பக்கங்கள்

வெட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 21 ஜனவரி, 2009

அப்பா அம்மா வீட்டில் இல்ல...

அப்பா அம்மா வீட்டில் இல்ல...
- பாட்டு உருவான கதை


ப்பா அம்மா ரெண்டு பேரும் கூட்டாளி சாவுக்குப் போயிட்டாங்க. போயிட்டு வர குறைஞ்சது ரெண்டு மூனு மணி நேரமாவது ஆகும். லில்லுக்கு வீட்டுல தனியா இருக்க ஒரே போர். என்ன பன்றதுன்னே தெரியல. நெட் முன்னுக்குப் போய் உட்கார்ந்தாள். யாரும் ஆன்லைன்ல இல்ல. மறுபடியும் கடுப்பு. திடீரென ஓர் இளிச்ச வாயன் ஆன்லைன்ல வந்தான். பேரு வில்லு. அவன் யாருன்னே சரியா ஞாபகம் இல்ல. சும்மா அவனுக்கு தண்ணி காட்ட ப்ளான் போட்டாள்.
பசங்க ஆவல தூண்டி வேடிக்கை பார்ப்பதே இந்த பொண்ணுங்க வேலை. ஹேட்போனை காதிலே மாட்டினாள், லில்லு வில்லுவை வாய்ஸ் கான்பிரன்சுக்கு கூப்பிட்டாள், பாவம் அவனும் சம்மதிச்சு வந்தான்...
அப்போ... அப்போ.. அப்போ... பாட்டாவே பேசிக்கிட்டாங்க...


முன்குறிப்பு : பச்சை நிற எழுத்துரு லில்லு பேசியது, நீல நிற எழுத்துரு வில்லு பேசியது. எஸ்ஜே சூர்யா மாதிரி நாங்க கலர்லயே கதைய சொல்லுவுவோம். அ... ஆ...

ஏய்... டேடி மம்மி வீட்டில் இல்ல
-அதனால என்னா? வீட்டுல மத்தவங்கல்லாம் இல்லையா? இல்ல மேல அனுப்பிட்டியா?
தடை போட யாரும் இல்ல
- அப்படியே போட்டுட்டாலும் நீங்க அடங்கி ஒடங்கி நடந்துப்பீங்கலாக்கும், மேல சொல்லு.
விளையாடுவோமா புள்ள வில்லாலா
- ஓ.. ஐயம் ரெடி..., என்ன விளையாட்டு?

ஏய்.. மைதானம் தேவையில்ல
- கம்பியூட்டர் கேமா?
அம்ப்பையரும் தேவையில்ல
- அது யாரு? உன் பழைய பாய்பிரண்டா?
யாருக்கும் தோல்வி இல்ல வில்லாலா
-அப்போ எதுக்கு விளையாடனுமாம்?

ஏய் கேளேண்டா மாமு,
-யக்கா சொல்லுக்கா
இது இன்னோரு கேமு
-இன்னும் ஒன்னுக்கூட ஆடல, அதுக்குள்ள இன்னொன்னா
தெரியாம நின்னா அது ரொம்ப ஷேமு
-தெரியாம வெள்ளாண்டா நீ ஏமாத்திடுவியே... அசுக்கு புசுக்கு
விளையாட்டு ரூலு, நீ மீறாட்டி ஃபூலு
-இப்போ எவன் ரூல் பிரகாரம் விளையாடுறான்? எல்லாத்திலயும் தான் அரசியல் இருக்கே...
எல்லைகள் தாண்டு அதுதாண்டா கோலு
-எது தாய்லாந்து எல்லையா, இல்ல சிங்கப்பூர் எல்லையா?

டேடி மம்மி, டேடி மம்மி
-எது, அதுக்குள்ள சாவுக்குப் போயிட்டு வந்திட்டாங்களா?
டேடி மம்மி வீட்டில் இல்ல
-ஓ... நல்ல வேளை... அப்புறம்
தடை போட யாரும் இல்ல
-இதையே எத்தன வாட்டி சொல்லுவ?
விளையாடுவோமா புள்ள வில்லாலா
-சரி வா, விளையாடாட்டி இதையேத்தான் கேட்டு கழுத்த அறுப்ப போல...

ஹ்ம்ம்... டேக்சிகாரன் தான் நான் ஏறும் போதெல்லாம்
அட மீட்டருக்கு மேல தந்து பல் இளிச்சானே
-சிரிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா? பேச்ச கொற... பேச்ச கொற...

ஓஹோ பஸ்சில் ஏறித்தான் ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்து விட்டு ஓரம் நின்னானே

-அந்த சீட்டுத்தான் தாராளமா இருக்கும் உன் சைசுக்கு.

ஏய்... அளவான உடம்புக்காரி
-எது நானா?
ஏய்... அளவில்லா கொழுப்புக்காரி...
-ஏய்..!
ஏய்.. அளவான உடம்புக்காரி
-120 கிலோ இருப்பேன், பிரச்சனை இல்லியா?
அளவில்லா கொழுப்புக்காரி
- ரொம்ப புகழ்றீங்க

இருக்குது இருக்குது இருக்குது
வாடி உனக்கு ராத்திரி கச்சேரி
-கச்சேரியில நீ ஜால்றா போடுற கையிதானே?

டேடி மம்மி வீட்டில் இல்ல
தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா புள்ள வில்லாலா

-அது சரி, முதல்லேந்து புள்ளன்னு சொல்றியே, யார? என்னமோ போ... நீ தமிழ்லத்தான் பாடுறியான்னு டவுட்டு....

ஏய் வைரம் வியாபாரி என் பல்ல பார்த்தானே
-மாட்டுப் பல்லுன்னு விடைச்சானா?
தன் விற்கும் வைரம் போலி என்று தூக்கி போட்டானே
-அத பாக்கெட்ல போட்டுகிட்டு வந்தியா இல்லியா?

த.. த... த.. த... தங்கம் வியாபாரி என் அங்கம் பார்த்தானே
-தற்கொலை பண்ணி இருப்பானே அப்புறமா?
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று தொழில விட்டானே
-நம்புற மாதிரி ஏதாச்சும் பேசுலா, ப்ளீஸ். அவன் மட்டம்ன்னு சொன்னது உன் அங்கமா இருக்கும்...

ஏய் அழகான சின்ன பாப்பு
ஆ... வைக்காதே எனக்கு ஆப்பு
ஏய் அழகான சின்ன பாப்பு
வைக்காதே எனக்கு ஆப்பு
-இப்படியே பேசிட்டு இரு, வெய்க்கிறேன்டா பெரியா ஆப்பு
கொத்தும் கொலையா இருக்குற உனக்கு
-ஐயயே... தோட்ட வேலை செய்யுறியா?
நான்தான்டி மாப்பு
-உன் விதியே, நான் என்னத்த செய்ய?

டேடி மம்மி, டேடேடி மம்மி
-நோடா செல்லம், டேடிய ‘டேய்’டேடின்னு சொல்லக் கூடாது

டேடி மம்மி வீட்டில் இல்ல
தடை போட யாரும் இல்ல
விளையாடுவோமா புள்ள வில்லாலா

-ஹெலோ, ஹெலோ... ஆர் யூ டேர்? BUZZ... BUZZ... BUZZ...

லில்லுவின் ஐடி ஆப்லைன்னுக்கு மாறியது. வில்லு எல்லா பசங்கள போல புலம்பிக் கொண்டிருக்கிறான்.

அடிப்பாவி கடைசிவரை என்ன விளையாட்டுன்னு சொல்லவே இல்லையே?

இந்த பொண்ணுங்களே இப்படித்தான், குத்துங்க வில்லு குத்துங்க...
பின்குறிப்பு: மேலே பெரிய எழுத்துருவில் இருக்கும் வரிகள் - ஒரு தமிழ்ப்பாடல்.

