பக்கங்கள்

வியாழன், 27 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (7)


எவ்வளவோ தடுக்க முயன்றும், உரைநடையின் இயல்பு தன்மை சுணங்காமல் இருக்க சேர்த்துக் கொள்ளப்பட்ட சில வேற்றுமொழி சொற்களுக்கான தமிழாக்கம் கீழே: (பாகம் 6 மற்றும் பாகம் 7)
போட்டோ - நிழற்படம்
ஷீட் – ச்சீ, எச்சம்
லவ்- காதல், அன்பு
வாவ் – பூரிப்பை உணர்த்தும் ஓர் ஓசை, அடேங்கப்பா
குட் - நன்று, சரி
செமினார் – சொற்பொழிவு
போன் – (தொலை)பேசி, அழைப்பு
குட் லக் - நல்வாழ்த்து
மோட்டார் வண்டிஇரு சக்கர (இயந்திர) வண்டி

வினாக்களோடு சில கனாக்கள் (7)



துவரை மனதுக்குள் பறந்துக் கொண்டிருந்த ஆயிரம் பட்டாம் பூச்சிகள், நொடியில் காணாமல் போய் விட்டன. ஒருவேளை அந்த பட்டாம் பூச்சி பூங்காவுக்குள் பறந்து சென்று கலந்து விட்டனவோ. இதற்கு முன் இருந்த குதூகலம் என்னிடம் இப்போது இல்லை என்பது உண்மை. எனது இத்தனை நாள் கனவு வெறும் கனவாகவே இருந்து விடுமா? இந்த வினாவுக்கு யார் பதில் சொல்வது? கடவுளா? கலிகாலத்தில் அவர் எப்படி தோன்றுவார்?

“நம்மள பத்தியும் அவருக்குத் தெரியும், சொல்லி இருக்கேன்” நல்லவள் பேசினாள்.

“யாரு, கடவுளுக்கா”

“அட இல்லப்பா, வெய்யிலைச் சொன்னேன்”

“என்ன சொல்லுற, நீ என்னை இங்க வந்து சந்திக்கிறது... தெரியுமா அவருக்கு?”
“அவருக்குத் தெரியாமலா? இன்னும் சொல்லப் போனால், உன்னையும் என்னையும் ரொம்பவே பெருமையா நினைக்கிறாரு. நீயே சொல்லு எத்தனை பேரு, காதல் முறிஞ்சாலும் தொடர்ந்து நண்பர்களாய் இருக்காங்க, நம்மள மாதிரி? அதை நினைச்சி ரொம்பவே பூரிச்சு போவாரு”

சுளீரென இருந்தது எனக்கு. இதற்கு இவள் என்னைக் கன்னத்தில் நான்கு அறை விட்டிருக்கலாம்.

“நம்மள மாதிரி எத்தனை பேரு இருக்காங்கன்னு தெரியல. ஆனா, நமது பழைய காதல் தெரிஞ்சும் என்னை சந்திக்க அனுமதி கொடுத்திருக்காரே... இந்த மாதிரி மனுசங்கள பார்க்கிறது தான் அரிது”

மனம் கசப்பில் வாடி போய் இருந்தாலும், அந்த நிதர்சனத்தை நான் ஒப்புக்கொண்டுத்தானே ஆக வேண்டும். கொஞ்ச நேரம் பட்டாம் பூச்சிகளோடு நேரத்தைக் கழித்தோம்.
இருட்டுவதற்குள் அவளை விடுதியில் பாதுகாப்பாக விட்டு, நான் வீடு திரும்ப முடிவு செய்தேன். விடுதியை நெருங்க நெருங்க உள்ளம் குமுறியது. நெஞ்சத்தின் எடை கூடியதாய் உணர்வு. வண்டியை விட்டு இறங்கினாள். “எனை விட்டு போகாதே” உதட்டோடே நின்றது வார்த்தை.

“ஹப்பா, நல்...லா இருந்திச்சுல. இந்த மாதிரி சந்தோசமா இருந்ததே இல்ல மறவ். ரொம்ப ரொம்ப நன்றி”

“ஏய், எதுக்கு”

“சுத்திக் காட்டியதுக்கு... அப்படின்னு சொல்லமாட்டேன். நமக்குள்ள இதுக்கு எல்லாம் நன்றி சொல்லிக்கலாமா? நன்றி சொன்னது, நீ இன்னைக்கு எல்லா ப்ளானையும் எனக்காக தூக்கிப் போட்டுட்டு என்னோடு வந்ததுக்கு”

“ச்சே... அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல”

“இல்லப்பா, நீ இல்லாட்டி இன்னைக்கு நான் திண்டாடி போய் இருப்பேன்”

“சரி நேரமாகுது, கிளம்புறேன், பத்திரமா இரு. ஏதாவது உதவின்னா உடனே எனக்கு போன் செய்யு”

“உன்னைச் சந்திச்சதுல எனக்கு...”

“உனக்கு?”

“எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம். நீ ரொம்ப நல்லவன்பா”

அடிப்பாவி, அவ்வளவு தானா? வேறு ஏதும் சொல்வாள் என எதிர்பார்த்தேன்; எல்லாம் ஒரு நப்பாசை தான்.

“அப்படியா? இருக்கட்டும். சனிக்கிழமை எப்படி திரும்பி போவ?”

“ஏன் நீ வர மாட்டியா? வந்தா நல்லாருக்கும். இல்லாட்டிக் கூட பரவா இல்லை. கூட பரீட்சை எழுதுற நண்பர்கள் இருக்காங்கல்ல, அவங்க கூட போயிடுவேன். ஆனா, நீ வந்தா நல்லாருக்கும்.”

“பாக்குறேன், செமினார் இல்லாட்டி அவசியம் வரேன். இந்த நாள மறக்க மாட்டேன். குட் லக் - உன் தேர்வுக்கும், உன் எதிர்காலத்துக்கும்”

சொல்லிக் கொண்டே எனது மோட்டார் நகர்ந்தது.


அவள் புன்முறுவலோடு கைகளை அசைத்து வழி அனுப்பி வைத்தாள். அவள் முகத்தில் ஓர் இனம் புரியா சோகம் தெரிந்தது. எதனால்? அட, எதுவாய் இருப்பின் எனக்கென்ன? “என்ன இருந்தப்போதும் அவள் எனதில்லையே, மறந்து போ என் மனமே...” என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.



எல்லாம் சரி, சனிக்கிழமை மீண்டும் அவளைச் சந்தித்தேனா இல்லையா எனபது தானே உங்கள் வினா? அதே குழப்பம் தான் எனக்கும். நாளை விடிந்தால் சனிக்கிழமை. இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன், போகலாமா வேண்டாமா என்று.
நீங்கள் சொல்லுங்கள், நான் போகட்டுமா?

(கனாக்கள் முற்றும்)

வினாக்களோடு சில கனாக்கள் (6)


வினாக்களோடு சில கனாக்கள் (6)
ண்ணத்துப் பூச்சி பூங்காவில் எனக்கு காத்துக் கொண்டிருந்த அதிர்ச்சியைப் பற்றி இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும். அப்பூங்காவுக்கு முன்னம் நாங்கள் சென்ற தலம், பத்து பெர்ரிங்கி கடற்கரை. கடல் அலைகளின் ஓசை, யாரும் இல்லா ரம்மியமான தனிமை, காலை வருடி சென்ற உப்புநீர், உலர்ந்தப் பின் உணரப்பட்ட குளிர் போன்றவை இதமாக இருந்தன. அவளும் அதை என்னோடு சேர்ந்து ரசித்தது, இன்பத்தை இரட்டித்தது.
மனதுக்குள் இதுவரை பூட்டி வைத்திருந்த பல வினாக்களுக்கு அவளிடம் விடை தேட துடித்தது உள்ளம். காதலிக்கும் போது அவளைப் பற்றி நான் கண்ட கனவுகள் மெய்ப்படுவது போல தோன்றியது. என்னையே அறியாமல் அவளை இப்பொழுது எனது சொந்தமாகவே உணரத் தொடங்கி விட்டேன். துளியும் அவள் எனக்கு அன்னியமாய்த் தெரியவில்லை. இந்த உணர்வானது சரியா தவறா என யோசிக்க விருப்பமுமில்லை.


இன்று என்னோடு ஊரெல்லாம் விரும்பி சுற்றி இருக்கிறாள். இப்போது என்னுடன் கடற்கரைக்குக் கூட வந்துள்ளாள். என் மீது அவளுக்கு ஈர்ப்பு இல்லாமலா இருக்கும்? அங்கே என்னுடன் ஓடிப் பிடித்து விளையாடியது, நெருந்தூரம் நடந்தது, தலையில் தட்டி நகைத்தது, சிப்பிகளைக் கொண்டு ஏதோ செய்து எனக்கு பரிசு அளித்தது - எனது மனக்கோட்டையை வலுப்படுத்தின.

எதிர்காலத்தை ஒட்டி அவளிடம் பேச எண்ணினேன்.

“என்னை இன்னமும் காதலிக்கிறாயா?, என்னோடு சேர்ந்து வாழ சம்மதமா? முன்பு என்னை எதற்காக வேண்டாமென ஒதுக்கினாயோ, அதை நான் இப்போது விட்டுக் கொடுத்தால், என்னை மணந்துக் கொள்வாயா?, கோவம் கொஞ்சம் அவ்வப்போது வரும், ஆனால் நல்லவன். கொஞ்சம் சுயநலம். அம்மா சொல்லி திட்டுவாங்க. நீயே நானாகியப் பிறகு, சுயநலம் என்பது நம்மைப் பற்றித்தானே? இதில் என்ன தவறு? உன் முகத்தைப் பார்த்தப் பின்பே இனி எனது ஒவ்வொரு விடியலும் விடியனும், இப்படி என் ஆசை, கனவு எல்லாம் பலிக்குமா?”எனது வினாக்கள் இத்தோடு மட்டும் நிற்கவில்லை, இன்னும் இருக்கின்றன. அதை இங்கே விரிவாக எழுத தயக்கமாய் உள்ளது.

m

மூச்சை இழுத்து, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பேச்செடுக்க முற்பட்டேன். அத்தருணம் ஒரு முக்கியமான கேள்வி சிந்தையை எட்டியது. “அவளது அந்த புதிய காதலின் நிலைமை என்ன? அவள் இன்னும் அவனோடுதான் உள்ளாளா?”இது தெரியாமல் நான் ஏதாவது எடக்கு மடக்காகப் பேசி தொலைத்தால் என்ன ஆவது? மூச்சை உள்வாங்கிக் கொண்டேன். பொறுமை உடையான் புவி ஆள்வான் என்பது முதுமொழி. பூமி வேண்டாம், என் பொறுமையானது எழில்விழியை ஆள உதவுமாயின் அதுவே போதும்.


