இன்று என்னோடு ஊரெல்லாம் விரும்பி சுற்றி இருக்கிறாள். இப்போது என்னுடன் கடற்கரைக்குக் கூட வந்துள்ளாள். என் மீது அவளுக்கு ஈர்ப்பு இல்லாமலா இருக்கும்? அங்கே என்னுடன் ஓடிப் பிடித்து விளையாடியது, நெருந்தூரம் நடந்தது, தலையில் தட்டி நகைத்தது, சிப்பிகளைக் கொண்டு ஏதோ செய்து எனக்கு பரிசு அளித்தது - எனது மனக்கோட்டையை வலுப்படுத்தின.
எதிர்காலத்தை ஒட்டி அவளிடம் பேச எண்ணினேன்.
“என்னை இன்னமும் காதலிக்கிறாயா?, என்னோடு சேர்ந்து வாழ சம்மதமா? முன்பு என்னை எதற்காக வேண்டாமென ஒதுக்கினாயோ, அதை நான் இப்போது விட்டுக் கொடுத்தால், என்னை மணந்துக் கொள்வாயா?, கோவம் கொஞ்சம் அவ்வப்போது வரும், ஆனால் நல்லவன். கொஞ்சம் சுயநலம். அம்மா சொல்லி திட்டுவாங்க. நீயே நானாகியப் பிறகு, சுயநலம் என்பது நம்மைப் பற்றித்தானே? இதில் என்ன தவறு? உன் முகத்தைப் பார்த்தப் பின்பே இனி எனது ஒவ்வொரு விடியலும் விடியனும், இப்படி என் ஆசை, கனவு எல்லாம் பலிக்குமா?”எனது வினாக்கள் இத்தோடு மட்டும் நிற்கவில்லை, இன்னும் இருக்கின்றன. அதை இங்கே விரிவாக எழுத தயக்கமாய் உள்ளது.
m
மூச்சை இழுத்து, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பேச்செடுக்க முற்பட்டேன். அத்தருணம் ஒரு முக்கியமான கேள்வி சிந்தையை எட்டியது. “அவளது அந்த புதிய காதலின் நிலைமை என்ன? அவள் இன்னும் அவனோடுதான் உள்ளாளா?”இது தெரியாமல் நான் ஏதாவது எடக்கு மடக்காகப் பேசி தொலைத்தால் என்ன ஆவது? மூச்சை உள்வாங்கிக் கொண்டேன். பொறுமை உடையான் புவி ஆள்வான் என்பது முதுமொழி. பூமி வேண்டாம், என் பொறுமையானது எழில்விழியை ஆள உதவுமாயின் அதுவே போதும்.
அங்கிருந்து கிளம்பினோம். 20 நிமிடங்கள். வண்ணத்துப் பூச்சி பூங்காவை அடைந்தோம். நுழைவுச் சீட்டு தான்தான் வாங்குவேன் என விடாப்பிடி செய்தாள். விட்டு விட்டேன். பணம் எடுக்க அவள் தனது பணப்பையைத் திறக்க, அதிர்ச்சி அதனுள்ளே தான் காத்திருக்கிறது எனக்கு மட்டும் தெரியுமா என்ன? அவள் புகைப் படத்துக்கு அருகே ஓர் ஆடவனின் புகைப் படமும் இருப்பதை கண்டேன். கண்டும் காணாமல் இருக்க முயன்றேன். நல்லவள் நான் பார்க்கும் படி காண்பித்து,
“மறவ், இங்கே பாரேன். இந்த போட்டோல இருப்பது யாருன்னு சொல்லு,”என்றாள்.
வழியில் செல்லும் ஓணானை மடியில் கட்டாமல் விட மாட்டாள் போலிருக்கே. அசடாய் சிரித்துக் கொண்டு,
“உங்கப்பாவோட சிறு வயது போட்டோவா? நல்லா இருக்காரு”
“ஷீட்... கெக்கபுக்க கெக்கபுக்க”சிரித்தாள்
“ஷீட்டா? எங்கே?”
“ஏய் விளையாடாதேப்பா, இதுதான் வெய்யில்”
“வெய்யிலா? எது, மத்தியானம் வானத்துல இருக்குமே அதுவா? என்னாலா சொல்லுற”
“ஐயோ படுத்துறானே... இவர் தான் வெய்யில்முருகன். சொல்லி இருக்கேனே... மறந்துட்டியா?”
எச்சில் தொண்டைக்கும் அடியில் சென்று மறைந்துக் கொண்டது. நாக்கு வரண்டதால், என் பேச்சிலும் தடுமாற்றம் நிலவியது. காட்டிக் கொள்ளவில்லை நான்.
“ஓகோ, அவரா? நல்லா இருக்காரு. இன்னுமா அவரை லவ் பண்ணுற?”விளையாட்டாய் கேட்பது போன்று வினையமாகவே கேட்டேன்.
“ஏய், என்ன கேள்வி இது? படிப்பு முடிஞ்சதும் நிச்சயதார்த்தம் வெச்சிக்கலாமுன்னு வீட்டுல சொல்லி இருக்காங்க”
“வாவ்... குட் குட்”அரை மனதுக் கூட இல்லாமல் சொல்லி வைத்தேன்.
4 கருத்துகள்:
:((
மண்ண வாரி போட்டுடாளே....
இந்த பொண்ணுங்களே இப்படித்தான், குத்துங்க எசமான் குத்துங்க
//மண்ண வாரி போட்டுடாளே....//
தஞ்சோங் பூங்கா வரைக்கும் வந்துட்டு, என் வூட்டுக்கு வராமே போய்டீங்களே மறவ்.. :(
கருத்துரையிடுக