(தமிழினத்தைப் பற்றி எழுதக் கேட்டுக் கொள்ளப் பட்டிருந்தது. உடனே எழுத சரக்கு இல்லாத்தால், என்னால் முடிந்த மொழி பெயர்ப்பு கட்டுரை கீழே. விஞ்ஞான உலகில் கொடி கட்டி பறக்கும் ஒரு தமிழரின் கட்டுரை.)
“ஒரு தலைவருக்குத் தெரிய வேண்டும் – இழப்பை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று”ஒரு விஞ்ஞானியின் செவ்வி
கேள்வி : உங்கள் சுய அனுபவத்தைக் கொண்டு, எப்படி ஒரு தலைவன் ஓர் இழப்பை நிர்வகிக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு தர முடியுமா?
பதில் : எனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறேன் . 1973றாம் ஆண்டில், இந்திய செயற்கைகோள் பாய்ச்சும் செயல் திட்டத்துக்கு இயக்குனரானேன். எங்கள் இலக்கு 1980தாம் ஆண்டுக்குள் “ரோகினி” செயற்கைகோளை விண்வட்டத்தில் சேர்த்திட வேண்டுமென்பது. போதுமான மானியம் மற்றும் மனித வளம் எனக்கு அளிக்கப்பட்டது. – ஆனால், 1980க்குள் செயற்கைகோள் விண்வெளிக்குப் பாய்ச்சப்பட வேண்டும். அறிவியலாளர்கள், தெழில் நுட்ப வல்லுனர்கள் என ஆயிரக் கணக்ககானோர் அவ்விலக்கை நோக்கி செயல்பட்டனர்.
1979தாம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன் – நாங்கள் நினைத்தோம் நாங்கள் தயார் என்று. செயல்திட்ட இயக்குனர் என்ற முறையில், அதைப் பாய்ச்ச நான் இயக்கம் செய்யும் மையத்துக்குச் சென்றேன். பாய்ச்சுவதற்கு 4 மணித்துளிகள் முன்னம், கணினி அனைத்து செயலிகளின் நிலைத்தன்மையைச் சரி பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு நிமிடம் கழிந்தப்பின், அந்த கணினியானது பாய்ச்சலை நிறுத்தியது; திரையில், சில கட்டுபடுத்தும் மின்பொறிகள் செயலிழந்துள்ளதாகக் காட்டப்பட்டது. எனது வல்லுனர்கள் – 4கிலிருந்து 5 பேர் வரை என்னுடன் இருந்தனர் – என்னைத் துவண்டு விட வேண்டாம் எனக் கூறினர். அவர்களது கணக்குப்படி போதிய எரிவாயு உள்ளது என்றனர். ஆதலால், நான் கணினியின் உதவி இன்றி, நேரிடையாக விண்கலனைப் பாய்ச்சினேன். முதல் படியில் அனைத்தும் செவ்வனே நடந்தன. இரண்டாம் படியில் பிரச்சனை உருவெடுத்தது. விண்வட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டிய செயற்கைகோள், முழுவதுமாக வங்கக் கடலில் புதைந்தது. அது பேரிழப்பு.
அதே நாள், இந்திய விண் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் பேராசிரியர் சத்தீசு தவான், செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். செயற்கைகோள் பாய்ச்சப் பட்டது காலை 7.00. கூட்டம் நடந்தேறியது காலை 7.45க்கு – ஸ்ரீஹரிகோத்தாவில். அமைப்பின் தலைவர் என்ற முறையில், பேராசிரியர் தவான் அவர்களே பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அந்த இழப்புக்கு முழு பொறுப்பையும் அவரே ஏற்றுக்கொண்டார். “இந்த குழு கடுமையாக உழைத்துள்ளது, ஆனால் இன்னும் தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுகிறது,”என கூறினார். இன்னும் ஒரே ஆண்டில், இந்த குழு வெற்றி அடையும் என நம்பிக்கை தெரிவித்தார். உண்மையில், நான்தான் அந்த இழப்புக்குக் காரணமானவன், இருப்பினும் பழியை அமைப்பின் தலைவர் சுமந்துக்கொண்டார்.
அடுத்த ஆண்டு, ஜூலை 1980டில், நாங்கள் மீண்டும் செயற்கைகோள் பாய்ச்ச முயன்றோம், இம்முறை வெற்றி கொண்டோம். நாடே குதூகலித்தது. மீண்டும் பத்திரிக்கையாளர் சந்த்திப்பு நிகழ்ந்தது. பேராசிரியர் தவான் என்னை ஓரமாக அழைத்துச் சொன்னார். “இன்றைக்கு சந்திப்பை நீ நடத்து.”
அன்றைக்கு ஒரு முக்கியமான பாடம் கற்றுக்கொண்டேன். ஓர் இழப்பு என்றதும் அதை அதன் தலைவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், வெற்றி கிட்டிய போது, அதை அவரது குழுவிற்குச் சேர்த்து விட்டார். ஒரு சிறந்த நிர்வாக கல்வியை நான் ஒரு நூலிலிருந்து கற்கவில்லை. அந்த அனுபத்திலிருதே.
(செவ்வியைப் படித்து முடிக்கும் முன்னரே, அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்டவர் யார் என்று உங்களில் பலர் அனுமானித்து இருப்பீர்கள்... ஆம் அவரேதான். மேற்கண்ட செவ்வி எனக்குப் பன்னனுப்பி மடலில் வந்தது, உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக