என்னமோ
இருட்டு, குளிர். அதிகாலை ஆறு. மக்கள் கூட்டம். ஆண், பெண், இளைஞர், குமரி, பொடியன், பிள்ளை, குழந்தை, பெரியவர், கிழவர், காவல் அதிகாரி, சிறப்பு பாதுகாவல் அதிகாரி, தமிழர், ஆங்கில உரையாடல், வடமொழி பிரார்த்தனை, ரதம், காளை, வண்ணக் கொடி, முருகப்பாடல், தேங்காய் குவியல், ஆட்டக் காவடி, வேட்டி, சேலை, தாவணி, தங்க ஆபரணம், ஒப்பனை, பக்தர், வேடிக்கையாளர், அர்ச்சனை தாம்பளம், ஊதுபத்தி, சீனர், வெளிநாட்டவர், ஒளிப்படக் கருவி, ஊடகத்தார்.
ஆம், தைப்பூசத்தின் முதன் நாள், முருக ரத ஊர்வலம் விமரிசையாக அனுசரிக்கப் படுகிறது. அந்நாளைச் செட்டி பூசம் என்றும் அழைக்கப் படுவதுண்டு. இந்தியாவிலிருந்து வணிகத்தை நம்பி வந்தவர்கள் செட்டி என்ற இப்பிரிவினர். ஆரம்பக் காலங்களில் இவர்கள் துவக்கி வைத்த செட்டி பூசமானது, பிற்காலங்களில் மற்ற தமிழ் பக்தர்களாலும் வரையறு இன்றி கொண்டாடப் பட்டு வருகிறது. தைப்பூசத்தன்று வேடிக்கை பார்க்க நினைக்கும் மக்கள், வேண்டுதல் இருப்பின் அதை இந்த செட்டி பூசத்தன்றே செலுத்தி விடுபவர்களும் உள்ளனர்.
பினாங்கு மார்க்கெட் தெருவில் புறப்படும் இந்த முருகன் ரதம், பல மணி நேர பவனிக்குப் பிறகு நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயிலை அடைகிறது. ரதம் வரும் பாதைகளில் தேங்காய் உடைத்து, சாலையைக் குளுமை செய்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலையை நேர்த்தி செய்தனர். சிலர் பக்தர்களுக்குப் பானமும், அண்ணதானமும் வழங்கி புண்ணியம் தேடினர். சிலர் போட்டிக்காக தேங்காய் உடைத்தனர். வாங்கிய தேங்காயை உடைக்க ஆள்பலம் இன்றி சிலர் தத்தளித்தனர். வழக்கம்போல கொம்தாருக்கு எதிரே உள்ளே தெருவில் தேங்காய் குவியலுக்குப் பஞ்சம் இல்லை.
பொருளாதார சரிவு பக்தர்களைத் துளியும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது. அல்லது, பொருளாதார அடியை, கடவுளுக்கு முன் துட்சமாக எண்ணி விட்டனரோ என்னவோ? கல்வி நிதி என்றால் மூக்கால் அழுபவர்கள், கடவுள் நன்கொடைக்குப் பாரி வள்ளலாய் மாறுவது ஏனோ? சாமி கண்ணைக் குத்திடுமுன்னு ஒரு பயமா? கோயிலுக்கு செலவு பண்ண வேண்டாமுன்னு சொல்லலை, கல்விக்கும் அதே அளவு, அல்லது அதில் பாதியை செலவு அளிக்கலாமே?
சரி, நம்ம கதைக்கு வருவோம். சிறு சிறு மேகங்கள் சூரிய ஒளியை 11.30 மணிவரை வடிக்கட்டி அனுப்பி வைத்தன. அதற்குப் பின் அவற்றுக்குச் சோம்பல் வந்ததால் என்னவோ, வரும் என்ற எண்ணிய தூறல் ஓடி ஒழிந்துக்கொண்டது.
நண்பகலுக்கு மேல் வெயிலின் அட்டகாசம், பக்தர்களைப் பாடாய் படுத்தியது. எதற்கும் அஞ்சா நெஞ்சங்கள் முருக பக்தர்கள், தேங்காய் வீச்சில் பின் வாங்கவில்லை.
சுற்றுபயணிகளுக்கு எங்கிருந்து கிடைக்குமோ உயர்தர புகைப்படக்கருவிகள்... தோளில் ஒரு பை, அதில் வித விதமான ஒளிப்பெருக்கி லென்ஸ்கள். ஆளுக்கொன்று ஏந்திக் கொண்டு வளைந்து நெளிந்து போட்டோ எடுத்தனர். அவர்களுக்குப் போட்டியாக பத்திரிக்கையாளர்கள் மாய்ந்து மாய்ந்து போட்டோ எடுத்தனர், நமக்கா தெரியாது, எடுத்தது ஆயிரம் என்றாலும், போடப்போவது ஒன்றோ இரண்டோ...
