிட்டு வந்தியா இல்லியா?

த.. த... த.. த... தங்கம் வியாபாரி என் அங்கம் பார்த்தானே
-தற்கொலை பண்ணி இருப்பானே அப்புறமா?
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழில விட்டானே
-நம்புற மாதிரி ஏதாச்சும் பேசுலா, ப்ளீஸ். அவன் மட்டம்ன்னு சொன்னது உன் அங்கமா இருக்கும்...

ஏய் அழகான சின்ன பாப்பு
ஆ... வைக்காதே எனக்கு ஆப்பு
ஏய் அழகான சின்ன பாப்பு
வைக்காதே எனக்கு ஆப்பு
-இப்படியே பேசிட்டு இரு, வெய்க்கிறேன்டா பெரியா ஆப்பு
கொத்தும் கொலையா இருக்குற உனக்கு
-ஐயயே... தோட்ட வேலை செய்யுறியா?
நான்தான்டி மாப்பு
-உன் விதியே, நான் என்னத்த செய்ய?

டேடி மம்மி, டேடேடி மம்மி
-நோடா செல்லம், டேடிய ‘டேய்’டேடின்னு சொல்லக் கூடாது

டேடி மம்மி வீட்டில் இல்ல
தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா புள்ள வில்லாலா

-ஹெலோ, ஹெலோ... ஆர் யூ டேர்? BUZZ... BUZZ... BUZZ...

லில்லுவின் ஐடி ஆப்லைன்னுக்கு மாறியது. வில்லு எல்லா பசங்கள போல புலம்பிக் கொண்டிருக்கிறான்.

அடிப்பாவி கடைசிவரை என்ன விளையாட்டுன்னு சொல்லவே இல்லையே?

இந்த பொண்ணுங்களே இப்படித்தான், குத்துங்க வில்லு குத்துங்க...
பின்குறிப்பு: மேலே பெரிய எழுத்துருவில் இருக்கும் வரிகள் - ஒரு தமிழ்ப்பாடல்.

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இசை ரகம்: அரை விறுவிறுப்பு, குறைந்த பட்சம் தலையை ஆட்டுவிக்கும்.
படம்: வில்லு
பெண்குரல்: திவ்யா
ஆண்குரல்: (தெரியலை)
பாட்டு எழுதியவர்: (தெரியலை)
கருத்துரை: பாட்டின் சரணங்களுக்கு இடையில் வரும் இசையில் கூடிய கவனம் செலுத்தி இருக்கலாம்.

புதன், 14 ஜனவரி, 2009

இரண்டாம் கண்டம்

மாலை 5.35க்கு முடிய வேண்டிய அன்றைய வேலை, இறுதி நேர தேவையினால் நீட்டிக்கப்பட்டது. அப்படி இப்படி என எல்லாம் முடிச்சிட்டு வர மணி 7.25 ஆயிடுச்சி. இன்னமும் அந்திதான், சரியா இருட்டல. மோட்டார்ல கீழ்நோக்கு விளக்கு பழுதாகிடுச்சு. அதனால தற்சமயத்துக்கு நேர்நோக்கு விளக்கு உதவியோடுதான் ஓட்ட வேண்டி இருந்தது. முழுதும் இருட்டுவதற்கு முன்னாடியே வீட்டுக்குப் போயிடலாமுன்னு தெறிச்சிக்கிட்டு போனேன்.

நல்லவேளை, வழக்கமா நெரிசலா இருக்கிற பாயான் பாரு சாலை, புக்கில் ஜம்பூல் ரவுண்டபோட் எல்லாம் நெரிசல் இல்லாம இருந்தன. முக்கியமா நெரிசலே கதின்னு கிடக்கும் பினாங்கு பாலத்துல காடிங்க சுமூகமா ஓடிக்கிட்டு இருந்திச்சு. அப்பாடான்னு முறுக்கிக் கிட்டே போனேன்.








ஏதோ ஒரு பருவக் காத்து அடிக்கிறதுனால இப்போல்லாம் ஆள தூக்குற மாதிரி வேகமா வீசுது காத்து. அன்றைக்குன்னு பாத்து மழைக்கான காத்தும் கடல் காத்தும் கூட்டு சேந்துருச்சு. பாலம் ஏறினதும் காத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன். காத்து கருப்பு அடிச்சிடப் போகுதுன்னு பெரியவங்க சொல்றது இதுதான் போல. சின்ன வாகனம்ன்னா பெரிய பெரிய லாரிங்களுக்கு மட்டும் இல்ல, காத்துக்கும் ரொம்ப இளக்காரமா போயிடுச்சு. சிவனேன்னு ஓரமா போனாக் கூட நடு ரோட்டுக்குத் தள்ளி மிரட்டிக்கிட்டு இருந்திச்சு.










