பக்கங்கள்

புதன், 31 டிசம்பர், 2008

நினைவை எட்டிய முதற்நூறு (1-20)


நினைவை எட்டிய முதற்நூறு (1-20)

- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

ரு நாளில் நாம் எத்தனையோ பாடல்களைச் செவியினூடே கேட்கிறோம், ஒரு சில பாடல்கள்தாம் நம்மைக் கவர்கின்றன, ஈர்க்கின்றன;
அப்படி ஈர்ப்பவையில் குறிப்பிட்ட ஓரிரு வரிகளில் நாம் விழுந்துவிடுவதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அவ்வண்ணம் என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,
சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் பின்வருமாறு:
முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?
முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில் நினைவு முகம் மறக்கலாமோ?
2. உன் சேல காத்திலாட, என் நெஞ்சும் சேந்தாட
3. உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது... இது கம்பன்
பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது...
4. காதல்?... கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ஹூம்ம்ம் ம்ம்ம்... ம்ம்ம்?... நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவல்லோ...
5. அந்த நிலவை எடுத்து கவரி வீசவா, எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா...
6. சகாயமே உன்னருகினில் நிலைப்பெறுவேனே, தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே...
7. அடிவானம் சிவந்தாலும் குடிப்பூக்கள் பிளந்தாலும் உனைப் போல இருக்காது அழகே
8. அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
9. யாவும் நீயாய் மாறிப் போக நானும் நானில்லையே... மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே... தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்...!
10. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும், விலகிப் போகாதே தொலைந்துப் போவேனே நான்....!
11. என்ன இருந்தப் போதும் அவள் எனதில்லையே... மறந்துப்போ என் மனமே!
12. மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே... மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ...
13. மரபு வேலிக்குள் நீ இருக்க, மறக்க நினைக்கிறேன் முடியவில்லை!!!
14. நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை, நெருக்கமே காதல் பாஷை
15. மங்கை மான் விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன?
16. பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன், கேளாமால் போன பாடலை எல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன்...
17. இழப்பதை இங்கே இன்பம் என்று கொண்டேன், நஷ்டங்களே லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன் சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான், லயித்து கிடந்தேன் லட்சியத்தை முடித்தான்
18. அழகிய துளி, அதிசய துளி தொட தொட பரவசமே
19. நதியும் குளிக்கின்றதே, நனைய வா என்றதே, பார்த்த இன்பம் பாதி, இன்பம் நனைவேன் நானே
20. வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனித்துளி ஆவேனோ
(எஞ்சியவை பின்னாளில்)

வெள்ளி, 26 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (5)

(கடைசி பாகமுங்கோ)


கிசு கிசு குசுலக்குமாரி


... ... சுடலையின் தட்டும் காலியாகி விட்டது. தட்டில் எஞ்சி இருந்த ஈரமும் காய ஆரம்பித்துவிட்டது. உணவு எடுக்கச் சென்ற உப்புலி மட்டும் திரும்பி வரவில்லை. நேரமாவதால் அவனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட நினைத்தான். அவன் கைப்பேசிக்கு இணைப்பு கிட்டியது, ஆனால் அவன் எடுக்கவில்லை. சுடலைக்குச் சந்தேகம் வலுத்தது.


(பாகம் 5)


ணவு எடுக்கும் இடத்திற்கு அருகில் கூட்டம் குழுவி இருந்தது. சலசலப்பான சூழ்நிலை சுடலையைக் கலவரப் படுத்தியது. என்ன, ஏது என மூக்கை நுழைப்பதில் நம்மவருக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்? சுடலையும் ஆவல் ததும்ப எட்டி பார்த்தான். அதிர்ச்சி. ஆனால் அவனை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

அன்பு நண்பன் உப்புலிதான் கூட்டத்துக்குக் காரணம். அவன் மட்டும் அல்ல, அவனோடு குசுலக்குமாரியும். இருவரும் சேற்றில் வழுக்கி புரண்டு கொண்டிருந்தனர். சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அவர்களுக்கு உதவவில்லை, சினிமாவில் காண்பிப்பது போல. அந்த இக்கட்டிலும் கூட குசுல் தனது கருமத்தில் இருந்து பின் வாங்கவில்லை. முடிந்த வரை பத்திரிக்கையில் கிசுகிசு வரும் அளவுக்கு அத்தனை சேட்டைகளையும் செய்தாள்.

சுடலை மனசு கேட்காமல், கூட்டத்தைக் கலைத்து நண்பனுக்குக் கை கொடுத்தான். அவளும் எழுந்து வந்தாள். விசாரித்த போது, உப்புலி சொன்னது சிரிப்பு சிரிப்பாக வந்தது. உப்புலி உணவு எடுக்க சென்ற போது குசுலக்குமாரியைச் சந்தித்து இருக்கிறான். அவள் பேசிக் கொண்டே அவசரமாக நடந்திருக்கிறாள். தூக்கு சப்பாத்து; சொத சொதவென இருந்த புட்தரை; நடக்கும் போது கால் சேற்றில் மாட்டிக் கொண்டு தடுமாறி இருக்கிறாள். உப்புலியும் ஹீரோவைப் போல பாய்ந்து அவளைத் தாங்கி பிடிக்க, அந்த 80 கிலோ இம்சையைத் தூக்க முடியாமல் மூச்சடைத்து தானும் சேற்றில் விழுந்திருக்கிறான். பிறகு நடந்தது தான் தெரியுமே.


உப்புலியின் மீது ஒட்டிக் கொண்டிருந்த சேற்றைக் கழுவி விட்டு அவனைத் தன் மகிழுந்திலேயே ஏற்றிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். பாவம் உப்புலி, அரண்டு போய் இருந்தான். முகம் வெளுத்து இருந்தது. சுடலைக்கு இதில் என்ன மகிழ்ச்சியான விசயம் என்றால், தான் இதன் வழியாக பத்திரிக்கை செவ்வியில் இருந்து தப்பித்ததே. ஒரு கண்டம் மீண்ட தெம்பு அவன் முகத்தில். வாகனத்தைச் செலுத்திக் கொண்டே அடிக்கடி உப்புலியைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்.