அங்கிருந்து கிளம்பினோம். 20 நிமிடங்கள். வண்ணத்துப் பூச்சி பூங்காவை அடைந்தோம். நுழைவுச் சீட்டு தான்தான் வாங்குவேன் என விடாப்பிடி செய்தாள். விட்டு விட்டேன். பணம் எடுக்க அவள் தனது பணப்பையைத் திறக்க, அதிர்ச்சி அதனுள்ளே தான் காத்திருக்கிறது எனக்கு மட்டும் தெரியுமா என்ன? அவள் புகைப் படத்துக்கு அருகே ஓர் ஆடவனின் புகைப் படமும் இருப்பதை கண்டேன். கண்டும் காணாமல் இருக்க முயன்றேன். நல்லவள் நான் பார்க்கும் படி காண்பித்து,


“மறவ், இங்கே பாரேன். இந்த போட்டோல இருப்பது யாருன்னு சொல்லு,”என்றாள்.
வழியில் செல்லும் ஓணானை மடியில் கட்டாமல் விட மாட்டாள் போலிருக்கே. அசடாய் சிரித்துக் கொண்டு,

“உங்கப்பாவோட சிறு வயது போட்டோவா? நல்லா இருக்காரு”

“ஷீட்... கெக்கபுக்க கெக்கபுக்க”சிரித்தாள்

“ஷீட்டா? எங்கே?”

“ஏய் விளையாடாதேப்பா, இதுதான் வெய்யில்”

“வெய்யிலா? எது, மத்தியானம் வானத்துல இருக்குமே அதுவா? என்னாலா சொல்லுற”

“ஐயோ படுத்துறானே... இவர் தான் வெய்யில்முருகன். சொல்லி இருக்கேனே... மறந்துட்டியா?”
எச்சில் தொண்டைக்கும் அடியில் சென்று மறைந்துக் கொண்டது. நாக்கு வரண்டதால், என் பேச்சிலும் தடுமாற்றம் நிலவியது. காட்டிக் கொள்ளவில்லை நான்.

“ஓகோ, அவரா? நல்லா இருக்காரு. இன்னுமா அவரை லவ் பண்ணுற?”விளையாட்டாய் கேட்பது போன்று வினையமாகவே கேட்டேன்.

“ஏய், என்ன கேள்வி இது? படிப்பு முடிஞ்சதும் நிச்சயதார்த்தம் வெச்சிக்கலாமுன்னு வீட்டுல சொல்லி இருக்காங்க”

“வாவ்... குட் குட்”அரை மனதுக் கூட இல்லாமல் சொல்லி வைத்தேன்.

(கனாக்கள் தொடரும்)

புதன், 26 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (5)

வினாக்களோடு சில கனாக்கள் (5)



பினாங்கிற்கு மோட்டார் வண்டியில் செல்வதாக முடிவு செய்தோம். இருசக்கர வண்டி என்பதால், பின்னே அமர்ந்து வர தயங்குவாள் என அஞ்சினேன். அவள் அதைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

30 நிமிட பயணம். வழக்கமாக, ரொம்ப நேரம் பயணிப்பது போல தோன்றும். ஆனால், அவள் அருகில் இருந்ததால் என்னவோ நேரம் நொடிகளுக்குள் சுருங்கியது. 30 நிமிடம் என்பது 30 வினாடிகள் போல இருந்தது.
(கவிதை போன்ற பொய்தான்... கண்டுக்காதிங்க)

சாலையில் பேசிக் கொண்டேதான் போனோம். ஒரே ஒரு முறை மட்டும் அவள் என் தோள்பட்டையைப் பற்றிக் கொண்டாள், தற்காப்பு கருதி. முதலில் வித்தியாசமாக இருந்தது. வித்தியாசமாக இருந்தது என்று நான் சொன்னதற்குப் பிடிக்கவில்லை என்று பொருட்படாது. ஆயினும், அதை ரசித்து ஏற்க மனம் தயங்கியது. அவள் என் மேல் நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். தற்பெருமை தலைக்கேறியது.
பினாங்கு பால நெடுஞ்சாலையின் மீது அதிகப்படியான கோபம், இவ்வளவு சீக்கிரம் கரையைக் கடக்கச் செய்ததால். அங்கிருந்து அந்த விடுதிக்குச் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. தேடிப் பிடித்து விட்டோம். மையத்தில் பதிவும் செய்தாகிவிட்டது.

“தேர்வு எப்போ?”

“நாளைக்குக் காலையில”

“அது வரைக்கும் என்ன செய்வே? படிக்கனுமோ...”

“படிக்கிறதா? இது ரொம்ப சுலபமான தேர்வுதான், ஏற்கனவே தயார் பண்ணியாச்சு.”

“ஹ்ம்ம்”

“ஏன், நீ பினாங்கைச் சுத்தி காட்ட மாட்டியா?”

“காட்டலாமே, எப்போ?”

பகட்டாக சொல்லிவிட்டேன் - ஏதோ பினாங்கில் எல்லா இடங்களும் பரிட்சயம் போன்று! ஆடிக்கு ஒரு முறை அமாவசைக்கு ஒரு முறை தான் அக்கரைப் பக்கமே எட்டிப் பார்ப்பேன்.