பினாங்கு பாலத்துல மோட்டார் ஓட்டிகளுக்கென தனி பாதை ஒதுக்கப் படாதனால, காடிங்களுக்கு நடுவே-நடுவே ஒட்டினாத்தான் பாலத்த கடக்க முடியும். ஏற்கனவே என்னோட மோட்டார், ரோட்டுல அங்கேயும் இங்கேயும் அலசிட்டு இருந்திச்சு, இதுல நடுவுல வேற நான் போகனுமா? நான் மட்டும் தான்னு பார்த்தா, மத்த மோட்டாருங்களும் கூட அலசி அலசித்தான் ஓடிக்கிட்டு இருந்திச்சு. எப்படா இந்த கண்டத்த தாண்டுவேன்னு ஆகிப்போச்சு. ஆடி அலசி ஒரு வழியா பாலத்தைக் கடந்தாச்சு. கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தேன்.




இப்போ முழுசா இருட்டிடுச்சு. பாலத்தை விட்டு இறங்கினதும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி சாலைகள் பிரியும். நான் கிழக்குல போக வேண்டும். என்னோட ரெண்டாவது கண்டம் பப்பரப்பான்னு ரோட்டு மேல படுத்து காத்துட்டு இருந்திச்சு. தூரத்திலே பார்த்துட்டேன், ஒரு கருப்பு உருவம் போல ரோட்டு மேல சதுர வடிவில தெரிஞ்சது. தார் ரோட்டை விட கருப்பு. சில நேரத்துல, தார் சாலையை அங்கே இங்கே நோண்டி புதுசா தார் குழைச்சி போட்டு இருப்பாங்க. அதுக்கூட அப்படித்தான் தட்டையா கூடுதல் கருப்பா தெரியும். இல்லாட்டி பக்கத்துல அறிவிப்பு/விளம்பர பலகை இருந்து விளக்கு வெளிச்சம் பட்டு தெரியும் நிழல் கூட அப்படித்தான் இருக்கும். ரோட்டு விளக்கு அங்கே இல்ல. வண்டியோட கீழ்நோக்கு விளக்கும் இல்லாததால துள்ளியமா என்னதான் அங்கே கிடக்குன்னு தெரியல. சரியா அஞ்சே வினாடி தான் இருக்கு அதை நெருங்க. வலப்பக்கம் காடி என் வேகத்துக்கு ஈடு கொடுத்து வந்துக்கிட்டு இருக்கு. இடப்பக்கம் இன்னொரு மோட்டார் வண்டி. ரெண்டு பக்கமும் நகர முடியல.

புது தார் ரோடோ அல்லது நிழலா இருந்தா அது மேலேயே மிதிச்சோ ஏறியோ போயிடலாம், பிரச்சனை இல்ல. வேறு ஏதும் திடப் பொருளா இருந்துட்டா? ஒரு முடிவுக்கு வர நிச்சயமா அந்த 5 வினாடி பத்தல. உடனே பிரேக் பிடிச்சாலும் அதை தாண்டித்தான் நிற்கும். ஆனாலும் பிரேக் பிடிக்கிறத தவிர வேற வழி இல்ல. ரொம்ப கிட்ட போனதும் அது என்னான்னு தெரிஞ்சது. சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும். ஒரு லாரியின் டயர். பாதியா பொசுங்கிப்போய் படுத்தாற்படி கிடந்தது.

அதற்குள்ளே இடப்பக்கம் இருந்த குறுகிய பாதையில மோட்டார செலுத்திட்டேன். அது டயர்ன்னு தெரிஞ்சப்போ ஈரக்குலையே கலங்கிடுச்சு. அதைத் தாண்டி கடக்கும் போது லேசா என்னோட வலது காலு அந்த டயர்ல உரசினப்போது 1% தாக்கம் உடல் முழுக்க பரவுனுச்சு. மிச்சம் 99 சதவீதத்த நினைச்சப்போ நிஜமாவே சுறுங்கிடுச்சு. இப்படி சாலையில கண்ட பொருட்களைப் சிதற விட்டு போகும் ஆட்களையும் சாலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பாளர்களையும் வாய்க்கு வந்த மாதிரி திட்டிக் கிட்டே போனேன். அப்பக்கூட ஆத்திரம் தீரல.

அதிர்ச்சியிலேந்து மீள முடியல. “ஒரு வேளை அந்த டயர் மேல நான் ஏறி இருந்தா?” இந்த கேள்வி என்னை விரட்டிக்கிட்டே வந்திச்சு. எப்படியோ ரெண்டாவது கண்டத்துலேந்தும் தப்பியாச்சு, மீண்டும் கடவுளுக்கு நன்றி.


வீட்டுக்குப் போக வேண்டிய நெடுஞ்சாலை ஏறிட்டேன். நிம்மதி அடுத்த 5 நிமிசம் கூட நீடிக்கல. திடுதுப்புன்னு மழை. எந்த அறிகுறியும் இல்ல. என்னோட மழை உடையைப் போடுறதும் போடாம இருக்குறதும் ஒன்னு, எப்படியும் நனயத்தான் போறேன். வீட்டுக்குத்தானே போவப்போறென்னு தெனாவெட்டா இருந்திட்டேன்.

வழியில சில பேரு வண்டிய நிறுத்தி, மழை உடை அணிந்துக்கிட்டு இருந்தாங்க. இன்னும் ஆறு - ஏழு நிமிசத்துல வீடு வந்திடுமுன்னு அசல்ட்டா இருந்திட்டேன். பேய்ஞ்சது உங்க ஊட்டு மழையும் இல்ல, எங்க ஊட்டு மழையும் இல்ல... செம்ம மழை, அடிச்சி பிச்சி எடுத்துருச்சு. நான் தொப்பரையா ஆயிட்டேன். முன்னுக்கு போற காடிங்க சரியாக் கூட தெரியல, வெளிச்சத்த வெச்சி குத்து மதிப்பா ஓட்டுனேன்.
அப்போ நிஜமா நண்பர் விக்கி அண்மையில் எழுதின “வான் துளிகள்” ஞாபகத்துக்கு வந்திச்சு. கோவம் கோவமா வந்திச்சு. உடனே மழையைக் கண்ணா பின்னான்னு திட்டி ஒரு கவிதை எழுதனுமுன்னு தோணுச்சு. சரி வேண்டாம், நம்மள விட பெரியவங்க வள்ளுவர், பாரதில்லாம் மழையைப் போற்ற சொல்லி இருக்காங்க. பொங்கல் வேற வருது. பொங்கலுக்குக் காரணம் பயிர் விளைச்சல்ன்னா, விளைச்சலுக்கு காரணம் நல்ல மழை, இல்லியா? அதனால அந்த எண்ணத்தைக் கை விட்டுட்டேன் (கவிதை எழுத சொன்னா ‘கவுஜ’ எழுதுவேன்றது இன்னொரு விசயம், அத நம்ம இங்க விவாதிக்க வேணாம்).


அப்புறம், வீட்டுல இன்னும் காணுமேன்னு போனுக்கு மேல போன். எங்க எடுக்குறது? அது பாட்டுக்கு பாக்கெடுக்குள்ள துடிச்சிக்கிட்டு இருந்திச்சு. வீட்டுக்குப் போய் சேர்ந்தப்போ இன்னொரு கண்டம் மீண்டு வந்த மாதிரி இருந்திச்சு.


ஆனா அந்த பெரிய டயர தாண்டி வந்தேன் பாருங்க... அத நினைச்சா இன்னமும் பயங்கரமா அதிர்ச்சியா இருக்கு. நண்பர்களே, இதைப் படிச்ச பிறகாவது சாலையில் செல்லுகையில் குப்பைகளைச் சிந்தாமல், சிதறடிக்காமல் ஒழுக்கமாக, பொறுப்பாக பயணம் செய்வோம். நாம் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டு வரலாம். நாம் செய்யும் சிறுபிள்ளைத்தனத்தால் சிக்குண்டு கிடக்கப்போகும் அப்பாவிகளை நினைவில் கொள்வோம்.



பதிவைப் படித்த நண்பர்களுக்கு மட்டும் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மற்றவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து மட்டும்தான், பொங்கல்லாம் இல்ல...

புதன், 7 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு - விபரம்

1. பாடல்: ஆசை முகம் மறந்து போச்சே
எழுத்து: சுப்ரணமணியபாரதியார்

2. பாடல்: சின்ன மணி குயிலே
படம்: அம்மன் கோயில் கிழக்காலே

3. பாடல்: ஒரு வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
படம்: ரோஜா

4. பாடல்: ஆலங்குயில் கூவும் ரயில்
படம்: பார்த்திபன் கனவு

5. பாடல்: பூப்போல தீப்போல மான்போல மழைப்போல
படம்: வசீகரா

6. பாடல்: செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
படம்: சத்தியம்

7. பாடல்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே
படம்: தாம் தூம்

8. பாடல்: அவள் உலக அழகியே நெஞ்சில் விழுந்த அருவியே
படம்: லேசா லேசா

9. பாடல்: என் அன்பே யாவும் நீயன்றி நானில்லை
படம்: சத்தியம்

10. பாடல்: உயிரே உயிரே உயிரின் உயிரே
படம்: காக்க காக்க

11. பாடல்: வெண்மதி வெண்மதியே நில்லு
படம்: மின்னலே


12. பாடல்: கருகரு விழிகளால் ஒரு கண் மை என்னைக் கடத்துதே
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்

13. பாடல்: உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
படம்: காதல் மன்னன்

14. பாடல்: தங்கத் தாமரை மகளே
படம்: மின்சாரக் கனவு


15. பாடல்: நறுமுகையே நறுமுகையே
படம்: இருவர்


16. பாடல்: ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம்
படம்: சமுராய்


17. பாடல்: வெள்ளைக்கார முத்தம் என் தேகம் எங்கும்
படம்: செல்லமே

18. பாடல்: தடக்கு தடக்கு என அடிக்க அடிக்க மழை
படம்: ஆதி

19. பாடல்: மழையே மழையே நீரின் திரையே
படம்: ஜூன் ஆர்

20. பாடல்: மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
படம்: சமுராய்

21. பாடல்: உனக்கென இருப்பேன் உயிரைக் கொடுப்பேன்
படம்: காதல்

22. பாடல்: உன்னருகில் வருகையில் உள்ளே ஓர் பரவசம்
படம்: கல்லூரி

23. பாடல்: விழிகளின் அருகினில் வானம்
படம்: அழகிய தீயே

24. பாடல்: கனவா இல்லை காற்றா
படம்: ரட்சகன்

25. பாடல்: நெஞ்சிக்குள் பெய்திடும் மாமழை
படம்: வாரணம் ஆயிரம்

26. பாடல்: எங்கிருந்து வந்தாயடா எனைப் பாடுபடுத்த
படம்: பைவ் ஸ்டார் (5*)

27. பாடல்: நாளை உலகம் இல்லை என்றானால் அழகே என் செய்வாயோ
படம்: லவ் பேர்ட்ஸ்

28. பாடல்: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
படம்: வாரணம் ஆயிரம்

29. பாடல்: எங்கேயோ பார்த்த மயக்கம்
படம்: யாரடி நீ மோகினி

30. பாடல்: போகாதே போகாதே நீயிருந்தால் நானிருப்பேன்
படம்: தீபாவளி

31. பாடல்: என்னைக் காணவில்லையே நேற்றோடு
படம்: காதல் தேசம்

32. பாடல்: வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
படம்: யாரடி நீ மோகினி


33. பாடல்: எங்கே எனது கவிதை
படம்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

34. பாடல்: தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
படம்: காதலில் விழுந்தேன்

35. பாடல்: அடதடி அப்பத்தா
படம்: சமுராய்

36. பாடல்: நீயே சொல் உன் முத்தம் விழுந்து மோகம் அடங்குமா
படம்: பொல்லாதவன்

37. பாடல்: ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த
படம்: சிந்து பைரவி

38. பாடல்: உயிரும் நீயே உடலும் நீயே
படம்: பவித்திரா

39. பாடல்: சின்ன தாயவள் தந்த ராசாவே
படம்: தளபதி

40. பாடல்: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்
படம்: பாண்டவர் பூமி

41. பாடல்: காதல் இல்லாமல் நாம் வாழ்வது வாழ்வா
படம்: தாளம்

42. பாடல்: யாரோ மனதிலே
படம்: தாம் தூம்

43. பாடல்: ஒரு மாலை இளவெயில் நேரம்
படம்: கஜனி

44. பாடல்: என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை
படம்: காதலன்

45. பாடல்: கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
படம்: சுப்பிரமணியபுரம்

