பக்கங்கள்

அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஜனவரி, 2009

இரண்டாம் கண்டம்

மாலை 5.35க்கு முடிய வேண்டிய அன்றைய வேலை, இறுதி நேர தேவையினால் நீட்டிக்கப்பட்டது. அப்படி இப்படி என எல்லாம் முடிச்சிட்டு வர மணி 7.25 ஆயிடுச்சி. இன்னமும் அந்திதான், சரியா இருட்டல. மோட்டார்ல கீழ்நோக்கு விளக்கு பழுதாகிடுச்சு. அதனால தற்சமயத்துக்கு நேர்நோக்கு விளக்கு உதவியோடுதான் ஓட்ட வேண்டி இருந்தது. முழுதும் இருட்டுவதற்கு முன்னாடியே வீட்டுக்குப் போயிடலாமுன்னு தெறிச்சிக்கிட்டு போனேன்.

நல்லவேளை, வழக்கமா நெரிசலா இருக்கிற பாயான் பாரு சாலை, புக்கில் ஜம்பூல் ரவுண்டபோட் எல்லாம் நெரிசல் இல்லாம இருந்தன. முக்கியமா நெரிசலே கதின்னு கிடக்கும் பினாங்கு பாலத்துல காடிங்க சுமூகமா ஓடிக்கிட்டு இருந்திச்சு. அப்பாடான்னு முறுக்கிக் கிட்டே போனேன்.








ஏதோ ஒரு பருவக் காத்து அடிக்கிறதுனால இப்போல்லாம் ஆள தூக்குற மாதிரி வேகமா வீசுது காத்து. அன்றைக்குன்னு பாத்து மழைக்கான காத்தும் கடல் காத்தும் கூட்டு சேந்துருச்சு. பாலம் ஏறினதும் காத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன். காத்து கருப்பு அடிச்சிடப் போகுதுன்னு பெரியவங்க சொல்றது இதுதான் போல. சின்ன வாகனம்ன்னா பெரிய பெரிய லாரிங்களுக்கு மட்டும் இல்ல, காத்துக்கும் ரொம்ப இளக்காரமா போயிடுச்சு. சிவனேன்னு ஓரமா போனாக் கூட நடு ரோட்டுக்குத் தள்ளி மிரட்டிக்கிட்டு இருந்திச்சு.










பினாங்கு பாலத்துல மோட்டார் ஓட்டிகளுக்கென தனி பாதை ஒதுக்கப் படாதனால, காடிங்களுக்கு நடுவே-நடுவே ஒட்டினாத்தான் பாலத்த கடக்க முடியும். ஏற்கனவே என்னோட மோட்டார், ரோட்டுல அங்கேயும் இங்கேயும் அலசிட்டு இருந்திச்சு, இதுல நடுவுல வேற நான் போகனுமா? நான் மட்டும் தான்னு பார்த்தா, மத்த மோட்டாருங்களும் கூட அலசி அலசித்தான் ஓடிக்கிட்டு இருந்திச்சு. எப்படா இந்த கண்டத்த தாண்டுவேன்னு ஆகிப்போச்சு. ஆடி அலசி ஒரு வழியா பாலத்தைக் கடந்தாச்சு. கடவுளுக்கு நன்றி சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தேன்.




இப்போ முழுசா இருட்டிடுச்சு. பாலத்தை விட்டு இறங்கினதும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி சாலைகள் பிரியும். நான் கிழக்குல போக வேண்டும். என்னோட ரெண்டாவது கண்டம் பப்பரப்பான்னு ரோட்டு மேல படுத்து காத்துட்டு இருந்திச்சு. தூரத்திலே பார்த்துட்டேன், ஒரு கருப்பு உருவம் போல ரோட்டு மேல சதுர வடிவில தெரிஞ்சது. தார் ரோட்டை விட கருப்பு. சில நேரத்துல, தார் சாலையை அங்கே இங்கே நோண்டி புதுசா தார் குழைச்சி போட்டு இருப்பாங்க. அதுக்கூட அப்படித்தான் தட்டையா கூடுதல் கருப்பா தெரியும். இல்லாட்டி பக்கத்துல அறிவிப்பு/விளம்பர பலகை இருந்து விளக்கு வெளிச்சம் பட்டு தெரியும் நிழல் கூட அப்படித்தான் இருக்கும். ரோட்டு விளக்கு அங்கே இல்ல. வண்டியோட கீழ்நோக்கு விளக்கும் இல்லாததால துள்ளியமா என்னதான் அங்கே கிடக்குன்னு தெரியல. சரியா அஞ்சே வினாடி தான் இருக்கு அதை நெருங்க. வலப்பக்கம் காடி என் வேகத்துக்கு ஈடு கொடுத்து வந்துக்கிட்டு இருக்கு. இடப்பக்கம் இன்னொரு மோட்டார் வண்டி. ரெண்டு பக்கமும் நகர முடியல.