“இப்போ தான்பா… நேரத்தைக் கடத்த வேண்டாமா?”



மோட்டார் பிறகு பர்மா சாலை, தஞ்சோங் பூங்கா சாலை, நீர்வீழ்ச்சி பூங்கா சாலை என சகட்டு மேனிக்கு பறந்துக் கொண்டிருந்தது. “மெதுவா மெதுவா!” அவளது அலறலை நான் கேட்டாலும், வண்டி செவிமடுப்பதாயில்லை.
எனக்குத் தெரிந்த சில இடங்களை அவளுக்குச் சுற்றி காட்டினேன். பள்ளிக் கொண்ட புத்தர் கோவில், நின்று வீற்றிருக்கும் பர்மா பொன்புத்தர் கோவில், பாம்பு கோவில், நீர்வீழ்ச்சி பூங்கா, பினாங்கு பொருட்காட்சி சாலை, ஜெர்ஜாக் வண்டலின் இக்கரை துறைமுகம், பத்து பெர்ரிங்கி கடற்கரை மற்றும் வண்ணத்துப் பூச்சி பூங்கா. ஏனைய இடங்களுக்குச் செல்ல நேரம் ஒத்துழைக்கவில்லை.

ஆம், வண்ணத்துப் பூச்சி பூங்காவில் எனக்கு காத்துக் கொண்டிருந்த அதிர்ச்சியைப் பற்றி இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும்.

(கனாக்கள் தொடரும்)

செவ்வாய், 25 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (4)

வினாக்களோடு சில கனாக்கள் (4)
ழில்விழியிடமிருந்து தொலைபேசி அழைப்பு.
"நான் இப்போ ஜூரு கிட்ட இருக்கேன், 10 நிமிசத்துல அங்க இருப்பேன். "

"20 நிமிசமாவது எடுக்குமே அங்கிருந்து. "
"இல்ல, டிரைவர்தான் சொன்னான். "


"பார்க்கலாம், யார் சொல்றது நடக்குதுன்னு. "

"மறவ், கோவப் படாத. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்"

"கோவம்லாம் இல்ல, பத்திரமா வா அது போதும். " மிகவும் செயற்கையாக.

அதன் பிறகு படிக்க முடிந்திருக்குமா? தாட்களை எல்லாம் பையினுள்ளே போட்டு விட்டு, மீண்டும் பேருந்து நிற்கும் இடத்தை நோக்கினேன். இப்போது அலை அலையாய் மக்கள் கூட்டம். உச்சி வானில் கதிரவன் பற்களைக் காட்டி இழித்துக் கொண்டு. அங்கும் இங்கும் நடந்து கால்கள் அசந்து போயின. 15 நிமிடங்கள் கழித்து பேருந்து வந்தது. உடனே சென்று அவளை வரவேற்கவில்லை. தூரத்தில் இருந்தே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


ஒல்லியாக ஒருத்தி இறங்கினாள்; மார்கழி தென்றல் என்னை வருடியதாய் கனா. முதுகில் ஒரு துணி மூட்டை. அட, அவளேதான். அவளுக்கு என்னை சரியாக அடையாளம் தெரியாது என்ற நம்பிக்கையில், வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டே இருந்தேன், நேரே வந்து "ஹாய், எப்படி இருக்கே?" என் பெயரையும் குறிப்பிட்டாள். ஹ்ம்ம்... தெளிவாகத்தான்யா இருக்கா. மறு புன்முறுவலிட்டு வரவேற்றேன்.



என்னைவிட மூன்று செண்டிமீட்டர் குள்ளம்; அவளது இரு புருவங்களை வகுத்து நின்றது - மயிர் நுணியளவு நுண்ணிய பொட்டு ஒன்று. கொண்டையை விட்டு பிரிந்து காதருகே நடனமாடிய அடங்காத கூந்தல் குழல். அவள் அணிந்திருந்த இருக்கமான முழுக்கை மேற்சட்டை. அதை ஒரு பாதியாக மறைத்து கொண்ட குளிராடை. சிம்ரனிடம் வாடகை வாங்கிய ஜீன்ஸ் காற்சட்டை. அணிந்திருந்த ஆடை அவளது நவ நாகரிகத்தைக் கதை கதையாய் சொன்னாலும், கண் சுளிக்கும் அளவுக்கு ஒன்றும் இல்லை. நிசமாகத்தான். அப்படியே இருந்திருந்தாலும் அதை குற்றம் சொல்லும் அளவுக்கு நான் நல்லவனும் அல்லன்.


சிரிக்கும்போது முந்தி நிற்கும் முயல் பற்கள் இரண்டு, அவற்றையும் போட்டி போட்டுக் கொண்டு வெளியே தள்ளி நின்றது – அவள் பொறுத்தி இருந்த பல் வரிசையை நெறிப்படுத்தும் கம்பி. இப்போது அவளது மெல்லிய, சிவந்த அதரங்கள் விரிந்து அசைகின்றன.

"ரொம்ப வெயிட் பண்ணிட்டல்ல?" சிங்கையில் சிலைகள் பேசுமா? இல்லை இல்லை, இது என் தோழி எழில்விழி. சுய நினைவுக்கு வந்துவிட்டேன்.

"ஊகூம். ஹவ் வாஸ் தெ ஜெர்னி?" (இல்லை, பயணம் எவ்வாறு அமையப் பெற்றது?)

"ஒரே குளிர். "

"திரும்பி போறதுக்கு டிக்கெட் எடுத்திடலாமா? இல்ல முதல்ல பசியாற போறியா?"

"இங்க பக்கத்துல வாஷ் ரூம் எங்கே இருக்கும்? "


போகும் வழியில் என் பின்னே வாகனம் வர, "ஏய், காடி வருது, பாத்து பாத்து” என அவள் சிறுகூச்சலிட்டது என் மேல் உள்ள அக்கறையைக் காட்டியது. நான் மெய் சிலிர்த்துப் போனேன். திரும்பிச் செல்ல பயணச்சீட்டு வாங்கியாகி விட்டது, அவள் பசியாற்றி விட்டாள். சரியாகத் தூங்காததால், எனக்குத் தூக்கம் தூக்கமாக வந்தது. அவள் போக வேண்டிய தேர்வு மையமோ பினாங்கு தீவில் உள்ளது.

“சரி அப்புறம், உன்னை பஸ்ல இல்லாட்டி பெர்ரில ஏத்தி விட்டுட்டு கிளம்பட்டா?” நான் கேட்டேன்.

“ஏன்பா நீ வரலையா?”

“நான் எதுக்கு, விழி?”

“நீதான் இன்னிக்கி ப்ளான் எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டீயே, வந்து அந்த விடுதி வரைக்கும் விட்டுட்டு போய்டு”

“தூக்கம் தூக்கமா வருதுலா”

"புது இடம், பயமா இருக்கு. மலாய் வேற சரியா பேச வராது”

கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்து நிறைய பேசினோம். நான் பேசுவதைப் பொறுக்க முடியாத நல்லவள் போல

“சனியனே, காலங் காத்தாலயேவா”

“அப்படி சொல்லக்கூடாது,” நான்.



(கனாக்கள் தொடரும்)


எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியாமல் விழுந்த சில வேற்றுமொழி சொற்களுக்கான - தமிழாக்கம் கீழே:
டிரைவர் – ஓட்டுனர்

ஜீன்ஸ் - சாக்குத்துணி

ப்ளான் – திட்டம், அலுவல்

கேன்சல் – நிறுத்தம்

வாஷ்ரூம் - கழிப்பறை

பஸ் - பேருந்து

பெர்ரி – நீருந்து, பயணிகள் படகு

வெயிட் - காத்திருப்பு

டிக்கெட் – (பயணச்)சீட்டு
இழப்பு யார் பொறுப்பு?


- ஒரு தமிழ் தலைவரின் உண்மை சம்பவம்



(தமிழினத்தைப் பற்றி எழுதக் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது. உடனே எழுத சரக்கு இல்லாத்தால், என்னால் முடிந்த மொழி பெயர்ப்பு கட்டுரை கீழே. விஞ்ஞான உலகில் கொடி கட்டி பறக்கும் ஒரு தமிழரின் கட்டுரை.)



ஒரு தலைவருக்குத் தெரிய வேண்டும் – இழப்பை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று”ஒரு விஞ்ஞானியின் செவ்வி


கேள்வி : உங்கள் சுய அனுபவத்தைக் கொண்டு, எப்படி ஒரு தலைவன் ஓர் இழப்பை நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு தர முடியுமா?


பதில் : எனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறேன் . 1973றாம் ஆண்டில், இந்திய செயற்கைகோள் பாய்ச்சும் செயல் திட்டத்துக்கு இயக்குனரானேன். எங்கள் இலக்கு 1980தாம் ஆண்டுக்குள் “ரோகினி” செயற்கைகோளை விண்வட்டத்தில் சேர்த்திட வேண்டுமென்பது. போதுமான மானியம் மற்றும் மனித வளம் எனக்கு அளிக்கப்பட்டது. – ஆனால், 1980க்குள் செயற்கைகோள் விண்வெளிக்குப் பாய்ச்சப்பட வேண்டும். அறிவியலாளர்கள், தெழில் நுட்ப வல்லுனர்கள் என ஆயிரக் கணக்ககானோர் அவ்விலக்கை நோக்கி செயல்பட்டனர்.

1979தாம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் – நாங்கள் நினைத்தோம் நாங்கள் தயார் என்று. செயல்திட்ட இயக்குனர் என்ற முறையில், அதைப் பாய்ச்ச நான் இயக்கம் செய்யும் மையத்துக்குச் சென்றேன். பாய்ச்சுவதற்கு 4 மணித்துளிகள் முன்னம், கணினி அனைத்து செயலிகளின் நிலைத்தன்மையைச் சரி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழிந்தப்பின், அந்த கணினியானது பாய்ச்சலை நிறுத்தியது; திரையில், சில கட்டுபடுத்தும் மின்பொறிகள் செயலிழந்துள்ளதாகக் காட்டப்பட்டது. எனது வல்லுனர்கள் – 4கிலிருந்து 5 பேர் வரை என்னுடன் இருந்தனர் – என்னைத் துவண்டு விட வேண்டாம் எனக் கூறினர். அவர்களது கணக்குப்படி போதிய எரிவாயு உள்ளது என்றனர். ஆதலால், நான் கணினியின் உதவி இன்றி, நேரிடையாக விண்கலனைப் பாய்ச்சினேன். முதல் படியில் அனைத்தும் செவ்வனே நடந்தன. இரண்டாம் படியில் பிரச்சனை உருவெடுத்தது. விண்வட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டிய செயற்கைகோள், முழுவதுமாக வங்கக் கடலில் புதைந்தது. அது பேரிழப்பு.