உப்புலியின் கைப்பேசி, குறுஞ்செய்திக்கான ஓசையை ஒலித்தது. அரை ஈரத்தோடு இருந்த காற்சட்டை பைக்குள் கையை விட்டு கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அதிர்ச்சி விழிகளோடு செய்தியைச் சுடலையிடம் பகிர்ந்துக் கொண்டான்.

அனுப்புனர்: குசுலக்குமாரி
செய்தி : “டியர் உப்புலி, நடந்தத எண்ணி வருத்தம் வேண்டாம், உங்க உதவிக்கு நன்றி, இனி அடிக்கடி சந்திக்கலாம். இன்று இரவு, இரவு வணக்கம் சொல்ல உங்களுக்கு அழைப்பு செய்வேன், காத்திருக்கவும்”

“ஹாஹா... ஐயோ.... மச்சா உனக்கு லாட்டரி அடிச்சிருச்சுடா... குசுலக்குமாரி மாதிரி ஒரு அட்டு பிகர் கேட்ட... இப்போ அவளே உன்னை தேடி வர்ர மதிரி தெரியுது... நீ சொன்ன சாமர்த்தியத்த இப்போ காட்டுடா மச்சா.”
அவனை வெறுப்பேற்றவே சொன்னான் சுடலை.
குசுல் இனி தன்னை அவ்வளவாக தொந்தரவு செய்ய மாட்டாள் என்று சுடலை உற்சாகமானான்.
அவன் சொல்லி வாய் மூடுவதற்குள்ளேயே உப்புலியின் கைப்பேசி அலற தொடங்கி விட்டது. அழைப்பு குசுலக்குமாரியிடம் இருந்து. எடுப்பதா இல்லையா என தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டே இருக்கிறான் உப்புலி.

(கிசுகிசு முற்றும்)

சனி, 20 டிசம்பர், 2008

எங்கே போகிறோம்? - நாவல்


எங்கே போகிறோம்?


- நாவல்


“எங்கே போகிறோம்”என்பது எனது கேள்வியன்று. அண்மையில் நான் படித்த ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளரின் பழைய புதினம். சென்னையின் ‘தாகம்’ நிறுவனத்தின் வெளியீடு. இது இலக்கிய பரிசு பெற்ற ஒரு நாவலும் கூட.எனக்கு இதைப் பரிசாக அளித்தவர் நண்பர் விக்னேஷ்வரன் அடைக்கலம். அண்மைய சந்திப்பின் போது எனக்குள் வாசிக்கும் பழக்கத்தை விதைக்கும் பொருட்டு அவர் இதைப் பரிசளித்து இருக்க வேண்டும். முதலில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும். அவரின் அன்பு கட்டளைக்கு இணங்க இதோ அந்நாவலை பற்றிய எனது எண்ணங்கள். (விமர்சனமன்று)இந்திய நாட்டில், சுதந்திரத்திற்குப் பத்தாண்டு காலத்துக்குப் பிறகு நிகழ்ந்த பல உண்மை சம்பவங்களைக் கற்பனை கதாப்பாத்திரங்களோடு சொல்ல முற்பட்டுள்ளார் கதை ஆசிரியர். சுதந்திரத்துக்குப் பின்பும் நாட்டின் எதிர்கால பின்னடைவுக்கு யார் காரணம், நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்ற கதைக்கருவையே சுற்றி கதையும் கதையின் பாத்திர அமைப்புகளும் பின்னப்பட்டுள்ளன.காந்திய நெடி நாவல் முழுக்க வலம் வந்துள்ளது. அதன் நிறைகளை மட்டுமின்றி குறைகளையும் அதன் வீழ்ச்சிக்கு எவை வித்தாக அமைந்திருக்கக் கூடுவன என்பதையும் கதையினூடே சொல்லியுள்ளார். காந்தியத்தின் தெளிவான நோக்கம், அதைப் பற்றிய மக்களின் குறுகலான கண்ணோட்டம், சுதந்திரத்துக்குப் பின்பு எவ்வாறு அதைச் சாத்தியப் படுத்துவது - இவற்றை வாசகர் மனத்தில் விதைப்பதாகவே இந்நாவல் புனையப் பட்டுள்ளது.

சுதந்திரத்துக்குப் பத்தாண்டுகள் கடந்து வந்து சென்னையை மையமகாக் கொண்டு கதை துவங்கப் பட்டுள்ளது. சுதந்திரத்துக்காக பாடுவட்டவர் ராமலிங்கம். அவரது மனைவி லட்சுமிஅம்மாள். அவர்களுக்கு சிதம்பரம், பாரதி, சுபாஷ் என மூன்று குழந்தைகள். குழந்தைகளின் பெயர்களில் சுதந்திரப் போராளிகள் வாழ்கின்றனர். அகிம்சைவாதியாக காந்தியின் கொள்கையில் வாழும் ராமலிங்கமும் அவரது மூத்த புதல்வன் சிதம்பரமும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், இழப்புகள், போராட்டங்கள் என கதை நகர்கிறது. இளைய மகள் பாரதி மற்றும் மகன் சுபாஷ் இருவரும் கார்ல்மாக்ஸ் பாதையை வாழ்க்கையில் கடைபிடிக்கின்றனர். கார்ல்மாக்ஸ் – காந்தியம், இவை இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமைகளையும் ஆசிரியர் இனம் கண்டுள்ளார். நாடு மற்றும் அரசியல் தொடர்புடைய கதை என்றாலும் கூட, குடும்ப அன்பும் தோழமை பரிவும் காதலும் ஆங்காங்கே கதைக்குச் சுவாரசியம் ஊட்டுகின்றன.