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
இசை ரகம்: அரை விறுவிறுப்பு, குறைந்த பட்சம் தலையை ஆட்டுவிக்கும்.
படம்: வில்லு
பெண்குரல்: திவ்யா
ஆண்குரல்: (தெரியலை)
பாட்டு எழுதியவர்: (தெரியலை)
கருத்துரை: பாட்டின் சரணங்களுக்கு இடையில் வரும் இசையில் கூடிய கவனம் செலுத்தி இருக்கலாம்.

வெள்ளி, 26 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (5)

(கடைசி பாகமுங்கோ)


கிசு கிசு குசுலக்குமாரி


... ... சுடலையின் தட்டும் காலியாகி விட்டது. தட்டில் எஞ்சி இருந்த ஈரமும் காய ஆரம்பித்துவிட்டது. உணவு எடுக்கச் சென்ற உப்புலி மட்டும் திரும்பி வரவில்லை. நேரமாவதால் அவனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட நினைத்தான். அவன் கைப்பேசிக்கு இணைப்பு கிட்டியது, ஆனால் அவன் எடுக்கவில்லை. சுடலைக்குச் சந்தேகம் வலுத்தது.


(பாகம் 5)


ணவு எடுக்கும் இடத்திற்கு அருகில் கூட்டம் குழுவி இருந்தது. சலசலப்பான சூழ்நிலை சுடலையைக் கலவரப் படுத்தியது. என்ன, ஏது என மூக்கை நுழைப்பதில் நம்மவருக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்? சுடலையும் ஆவல் ததும்ப எட்டி பார்த்தான். அதிர்ச்சி. ஆனால் அவனை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

அன்பு நண்பன் உப்புலிதான் கூட்டத்துக்குக் காரணம். அவன் மட்டும் அல்ல, அவனோடு குசுலக்குமாரியும். இருவரும் சேற்றில் வழுக்கி புரண்டு கொண்டிருந்தனர். சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அவர்களுக்கு உதவவில்லை, சினிமாவில் காண்பிப்பது போல. அந்த இக்கட்டிலும் கூட குசுல் தனது கருமத்தில் இருந்து பின் வாங்கவில்லை. முடிந்த வரை பத்திரிக்கையில் கிசுகிசு வரும் அளவுக்கு அத்தனை சேட்டைகளையும் செய்தாள்.

சுடலை மனசு கேட்காமல், கூட்டத்தைக் கலைத்து நண்பனுக்குக் கை கொடுத்தான். அவளும் எழுந்து வந்தாள். விசாரித்த போது, உப்புலி சொன்னது சிரிப்பு சிரிப்பாக வந்தது. உப்புலி உணவு எடுக்க சென்ற போது குசுலக்குமாரியைச் சந்தித்து இருக்கிறான். அவள் பேசிக் கொண்டே அவசரமாக நடந்திருக்கிறாள். தூக்கு சப்பாத்து; சொத சொதவென இருந்த புட்தரை; நடக்கும் போது கால் சேற்றில் மாட்டிக் கொண்டு தடுமாறி இருக்கிறாள். உப்புலியும் ஹீரோவைப் போல பாய்ந்து அவளைத் தாங்கி பிடிக்க, அந்த 80 கிலோ இம்சையைத் தூக்க முடியாமல் மூச்சடைத்து தானும் சேற்றில் விழுந்திருக்கிறான். பிறகு நடந்தது தான் தெரியுமே.


உப்புலியின் மீது ஒட்டிக் கொண்டிருந்த சேற்றைக் கழுவி விட்டு அவனைத் தன் மகிழுந்திலேயே ஏற்றிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். பாவம் உப்புலி, அரண்டு போய் இருந்தான். முகம் வெளுத்து இருந்தது. சுடலைக்கு இதில் என்ன மகிழ்ச்சியான விசயம் என்றால், தான் இதன் வழியாக பத்திரிக்கை செவ்வியில் இருந்து தப்பித்ததே. ஒரு கண்டம் மீண்ட தெம்பு அவன் முகத்தில். வாகனத்தைச் செலுத்திக் கொண்டே அடிக்கடி உப்புலியைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்.

உப்புலியின் கைப்பேசி, குறுஞ்செய்திக்கான ஓசையை ஒலித்தது. அரை ஈரத்தோடு இருந்த காற்சட்டை பைக்குள் கையை விட்டு கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அதிர்ச்சி விழிகளோடு செய்தியைச் சுடலையிடம் பகிர்ந்துக் கொண்டான்.

அனுப்புனர்: குசுலக்குமாரி
செய்தி : “டியர் உப்புலி, நடந்தத எண்ணி வருத்தம் வேண்டாம், உங்க உதவிக்கு நன்றி, இனி அடிக்கடி சந்திக்கலாம். இன்று இரவு, இரவு வணக்கம் சொல்ல உங்களுக்கு அழைப்பு செய்வேன், காத்திருக்கவும்”

“ஹாஹா... ஐயோ.... மச்சா உனக்கு லாட்டரி அடிச்சிருச்சுடா... குசுலக்குமாரி மாதிரி ஒரு அட்டு பிகர் கேட்ட... இப்போ அவளே உன்னை தேடி வர்ர மதிரி தெரியுது... நீ சொன்ன சாமர்த்தியத்த இப்போ காட்டுடா மச்சா.”
அவனை வெறுப்பேற்றவே சொன்னான் சுடலை.
குசுல் இனி தன்னை அவ்வளவாக தொந்தரவு செய்ய மாட்டாள் என்று சுடலை உற்சாகமானான்.
அவன் சொல்லி வாய் மூடுவதற்குள்ளேயே உப்புலியின் கைப்பேசி அலற தொடங்கி விட்டது. அழைப்பு குசுலக்குமாரியிடம் இருந்து. எடுப்பதா இல்லையா என தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டே இருக்கிறான் உப்புலி.

(கிசுகிசு முற்றும்)

புதன், 17 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (4)

கிசு கிசு குசுலக்குமாரி

சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரும் நிகழ்ந்ததைக் கூர்ந்து அவதானித்ததாகப் புலப்படவில்லை. பெருமூச்சை அடுத்து உணவை மங்கின் மீது குவிப்பதில் மும்முறமானான்.


(பாகம் 4)




சாப்பிட்டக் கையோடு உடனே கிளம்பி விட திட்டம் தீட்டினான். உட்கார இடம் தேடினான். தூரத்தில் சக நடிகன் உப்புலி உணவு அருந்திக் கொண்டிருந்தான். அவன் மேசையில் இடம் காலியாக இருந்தது. அங்கே விரைந்தான். உப்புலியும் சுடலையும் நல்ல நண்பர்கள். சற்றுமுன் குசுலிடம் பேசிக் கொண்டிருந்ததை அவனிடம் சொன்னான்.



உப்புலிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.
“மச்சா நீ ரொம்ப பாவம்டா”

“என்னை பார்த்தா சிரிப்பா இருக்குல்ல? சிரிடா சிரி”

“அதில்லடா, இந்த மாதிரி லூசெல்லாம் எப்படிடா சினிமால சேர்த்துக்குறாங்க?”

“என்னமோ நடிச்சி சாதனை படைச்சிட்ட மாதிரி, அப்புறமா ப்ரஸ்க்கு இண்டர்வியூ வேற, என்ன கொடுமைடா இது?”

“அத விடு மச்சா, உன்னைக் கூப்பிட்டதா சொன்னியே, போவ போறியா?”

“அதான்டா, எப்படி எஸ்கேப்பு ஆவுறதுன்னு தெரியல. எடக்கு மடக்கா ஏதாச்சும் அவ பேச, அவ வருங்கால புருசன் என்னை வகுந்திடப் போறான்”

“ஐய்யோ... என்னால சிரிக்காம இருக்க முடியலடா....”