அதே நாள், இந்திய விண் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் சத்தீசு தவான், செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். செயற்கைகோள் பாய்ச்சப் பட்டது காலை 7.00. கூட்டம் நடந்தேறியது காலை 7.45க்கு – ஸ்ரீஹரிகோத்தாவில். அமைப்பின் தலைவர் என்ற முறையில், பேராசிரியர் தவான் அவர்களே பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அந்த இழப்புக்கு முழு பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். “இந்த குழு கடுமையாக உழைத்துள்ளது, ஆனால் இன்னும் தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுகிறது,”என கூறினார். இன்னும் ஒரே ஆண்டில், இந்த குழு வெற்றி அடையும் என நம்பிக்கை தெரிவித்தார். உண்மையில், நான்தான் அந்த இழப்புக்குக் காரணமானவன், இருப்பினும் பழியை அமைப்பின் தலைவர் சுமந்துக்கொண்டார்.


அடுத்த ஆண்டு, ஜூலை 1980டில், நாங்கள் மீண்டும் செயற்கைகோள் பாய்ச்ச முயன்றோம், இம்முறை வெற்றி கொண்டோம். நாடே குதூகலித்தது. மீண்டும் பத்திரிக்கையாளர் சந்த்திப்பு நிகழ்ந்தது. பேராசிரியர் தவான் என்னை ஓரமாக அழைத்துச் சொன்னார். “இன்றைக்கு சந்திப்பை நீ நடத்து.”

அன்றைக்கு ஒரு முக்கியமான பாடம் கற்றுக்கொண்டேன். ஓர் இழப்பு என்றதும் அதை அதன் தலைவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், வெற்றி கிட்டிய போது, அதை அவரது குழுவிற்குச் சேர்த்து விட்டார். ஒரு சிறந்த நிர்வாக கல்வியை நான் ஒரு நூலிலிருந்து கற்கவில்லை. அந்த அனுபத்திலிருதே.


(செவ்வியைப் படித்து முடிக்கும் முன்னரே, அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டவர் யார் என்று உங்களில் பலர் அனுமானித்து இருப்பீர்கள்... ஆம் அவரேதான். மேற்கண்ட செவ்வி எனக்குப் பன்னனுப்பி மடலில் வந்தது, உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி)

ஞாயிறு, 23 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (3)

வினாக்களோடு சில கனாக்கள் (3)

மைதியான, வெளிச்சமான ஓர் இடத்தை தேடி அங்கே அமர்ந்தேன். என் புத்தகப்பையில் இருந்து சில விரிவுரை குறிப்புகளை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன். ஒரு சில தாட்கள் மட்டுமே படிக்க முடிந்தது, அவளை நெருங்கப் போகும் இன்பத் தருணங்கள் அவ்வப்போது கண் முன் வந்து மறைந்தன.

எழில்விழியோடு எனக்கு ஏற்பட்ட அறிமுகம், நட்பு, இருதலை காதல் (அவளது குற்றச்சாட்டு - அவளிடமிருந்து நான் எதிர்பார்த்தது வெறும் உடல் இச்சையாம்), மோதல், மீண்டும் காதல், மீண்டும் மோதல்.... இப்படி பல பரிமாணங்களைக் கடந்து இறுதியாக மீண்டும் ‘நட்பு’ என்று சங்கிலி பூர்த்தியாகி உள்ளது. வெறும் நான்கே ஆண்டுகளில் இத்துணையும். எல்லாம் இணைய அளவே, இதுவரை நேரில் கண்டு பேசியதெல்லாம் இல்லை. தொலைபேசி, குறுந்தகவல், இணைய அரட்டை இவ்வாறு தான் எங்கள் உறவு இந்நாள் வரை நீடித்திருந்தது. ஆனாலும், புகைப்படங்களிலிலும் வலைக்காட்சியிலும் (வெப்கேம்) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதுண்டு.

பிற்காலத்தில், என் காதலை நிராகரித்து விட்டு, அவள் இன்னொருவனிடம் காதல் பூண்டதை என்னால் அப்போது ஏற்று கொள்ள முடியவில்லை. அவளைக் குற்றம் சொல்வதா, என்னை வைவதா அல்லது சூழ்நிலையைத் தூற்றுவதா? தெரியவில்லை. எனக்கு எந்த இழப்பும் இல்லையே என்று சொல்லி பல முறை என் மனசாட்சியையே ஏமாற்றிக் கொண்டேன். துரோகி நான், மனசாட்சியை ஏமாற்றியதால். சில இரவுகள் உள்ளுக்குள்ளே புளுங்கி உள்ளேன். கோழை நான், புளுங்கியதால். யாரிடம் சொல்லி அழ முடியும்? காலப் போக்கில் அவளது முடிவு அனைவரது நன்மைக்கே என உண்மையாக சமாதானமானேன். அவளுக்கு ஏற்ற துணையோடு வாழட்டும் என வழி விட்டு விலகி நின்றேன். ஒரு முட்டாள் தியாகி நான், காதலை விட்டுக் கொடுத்ததால். கிட்டாதாயின் வெட்டென மற என சொல்வார்கள்; காதலில் அது எத்தகைய சாத்தியம்? நானறியேன்.