கதையின் ஓட்டத்தை வளப்படுத்த, ராமலிங்கத்தின் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து கதையில் இன்னும் பல பாத்திரப் படைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கதையில் வரும் கதைமாந்தர்களைப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகையானது நாட்டுக்கு நல்லது செய்ய போராடும் கூட்டம். இந்த பட்டியலில் சிதம்பரம், ராமலிங்கம், சலீம், கணேசன், எழுத்தாளர் ரத்தினம், ராகவன், கோபாலன், அன்பானந்தம், வளநாடன், நரசிம்மன், சுபாஷ், ராமநாதன், போன்றோரைச் சேர்க்கலாம்.

இரண்டாம் வகையானது, முன்னம் சொல்லப்பட்டதுக்கு மாறுபட்டு இருப்பது, அதாவது நாட்டுக்குத் துரோகம் இழைத்து, சொத்து குவிக்க அலைபவர்கள். இந்த வகை பட்டியலில் பொன்னையா, பஞ்சாபகேசன் (பஞ்சு), துரைசாமி, பாலசுந்தரம், சுந்தரேசன், உஷா, நடிகர் குமரேசன், சியாமளா, காதர்பாவா, கன்னையாலால், திருவேங்கிடம் போன்றோர் அடங்குவர்.

இந்த இரு வகைகளிலும் சம்பந்தப் படாமல் இருக்கும் பாத்திரப் படைப்புகளும் உள்ளன. லட்சுமிஅம்மாள், பாரதி, டாக்டர் ராஜன், மீனா போன்றோர் அவர்கள்.

இந்த இரண்டு வகைகளிலும் கலந்து இருப்பவள், கதைக்கு நாயகி தரம் கொடுக்கப்பட்ட புவனா (புவனேசுவரி). முரண்பாட்டான பாத்திரப் படைப்பு. நல்லதும் செய்கிறாள், கெட்டதும் செய்கிறாள், ஆனால் நல்லவள்தான் என்று ஆணித்தரமாக உடனுக்குடன் வலியுறுத்துகிறார் ஆசிரியர். அவள் ஒரு புரியாத புதிர் என்று ஆசிரியரே ஓரிடத்தில் சொல்கிறார்.

‘விடிவெள்ளி’ கோபாலன், நடிகை சியாமளா, ராமநாதன் போன்றோர் கதைக்குத் தேவைப்பட்ட நிழல் கதாப்பாத்திரங்கள்.

கௌரவத் தோற்றம் போன்று, இந்தியப் பிரதமர் நேருவை ஒரு கட்டத்தில் கதைக்குள் திடீர் கதாப்பாத்திரமாக நுழைத்துள்ளார் ஆசிரியர்.

ஆசிரியர் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் மிக அருமையாகவே கையாண்டுள்ளார். தாம் சொல்ல வந்த கருத்தைச் சலிப்பு தட்டா வண்ணம், கதைமாந்தர்கள் வழிகாயாகவே சொல்லி இருக்கிறார். அவர்கள் நினைவு கூர்வதாகச் சொல்லி வரலாற்றின் முக்கிய கூற்றுகளை அழகாக இந்த தலைமுறைக்கு எடுத்துரைத்து உள்ளார். ஆயினும், முதல் சில அத்தியாயங்கள் சுவாரசியம் குன்றி இருப்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

விலைமாதுவாக புவனாவை அறிமுகப்படுத்தி, அவளைவிட கேவலமானவர்கள் இந்த நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் என சுட்டிக் காட்டி இருப்பது ஆசிரியரின் துணிச்சல். சிதம்பரம் மற்றும் எழுத்தாளர் ரத்தினத்தின் மூலமாக ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவும் வாழவும் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தம்மைப் போன்ற எழுத்தாளர்களின் பலத்தையும் சொல்லாமால் இல்லை. ‘புது வாழ்வு’ பத்திரிக்கையின் நோக்கங்கள் என பட்டியல் போட்டுக் காட்டும்போது, ஒரு பத்திரிக்கைக்கான இலக்கணத்தை மறைமுகமாக மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

புவனாவின் கதாப்பத்திரத்தில் பல மர்மங்களைப் புகுத்தி பின் கதையோட்டத்தில் மர்மங்களை உடைத்துள்ளார். ஆசிரியருக்குக் கதையின் நாயகன் சிதம்பரத்தின் மீது என்ன கோபமோ? போராட்டம் குணம் இருப்பவனாய் காட்டினாலும், அடிக்கடி அழுது கரைபவனாகக் காட்டி இருக்கிறார். மற்றவர் இடித்துரைத்தப் பின்னே அதை உணரும் அப்பாவியாய் சில இடங்களில் சித்தரிக்கப் படுகிறான். மேலும், தழுதழுத்தக் குரல் ஆங்காங்கே அவன் மட்டுமின்றி பலர் வடிவிலும் ஒலித்துள்ளது.

ஐந்நூறு ரூபாயும் அதன் மடங்குகளும் (ஐயாயிரம், ஐந்து லட்சம்) அடிக்கடி கதையில் அடிபடுகிறது. புவனாவின் வரதட்சணை, அவளது ஒரு மணிநேர ஊதியம், சலீம் தந்து உதவும் பணம் இப்படி பல இடங்களில்.

கதையில் நரசிம்மன் என்ற பாத்திர புகுத்தல், ஆசிரியரின் ஆற்றலைப் பிரமிக்க வைக்கும் ஓர் உதாரணம். காரணம், பஞ்சுவின் பத்திரிக்கை கூட்டத்துக்கு அழையா விருந்தினராய் அவரைப் புகுத்தி, ஆசிரியர் தனது கொள்கை கருத்தை அங்கேயும் தெவிட்டாமல் சொல்லி இருக்கிறார். ஆயினும், ஆசிரியர் மற்ற பல இடங்களில் வரலாற்று சம்பவங்களை வலிய திணிப்பது நெருடல்தான். சலிப்பையும் ஏற்படுத்துகிறது. ஹிட்லர் வீழ்ச்சியை எளிய முறையில் சொல்லி இருப்பது அருமை.