“இப்போ உன்னை சிரிக்க வேணாமுன்னு யாரு அழுதா”
சுடலைக்கு வெறுப்பை யாரிடம் காட்டுவது என்று தெரியவில்லை.

சுடலைக்கு எண்ணமெல்லாம் வரப் போகும் பேட்டியின் மீதே இருந்தது. முந்தைய பேட்டியின் போது அவள் அவனைத் தொட்டு தொட்டு பேசி, அவசியமின்றி நொடிக்கொரு முறை கெக்கபுக்கெ என சிரித்து வைத்து அவன் பெயரையும் சேர்த்து நாறடித்தாள். செவ்விகளின் போது, அவளது பெரும்பேச்சுக்கும் பெறுமை பேச்சுக்கும் அவளுக்கு அவளே நிகர். கூடுதல் மழலை கொஞ்சி குலாவும். அவள் செய்யும் “நோனா” தர வித்தைகளைக் கண்டு சிரிக்காமல் இருப்பதற்கே ஆயிரம் முனிவர்களின் பக்குவம் தேவை. வெறுமனே தன்னோடு நடிக்கும் நடிகரோடு, தான் அன்னோன்யமாக இருப்பதைப் போலவே பேசுவாள்; காட்டிக் கொள்வாள். யோசித்துப் பார்த்தால் இப்படியும் ஒருத்தியா என நமக்கே வியப்பாய் இருக்கும்.



இன்றைய பேட்டியின் போது, அந்த அரசியல்வாதியான தயாரிப்பாளர் அரிவாளோடு நின்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒரு வகையில் அவனை மெச்சியாகவே வேண்டும், இவளைக் கட்டி மேய்க்கும் பலப்பரீட்சையில் குத்தித்தற்கு. அவனும் லேசு பட்டவன் அல்லன். நடிகையைக் கரம் பிடித்தால் அரசியலில் எளிதாக வெற்றி காணலாம் என்ற குருட்டு நம்பிக்கை அவனுக்கு.


நண்பன் உப்புலி இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை. சிரித்துக் கொண்டே எழுந்தான்.
“இருடா மச்சா, ஊடான் சம்பால் ரொம்ப நல்லாருக்கு, போட்டுட்டு வந்திடுறேன்”



“டேய் ஊடான் அளவா தின்னுடா... இப்பவே அங்க இங்க சொறிஞ்சிக்கிட்டு இருக்கே... இப்படியே போனா, உன்னை சொறி சிரங்கு விளம்பரத்துக்குத்தான் கூப்பிடுவாங்க... எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...”


“ஏன்டா சொல்ல மாட்டே? உனக்கு சினிமால அடிக்கடி வாய்ப்பு கொடுக்கிற குசுலக்குமாரி மாதிரி எனக்கு ஏதாவது ஒரு அட்டு பிகரு மாட்டாமலா போயிடும்?”




“மச்சா, அந்த நரக வேதனை உனக்கு வேணாம்டா. அவ வளைய சொல்லுற இடத்துல வளைஞ்சாகனும், இதோ இப்ப இந்த பேட்டியிலேந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன் பாரு... இன்னும் இந்தியன் படத்துல கமல் நாடா கோக்குற வேலை மட்டும் தான் பாக்கி”




“அடப்போடா, உனக்கு சாமர்த்தியம் பத்தலை. அதைவிடு, உனக்கு ஏதாவது வேணுமா?” என தட்டைக் காட்டி கேட்டான்.




“ஒன்னும் வேணாம்டா சாமி, தட்டுல இருக்கிறத முடிச்சிட்டு முதல்ல வீடு போய் சேரணும்.”




சுடலையின் தட்டும் காலியாகி விட்டது. தட்டில் எஞ்சி இருந்த ஈரமும் காய ஆரம்பித்துவிட்டது. உணவு எடுக்கச் சென்ற உப்புலி மட்டும் திரும்பி வரவில்லை. நேரமாவதால் அவனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட நினைத்தான். அவன் கைப்பேசிக்கு இணைப்பு கிட்டியது, ஆனால் அவன் எடுக்கவில்லை. சுடலைக்குச் சந்தேகம் வலுத்தது.





(கிசுகிசு தொடரும்)

செவ்வாய், 16 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (3)

கிசு கிசு குசுலக்குமாரி
"ஹேய் ஷுடால்"
காதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.
(பாகம் 3)



சுடலையின் முதுகில் ஒரு தட்டு தட்டி,
“ஷுடால்... எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்?” என்றாள். .


ஐய்யயோ, இதை யாராவது பார்த்து தொலைத்தால் என்ன ஆவது, முதல்லயே திரும்பி பார்த்திருக்கனும், உனக்கு இது தேவையாடா? சுடலையின் சுயத்தின் முனகல் அது.


“அட ஆமாவா? சத்தத்துல கேட்கலை. அதென்ன ஷுடால், சுடலைன்னு கூட்ப்பிடுங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்?”


“ஷுடால் நல்லாத்தானே இருக்கு, கிளாமரா. இ..இ..இ..இ.. சாப்டாச்சா? எப்படி? நல்லாருக்கா?”


“என்ன கேள்வி இது, இன்னும் உணவு எடுக்கவே இல்லையே”


சுடலை என்ற அழகான பெயரை மாற்றி உச்சரித்த போதே அவனுக்கு மண்டையில் மணி அடித்தாற் போல் இருந்தது. மேற்கொண்டு இப்படி ஏரணமே இல்லாத ஒரு கேள்வி அவளுக்குத் தேவைதானா? சுடலையின் நேர்பதிலுக்கு வலிந்து சிரித்துக் கொண்டாள்.


“ஈ..இ.. ஈ.. இ...”
ஈயாடவில்லை.


“ அனேகமா நல்லாத்தான் இருக்கனும்”


“ எப்படி சொல்றிங்க?”


“ வாசம் மூக்கைத் துளைக்குதே”


“ ஆமாவா, நாய் மாதிரி உங்களுக்கு மோப்ப சக்தி வேற இருக்கோ”


அவள் செய்த ஆசியத்துக்கு அவளைத் தவிர வேறும் யாரும் சிரித்திருக்க வாய்ப்பில்லை. கூடவே ஒரு குண்டையும் போட்டாள்.


“சாப்பிட்டு உடனே கிளம்பிடாதிங்க, ஷுடால்”


“அது ஏன்?”


போச்சுடா, இந்த லூசு வில்லங்கமா ஏதாச்சும் செய்யறதுக்குள்ள, தப்பிச்சிடனும் எனத் தனக்குத் தானெ சொல்லிக் கொண்டான்.


“பத்திரிக்கை பேட்டி இருக்கு, நீங்களும் கலந்துக்கனும்”


“கண்டிப்பா. கலந்துக்கனும்ன்னு ஆசை தான், ஆனால்...”


“ஆனா ஊனான்னா இத ஒன்னு சொல்லிடுவீங்களே, என்ன ஆனா?”.


அப்போது குசுலின் கைப்பேசி அலற, அவள் பரபரப்பாகி விட்டாள்.
“எஸ் குஸ் மீ, வான் மினீட் ஆ...,” என்று அரை குறை ஆங்கிலத்தில் மேற்கத்திய நாகரிகத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.


சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரும் நிகழ்ந்ததைக் கூர்ந்து அவதானித்ததாகப் புலப்படவில்லை. பெருமூச்சை அடுத்து உணவை மங்கின் மீது குவிப்பதில் மும்முறமானான்.

(கிசுகிசு தொடரும்)

சனி, 13 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (2)


கிசு கிசு குசுலக்குமாரி


... ... ... குசுலக்குமாரி பிச்சைமுத்து என்ற இயற்பெயரைச் சுருக்கி குசுல் என்று வைத்துக் கொண்டாள். பெயரை இன்னும் சுருக்கி ஈரெழுத்தாக்க அவளுக்கு ஆசைதான், ஆனால் ஏதோ காரணத்தால் அவ்வாறு செய்யவில்லை. நல்லவேளை.
குசுல் என்ற பெயர், முழுப்பெயரைக் காட்டிலும் ரசிகர்களிடம் அவ்வளவாக சோபிக்கவில்லை.