பக்தர்கள் தார் சாலையைத் தேங்காயால் அடித்து நொறுக்கும் பணியில் திளைத்திருந்தனர், அவ்வப்போது சிறு ரக ட்ராக்டர், உடைப்பட்ட தேங்காய் பிரவாகத்தை ஒரு பக்கமாக குவித்தது. அப்போத்தானே நல்லா உடைக்கலாம். கருமமே கண்ணாய் இருந்த ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரர் மெய்மறந்து போட்டோ எடுத்து குவிப்பதில் மூழ்கி போய் இருந்தார். அதி அருகில் சென்று தேங்காய்க்கும் தார் சாலைக்கும் நடக்கும் யுத்தத்தைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வந்த ட்ராக்டரைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை, அவர் கவனித்த நேரத்தில் கால் அவர் வசம் இல்லை; ட்ராக்டரின் வட்டையின் அடியில் அது சிக்கிக் கொண்டது. பரபரப்பு. தெரித்துப் போயிருக்க வேண்டும் ஓட்டுனர், அவரது காலினை உடனடியாக விடுதலை செய்தார். வண்டியை விட்டு இறங்கி திருதிருவென விழித்தார், கலங்கி இருக்க வேண்டும், தவறு முழுக்க முழுக்க அவரோடது இல்லை என்றாலும் கூட.
அடிப்பட்டவரின் எலும்பு நிச்சயம் நொறுங்கி இருக்க வேண்டும். அவர் காலணியைக் கழற்றவே இல்லை. அவர் வலி தாங்காது பக்கத்தில் இருந்த சக நண்பர் தோளில் சாய்ந்தார். தோள் கொடுப்பான் தொழன் என்பது இதுதான் போல.
வடக்கிலும் தெற்கிலும் ஏகப்பட்ட நெரிசல், அம்புலன்ஸ் கூட்டி வருவது அசாத்தியமே, மிதித்த ட்ராக்டரே பரிகாரத்தைத் தேடிக்கொண்டது. அவரை அதிலேயே ஏற்றிக் கொண்டு முதலுதவி இடத்துக்குக் கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவரை வேறொரு சாலையில் பார்த்தோம், காமிராவில் அதே தேங்காய் உடைக்கும் அழகைப் பதிவு செய்துக் கொண்டிருந்தார். என்ன கடமை உணர்ச்சி. காலுக்கு ஒன்னும் ஆகலையா? நிச்சயம் கடவுளின் கிருபை என்றே முழங்கி இருப்பார்.
பிறகு உச்சி வெயில். சிவன் கோயிலுக்கு முன் சன்வே விடுதியின் அன்னதான பந்தல். “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” என்ற பக்தி பாடல், புதிதாய் மீள்கலவையில் (ரீமிக்ஸ்) அதிதுரித இசையில் எல்லா பந்தல்களிலும் துள்ளிக் கொண்டிருந்தது. அதிலும் வேடிக்கை, ஒரு நாடோடி வகை பாடல் ஹிப்ஹோப் ரகமாய் மாற்றப்பட்டிருந்தது. இடையிடையே, ரேப் (ஏகாரத்தைத் தவறாக உச்சரித்தால் நான் பொறுப்பிலை) குரல். என்ன கொடுமடா சாமி. (“ஏரிக்கரை ஓரத்திலே, தோசை ஒன்னாங்க, தோசை ரெண்டாங்க” இப்படித்தான் வரும்ன்னு நினைக்கிறேன், அந்த பாட்டு). இன்னொரு விசயம், முதல்ல 4 பையனுங்கத்தான் இந்த பாட்டுக்கு ஆடிச்சு இருந்தானுங்க, அப்புறமா ரெண்டு பொன்னுங்க வந்திச்சுங்க, சுமார் 15-16 வயசு இருக்கும். நெருப்பாட்டம். அதுங்கள பாத்துட்டு, கொஞ்ச நேரத்துல பசங்க குமிஞ்சிட்டாய்ங்க. எல்லார் பார்வையும் அங்கேதான். நல்லவேளை, முதல்ல சொன்ன கடமையான புகைப்படக்காரர் அங்கில்லை, இருந்திருந்தால் எல்லார் மானமும் கப்பல் ஏறியிருக்கும்.
மதியத்துக்கு அப்புறம் நான் வீடு திரும்பிட்டேன், கூட்டாளிங்க எல்லாம் அங்கேயே தங்கி மறுநாள் தான் கிளம்பி வந்தானுங்க, மிச்ச கதைய அவனுங்க கிட்டத்தான் விசாரிக்கனும்.
என்னவோ எழுத வந்து என்னமோ எழுதி முடிச்சிருக்கேன், அதனால தலைப்பு, “என்னமோ”ன்னே வெச்சிக்கலாம், தப்பில்லையே?