உஷா, சியாமளா, பஞ்சு, குமரேசன் முதலியோர் பந்தாடப்படுவது சிரிப்புக்கு விருந்து. சிதம்பரமும் புவனாவும் சந்திக்கும் தருணங்கள் பக்குவப்பட்ட காதலின் வெளிப்பாடு.

பக்கம் 225ல், கால விரயம் – பண விரயம் இதில் ஏதாவது ஒன்றை அடைந்தே இன்னொன்றைத் தவிர்க்க முடிகிறது என்பதை எடுத்துக்காட்டோடு எதார்த்தமாகச் சொல்லி இருக்கிறார்.

பக்கம் 221ல், 22வது வரியில் நாவலின் தலைப்பை ஞாபகப் படுத்தும் வண்ணம், சலீம் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் “இந்த நாடு இப்ப எங்கே போகுது?” என்று வினா எழுப்பப்படுகிறது. இதன்வழி “எங்கே போகிறோம்?” என்ற கேள்வியானது நாட்டு மக்களைப் பார்த்து கேட்கப் படுவதாக உணரப்படுகிறது.

நீங்களும் உடனே இந்த நாவலைப் படித்து (ஏற்கனவே படித்திராத பட்சத்தில்) உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமே!

புதன், 17 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (4)

கிசு கிசு குசுலக்குமாரி

சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரும் நிகழ்ந்ததைக் கூர்ந்து அவதானித்ததாகப் புலப்படவில்லை. பெருமூச்சை அடுத்து உணவை மங்கின் மீது குவிப்பதில் மும்முறமானான்.


(பாகம் 4)
சாப்பிட்டக் கையோடு உடனே கிளம்பி விட திட்டம் தீட்டினான். உட்கார இடம் தேடினான். தூரத்தில் சக நடிகன் உப்புலி உணவு அருந்திக் கொண்டிருந்தான். அவன் மேசையில் இடம் காலியாக இருந்தது. அங்கே விரைந்தான். உப்புலியும் சுடலையும் நல்ல நண்பர்கள். சற்றுமுன் குசுலிடம் பேசிக் கொண்டிருந்ததை அவனிடம் சொன்னான்.உப்புலிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.
“மச்சா நீ ரொம்ப பாவம்டா”

“என்னை பார்த்தா சிரிப்பா இருக்குல்ல? சிரிடா சிரி”

“அதில்லடா, இந்த மாதிரி லூசெல்லாம் எப்படிடா சினிமால சேர்த்துக்குறாங்க?”

“என்னமோ நடிச்சி சாதனை படைச்சிட்ட மாதிரி, அப்புறமா ப்ரஸ்க்கு இண்டர்வியூ வேற, என்ன கொடுமைடா இது?”

“அத விடு மச்சா, உன்னைக் கூப்பிட்டதா சொன்னியே, போவ போறியா?”

“அதான்டா, எப்படி எஸ்கேப்பு ஆவுறதுன்னு தெரியல. எடக்கு மடக்கா ஏதாச்சும் அவ பேச, அவ வருங்கால புருசன் என்னை வகுந்திடப் போறான்”

“ஐய்யோ... என்னால சிரிக்காம இருக்க முடியலடா....”

“இப்போ உன்னை சிரிக்க வேணாமுன்னு யாரு அழுதா”
சுடலைக்கு வெறுப்பை யாரிடம் காட்டுவது என்று தெரியவில்லை.

சுடலைக்கு எண்ணமெல்லாம் வரப் போகும் பேட்டியின் மீதே இருந்தது. முந்தைய பேட்டியின் போது அவள் அவனைத் தொட்டு தொட்டு பேசி, அவசியமின்றி நொடிக்கொரு முறை கெக்கபுக்கெ என சிரித்து வைத்து அவன் பெயரையும் சேர்த்து நாறடித்தாள். செவ்விகளின் போது, அவளது பெரும்பேச்சுக்கும் பெறுமை பேச்சுக்கும் அவளுக்கு அவளே நிகர். கூடுதல் மழலை கொஞ்சி குலாவும். அவள் செய்யும் “நோனா” தர வித்தைகளைக் கண்டு சிரிக்காமல் இருப்பதற்கே ஆயிரம் முனிவர்களின் பக்குவம் தேவை. வெறுமனே தன்னோடு நடிக்கும் நடிகரோடு, தான் அன்னோன்யமாக இருப்பதைப் போலவே பேசுவாள்; காட்டிக் கொள்வாள். யோசித்துப் பார்த்தால் இப்படியும் ஒருத்தியா என நமக்கே வியப்பாய் இருக்கும்.இன்றைய பேட்டியின் போது, அந்த அரசியல்வாதியான தயாரிப்பாளர் அரிவாளோடு நின்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒரு வகையில் அவனை மெச்சியாகவே வேண்டும், இவளைக் கட்டி மேய்க்கும் பலப்பரீட்சையில் குத்தித்தற்கு. அவனும் லேசு பட்டவன் அல்லன். நடிகையைக் கரம் பிடித்தால் அரசியலில் எளிதாக வெற்றி காணலாம் என்ற குருட்டு நம்பிக்கை அவனுக்கு.


நண்பன் உப்புலி இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை. சிரித்துக் கொண்டே எழுந்தான்.
“இருடா மச்சா, ஊடான் சம்பால் ரொம்ப நல்லாருக்கு, போட்டுட்டு வந்திடுறேன்”“டேய் ஊடான் அளவா தின்னுடா... இப்பவே அங்க இங்க சொறிஞ்சிக்கிட்டு இருக்கே... இப்படியே போனா, உன்னை சொறி சிரங்கு விளம்பரத்துக்குத்தான் கூப்பிடுவாங்க... எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...”