புது தார் ரோடோ அல்லது நிழலா இருந்தா அது மேலேயே மிதிச்சோ ஏறியோ போயிடலாம், பிரச்சனை இல்ல. வேறு ஏதும் திடப் பொருளா இருந்துட்டா? ஒரு முடிவுக்கு வர நிச்சயமா அந்த 5 வினாடி பத்தல. உடனே பிரேக் பிடிச்சாலும் அதை தாண்டித்தான் நிற்கும். ஆனாலும் பிரேக் பிடிக்கிறத தவிர வேற வழி இல்ல. ரொம்ப கிட்ட போனதும் அது என்னான்னு தெரிஞ்சது. சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும். ஒரு லாரியின் டயர். பாதியா பொசுங்கிப்போய் படுத்தாற்படி கிடந்தது.

அதற்குள்ளே இடப்பக்கம் இருந்த குறுகிய பாதையில மோட்டார செலுத்திட்டேன். அது டயர்ன்னு தெரிஞ்சப்போ ஈரக்குலையே கலங்கிடுச்சு. அதைத் தாண்டி கடக்கும் போது லேசா என்னோட வலது காலு அந்த டயர்ல உரசினப்போது 1% தாக்கம் உடல் முழுக்க பரவுனுச்சு. மிச்சம் 99 சதவீதத்த நினைச்சப்போ நிஜமாவே சுறுங்கிடுச்சு. இப்படி சாலையில கண்ட பொருட்களைப் சிதற விட்டு போகும் ஆட்களையும் சாலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பாளர்களையும் வாய்க்கு வந்த மாதிரி திட்டிக் கிட்டே போனேன். அப்பக்கூட ஆத்திரம் தீரல.

அதிர்ச்சியிலேந்து மீள முடியல. “ஒரு வேளை அந்த டயர் மேல நான் ஏறி இருந்தா?” இந்த கேள்வி என்னை விரட்டிக்கிட்டே வந்திச்சு. எப்படியோ ரெண்டாவது கண்டத்துலேந்தும் தப்பியாச்சு, மீண்டும் கடவுளுக்கு நன்றி.


வீட்டுக்குப் போக வேண்டிய நெடுஞ்சாலை ஏறிட்டேன். நிம்மதி அடுத்த 5 நிமிசம் கூட நீடிக்கல. திடுதுப்புன்னு மழை. எந்த அறிகுறியும் இல்ல. என்னோட மழை உடையைப் போடுறதும் போடாம இருக்குறதும் ஒன்னு, எப்படியும் நனயத்தான் போறேன். வீட்டுக்குத்தானே போவப்போறென்னு தெனாவெட்டா இருந்திட்டேன்.

வழியில சில பேரு வண்டிய நிறுத்தி, மழை உடை அணிந்துக்கிட்டு இருந்தாங்க. இன்னும் ஆறு - ஏழு நிமிசத்துல வீடு வந்திடுமுன்னு அசல்ட்டா இருந்திட்டேன். பேய்ஞ்சது உங்க ஊட்டு மழையும் இல்ல, எங்க ஊட்டு மழையும் இல்ல... செம்ம மழை, அடிச்சி பிச்சி எடுத்துருச்சு. நான் தொப்பரையா ஆயிட்டேன். முன்னுக்கு போற காடிங்க சரியாக் கூட தெரியல, வெளிச்சத்த வெச்சி குத்து மதிப்பா ஓட்டுனேன்.
அப்போ நிஜமா நண்பர் விக்கி அண்மையில் எழுதின “வான் துளிகள்” ஞாபகத்துக்கு வந்திச்சு. கோவம் கோவமா வந்திச்சு. உடனே மழையைக் கண்ணா பின்னான்னு திட்டி ஒரு கவிதை எழுதனுமுன்னு தோணுச்சு. சரி வேண்டாம், நம்மள விட பெரியவங்க வள்ளுவர், பாரதில்லாம் மழையைப் போற்ற சொல்லி இருக்காங்க. பொங்கல் வேற வருது. பொங்கலுக்குக் காரணம் பயிர் விளைச்சல்ன்னா, விளைச்சலுக்கு காரணம் நல்ல மழை, இல்லியா? அதனால அந்த எண்ணத்தைக் கை விட்டுட்டேன் (கவிதை எழுத சொன்னா ‘கவுஜ’ எழுதுவேன்றது இன்னொரு விசயம், அத நம்ம இங்க விவாதிக்க வேணாம்).


