பக்கங்கள்

வியாழன், 27 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (7)


எவ்வளவோ தடுக்க முயன்றும், உரைநடையின் இயல்பு தன்மை சுணங்காமல் இருக்க சேர்த்துக் கொள்ளப்பட்ட சில வேற்றுமொழி சொற்களுக்கான தமிழாக்கம் கீழே: (பாகம் 6 மற்றும் பாகம் 7)
போட்டோ - நிழற்படம்
ஷீட் – ச்சீ, எச்சம்
லவ்- காதல், அன்பு
வாவ் – பூரிப்பை உணர்த்தும் ஓர் ஓசை, அடேங்கப்பா
குட் - நன்று, சரி
செமினார் – சொற்பொழிவு
போன் – (தொலை)பேசி, அழைப்பு
குட் லக் - நல்வாழ்த்து
மோட்டார் வண்டிஇரு சக்கர (இயந்திர) வண்டி

வினாக்களோடு சில கனாக்கள் (7)துவரை மனதுக்குள் பறந்துக் கொண்டிருந்த ஆயிரம் பட்டாம் பூச்சிகள், நொடியில் காணாமல் போய் விட்டன. ஒருவேளை அந்த பட்டாம் பூச்சி பூங்காவுக்குள் பறந்து சென்று கலந்து விட்டனவோ. இதற்கு முன் இருந்த குதூகலம் என்னிடம் இப்போது இல்லை என்பது உண்மை. எனது இத்தனை நாள் கனவு வெறும் கனவாகவே இருந்து விடுமா? இந்த வினாவுக்கு யார் பதில் சொல்வது? கடவுளா? கலிகாலத்தில் அவர் எப்படி தோன்றுவார்?

“நம்மள பத்தியும் அவருக்குத் தெரியும், சொல்லி இருக்கேன்” நல்லவள் பேசினாள்.

“யாரு, கடவுளுக்கா”

“அட இல்லப்பா, வெய்யிலைச் சொன்னேன்”

“என்ன சொல்லுற, நீ என்னை இங்க வந்து சந்திக்கிறது... தெரியுமா அவருக்கு?”
“அவருக்குத் தெரியாமலா? இன்னும் சொல்லப் போனால், உன்னையும் என்னையும் ரொம்பவே பெருமையா நினைக்கிறாரு. நீயே சொல்லு எத்தனை பேரு, காதல் முறிஞ்சாலும் தொடர்ந்து நண்பர்களாய் இருக்காங்க, நம்மள மாதிரி? அதை நினைச்சி ரொம்பவே பூரிச்சு போவாரு”

சுளீரென இருந்தது எனக்கு. இதற்கு இவள் என்னைக் கன்னத்தில் நான்கு அறை விட்டிருக்கலாம்.

“நம்மள மாதிரி எத்தனை பேரு இருக்காங்கன்னு தெரியல. ஆனா, நமது பழைய காதல் தெரிஞ்சும் என்னை சந்திக்க அனுமதி கொடுத்திருக்காரே... இந்த மாதிரி மனுசங்கள பார்க்கிறது தான் அரிது”

மனம் கசப்பில் வாடி போய் இருந்தாலும், அந்த நிதர்சனத்தை நான் ஒப்புக்கொண்டுத்தானே ஆக வேண்டும். கொஞ்ச நேரம் பட்டாம் பூச்சிகளோடு நேரத்தைக் கழித்தோம்.
இருட்டுவதற்குள் அவளை விடுதியில் பாதுகாப்பாக விட்டு, நான் வீடு திரும்ப முடிவு செய்தேன். விடுதியை நெருங்க நெருங்க உள்ளம் குமுறியது. நெஞ்சத்தின் எடை கூடியதாய் உணர்வு. வண்டியை விட்டு இறங்கினாள். “எனை விட்டு போகாதே” உதட்டோடே நின்றது வார்த்தை.

“ஹப்பா, நல்...லா இருந்திச்சுல. இந்த மாதிரி சந்தோசமா இருந்ததே இல்ல மறவ். ரொம்ப ரொம்ப நன்றி”

“ஏய், எதுக்கு”

“சுத்திக் காட்டியதுக்கு... அப்படின்னு சொல்லமாட்டேன். நமக்குள்ள இதுக்கு எல்லாம் நன்றி சொல்லிக்கலாமா? நன்றி சொன்னது, நீ இன்னைக்கு எல்லா ப்ளானையும் எனக்காக தூக்கிப் போட்டுட்டு என்னோடு வந்ததுக்கு”

“ச்சே... அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல”

“இல்லப்பா, நீ இல்லாட்டி இன்னைக்கு நான் திண்டாடி போய் இருப்பேன்”

“சரி நேரமாகுது, கிளம்புறேன், பத்திரமா இரு. ஏதாவது உதவின்னா உடனே எனக்கு போன் செய்யு”

“உன்னைச் சந்திச்சதுல எனக்கு...”

“உனக்கு?”

“எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம். நீ ரொம்ப நல்லவன்பா”

அடிப்பாவி, அவ்வளவு தானா? வேறு ஏதும் சொல்வாள் என எதிர்பார்த்தேன்; எல்லாம் ஒரு நப்பாசை தான்.

“அப்படியா? இருக்கட்டும். சனிக்கிழமை எப்படி திரும்பி போவ?”

“ஏன் நீ வர மாட்டியா? வந்தா நல்லாருக்கும். இல்லாட்டிக் கூட பரவா இல்லை. கூட பரீட்சை எழுதுற நண்பர்கள் இருக்காங்கல்ல, அவங்க கூட போயிடுவேன். ஆனா, நீ வந்தா நல்லாருக்கும்.”

“பாக்குறேன், செமினார் இல்லாட்டி அவசியம் வரேன். இந்த நாள மறக்க மாட்டேன். குட் லக் - உன் தேர்வுக்கும், உன் எதிர்காலத்துக்கும்”

சொல்லிக் கொண்டே எனது மோட்டார் நகர்ந்தது.


அவள் புன்முறுவலோடு கைகளை அசைத்து வழி அனுப்பி வைத்தாள். அவள் முகத்தில் ஓர் இனம் புரியா சோகம் தெரிந்தது. எதனால்? அட, எதுவாய் இருப்பின் எனக்கென்ன? “என்ன இருந்தப்போதும் அவள் எனதில்லையே, மறந்து போ என் மனமே...” என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.எல்லாம் சரி, சனிக்கிழமை மீண்டும் அவளைச் சந்தித்தேனா இல்லையா எனபது தானே உங்கள் வினா? அதே குழப்பம் தான் எனக்கும். நாளை விடிந்தால் சனிக்கிழமை. இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன், போகலாமா வேண்டாமா என்று.
நீங்கள் சொல்லுங்கள், நான் போகட்டுமா?

(கனாக்கள் முற்றும்)

3 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நாளைக்கு போய் தங்கச்சிய மறக்காம பார்த்துட்டு வாப்பா.... அட எழில் உன் தங்கச்சி தானே அப்ப....

A N A N T H E N சொன்னது…

எது தங்கச்சியா? விட்டா அண்ணன், டீ ஆர் போல வசனம் பேசுவார் போலிருக்கே...
"வாம்மா தங்கச்சி,
அண்ணன் திங்கிறேன் வாழைக்காய் பஜ்ஜி..
அப்புறமா கொறிப்பேன் பறங்க்கிக்காய் கொச்சி..." ன்னு

- சரி, மறவன் கேட்ட வினாவுக்கு முதல் பதில் வந்தாச்சு... இன்னும் யாராவது இருக்கிங்களா? :D

ஆதவன் சொன்னது…

வணக்கம் ஆனந்தன்.

//எவ்வளவோ தடுக்க முயன்றும், உரைநடையின் இயல்பு தன்மை சுணங்காமல் இருக்க சேர்த்துக் கொள்ளப்பட்ட சில வேற்றுமொழி சொற்களுக்கான தமிழாக்கம் கீழே: (பாகம் 6 மற்றும் பாகம் 7)
போட்டோ - நிழற்படம்
ஷீட் – ச்சீ, எச்சம்
லவ்- காதல், அன்பு
வாவ் – பூரிப்பை உணர்த்தும் ஓர் ஓசை, அடேங்கப்பா
குட் - நன்று, சரி
செமினார் – சொற்பொழிவு
போன் – (தொலை)பேசி, அழைப்பு
குட் லக் - நல்வாழ்த்து
மோட்டார் வண்டி – இரு சக்கர (இயந்திர) வண்டி//

தங்களின் இந்த அணுகுமுறையைக் கண்டு மகிழ்கிறேன். தமிழின்பால் இருக்கும் தங்களின் அக்கறையை இது காட்டுகிறது.

தமிழில் கலக்கும் வேற்றுச் சொற்களை இனங்கண்டு கொள்ளும் இந்த அடிப்படை உணர்வு தங்களுக்குள் ஆலமரமாக வளர வேண்டும் என அன்போடு வேண்டுகின்றேன்.

ஆங்கிலச் சொற்களைச் சுட்டி உங்கள் பாதி தமிழைத் தூய்மைப்படுத்தி விட்டீர்கள். அதுபோல், பின்வரும் வடச்சொற்களையும் சுட்டியிருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.

ரொம்ப - மிக, அதிக
நிதர்சனத்தை - உண்மையை, நடப்பை
வார்த்தை - சொல்
சந்தோசமா - மகிழ்ச்சி, இன்பம்
பரீட்சை - தேர்வு

இவைதவிர இன்னும் இரண்டு..

மோட்டார் வண்டி - மகிழுந்து
ப்ளானையும் - திட்டம்

இது ஒருபுறம் இருக்க, நாளைக்கு கட்டாயம் போய் வாருங்களேன்.. தப்பில்லையே!