(பாகம் 2)

ரையில் கால் படாமல் தான் குசுலக்குமாரி விழாவில் உலாவிக் கொண்டிருந்தாள். அரைசாண் உயரத்தில் தூக்கு சப்பாத்து அணிந்து, நடக்க முடியாமால் நடந்துக் கொண்டிருந்தாள். அனைவருக்கும் அன்றைய வேடிக்கை அவளின்றி வேறு யார்? யாருமே அவளைக் கண்டுக் கொள்ளா விட்டாலும், வலிய சென்று பேசி, தான் பரபரப்பாக இருப்பதைப் போல காட்டிக்கொள்ள தயங்கவில்லை. அப்படி யாருமே கிடைக்காத போது என்ன செய்திருப்பாள்? ஆம், அதே தான், கையில் இருக்கும் கைப்பேசியைக் காதோரம் வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் நண்பர்களை வழக்கம் போல வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.


உணவுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நடிகன் சுடலையைப் பார்த்து விட்டாள். சுடலையும் அவளைத் தூரத்திலே பார்த்து விட்டு பார்க்காதது போல் திரும்பிக் கொண்டான். குசுலக்குமாரி அவனை நோக்கித்தான் நடக்கிறாள்.


வாழ்த்து சொல்லி விட்டு கடமைக்குப் பரிசையும் கொடுத்துவிட்டு அப்பவே தப்பித்தோம் பிழைத்தோம் என நழுவினான் சுடலை. இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதாய் பத்திரிக்கைகளில் வெளிவந்த கிசுகிசுக்களைக் கண்டு அரசியல்வாதியின் ஆட்கள் அவனைப் பலமுறை மிரட்டி உள்ளனர். ஒருமுறை அவர்கள், தாட்கள் வெட்டும் கத்தியோடு அவனைச் சீவ வந்தனர். ஏதோ பேசி தப்பித்தான் நடிகன். இப்போது ஞாபகத்தில் அதுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. கையில் அவன் ஏந்திக் கொண்டிருந்த தாள் தட்டும் அவனோடு சேர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.


சுடலை செய்த ஒரே பாவம், குசுலக்குமாரியோடு "காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்" என்ற இருபத்து நான்கு அத்தியாயங்களைக் கொண்ட ஓர் அறுவை நாடகத்தில் நடித்து தொலைத்ததுதான். குசுலைக் காட்டிலும் சுடலைக்கு நடிப்பு நன்றாகவே வரும். பொழிவான முகத் தோற்றம். திடமான உடல். கம்பீரமான குரல். பழக இனிமையானவன். சுருங்கச் சொன்னால், ரசிகன்களைக் காட்டிலும் ரசிகைகளின் எண்ணிக்கை தான் அதிகம்.

பகட்டு இல்லாத மனிதன். முக்கியமாக, மணமாகாத நடிகர்களில் இவனும் ஒருவன். "காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்" நாடகத்துக்குப் பிறகு சுடலையின் நிசக் காதல் கதையும் கண்ணீரில் மூழ்கியது என்பது பிரிதொரு செய்தி. அது குசுலக்குமாரிக்கு நல்ல வசதியாகி போயிற்று. படப்பிடிப்பு இடங்களில் சுடலையுடன் பல்லி போல ஒட்டிக் கொள்வாள். சுடலை விலகிச் சென்றாலும் விடமாட்டாள். காரணம், கிசுகிசுக்கள் மூலம் தனக்கு இன்னும் பிரபலம் கிட்டும் என்பதில் குசுலக்குமாரிக்கு அசைகக்க முடியா நம்பிக்கை. ஊடகங்களில் வரும் கிசுகிசுக்களைச் சேகரித்து தருவதற்கே ஒருவரை வேலைக்குச் சேர்த்துள்ளாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

"ஹேய் ஷுடால்"

காதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.