46. பாடல்: யாரிடமும் தோன்றவில்லை இதுபோல்
படம்: தொட்டி ஜெயா

47. பாடல்: காதல் நெருப்பின் நடனம்
படம்: வெய்யில்

48. பாடல்: பூங்காற்றிலே உன் சுவாசத்தை
படம்: உயிரே

49. பாடல்: சரியா இது தவறா இந்த உணர்வினை விளக்கிட
படம்: கல்லூரி

50. பாடல்: ஓ... வெண்ணிலா இரு வானிலா
படம்: காதல் தேசம்

51. பாடல்: கலைமானே உன் தலை கோதவா
படம்: தாளம்

52. பாடல்: உனக்குள் நானே உருகும் இரவில்
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்

53. பாடல்: சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
படம்: தீனா

54. பாடல்: ஆத்தங்கர மரமே அரச மரயிலையே
படம்: கிழக்கு சீமையிலே


55. பாடல்: நீ கட்டும் சேல மடிப்பிலே நான் கசங்கி போனேனே
படம்: புதிய மன்னர்கள்

56. பாடல்: ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
படம்: ஜெண்டில்மேன்

57. பாடல்: அன்பே அன்பே கொல்லாதே
படம்: ஜீன்ஸ்

58. பாடல்: சகலகலா டாக்டர் டாக்டர்
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

59. பாடல்: காலேஜிக்குப் போவோம் கட்டடிக்க மாட்டோம்
படம்: கோவில்

60. பாடல்: அவ சத்தியமா என்னைக் காதலிச்சா
படம்: அப்பா அம்மா செல்லம் (?)

61. பாடல்: அரபு நாடே அசந்து நிற்கும்
படம்: தொட்டால் பூ மலரும்

62. பாடல்: கன்னாலனே எனது கண்ணை
படம்: போம்பே

63. பாடல்: சிறு பார்வையாலே கொய்தாய்
படம்: பீமா

64. பாடல்: தத்தியாடுதே தாவியாடுதே தத்தையோட நெஞ்சு
படம்: என் சுவாசக் காற்றே

65. பாடல்: ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னைக் கேட்பேன்
படம்: லேசா லேசா

66. பாடல்: காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்
படம்: மன்மதன்

67. பாடல்: இவன் யாரோ இவன் யாரோ
படம்: மின்னலே

68. பாடல்: நீயா பேசியது என்னன்பே நீயா பேசியது
படம்: திருமலை

69. பாடல்: அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
படம்: வாரணம் ஆயிரம்

70. பாடல்: வானத்தை விட்டுவிட்டு மேகங்கள் போவதென்ன
படம்: ராமன் தேடிய சீதை


71. பாடல்: தென்றலே தென்றலே மெல்ல நீ பேசு
படம்: காதல் தேசம்

72. பாடல்: மார்கழி திங்கள் அல்லவா
படம்: சங்கமம்

73. பாடல்: என் காதலே என் காதலே
படம்: டூயட்

74. பாடல்: குளிருதே குளிருதே இருவுயிர் குளிருதே
படம்: தாஜ்மகால்
.

75. பாடல்: தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
படம்: திமிரு


76. பாடல்: என்ன சத்தம் இந்த நேரம்
படம்: புன்னகை மன்னன்

77. பாடல்: இவன் தானா இவன் தா...னா
படம்: சாமி

78. பாடல்: பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
படம்: சத்தம் போடாதே

79. பாடல்: ஓ... மனமே ஓ... மனமே உள்ளிருந்து அழுவதென்ன
படம்: உள்ளம் கேட்குமே

80. பாடல்: செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த
படம்: வண்டிசோலை சின்னராசு (?)

81. பாடல்: பனி விழும் மலர் வனம்
படம்: நினைவெல்லாம் நித்தியா (?)