அப்புறம், வீட்டுல இன்னும் காணுமேன்னு போனுக்கு மேல போன். எங்க எடுக்குறது? அது பாட்டுக்கு பாக்கெடுக்குள்ள துடிச்சிக்கிட்டு இருந்திச்சு. வீட்டுக்குப் போய் சேர்ந்தப்போ இன்னொரு கண்டம் மீண்டு வந்த மாதிரி இருந்திச்சு.


ஆனா அந்த பெரிய டயர தாண்டி வந்தேன் பாருங்க... அத நினைச்சா இன்னமும் பயங்கரமா அதிர்ச்சியா இருக்கு. நண்பர்களே, இதைப் படிச்ச பிறகாவது சாலையில் செல்லுகையில் குப்பைகளைச் சிந்தாமல், சிதறடிக்காமல் ஒழுக்கமாக, பொறுப்பாக பயணம் செய்வோம். நாம் நினைத்தால் மாற்றத்தைக் கொண்டு வரலாம். நாம் செய்யும் சிறுபிள்ளைத்தனத்தால் சிக்குண்டு கிடக்கப்போகும் அப்பாவிகளை நினைவில் கொள்வோம்.



பதிவைப் படித்த நண்பர்களுக்கு மட்டும் பொங்கல் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மற்றவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து மட்டும்தான், பொங்கல்லாம் இல்ல...

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

வளைவுகளில்லா மலைப்பாதையா


ருண்ட வானம் தேய்ந்துப் போக, மொட்டை வெயில் மண்டையைப் பிளந்தது. பெய்யும் என எதிர்ப்பார்த்த மழை பெய்யவில்லை. வளைந்து நெளிந்த தார் சாலை. அதன் மேல் எனது மோட்டார் வண்டி முன்னோக்கிச் சென்றது. எனது எண்ணங்கள் மெல்ல பின்னோக்கின.


கடந்த மூன்று மாதங்கள் என்பது என் வாழ்வில் நான் இதுவரை காணாத வசந்த காலம். இனி வரும் காலம் அப்படியொரு சுற்றம் அமையுமா – அது கேள்விக்குறியே. அந்த மூன்று மாதக் காலம் நொடிகளுக்குள் சுருங்கியது. அவர்களை எல்லாம் விட்டு விலக வேண்டிய நிர்பந்தம். விலகும் தருணம் நெஞ்சம் கணக்கிறது. கண்கள் சொட்டு விட முயல்கின்றன. அதை நடித்துக் கட்டுப்படுத்தவே அதிக மனபலம் தேவைப்படுகிறது. “இந்த பாழாய்ப் போன மனசுக்குள்ளே பாசத்தை விதைத்து விட்டானே,” என படைத்தவனைத் தூற்ற தோன்றியது.



பார்வை மட்டும் சாலையில் இருக்க, சிந்தனை இறந்தகாலத்தில் லயித்துக் கொண்டிருந்த்து. பினாங்கு பாயான் லெப்பாஸில் உள்ள ஒரு புகழ்பெற்ற மின்பொருள் உற்பத்தி தொழிற்சாலையில் மூன்று மாத கால பயிற்சி பெற பல்கலைக்கழகத்தின் மூலம் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பிடம் தைப்பிங். நெடுஞ்சாலையில் பயணித்தால் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் தேவைப்படும் வேலைக்குச் செல்ல. உடனே, பினாங்கில் வசிக்கும் சின்னம்மாவின் ஞாபகம் வந்தது.



