பக்கங்கள்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

வளைவுகளில்லா மலைப்பாதையா


ருண்ட வானம் தேய்ந்துப் போக, மொட்டை வெயில் மண்டையைப் பிளந்தது. பெய்யும் என எதிர்ப்பார்த்த மழை பெய்யவில்லை. வளைந்து நெளிந்த தார் சாலை. அதன் மேல் எனது மோட்டார் வண்டி முன்னோக்கிச் சென்றது. எனது எண்ணங்கள் மெல்ல பின்னோக்கின.


கடந்த மூன்று மாதங்கள் என்பது என் வாழ்வில் நான் இதுவரை காணாத வசந்த காலம். இனி வரும் காலம் அப்படியொரு சுற்றம் அமையுமா – அது கேள்விக்குறியே. அந்த மூன்று மாதக் காலம் நொடிகளுக்குள் சுருங்கியது. அவர்களை எல்லாம் விட்டு விலக வேண்டிய நிர்பந்தம். விலகும் தருணம் நெஞ்சம் கணக்கிறது. கண்கள் சொட்டு விட முயல்கின்றன. அதை நடித்துக் கட்டுப்படுத்தவே அதிக மனபலம் தேவைப்படுகிறது. “இந்த பாழாய்ப் போன மனசுக்குள்ளே பாசத்தை விதைத்து விட்டானே,” என படைத்தவனைத் தூற்ற தோன்றியது.பார்வை மட்டும் சாலையில் இருக்க, சிந்தனை இறந்தகாலத்தில் லயித்துக் கொண்டிருந்த்து. பினாங்கு பாயான் லெப்பாஸில் உள்ள ஒரு புகழ்பெற்ற மின்பொருள் உற்பத்தி தொழிற்சாலையில் மூன்று மாத கால பயிற்சி பெற பல்கலைக்கழகத்தின் மூலம் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பிடம் தைப்பிங். நெடுஞ்சாலையில் பயணித்தால் குறைந்தது இரண்டு மணி நேரங்கள் தேவைப்படும் வேலைக்குச் செல்ல. உடனே, பினாங்கில் வசிக்கும் சின்னம்மாவின் ஞாபகம் வந்தது.சுற்று வட்டாரத்தில் வாடகைக்கு அறை கிடைக்குமா என்று விசாரிக்க, சின்னம்மா மகன் பாரி அண்ணனைத் தொடர்பு கொண்டதுதான் குற்றம். அண்ணன் விடாப்பிடியாக அவர்களோடுதான் தங்க வேண்டும் என்று சொல்லி விட்டார். என் அம்மாவும் அவர் தங்கை கோபித்துக் கொள்வார் என்று, என்னை அங்கேயே தங்கச் சொன்னார். என் சுதந்திரம் எல்லாம் போச்சு பெரு மூச்சைவிட்டு சொன்னேன். சின்னம்மாவுக்கு பாரியைத் தவிர இரண்டு பெண்களும் உள்ளனர். மூத்தவர் மாதுளையாள் அக்காள், இளையவள் எனக்குத் தங்கை முறை – மழைநங்கை.அம்மா வழி உறவுகள் என்றாலும், நான் அவ்வளவு நெருக்கமாக யாரிடமும் இருந்ததில்லை. ஒரே மகன் என்பதால் தனியே வாழ்ந்து பழக்கப்பட்டவன். அவர்கள் வீட்டில் முதல் நாள் அனுபவத்தைப் பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும். எனது மோட்டார் சத்தம் கேட்டதும் அண்ணன், அக்கா, தங்கை, சின்னம்மா என அனைவரும் புன்னகையும் மகிழ்ச்சியும் பொங்க வாசலில் வந்து என்னைக் கட்டித் தழுவி வரவேற்றனர். செயற்கையாக ஒரு புன்னகையை முகத்தில் வரவழைத்துக் கொண்டேன். என் மூட்டை முடிச்சி ஒன்றை மழைநங்கை ஏந்திக்கொண்டு உள்ளே சென்றாள். “பரவாயில்ல வெச்சிடு நானே எடுத்துக்குவேன்” “அடடடா... இதுல என்னா இருக்கு”நங்கை. “நீ உள்ள வாய்யா,” சின்னம்மா.பயணத்தைப் பற்றி சின்னம்மா விசாரித்தார். பின்னே சமையற்கட்டுக்குள் நுழைந்தார். கேள்வி, கிண்டல், கூத்து, கும்மாளம் என இருந்தனர் அண்ணன், அக்கா மற்றும் நங்கை. முற்றிலும் புதிய சூழல். புதிய மக்கள். மணிக் கணக்கில் அங்கேயே அமர்ந்திருக்க ஏதோ போல இருந்தது. கை உதறியது, சிகரட் பிடிக்க. அடக்கிக் கொண்டேன். ஒவ்வொரு அசைவையும் யோசித்து யோசித்து செய்ய வேண்டியதாயிற்று. புதிய மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற அச்சம்தான். “எப்பத்தான் இந்த மூனு மாசம் முடியுமோ,” சலித்துக் கொண்டேன். ஆனால் இன்று, அவர்களை விட்டு எப்படி இருப்பேனோ ஏக்கமாக உள்ளது. அம்மா அப்பாவைப் பிரிந்துப் பல்கலைக்கழகம் சென்றபோது கூட இப்படி கணத்தது இல்லை நெஞ்சம்.