82. பாடல்: கண்ணதாசா கண்ணதாசா வருவாயா
படம்: தவம்

83. பாடல்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
படம்: வெய்யில்

84. பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே
படம்: மின்சாரக் கனவு

85. பாடல்: கண்மூடி திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போல
படம்: சச்சின்

86. பாடல்: இடம் பொருள் பார்த்து இதயத்தை மாத்து
படம்: சித்திரம் பேசுதடி

87. பாடல்: காதல் என்பது கடவுள் அல்லவா
படம்: ஒரு கல்லூரியின் கதை

88. பாடல்: கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு
படம்: புதிய முகம்

89. பாடல்: மழை மழை என் இதயத்தில் அடிக்கின்ற முதல்மழை
படம்: உள்ளம் கேட்குமே

90. பாடல்: ஏன் பெண் என்று பிறந்தாய்
படம்: லவ் டுடேய்

91. பாடல்: ஒரு வெள்ளை புறா ஒன்று போனது
படம்: புது கவிதை

92. பாடல்: சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?
படம்: ரட்சகன்

93. பாடல்: நினைவுகள் நெஞ்சினில் புதைவதினால்
படம்: ஆட்டோகிராப்

94. பாடல்: சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
படம்: சங்கமம்

95. பாடல்: தையத்தா தையத்தா தைய தையத்தா
படம்: திருட்டு பயலே

96. பாடல்: வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்
படம்: மின்னலே

97. பாடல்: சிரிச்சி சிரிச்சி வந்தா சீனாத்தானா டோய்
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

98. பாடல்: வைகாசி நிலவே வைகாசி நிலவே
படம்: உன்னாலே உன்னாலே

99. பாடல்: நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
படம்: பணக்காரன்

100. பாடல்: பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்
படம்: சிந்து பைரவி

செவ்வாய், 6 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (81-100)

நினைவை எட்டிய முதல்நூறு (81-100)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

எஞ்சிய இருபது இன்று. நேற்றைய முந்தைய நாளின் தொடர்ச்சிதான்.

என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,
சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் பின்வருமாறு:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

81. இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

82. மனிதர்கள் உறங்கும் நேரத்தில் தேவதையாய் திரிந்தே நானுனைக் காதலிக்கிறேன்

83. ஓ... சாமி பார்த்தும் கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்கே

84. நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம், பாலூட்ட நிலவுண்டு

85. தெருமுனையைத் தாண்டும் வரையில் வெறும் நாள்தான் என்றிருந்தேன், தேவதையைப் பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்

86. என்னைப் போல எவரும் உன்னைக் காதலிக்க முடியாது, முடியுமென்றால் கூட அவனைக் காதலிக்க முடியாது

87. தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்

88. விடிகாலை விண்ணழகு விடியும் வரை பெண்ணழகு

89. ஐய்யோடி நான் கல்லாவேன், உளியாக நீ வந்தால் கலையாவேன்


90. இரண்டில் ஒன்று சொல்லிவிடு இல்லை நீயே கொள்ளி இடு இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு

91. இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்

92. கருங்கல்லைப் போன்றவன் நான், கற்பூரமாய் ஆகிவிட்டேன்

93. சுவாசிக்கக் கூட முடிவில்லை, என்னை வாசிக்க மண்ணில் எவருமில்லை, என்னை எனக்கே பிடிக்கவில்லை

94. அந்த மோதிரம் ஒட்டியானமாய் ஆகும் முன்னமே அன்பே அழைத்தேன்... என் காற்றில் சுவாசமில்லை, அது கிடக்கட்டும் இது உனக்கென்ன ஆச்சு?


95. உன்னைப் போன்ற அன்பாளன் யார்க்கு வாய்க்கும் மீண்டும், உடலை உடலால் குளிப்பாட்டவா

96. ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்

97. ஓடும் தண்ணியில பாசி இல்லையே உணர்ச்சி கொட்டிப்புட்டா நோயும் இல்லையே

98. மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்து தீராதம்மா

99. பொருத்தம் இல்லாட்டி வருத்தந்தான் தோணும், அமைஞ்சா அதுபோல கல்யாணம் பண்ணு, இல்ல நீ வாழு தனியாளா நின்னு

100. சேரிக்கும் சேர வேணும், அதுக்கும் பாட்டுபடி... எண்ணியே பாரு, எத்தன பேரு, தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு


... இப்படி இன்னும் போய்க்கிட்டே இருக்கும் பட்டியல், அதனால இப்போதைக்கு இது போதும்ன்னு நினைக்கிறேன் :)

நாளைய பதிவு – நினைவை எட்டிய முதல்நூறின் விபரம்.