சுற்று வட்டாரத்தில் வாடகைக்கு அறை கிடைக்குமா என்று விசாரிக்க, சின்னம்மா மகன் பாரி அண்ணனைத் தொடர்பு கொண்டதுதான் குற்றம். அண்ணன் விடாப்பிடியாக அவர்களோடுதான் தங்க வேண்டும் என்று சொல்லி விட்டார். என் அம்மாவும் அவர் தங்கை கோபித்துக் கொள்வார் என்று, என்னை அங்கேயே தங்கச் சொன்னார். என் சுதந்திரம் எல்லாம் போச்சு பெரு மூச்சைவிட்டு சொன்னேன். சின்னம்மாவுக்கு பாரியைத் தவிர இரண்டு பெண்களும் உள்ளனர். மூத்தவர் மாதுளையாள் அக்காள், இளையவள் எனக்குத் தங்கை முறை – மழைநங்கை.



அம்மா வழி உறவுகள் என்றாலும், நான் அவ்வளவு நெருக்கமாக யாரிடமும் இருந்ததில்லை. ஒரே மகன் என்பதால் தனியே வாழ்ந்து பழக்கப்பட்டவன். அவர்கள் வீட்டில் முதல் நாள் அனுபவத்தைப் பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும். எனது மோட்டார் சத்தம் கேட்டதும் அண்ணன், அக்கா, தங்கை, சின்னம்மா என அனைவரும் புன்னகையும் மகிழ்ச்சியும் பொங்க வாசலில் வந்து என்னைக் கட்டித் தழுவி வரவேற்றனர். செயற்கையாக ஒரு புன்னகையை முகத்தில் வரவழைத்துக் கொண்டேன். என் மூட்டை முடிச்சி ஒன்றை மழைநங்கை ஏந்திக்கொண்டு உள்ளே சென்றாள். “பரவாயில்ல வெச்சிடு நானே எடுத்துக்குவேன்” “அடடடா... இதுல என்னா இருக்கு”நங்கை. “நீ உள்ள வாய்யா,” சின்னம்மா.



பயணத்தைப் பற்றி சின்னம்மா விசாரித்தார். பின்னே சமையற்கட்டுக்குள் நுழைந்தார். கேள்வி, கிண்டல், கூத்து, கும்மாளம் என இருந்தனர் அண்ணன், அக்கா மற்றும் நங்கை. முற்றிலும் புதிய சூழல். புதிய மக்கள். மணிக் கணக்கில் அங்கேயே அமர்ந்திருக்க ஏதோ போல இருந்தது. கை உதறியது, சிகரட் பிடிக்க. அடக்கிக் கொண்டேன். ஒவ்வொரு அசைவையும் யோசித்து யோசித்து செய்ய வேண்டியதாயிற்று. புதிய மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சம்தான். “எப்பத்தான் இந்த மூனு மாசம் முடியுமோ,” சலித்துக் கொண்டேன். ஆனால் இன்று, அவர்களை விட்டு எப்படி இருப்பேனோ ஏக்கமாக உள்ளது. அம்மா அப்பாவைப் பிரிந்துப் பல்கலைக்கழகம் சென்றபோது கூட இப்படி கணத்தது இல்லை நெஞ்சம்.



பொதுவாக வேலை பயிற்சி முடிந்து வீடு வர மணி ஐந்து அல்லது ஆறு ஆகிவிடும். சற்று தாமதமாகி விட்டால் போதும்; வரிசையாக தொலைபேசி அழைப்பு வந்த வண்ணம் இருக்கும். அன்றாடம் சின்னம்மா விடியற்காலையிலே எழுந்து விடுவார். வேலைக்குப் போகும் அவர் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி எனக்கும் சேர்த்து சிற்றுண்டி செய்துவிடுவார். சில நேரங்களில் நங்கை எழுந்துக் குறைந்த பட்சம் கொட்டை நீர் பானமாவது கலக்கி வைத்துவிடுவாள். அவர்கள் என் மேல் காட்டிய அக்கறை மெய் சிலிர்க்க வைத்தது.



ஒருநாள் வீட்டில் இறால் சம்பால். பெரியவகை இறால் என்பதால் நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை. வெறும் சம்பாலை மட்டும் சோற்றில் சேர்த்துக் கொண்டேன். இதைக் கண்டு சின்னம்மா வினவ, பெரிய இறால் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என சொன்னேன். அவ்வளவுதான். அவர்களும் இறால் சமைப்பதை அன்றோடு நிறுத்திவிட்டார். இதுபோலவே எனக்குப் பிடிக்காத சில மீன் வகைகளைச் சமைப்பதையும் நிறுத்திவிட்டார். யாரோ ஒருவனுக்காக ஒரு குடும்பமே இப்படி தியாகம் செய்வது சில சமயங்களில் என்னைத் தர்ம சங்கடப் படுத்தியுள்ளது. நானும் அவருக்கு ஒரு பிள்ளையைப் போலத்தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் சின்னம்மா.



எந்த நிமிடத்திலிருந்து அவர்களோடு ஒன்றித்தேன் என சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர்களோடு உறவாடிய ஒவ்வொரு நிமிடமும் சொர்க்கத்தை உணர்த்தியது.
முன்னே செல்லும் வாகனங்கள் மெதுவாகச் செல்லத் தொடங்கின. ஏனென்று பார்க்கையில் சமிக்ஞை சிவப்பு நிறத்திற்கு மாறியிருந்தது. சடார் என மிதித்தேன் பிரேக்கை. கொஞ்சம் தட்டுத் தடுமாறி மொட்டார் வண்டி நின்றது. கீழே விழுவதற்குள் சுதாகரித்துக் கொண்டேன். அப்போது சில வாரங்களுக்கு முன்பு நான் சிக்கிய சாலை விபத்து ஞாபகத்தை எட்டியது.



கூர்மையான வளைவில் வேகமாக சென்று வளைந்ததால், செம்மண்ணில் மோட்டார் சக்கரம் மாட்டிக் கொண்டு நானும் தேய்ந்துக் கொண்டே கவிழ்ந்தேன். சொற்ப காயங்களோடு வீட்டை அடைந்தேன். என் கோலத்தைக் கண்ட சின்னம்மா, பதறிப் போனார். இரவு வேலைக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்த அண்ணன் வேலைக்கு மட்டம். என்னை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே. அரக்க பறக்க சின்னம்மா குளித்துவர, மருந்தகத்திற்கு விரைந்தோம். மருத்துவர் புண்ணின் மேல் சலம் வைக்காமல் இருக்க ஒரு காட்டமான ஸ்ப்ரே பாய்ச்சினார். ஐயோ, சொல்ல முடியாத எரிச்சல். வலியால் துடிக்கும் என்னைக் கண்டு சின்னம்மா கண்ணீர் சொட்டு விட்டார். “எல்லாம் சரியாகிடும், மோட்டரப் பத்தி கவலைப் படாதே, அண்ணன் நாளைக்கு போய் செஞ்சிட்டு வந்திடுவான்,” அவர் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் வலியை மறக்க வைத்தன. அந்த புண் ஆறும் வரை வீட்டில் இன்னொரு முக்கிய உணவும் தடை செய்யப் பட்டிருந்தது - முட்டை.



இப்படி உணவில் மட்டுமின்றி மற்ற செயல்களிலும் கூட என் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்த நவீனமய உலகில் பல குடும்பங்களில் இரவு நேரங்களில் சண்டை சச்சரவு எழுவது தொலைக்காட்சி அலைவரிசைகளால். ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் என இருக்கும். இரவு எட்டு மணி தொடங்கி இந்த சின்னத் திரை நாடகங்களின் அழுகை ஆக்கிரமிப்பு. சின்னம்மா ஒரு சில நாடகங்களுக்கு அடிமை. இருப்பினும், “நீ என்னய்யா பார்க்க போற,”என்று கேட்பார். “பந்து விளையாட்டு” எனப் பட்டெண்று மனம் சொல்ல துடிக்கும். அவர்களுக்கு என்னால் முடிந்த மகிழ்ச்சி, “நீங்க பாருங்கம்மா, எனக்கு எதுன்னாலும் ஓகே”நல்லவன் போல பாசாங்கு. மறுநாள் வேலையிடத்தில் இணயத்தில் ஸ்கோர் தெரிஞ்சிக்கிட்டா போச்சு – என்னைச் சமாதானப் படுத்திக் கொள்வேன்.



வேலை முடிந்து வீடு வந்ததும் அதிக நேரம் செலவிடுவது மழைநங்கயோடுதான். சில நேரங்களில், அண்ணனோடு கால்பந்து விளையாட்டுப் பற்றியும் அக்காவோடு இசையைப்பற்றியும். நங்கையும் நானும் நண்பர்கள் போல பேசிக் கொள்வோம். கேளியும் நையாண்டியுமென மாறி மாறி செய்துக் கொள்வோம். பொது இடங்களில் வழிப் போக்கர்களைப் பார்த்து விமர்சிப்பது, தொலைக்காட்சியில் பார்த்த சம்பவங்களை நினைவிற் கொண்டு சிரிப்பது, அப்படியும் பொழுது போகவில்லையென்றால் நகைச்சுவை நடிகர்களைப் போல பேசிக் கொள்வது என இன்னும் என்னென்னவோ அரட்டை அடிப்போம். அடிக்கடி இதில் அக்காவும் அண்ணனும் இணைந்துக் கொள்வர்.



இதுவரை காணாத என்னை நான் இப்பொழுது காண்கிறேன்; குதூகலத்துடனும் சுறுசுறுப்புடனும். இரண்டு வருடங்களாகச் செதுக்கிய எனது காதலைக்கூட இந்த மூன்று மாதக் காலம் காரணமின்றி மறக்க வைத்தது. தினம் குறைந்தது இருபது குறுஞ்செய்திகளாவது பகிர்ந்துக் கொள்வோம் முன்பு. காலப் போக்கில் அவளது குறுஞ்செய்திக்கு மறுமொழி அனுப்பக்கூட மறந்திருக்கிறேன். இப்படி பாசமான மக்களோடு ஒன்றித்ததால் என்னவோ காதல் கூட இரண்டாம் பட்சமானது. கம்பத்து நண்பர்களிடம் எப்போதாவது தொலைபேசியில் உரையாடுவதுதான். இரவு உணவு அருந்தியதும் புகைப் பிடிக்கும் பழக்கம் அதுவாகவே மறைந்தது.



பன்னிரண்டாவது வாரம் அது. வந்த முதல் வாரமே சொல்லிவிட்டேன், பன்னிரண்டு வாரங்களோடு பயிற்சி முடிந்து விடுமென்று. ஆனால் கால ஓட்டத்தில் அவர்கள் மறந்திருக்கக் கூடும். எப்படி நினைவு படுத்துவது? அன்று திங்கட்கிழமை. வேலை முடிந்து வீடு செல்லும் வழியிலே மேக் டோனல்ட் விரைவுணவு வாங்கிச் சென்றேன். இன்றைக்கு இரவு உணவு என் செலவு என்று சொன்னேன் சின்னம்மாவிடம். எல்லோரும் குடும்பமாக உணவு அருந்த அமர்ந்தோம். அண்ணன் கேட்டார், “ஏன் திடீர்ன்னு கோழியெல்லாம்.” இதுதான் தருணம் “சொல், சொல்” என்றது மனம். அக்கா இடைமறித்து, “கடைசி வாரம் என்பதால....,”என இழுத்தார். சின்னம்மா குறுக்கிட்டு“என்னய்யா கணக்கு செட்டல் பண்ணுறியா?” என்ன சொல்வது தெரியாமல் “அப்படி இல்லம்மா, நான் சந்தோசமா வாங்கித் தரேன்... கூடாதா”சின்ன புன்முறுவலோடு நான் சொன்னேன். சின்னம்மா மௌனமானார்.“அப்ப அடுத்த வாரத்திலிருந்து திரும்பவும் படிக்க போயிடனுமா?” அண்ணன் கேட்டார். ஆமாம் என்று தலையை ஆட்டினேன். “நீ இல்லன்னா எங்களுக்கு போர் அடிக்குமே” மாதுளையாள் அக்கா சொன்னார். மழைநங்கை மட்டும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அதிர்ச்சியோடு என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.



அன்றிலிருந்து அவள் சரியாகப் பேசுவதில்லை என்னிடம். “அண்ணன், அண்ணன்” என்று பின்னாலே வருபவள் நங்கை. என்ன ஆனது. அறையை விட்டு அவள் வெளியே வருவது இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அறைக்குள் சென்றால், படித்துக் கொண்டேதான் இருப்பாள். சரி படிக்கட்டும் என்று வந்து விடுவேன்.