“ஏன்டா சொல்ல மாட்டே? உனக்கு சினிமால அடிக்கடி வாய்ப்பு கொடுக்கிற குசுலக்குமாரி மாதிரி எனக்கு ஏதாவது ஒரு அட்டு பிகரு மாட்டாமலா போயிடும்?”
“மச்சா, அந்த நரக வேதனை உனக்கு வேணாம்டா. அவ வளைய சொல்லுற இடத்துல வளைஞ்சாகனும், இதோ இப்ப இந்த பேட்டியிலேந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன் பாரு... இன்னும் இந்தியன் படத்துல கமல் நாடா கோக்குற வேலை மட்டும் தான் பாக்கி”
“அடப்போடா, உனக்கு சாமர்த்தியம் பத்தலை. அதைவிடு, உனக்கு ஏதாவது வேணுமா?” என தட்டைக் காட்டி கேட்டான்.
“ஒன்னும் வேணாம்டா சாமி, தட்டுல இருக்கிறத முடிச்சிட்டு முதல்ல வீடு போய் சேரணும்.”
சுடலையின் தட்டும் காலியாகி விட்டது. தட்டில் எஞ்சி இருந்த ஈரமும் காய ஆரம்பித்துவிட்டது. உணவு எடுக்கச் சென்ற உப்புலி மட்டும் திரும்பி வரவில்லை. நேரமாவதால் அவனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட நினைத்தான். அவன் கைப்பேசிக்கு இணைப்பு கிட்டியது, ஆனால் அவன் எடுக்கவில்லை. சுடலைக்குச் சந்தேகம் வலுத்தது.

(கிசுகிசு தொடரும்)

செவ்வாய், 16 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (3)

கிசு கிசு குசுலக்குமாரி
"ஹேய் ஷுடால்"
காதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.
(பாகம் 3)சுடலையின் முதுகில் ஒரு தட்டு தட்டி,
“ஷுடால்... எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்?” என்றாள். .


ஐய்யயோ, இதை யாராவது பார்த்து தொலைத்தால் என்ன ஆவது, முதல்லயே திரும்பி பார்த்திருக்கனும், உனக்கு இது தேவையாடா? சுடலையின் சுயத்தின் முனகல் அது.


“அட ஆமாவா? சத்தத்துல கேட்கலை. அதென்ன ஷுடால், சுடலைன்னு கூட்ப்பிடுங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்?”


“ஷுடால் நல்லாத்தானே இருக்கு, கிளாமரா. இ..இ..இ..இ.. சாப்டாச்சா? எப்படி? நல்லாருக்கா?”


“என்ன கேள்வி இது, இன்னும் உணவு எடுக்கவே இல்லையே”


சுடலை என்ற அழகான பெயரை மாற்றி உச்சரித்த போதே அவனுக்கு மண்டையில் மணி அடித்தாற் போல் இருந்தது. மேற்கொண்டு இப்படி ஏரணமே இல்லாத ஒரு கேள்வி அவளுக்குத் தேவைதானா? சுடலையின் நேர்பதிலுக்கு வலிந்து சிரித்துக் கொண்டாள்.


“ஈ..இ.. ஈ.. இ...”
ஈயாடவில்லை.


“ அனேகமா நல்லாத்தான் இருக்கனும்”


“ எப்படி சொல்றிங்க?”


“ வாசம் மூக்கைத் துளைக்குதே”


“ ஆமாவா, நாய் மாதிரி உங்களுக்கு மோப்ப சக்தி வேற இருக்கோ”


அவள் செய்த ஆசியத்துக்கு அவளைத் தவிர வேறும் யாரும் சிரித்திருக்க வாய்ப்பில்லை. கூடவே ஒரு குண்டையும் போட்டாள்.


“சாப்பிட்டு உடனே கிளம்பிடாதிங்க, ஷுடால்”


“அது ஏன்?”


போச்சுடா, இந்த லூசு வில்லங்கமா ஏதாச்சும் செய்யறதுக்குள்ள, தப்பிச்சிடனும் எனத் தனக்குத் தானெ சொல்லிக் கொண்டான்.


“பத்திரிக்கை பேட்டி இருக்கு, நீங்களும் கலந்துக்கனும்”


“கண்டிப்பா. கலந்துக்கனும்ன்னு ஆசை தான், ஆனால்...”


“ஆனா ஊனான்னா இத ஒன்னு சொல்லிடுவீங்களே, என்ன ஆனா?”.


அப்போது குசுலின் கைப்பேசி அலற, அவள் பரபரப்பாகி விட்டாள்.
“எஸ் குஸ் மீ, வான் மினீட் ஆ...,” என்று அரை குறை ஆங்கிலத்தில் மேற்கத்திய நாகரிகத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.


சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரும் நிகழ்ந்ததைக் கூர்ந்து அவதானித்ததாகப் புலப்படவில்லை. பெருமூச்சை அடுத்து உணவை மங்கின் மீது குவிப்பதில் மும்முறமானான்.

(கிசுகிசு தொடரும்)

திங்கள், 15 டிசம்பர், 2008

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு
14 டிசம்பர் 2008 - மலேசிய தமிழ் வலைப்பதிவர் வரலாற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நாளாகவே இனி வருங்காலங்களில் உணரப்படும். தலைநகரில் செந்தூல் என்ற சிற்றூரில் முதலாவது மலேசிய தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடைப்பெற்றது.கெடாய் காரி கெப்பாலா ஈக்கான் (மீன் தலைக்கறி கடை) என்ற உணவகத்தில் மதிய நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது. இடத்தை தேடிப் பிடிக்கவே படாத பாடு பட்டோம், எங்களில் பலர். நான் பினாங்கில் இருந்து பேருந்தில் சென்று புடுராயா பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அங்கே விக்னேசும் டாக்டர் சிந்தோக்கும் காத்துக் கொண்டிருந்தனர். மெது உணவு அருந்திவிட்டு செந்தூலுக்கு எல்.ஆர்.டீ மூலம் சென்றோம். அங்கே இனியவள் புனிதாவும் உணவகத்தைத் தேடும் வேட்டையில் இணைந்துக் கொண்டார். மழை தூற, பக்கத்தில் இருந்த ஓர் உணவகத்தில் தஞ்சம் புகுந்தோம். அந்த உணவகம்தான் “மீன் தலைக்கறி கடை” என பின்பு உறுதி செய்யப்பட்டது.