(கிசுகிசு தொடரும்)

வெள்ளி, 12 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (1)

* பின்வரும் சிறுகதையும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் கற்பனை உலகின் பிம்பங்களே. யாரினது மனத்தைப் புண்செய்யும் நோக்கில் இது புனையப் படவில்லை. நன்றி.


கிசு கிசு குசுலக்குமாரி

ந்தி மூட்டையக் கட்ட, இருள் கடைத்திறந்த நேரம். கூரை துறந்த திறந்த வெளி. சற்றுமுன் தூறிய மழையால் சொத சொதவென இருந்த புட்தரை. கண்களைக் கூசும் மின்விளக்குகள். செவிகளைச் செவிடாக்கும் ஒலிப் பெருக்கிகள். அதிலிருந்து வந்த கதறல் இசை. அதையும் மிஞ்சும் வண்ணம் கூடியிருந்த மக்களின் அரட்டையும் கூச்சலும்.


பிரபலங்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், பொது மக்கள் என பலதரப்பட்டவர்கள் கூடி களித்துக் கொண்டிருந்தனர். நாட்டின் இன்றைய பிரபலமான நடிகையும் ஓர் அரசியல்வாதிக்குக் கழுத்தை நீட்ட போகும் பலிகடாவுமான குமாரி குசுலக்குமாரிக்கு இவ்வாண்டின் மூன்றாவது பிறந்தநாள் விழா. ஒரே ஆண்டில் அடிக்கடி பிறந்தநாள் கொண்டாடினாலும், நடிக்க வந்து பத்தாண்டுகளில் அதே இருபத்தொன்று வயதைக் கடக்கவில்லையாம்.


கேக்கை வெட்டினாள், அரசியவாதிக்கு ஊட்டினாள். குமாரி குசுலக்குமாரியோடு நடித்த நடிகர்களும், கல்லையும் நடிக்க வைக்க முடியும் என நிரூபித்த இயக்குனர்களும், அவளைத் திரையில் அழகாய் காட்ட முயன்று தோற்றுப்போன ஒளிப்பதிவாளர்களும், அத்தோல்வியைத் தோள் கொடுத்து சுமந்த ஒப்பனையாளர்களும் இன்ன பிற திரைப்பட கலைஞர்களும் அவளோடு இணைந்து புகைப் படம் எடுத்துக் கொண்டனர். மேலே சொன்ன பட்டியலில் தயாரிப்பாளரைத் தனியாக குறிப்பிட தேவையில்லை. அந்த அரசியவாதியைத் தவிர வேறு யார் இவளை நம்பி பணம் முதலீடு செய்திருக்க போகிறார்கள்?

நடிகை என்றதும் அவள் திரைப்பட நடிகை என்று நீங்கள் தவறான எண்ணம் கொண்டிருக்கலாம். அவள் உள்நாட்டு தொலைக்காட்சி நாடக நடிகை. ஆயினும், புகழ் உச்சியில் இருக்கும் திரை நட்சத்திரத்தின் அத்துணை பந்தாவும் அலட்டலும் இவளிடம் காணலாம்.

மக்களிடம் தனது பெயர் எளிதாக சென்றடைய, குசுலக்குமாரி பிச்சைமுத்து என்ற இயற்பெயரைச் சுருக்கி குசுல் என்று வைத்துக் கொண்டாள். பெயரை இன்னும் சுருக்கி ஈரெழுத்தாக்க அவளுக்கு ஆசைதான், ஆனால் ஏதோ காரணத்தால் அவ்வாறு செய்யவில்லை. நல்லவேளை.

குசுல் என்ற பெயர், முழுப்பெயரைக் காட்டிலும் ரசிகர்களிடம் அவ்வளவாக சோபிக்கவில்லை.


(கிசுகிசு தொடரும்)