வெள்ளிக்கிழமை அன்று. வேலையிடத்து நண்பர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தேன், சோகத்தோடு. எனது அறைக்குள் நுழைந்தேன். ஒரு வாழ்த்து அட்டை, பிரமாண்டமான கைவண்ணத்தோடு மேசையின் மேல் இருந்தது. ‘வீ மிஸ் யூ’ (நாங்கள் உன்னை நினைத்து ஏங்குகிறோம்) என்று அட்டையின் முதல் பக்கம் எழுதப் பட்டிருந்தது. முழுக்க முழுக்க நங்கையின் கைவேலைப்பாடு. பூரிப்பில் கை நடுங்கியது திறந்து படிக்க. உள்ளே எனது பெயர் சிறு சிறு குச்சிகளால் பொறிக்கப் பட்டிருக்க, காய்ந்த இலைகளிலும் வண்ணத் தாட்களிலும் இதர இடங்கள் அலங்கரிக்கப் பட்டிருந்தன. நிச்சயம் பல நாள் உழைப்பு அதிலே பளிச்சிட்டது. அனைவரது கையோப்பமும் அங்கே இடம் பெற்றிருந்தது.



அட்டையைக் கையில் ஏந்திக் கொண்டு வெளியே வந்தேன். அவர்கள் அனைவருக்கும் எப்படி நன்றி நவிழ்வது என்று புரியவில்லை. நங்கை கண்கள் கணக்க ஒரு கேள்வி கேட்டாள்.
“இனி வர மாட்டிங்கல்ல? என்னோட பேச யாரும் இருக்க மாட்டாங்கல்ல?”
“ஏன் அப்படி சொல்ற, லீவு கிடைச்சா வராமலா போய்டுவேன்?”


பொருட்களை எல்லாம் மூட்டை கட்டினேன். அம்மா, அக்கா மற்றும் அண்ணன் ஆகியோரோடு விடைப் பெற்றுக் கொண்டு இறுதியாக நங்கையிடம் போனேன். அவள் முகம் கொடுத்தே பேசவில்லை. வேறு புறமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தாள். சின்னம்மா அவளைக் கண்டிக்க, “போய்ட்டு வா...........ங்க,” என சொல்லும்போதே அழுகை கொப்பளித்திக் கொண்டு வந்தது அவளுக்கு. அவள் அழ, அம்மா அக்கா இருவரும் சேர்ந்து அழுதனர். எனக்காக அவர்கள் கண்ணீர் சிந்தும்போது அடிவயிற்று பிசைந்தது. ஊற்றெடுத்த கண்ணீரைக் கட்டுப்படுத்தி அங்கிருந்துக் கிளம்பினேன்.




பிரிய மனமில்லை; ஆயினும் கட்டாயம். பாசம் கூட கரைய வைக்கும் என்பதை இன்று உணர்ந்துக் கொண்டேன். இன்னும் அரை மணி நேரத்தில் தைப்பிங் வீடு வந்து விடும். என் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளையாகவே என்னை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? என்னைப் பதப்படுத்திக் கொண்டேன்.



“மலைப்பாதை என்றால் அது கண்டிப்பாக வளைந்து நெளிந்துதான் போகும். வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் கலந்தது. இன்பத்திலிருந்து வரும் சங்கடமும் உண்டு. வாழ்க்கை பயணம் அனுபவம் நிறைந்தது,” என எப்போதோ தாத்தா சொன்னது அப்போது ஒலித்தது. கார்மேகம் வானத்தை மூட, மீண்டும் இருண்டது சாலை. மழைக்கு முன் வீடு சேர வேண்டுமென்று மோட்டார் பிடியை முறுக்கினேன்.




பொருளுணர்வு:

தார் : சாலை அமைப்பில் பயன்படுத்தப்படும் கெட்டியான கருநிற எரித் திரவம் (tar)
மோட்டார் வண்டி : இருசக்கர இயந்திர வண்டி (motorcycle)
சம்பால் : மிளகாயில் செய்யப்படும் உறைப்பு குழம்பு வகை
ஓகே : ஏற்புடையது, பரவாயில்லை (okay / o.k.)
ஸ்கோர் : தேர்ச்சி, மதிப்பெண் (score)
மேக் டோனல்ட் : ஒரு விரைவு உணவகத்தின் பெயர். (Mc Donald’s)
செட்டல் : நிவர்த்தி (settle)
போர் : வெறுமை உணர்வு (bore)
பிரேக் : நிறுத்தும் விசை (brake)
சிகரட் : சுருட்டு, புகைத்தண்டு (cigarette)
ஸ்ப்ரே : காற்றைப் பாய்ச்சும் எளிய கருவி (spray)
கம்பம் : சிற்றூர், கிராமம்