னி விவரங்கள் செய்தி வடிவில்:


அங்கே எழுத்தாளரும் கவிஞருமான திரு ஏ.எஸ்.பிரான்சிஸ் காத்துக் கொண்டிருந்தார். ஓர் அகண்ட மேசையில் அமர்ந்தோம். ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வந்து சேர்ந்தனர். இடைப்பட்ட நேரத்தில், கவிஞர் பிரான்சிஸ் தமது “சாசனம்” மற்றும் “மக்கள் சக்தி” புத்தகங்களை எங்களிடம் விநியோகித்தார். ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ள அறிமுக சுற்று நடந்தது. பள்ளிகளில் ஒரியேண்டேஷன் என்பார்களே... அது போல
உணவகம் என்றாலே கூச்சலுக்கும் இரைச்சலுக்கும் பஞ்சம் இருக்காது. அங்கேயும் அதே நிலைதான். ஆதலால், அறிமுக சுற்றில் எல்லார் பேசியதையும் ஒரு குத்து மதிப்பாகக் கேட்டு தான் இங்கே எழுதி உள்ளேன், பொறுத்தருள்க, சந்திப்பில் கலந்துக் கொண்ட நண்பர்கள் - திருத்த தயாராய் இருங்கள்.


முதலில் கவிஞர் பிரான்சிஸ் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார். இதுவரை இருபது புத்தகங்கள் எழுதியுள்ளார். அண்மையில்தான் இணைய வலைப்பூவில் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்தார். “கயல்விழி” இவரது கைவண்ணத்தில் மலரும் வலைப்பூ.


அவரை அடுத்து திரு மு.வேலனின் அறிமுகம். “அரங்கேற்றம்” இவரது பதிவேற்றம். ஆக்டோபரில் பிள்ளையார் சுழியிட்டு இன்றுவரை எழுதி வருகிறார். பொதுவாக தன்னைச் சுற்றி நிகழ்வதை மையமாக வைத்தே தனது வலைப்பூ பின்னப் படுவதாகச் சொன்னார். பன்னிரண்டு காலமாக இணையத்தில் வெறும் வாசகராகவே இருந்தவர். வலைப் பதிவு மக்களிடையே நல்ல கருத்து பரிமாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மூன்றாவது அறிமுக நண்பர், திரு ஜேஷாண்ட் (பெயர் சரியாக எழுதப்பட்டுள்ளதா என நண்பர்களே, சரிபாருங்கள்). இவர் இன்னும் வலைப்பூ தொடுக்காத நண்பர், விரைவில் துவங்குவார். “இங்கே எதுக்கு வந்திருக்கேன்ன்னு எனக்கே தெரியலை” என்று சிரிக்காமல் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


இவரை அடுத்து குமாரி பவானிஸ்-இன் அறிமுகம்“கனைகள்” என்ற ஒரு மாத வயதான வலைப்பூவின் உரிமையாளர். கவிதைகள் நிறைய எழுதுவாராம். தன்னை வலை உலகத்துக்கு இட்டு சென்ற வேலனை அப்போது நினைவு கூர்ந்தார். பலருக்கு வலைப்பதிவைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று வருத்தப் பட்டார். பதிவர்களின் மொழி திறன் தன்னைப் பிரமிக்க வைப்பதாகச் சொன்னார்.


குமாரி இனியவள் புனிதா என்னைப் போலவே அமைதியாகவே இருந்தவரில் ஒருவர். ஈராயிரத்தாறில் இருந்து இவர் எழுதி வரும் வலைப்பூ – “ஜில்லென்று ஒரு மலேசியா" . இவர் ஓர் அரசாங்க அதிகாரி, ஆக நண்பர்களே சற்று கவனம்...


அடுத்து திரு அனந்தனின் அறிமுகம். என்னைப் பற்றி என்ன சொல்வது? வெறும் நான்கு மாதமாகத்தான் “முடிவிலானின் எழுத்துக்கள்” என்ற வலைப்பூவின் மூலம் எழுதி வருகிறேன். சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.


என்னை அடுத்து, திரு ஜி.எஸ்.ஷான் அவர்களின் அறிமுகம். இன்னும் வலைப்பதிவு ஏற்படுத்திக் கொள்ளாதவர். தன்னை ஓர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். திரு சதீசின் மூலம் இந்த சந்திப்பு தெரிய வந்ததாகச் சொன்னார். வலைப்பதிவில் காலடி வைக்க நிறைய உழைக்க வேண்டும் போல என புன்னகையோடு சொன்னார்.


அடுத்த அறிமுகம், வந்தவர்களில் பலருக்கு ஏற்கனவே அறிமுகம். இன்னும் சொல்லப் போனால் இந்த சந்திப்பின் காந்தம், திரு விக்கினேஷ்வரன் அடைக்கலம். “வாழ்க்கை பயணம்” இவரின் வலைப்பூ. 2006ல் இருந்து வாசிக்கத் துவங்கியவர் இவ்வாண்டு எழுதத் துவங்கி உள்ளார். இணையத் தாக்கம் இளையோரிடம் குறைந்துக் காணப்படுவதாகத் தெரிவித்தார். சிங்கை வலைப்பதிவர்களின் கன எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டினார். நமது வலைப்பதிவர்களின் கருத்து சுதந்திரத்தைப் பற்றியும் கேள்வி எழுப்பினார்.


அடுத்த அறிமுகம் டாக்டர் சிந்தோக். தனக்கென தனி வலைப்பதிவு ஒன்றைப் பின்னாமல் இருந்தாலும், நிறைய வலைப்பதிவை இன்றுவரை வாசித்து வருவதாகவும், வலைப்பூக்களுக்கு மறுமொழி இடுவதில்தான் தனக்கு விருப்பம் அதிகம் என சொன்னார். 2003 துவங்கி இவரது இணைய வலைப்பூ வாசிப்பு பழக்கம் இன்றுவரை நீடித்து வருகிறது. இணையத்தைப் பற்றியும் இணையத்தில் தமிழ் ஊடுருவல் பற்றியும் நிறையவே சொன்னார். “ஏன் நீங்கள் ஒரு தனி வலைப்பூ பின்னக்கூடாது?” - சபையில் எழுந்தக் கேள்விக்கு “சேம்பேறித்தனம்தான் காரணம்” என நகைச்சுவையோடு சமாளித்தார். வலைப் பதிவாளர்களுக்கு ஒரு முன்னோடி டாக்டர் சிந்தோக் என வர்ணித்தார், விக்னேஷ்.