சென்ற வாரம், சிங்கையில் ஒரு வேலை காலி இருப்பதாக இணையத்தில் விளம்பரம் பார்த்தேன், அந்த தொழிற்சாலையைப் பற்றி யாரிடம் விசாரிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது அங்கு வசிக்கும் எழில்விழியின் ஞாபகம் வந்தது. அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நல்ல உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டேன்.

அதே இரவு, வெளியூர் அழைப்பு வந்தது என் கைத்தொலைப்பேசிக்கு. திரையில் எண் காட்டப்படவில்லை. யாராக இருக்கும்? பாதி தூக்கத்திலே பேசுகிறேன், ஆம் அது அவளேதான். என் தேவதை. மன்னிக்க, எனது முன்னாள் தேவதை.

“ஹலோ மறவன்” “ஆ…ம், ஹலோ”

“எப்படி இருக்கே”

“நல்லாருக்கேன், நீ…?”

“ஆம், எஸ்.எம்.எஸ்க்கு ரிப்ளை அனுப்பினேன், பார்க்கலையா?”

“இல்ல, தூங்கிட்டேன்”

“அடுத்த வாரம் பினாங்கு வரேன், என்னுடைய தேர்வு ஒன்னு அங்க எழுத வேண்டி இருக்கு. பினாங்குல எனக்கு என்ன இடம் தெரியும், நீ இருக்கேன்ற நம்பிக்கையில தான் வரேன்” மோதல் காலத்தில் அவளை இனி வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்றெல்லாம் (மனதுக்குள்) சபதம் போட்டுள்ளேன்.

“என்றைக்கு?”

“வியாழன், வெள்ளி, சனி மூனு நாள்”

வார இறுதியில் வெற்று நேரம் இருக்கும், ஆனால் இந்த சனிக்கிழமை பார்த்து கல்லூரியில் சொற்பொழிவு இருக்கிறதே? முடியாது என்றால் என்ன நினைப்பாளோ? இவ்வளவு பக்கம் வந்தும் போய் பார்க்கவில்லை எனில் அது தப்பு மாதிரி தெரிந்தது. உள்ளூர அவளைப் பார்க்க வேண்டும் என்ற தசையாட்டம் இல்லாமல் இல்லை. நிலைமையை எடுத்துரைத்தேன், அவள் சமாதானமாகவில்லை. உரிமையாக வர வேண்டி உத்தரவிட்டாள். போதாக் குறைக்கு ஒரு பழமொழி சொன்னாள் ஆங்கிலத்தில், அதற்கு ஈடாக தமிழில் -

“மனம் உண்டானால் மார்க்கமுண்டு”

“எல்லாம் நேரம்டா சாமி” நான்!


(கனாக்கள் தொடரும்)

வியாழன், 20 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (2)

வினாக்களோடு சில கனாக்கள் (2)


ருவழியாக பேருந்து நிலையத்தை அடைந்து விட்டேன். நேரம் அப்போது சரியாக காலை 6.32. ஐயகோ, அரை மணி நேரம் தாமதமாகி விட்டேனே; அவள் காத்துக் கொண்டிருப்பாளே! பதற்றம் இருந்தப் போதிலும் முகத் தோற்றத்தைச் சீர் படுத்த சில நிமிடங்கள் தேவைப்பட்டன. மோட்டாரை இருத்தி விட்டு, பொது கழிப்பறைக்குள் நுழைந்து படிந்து போய்விட்ட முடிகளைக் கோதி விட்டு ஏதோ செய்தேன். இது நல்லா இருக்கே!அந்த நல்ல கண்ணாடிக்கு நன்றி நவிழ்த்து, விரைவு பேருந்து வந்து நிற்கும் இடத்தை அடைந்தேன்.

அதிகாலை என்பதால், கதிரவ ஒளி இன்னும் மும்முறமாகவில்லை. மக்களின் கூட்டமும் கணிசமாக இல்லை. அவளை அங்கே தேடினேன், காணவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகுதான் அவளது கைத்தொலைபேசிக்கு இணைப்பு சாத்தியமானது.

"விழி, எங்க இருக்க? நான் இங்க வேயிட் பண்ணிட்டிருக்கேன்"

"இன்னும் பஸ்சுலத்தான்பா... சயின் போர்டு பார்த்தேன், இன்னும் கே.எல் போறதுக்கு 21 கிலோ மீட்டர் இருக்குதாம். பினாங்கு (பட்டர்வொர்த்) வர 140 கிலோ மீட்டர் இருக்குப்பா "

"விளையாடாதே, பின்னே ஏன் 6 மணின்னு சொன்னே?"

"தெரியலப்பா... அங்க ஒருத்தன் அப்படித்தான் சொன்னான்.
அது யாரு?"

அவள் ஏதோ பெயர் சொன்னாள், அதை எல்லாம் உள்வாங்கிக் கொள்ளும் நிதானம் என்னிடம் இல்லை.