சனி, 3 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (61-80)


நினைவை எட்டிய முதல்நூறு (61-80)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

பெரும்பாலான சினிமா பாடல்கள் அரைத்த மாவையே அரைத்தாலும், ஒரு சில நேரங்களில் அவற்றில் ஏதாவது ஒன்று நம் கவனத்தை ஈர்க்கத்தான் செய்கின்றன. நாமும் அதை முணுமுணுப்பதில் ஓர் இன்பத்தைக் காண்கிறோம்.

அவ்வண்ணம் நான் களித்தவற்றில் நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் இங்கே (நேற்றைய தொடர்ச்சிதான்):

முன்குறிப்பு:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

61. கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும் இருக்கு உனக்கு மேலே...
62. உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
63. நீ தூரப்பச்சை, என் நெடுநாள் இச்சை
64. விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே, கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
65. என்ன நான் கேட்பேன் தெரியாதா? இன்னமும் என் மனம் புரியாதா?
66. பூவின் முகவரி காற்று அறியுமே, என்னை உன் மனம் அறியாதா?
67. நானுன்னைக் காணத்தானா யுகம் தோறும் காத்து கிடந்தேனா
68. உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை
69. துணியால் கண்ணையும் கட்டி, கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறேன் அவள, தனியா எங்கே போனாளோ!
70. என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன...
71. இரவில் காயும் முழுநிலா, எனக்கு மட்டும் சுடும் நிலா...
72. ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்?
73. அமுதென்பதா விஷம் என்பதா இல்லை அமுத விஷமென்பதா
74. அடி பூகம்ப வேளையிலும் இரு வான்கோழி கலவி கொள்ளும்... அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும் சுற்றி நின்றாடும் தீ வண்ணம் அணைவது திண்ணம்.
75. தள்ளி தள்ளி நிற்க நான் மழைத் தூறல் இல்லையே, கஷ்டப்பட்டு கற்க நான் கல்லூரி இல்லையே
76. கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ, தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்க்காதோ
77. அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே, வெட்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே
78. முடிவென்பதே ஆரம்பமே, வலைவில்லாமல் வழி கிடையாதே
79. தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி, வெற்றிக்கு அதுவே ஏணியடி
80. பழமை வேறு பழசு வேறு, வேறுபாட்டை தெரிஞ்சிக்கனும்
(எஞ்சியவை இருபது)

வெள்ளி, 2 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (41-60)


நினைவை எட்டிய முதல்நூறு (41-60)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

பாட்டு, இசை நாம் பிறந்தது தொட்டு கூடவே பயணிக்கும் ஒரு சொத்து. தமிழை மூன்று வகையாகப் பிரித்த போது கூட இசைக்கு ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இசையில் மூழ்கும்போது நாம் நம்மை மறந்து போகின்ற தருணங்களும் உள்ளன. இசையைக் கொண்டு மருத்துவம் கூட செய்யப்படுகிறது.

இதெல்லாம் ஏன் திடீரென சொல்லிக்கிட்டு இருக்கேன்னு கேட்கலாம் நீங்க. போன ரெண்டு நாளா எனக்குப் புடிச்ச பாட்டு வரிய போட்டுக்கிட்டு வரேன், அதோட தொடர்ச்சிதான் இன்னிக்கும்.

உடனே ஞாபகத்துக்கு வந்த முதல் நூறு தமிழ்ப்பாட்டு வரிகள் கீழே:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
41. கடவுள் இருப்பது தூரமடா, உன் காதல் இருப்பது அண்மையடா... நீ கடவுளை அடைவது சாத்தியமா, இல்லை காதலை அடைவது சாத்தியமா?

42. காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ, மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ!

43. தலை சாய்த்து பார்த்தாயே, தடுமாறி போனேனே...

44. வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி... ~~~ நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி

45. உனையன்றி வேறொரு நினைவில்லை, இனி இந்த ஊனுயிர் எனதில்லை, தடையில்லை சாவிலுமே உன்னோடு வர...

46. என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே, இள வேனில் காற்றின் வெப்பம் தாக்க நின்றேனே

47. சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும், புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்

48. கடல் மீதொரு துளி வீழ்ந்ததே, அதைத் தேடி தேடி பார்த்தேன்

49. கடலுக்கு மேல் ஒரு மழைத்துளி வந்து விழுந்ததே, உப்பென மாறுமா... இல்லை முத்தென மாறுமா? ~~~ தடுப்பதைப் போல நடித்திடும்போதும் தத்தித்தாவி கண்கள் ஓடும், அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையைத் தாண்டி உள்ளம் கேட்கும் இது சரியா....