திரு குமரன் மாரிமுத்து வேறொரு நிகழ்வில் கலந்துக் கொண்டு, கிட்டிய நேரத்தில் நம்மோடு இணைந்தார். விரைவில் வலைப்பூ துவங்க ஆவலாய் இருப்பதாய் சொன்னார். இவர் முன்பு வானொலியில் பேசி உள்ளதாகவும் தெரிவித்தார். நாளேடுகளுக்கு தான் அனுப்பும் எழுத்துக்கள் துண்டாடப் படுவதாகவும், இணையமே இனி நடுநிலை ஊடகம் என கோடி காட்டினார்.


திரு நேசா, ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதுபவர். கூடிய விரைவில் தமிழிலும் எழுதவுள்ளார். தமிழில் தட்டச்சு செய்வதைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டார், இங்கே கூடி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாய் தெரிவித்தார்.


சந்திப்பில் சஞ்சிகை வெளியீடு பற்றி பேசப்பட்டது. ஆண்டுக்கு இரு மலர்கள் என மு.வேலன் முன்மொழிந்தார். அச்சு இதழ்கள் எப்படி முறைப்படி செய்வது என விக்னேஷ், கவிஞர் பிரான்சிஸின் ஆலோசனையை நாடினார். பதிவர்கள் ஒருமித்த நோக்கத்தோடு எழுத வேண்டும் என பவானிஸ் முன்மொழிந்தார். அவ்வாறு செய்வதால், எழுத்தாளர் சுதந்திரம் மறித்துப் போகலாம் என விக்கினேஷ் தெரிவித்தார். பொது மக்களிடையே பதிவர் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என பவானிஸ் மேலும் கருத்து தெரிவித்தார். டாக்டர் சிந்தோக் பேசுகையில் இணையமே இனி மக்களுக்கு சிறந்த ஊடகம் என் ஆணித்தரமாகச் சொன்னார்.


முக்கிய அலுவல் இருப்பதால் பவானிஸ், முவேலன் மற்றும் ஜேஷாண்ட் விடைபெற்றனர்.


விக்னேஷும் டாக்டர் சிந்தோக்கும் வலைப்பூ எப்படி பதிவது, எவ்வாறு பின்னுவது போன்ற சூட்சமங்களைப் புதியவர்களுக்காக கற்று கொடுத்தனர்.
சில நேரம் கழித்து, எங்கே எங்கே என தேடப்பட்ட திரு மூர்த்தி வந்தார். கலகலப்பாக பேசினார். அவர் தான் அந்த சந்திப்புக்கான இடத்தை தேர்ந்தெடுத்தவர். அவர் அன்றைய இறுதி மற்றும் பன்னிரண்டாவது அறிமுகம். சித்த வைத்தியர். விக்னேஷின் தீவிர ரசிகர் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.


அடுத்த சந்திப்பு பற்றி பேசப்பட்டது. மேலும் சில நிமிடங்கள் பேசினோம், புகைப் படம் எடுத்துக் கொண்டோம். பின்பு மகிழ்ச்சியுடன் கிளம்பினோம்.


மேலும் விரிவான செய்திகளைப் பெற இதர நண்பர்களின் வலைப்பூக்களை வலம் வரவும்.


இப்போது கீழே ஒரு மறுமொழி இட்டு உங்கள் வருகையை அம்பலப் படுத்துங்கள்!

சனி, 13 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (2)


கிசு கிசு குசுலக்குமாரி


... ... ... குசுலக்குமாரி பிச்சைமுத்து என்ற இயற்பெயரைச் சுருக்கி குசுல் என்று வைத்துக் கொண்டாள். பெயரை இன்னும் சுருக்கி ஈரெழுத்தாக்க அவளுக்கு ஆசைதான், ஆனால் ஏதோ காரணத்தால் அவ்வாறு செய்யவில்லை. நல்லவேளை.
குசுல் என்ற பெயர், முழுப்பெயரைக் காட்டிலும் ரசிகர்களிடம் அவ்வளவாக சோபிக்கவில்லை.

(பாகம் 2)

ரையில் கால் படாமல் தான் குசுலக்குமாரி விழாவில் உலாவிக் கொண்டிருந்தாள். அரைசாண் உயரத்தில் தூக்கு சப்பாத்து அணிந்து, நடக்க முடியாமால் நடந்துக் கொண்டிருந்தாள். அனைவருக்கும் அன்றைய வேடிக்கை அவளின்றி வேறு யார்? யாருமே அவளைக் கண்டுக் கொள்ளா விட்டாலும், வலிய சென்று பேசி, தான் பரபரப்பாக இருப்பதைப் போல காட்டிக்கொள்ள தயங்கவில்லை. அப்படி யாருமே கிடைக்காத போது என்ன செய்திருப்பாள்? ஆம், அதே தான், கையில் இருக்கும் கைப்பேசியைக் காதோரம் வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் நண்பர்களை வழக்கம் போல வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.


உணவுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நடிகன் சுடலையைப் பார்த்து விட்டாள். சுடலையும் அவளைத் தூரத்திலே பார்த்து விட்டு பார்க்காதது போல் திரும்பிக் கொண்டான். குசுலக்குமாரி அவனை நோக்கித்தான் நடக்கிறாள்.