140கி.மி.யா? இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கனும்? அதற்குள் கதிரவ ஒளி தலைப்பட எனக்குள் இருந்த கோபம், வேகம், வருத்தம், அதிருப்தி என பல தீய குணங்கள் சூழ்ந்து குருதியின் வெப்பத்தைத் துரிதப் படுத்தி விட்டன. வயிறு ஒருப்பக்கம் காற்றை அங்கும் இங்கும் தள்ளி விளையாட்டு காட்டியது. நேரே உணவு கடைக்குள் நுழைந்தேன். ஒரு தட்டு நாசி லெமாக்கை உள்ளே தள்ளினேன். எழில்விழியிடமிருந்து குறுந்தகவல், "கோச்சுக்காதே, நாலு வருசம் காத்திருந்தோம், ரெண்டு மணிநேரம் பொறுக்க முடியாதா?"
அதற்கு மறுமொழி நான் இப்படி இட்டேன், சுயத்தை முழுமையாக ஏமாற்றிய வண்ணம் -
"நான் தணிந்துதான் இருக்கேன், நல்ல பிரயாணம் அமையட்டும், கவனம்."

நிஜத்தில் சுவாசக் காற்றின் வெப்பம் தணிந்தப்பாடில்லை. பெனடோல் (காய்ச்சல் மருந்து) ஒன்றை போட்டு விழுங்கி, தேவையில்லா மன உளைச்சலைப் போக்க முயன்றேன்.
(கனாக்கள் தொடரும்)

திங்கள், 17 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள்

வினாக்களோடு சில கானாக்கள் (1)



* பின்வரும் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனை உலகின் பிம்பங்களே. யாரினது மனத்தைப் புண்செய்யும் நோக்கில் இது புனையப் படவில்லை. நன்றி.






ள்ளிரவு நேரம் 12.36. சவரம் செய்துவிட்டு முகத்தில் புது பொழிவு ஏதும் தெரிகிறதா என்ற கேள்வியை நிழற் கண்ணாடியிடம் முன்வைத்தேன். “சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்” என்ற பழமொழி அதற்கு யார் கற்பித்ததோ... என்னிடம் அப்படியே ஒப்புவித்தது. வெறுத்துப் போனேன்.


பக்கத்து அறை நண்பனின் கதவைத் தட்டி அவனிடம் இருக்கும் இன்னொரு தலைக் கவசத்தை நாளைக்குப் பயன்படுத்த அனுமதி கேட்டேன், பிறகு கல்லூரி நூலகத்தில் ஒப்படைக்க வேண்டிய புத்தகத்தையும் அவனிடமே கொடுத்து, சேர்த்து விட சொன்னேன்.
“ஏன் நாளைக்குக் கம்பஸ்க்கு வரலையா?”
“இல்ல, ஒரு விசயமா பட்டர்வொர்த் போறேன்”
“ஹெல்மட் எதுக்கு?”
“வந்து சொல்லுறேன்,” ஒரு திருட்டுப் புன்னகையோடு.
ஏதோ புரிந்துக் கொண்டவனாய், அவன் எனக்கு விளங்காத மொழியில் தலையசைத்துச் சென்றான். நேரம் பின்னிரவு 1.06. கைத்தொலைபேசியில் அலாறத்தை வைத்து விட்டு உறங்க சென்றேன்; இல்லை, முயன்றேன். நடக்குமா நடக்காதா என்றிருந்த தருணம், நாளை நடக்கப் போகிறதே என்ற ஆவலும் குதூகலமும் என் இரவு தூக்கத்தைக் கூறு போட்டன.


அலாறம் அலறியது, என்னை அறியாமலே தூங்கி இருக்கிறேன். நேரம் அதிகாலை 4.30. பாதரசமே உறைந்துப் போயிருக்கும், அப்படி ஒரு குளிர்.
“பச்சைத் தண்ணியில குளிக்கனுமாடா?”
“குளிச்சித்தானே ஆகனும்”
“சரி நேரத்த கடத்தாதே... ஆறு மணிக்கெல்லாம் பட்டர்வொர்த் பஸ் ஸ்டேசன புடிச்சி ஆகனும்”
“முடியலடா” என் சுயத்தோடுதான் இந்த உரையாடல்.


மணி இப்போது காலை 5:40. என் இருப்பிடத்தில் இருந்து பட்டர்வொர்த்துக்குச் செல்ல குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். மூன்று முறை முகம் பார்த்தாகி விட்டது கண்ணாடி முன். ஆம், அதே நையாண்டி பேர்வழியிடம்தான். மோட்டாரை முறுக்கிய வண்ணம் நேரத்திடம் போட்டியிட்டு விரைந்தேன், தெற்கை நோக்கி. இருட்டு, குளிர் என இரண்டும் என்னை விரட்டிக் கொண்டிருக்க “இது நல்லபடியா அமையுமா? என்ன பேசுறது... என்ன சொல்லி வரவேற்பது? அந்த இடத்துக்கு வழி மட்டும் சொன்னால் போதுமா? அல்லது கூட்டிக் கொண்டு போக சொல்வாளா? போகாவிடில் கோவிப்பாளே... என்னை நேரில் பார்த்தால் அவளுக்குப் பிடிக்குமா? பிடித்துப் போய் என்ன பயன்? வரம்பு மீறாமல் பழகனுமே நான், முடியுமா?” இப்படி விடை தெரியா பல கேள்விகளோடு எனது வேட்டை தொடர்ந்தது.

(கனாக்கள் தொடரும்)