50. தருகின்ற பொருளாய் காதல் இல்லை, தந்தாலே காதல் - காதல் இல்லை

51. நீ என்னைப் பிரிந்ததாய் யார் சொன்னது? என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது...

52. இனியொரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா, அதுவரை என்னைக் காற்றோடு சேர்த்திடவா

53. காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம், நரகம் சுகம் அல்லவா?

54. மாமன் பொண்ணே மச்சம் பாத்து நாளாச்சு, உன் மச்சானுக்கு மயிலப்பசுவு தோதாச்சு

55. அடி சூடான மழையே உடம்பு நனைஞ்சிக்கலாமா? கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா?

56. விடவேண்டும் அச்சத்தை, தொட வேண்டும் உச்சத்தை, அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை

57. அன்பே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி, சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி

58. யாரோ பெறுவார் பிள்ளை, இவரு தருவார் ‘பில்’-லை

59. உப்பு கடல வாங்கி தின்போம், தப்பா கடல போட மாட்டோம்

60. அவ தங்கச்சி பாப்பாக்கு முட்டாயி வாங்கியே தந்தேனே, முட்டாய் வாங்கி தந்தேனே, மாமு முட்டாளா ஆனேனே...

(எஞ்சியவை பின்னாளில்)

வியாழன், 1 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (21-40)


நினைவை எட்டிய முதல்நூறு (21-40)

- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு


பாடல் அல்லது இசை கேட்பதே ஓர் அலாதி இன்பம்தான், இல்லையா? ஒரு சிலர் இசை கேட்பதையே ஒரு பொழுது போக்காய் வைத்துள்ளனர்.


வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது நண்பரின் கைப்பேசியிலோ ஒலித்த இசையை உள்வாங்குகிறோம், பின் நம்மை அறியாமலே அதை முணுமுணுக்க செய்கிறோம்.

ஒரு முழுப்பாடலில், ஏதோ ஒரு கட்டத்தை நாம் ஆழமாக ரசித்து விடுகிறோம். அதற்கு காரணம், அந்த குறிப்பிட்ட வரியின் மொழியாளுமையா? இசையின் கவர்ச்சியா? பாடகரின் குரல் ஈர்ப்பா? அல்லது காட்சியின் வசீகரமா? எதுவாயினும் அவ்வரிகளில் நாம் வீழ்ந்ததை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்?

அவ்வண்ணம் என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,

சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் இதோ:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21. நான் என்றால் நானில்லை நீதானே நானாயானேன், நீ அழுதால் நான் துடிப்பேன்

22. உந்தன் பார்வை எந்தன் மீது விழ ஏதோ நானும் காத்திருந்தேன், வெளியே சொன்னால் ரகசியமா? என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே!

23. விழிகளின் அருகினில் வானம், வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம்... இது முதல் முதல் அனுபவமோ?

24. உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரும் தூரம் தெரியாது, உன்னில் வந்தொரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது.

25. சட்டென்று மாறுது வானிலை, பெண்ணே உன் மேல் பிழை

26. சுட்டு விரலாய் நீயும் கட்டை விரலாய் நானும் எழுதும் எதுவும் கவிதையாக மாறும்

27. என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும் உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.

28. வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி...

29. வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு இந்த நிமிடம் மீண்டும் பிறந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...

30. நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு, உனக்காகக் காத்திருப்பேன், உயிரோடு பார்த்திருப்பேன்...

31. மெய்யாக நீ என்னை விரும்பாதப் போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்... நிஜம் உந்தன் காதல் என்றால்!

32. கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்... கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன், உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே

33. பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய், நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

34. இறுதிச் சடங்கில் மிதிகள்படும் பூவைப் போல் கசங்கிவிட்டேன்

35. தாத்தா ஓட்டிய குதிரை இன்று வேலைக்காகாது

36. விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது, விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி துலையாது...

37. இன்னுங் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து, மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து...

38. சாமி தவித்தான், தாயைப் படைத்தான் உன் காலடி மட்டும் தருவாய் தாயே, சொர்க்கம் என்பது பொய்யே

39. தாயழுதாளே நீ வர, நீயழுதாயே தாய் வர

40. நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

(எஞ்சியவை பின்னாளில்)