வாழ்த்து சொல்லி விட்டு கடமைக்குப் பரிசையும் கொடுத்துவிட்டு அப்பவே தப்பித்தோம் பிழைத்தோம் என நழுவினான் சுடலை. இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதாய் பத்திரிக்கைகளில் வெளிவந்த கிசுகிசுக்களைக் கண்டு அரசியல்வாதியின் ஆட்கள் அவனைப் பலமுறை மிரட்டி உள்ளனர். ஒருமுறை அவர்கள், தாட்கள் வெட்டும் கத்தியோடு அவனைச் சீவ வந்தனர். ஏதோ பேசி தப்பித்தான் நடிகன். இப்போது ஞாபகத்தில் அதுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. கையில் அவன் ஏந்திக் கொண்டிருந்த தாள் தட்டும் அவனோடு சேர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.


சுடலை செய்த ஒரே பாவம், குசுலக்குமாரியோடு "காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்" என்ற இருபத்து நான்கு அத்தியாயங்களைக் கொண்ட ஓர் அறுவை நாடகத்தில் நடித்து தொலைத்ததுதான். குசுலைக் காட்டிலும் சுடலைக்கு நடிப்பு நன்றாகவே வரும். பொழிவான முகத் தோற்றம். திடமான உடல். கம்பீரமான குரல். பழக இனிமையானவன். சுருங்கச் சொன்னால், ரசிகன்களைக் காட்டிலும் ரசிகைகளின் எண்ணிக்கை தான் அதிகம்.

பகட்டு இல்லாத மனிதன். முக்கியமாக, மணமாகாத நடிகர்களில் இவனும் ஒருவன். "காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்" நாடகத்துக்குப் பிறகு சுடலையின் நிசக் காதல் கதையும் கண்ணீரில் மூழ்கியது என்பது பிரிதொரு செய்தி. அது குசுலக்குமாரிக்கு நல்ல வசதியாகி போயிற்று. படப்பிடிப்பு இடங்களில் சுடலையுடன் பல்லி போல ஒட்டிக் கொள்வாள். சுடலை விலகிச் சென்றாலும் விடமாட்டாள். காரணம், கிசுகிசுக்கள் மூலம் தனக்கு இன்னும் பிரபலம் கிட்டும் என்பதில் குசுலக்குமாரிக்கு அசைகக்க முடியா நம்பிக்கை. ஊடகங்களில் வரும் கிசுகிசுக்களைச் சேகரித்து தருவதற்கே ஒருவரை வேலைக்குச் சேர்த்துள்ளாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

"ஹேய் ஷுடால்"

காதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.

(கிசுகிசு தொடரும்)

வெள்ளி, 12 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (1)

* பின்வரும் சிறுகதையும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் கற்பனை உலகின் பிம்பங்களே. யாரினது மனத்தைப் புண்செய்யும் நோக்கில் இது புனையப் படவில்லை. நன்றி.


கிசு கிசு குசுலக்குமாரி

ந்தி மூட்டையக் கட்ட, இருள் கடைத்திறந்த நேரம். கூரை துறந்த திறந்த வெளி. சற்றுமுன் தூறிய மழையால் சொத சொதவென இருந்த புட்தரை. கண்களைக் கூசும் மின்விளக்குகள். செவிகளைச் செவிடாக்கும் ஒலிப் பெருக்கிகள். அதிலிருந்து வந்த கதறல் இசை. அதையும் மிஞ்சும் வண்ணம் கூடியிருந்த மக்களின் அரட்டையும் கூச்சலும்.


பிரபலங்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், பொது மக்கள் என பலதரப்பட்டவர்கள் கூடி களித்துக் கொண்டிருந்தனர். நாட்டின் இன்றைய பிரபலமான நடிகையும் ஓர் அரசியல்வாதிக்குக் கழுத்தை நீட்ட போகும் பலிகடாவுமான குமாரி குசுலக்குமாரிக்கு இவ்வாண்டின் மூன்றாவது பிறந்தநாள் விழா. ஒரே ஆண்டில் அடிக்கடி பிறந்தநாள் கொண்டாடினாலும், நடிக்க வந்து பத்தாண்டுகளில் அதே இருபத்தொன்று வயதைக் கடக்கவில்லையாம்.


கேக்கை வெட்டினாள், அரசியவாதிக்கு ஊட்டினாள். குமாரி குசுலக்குமாரியோடு நடித்த நடிகர்களும், கல்லையும் நடிக்க வைக்க முடியும் என நிரூபித்த இயக்குனர்களும், அவளைத் திரையில் அழகாய் காட்ட முயன்று தோற்றுப்போன ஒளிப்பதிவாளர்களும், அத்தோல்வியைத் தோள் கொடுத்து சுமந்த ஒப்பனையாளர்களும் இன்ன பிற திரைப்பட கலைஞர்களும் அவளோடு இணைந்து புகைப் படம் எடுத்துக் கொண்டனர். மேலே சொன்ன பட்டியலில் தயாரிப்பாளரைத் தனியாக குறிப்பிட தேவையில்லை. அந்த அரசியவாதியைத் தவிர வேறு யார் இவளை நம்பி பணம் முதலீடு செய்திருக்க போகிறார்கள்?

நடிகை என்றதும் அவள் திரைப்பட நடிகை என்று நீங்கள் தவறான எண்ணம் கொண்டிருக்கலாம். அவள் உள்நாட்டு தொலைக்காட்சி நாடக நடிகை. ஆயினும், புகழ் உச்சியில் இருக்கும் திரை நட்சத்திரத்தின் அத்துணை பந்தாவும் அலட்டலும் இவளிடம் காணலாம்.

மக்களிடம் தனது பெயர் எளிதாக சென்றடைய, குசுலக்குமாரி பிச்சைமுத்து என்ற இயற்பெயரைச் சுருக்கி குசுல் என்று வைத்துக் கொண்டாள். பெயரை இன்னும் சுருக்கி ஈரெழுத்தாக்க அவளுக்கு ஆசைதான், ஆனால் ஏதோ காரணத்தால் அவ்வாறு செய்யவில்லை. நல்லவேளை.

குசுல் என்ற பெயர், முழுப்பெயரைக் காட்டிலும் ரசிகர்களிடம் அவ்வளவாக சோபிக்கவில்லை.


(கிசுகிசு தொடரும்)