பொதுவாக வேலை பயிற்சி முடிந்து வீடு வர மணி ஐந்து அல்லது ஆறு ஆகிவிடும். சற்று தாமதமாகி விட்டால் போதும்; வரிசையாக தொலைபேசி அழைப்பு வந்த வண்ணம் இருக்கும். அன்றாடம் சின்னம்மா விடியற்காலையிலே எழுந்து விடுவார். வேலைக்குப் போகும் அவர் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி எனக்கும் சேர்த்து சிற்றுண்டி செய்துவிடுவார். சில நேரங்களில் நங்கை எழுந்துக் குறைந்த பட்சம் கொட்டை நீர் பானமாவது கலக்கி வைத்துவிடுவாள். அவர்கள் என் மேல் காட்டிய அக்கறை மெய் சிலிர்க்க வைத்தது.ஒருநாள் வீட்டில் இறால் சம்பால். பெரியவகை இறால் என்பதால் நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை. வெறும் சம்பாலை மட்டும் சோற்றில் சேர்த்துக் கொண்டேன். இதைக் கண்டு சின்னம்மா வினவ, பெரிய இறால் எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என சொன்னேன். அவ்வளவுதான். அவர்களும் இறால் சமைப்பதை அன்றோடு நிறுத்திவிட்டார். இதுபோலவே எனக்குப் பிடிக்காத சில மீன் வகைகளைச் சமைப்பதையும் நிறுத்திவிட்டார். யாரோ ஒருவனுக்காக ஒரு குடும்பமே இப்படி தியாகம் செய்வது சில சமயங்களில் என்னைத் தர்ம சங்கடப் படுத்தியுள்ளது. நானும் அவருக்கு ஒரு பிள்ளையைப் போலத்தான் என்று சொல்லாமல் சொல்லி விட்டார் சின்னம்மா.எந்த நிமிடத்திலிருந்து அவர்களோடு ஒன்றித்தேன் என சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர்களோடு உறவாடிய ஒவ்வொரு நிமிடமும் சொர்க்கத்தை உணர்த்தியது.
முன்னே செல்லும் வாகனங்கள் மெதுவாகச் செல்லத் தொடங்கின. ஏனென்று பார்க்கையில் சமிக்ஞை சிவப்பு நிறத்திற்கு மாறியிருந்தது. சடார் என மிதித்தேன் பிரேக்கை. கொஞ்சம் தட்டுத் தடுமாறி மொட்டார் வண்டி நின்றது. கீழே விழுவதற்குள் சுதாகரித்துக் கொண்டேன். அப்போது சில வாரங்களுக்கு முன்பு நான் சிக்கிய சாலை விபத்து ஞாபகத்தை எட்டியது.கூர்மையான வளைவில் வேகமாக சென்று வளைந்ததால், செம்மண்ணில் மோட்டார் சக்கரம் மாட்டிக் கொண்டு நானும் தேய்ந்துக் கொண்டே கவிழ்ந்தேன். சொற்ப காயங்களோடு வீட்டை அடைந்தேன். என் கோலத்தைக் கண்ட சின்னம்மா, பதறிப் போனார். இரவு வேலைக்கு ஆயுத்தமாகிக் கொண்டிருந்த அண்ணன் வேலைக்கு மட்டம். என்னை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமே. அரக்க பறக்க சின்னம்மா குளித்துவர, மருந்தகத்திற்கு விரைந்தோம். மருத்துவர் புண்ணின் மேல் சலம் வைக்காமல் இருக்க ஒரு காட்டமான ஸ்ப்ரே பாய்ச்சினார். ஐயோ, சொல்ல முடியாத எரிச்சல். வலியால் துடிக்கும் என்னைக் கண்டு சின்னம்மா கண்ணீர் சொட்டு விட்டார். “எல்லாம் சரியாகிடும், மோட்டரப் பத்தி கவலைப் படாதே, அண்ணன் நாளைக்கு போய் செஞ்சிட்டு வந்திடுவான்,” அவர் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் வலியை மறக்க வைத்தன. அந்த புண் ஆறும் வரை வீட்டில் இன்னொரு முக்கிய உணவும் தடை செய்யப் பட்டிருந்தது - முட்டை.இப்படி உணவில் மட்டுமின்றி மற்ற செயல்களிலும் கூட என் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். இந்த நவீனமய உலகில் பல குடும்பங்களில் இரவு நேரங்களில் சண்டை சச்சரவு எழுவது தொலைக்காட்சி அலைவரிசைகளால். ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் என இருக்கும். இரவு எட்டு மணி தொடங்கி இந்த சின்னத் திரை நாடகங்களின் அழுகை ஆக்கிரமிப்பு. சின்னம்மா ஒரு சில நாடகங்களுக்கு அடிமை. இருப்பினும், “நீ என்னய்யா பார்க்க போற,”என்று கேட்பார். “பந்து விளையாட்டு” எனப் பட்டெண்று மனம் சொல்ல துடிக்கும். அவர்களுக்கு என்னால் முடிந்த மகிழ்ச்சி, “நீங்க பாருங்கம்மா, எனக்கு எதுன்னாலும் ஓகே”நல்லவன் போல பாசாங்கு. மறுநாள் வேலையிடத்தில் இணயத்தில் ஸ்கோர் தெரிஞ்சிக்கிட்டா போச்சு – என்னைச் சமாதானப் படுத்திக் கொள்வேன்.வேலை முடிந்து வீடு வந்ததும் அதிக நேரம் செலவிடுவது மழைநங்கயோடுதான். சில நேரங்களில், அண்ணனோடு கால்பந்து விளையாட்டுப் பற்றியும் அக்காவோடு இசையைப்பற்றியும். நங்கையும் நானும் நண்பர்கள் போல பேசிக் கொள்வோம். கேளியும் நையாண்டியுமென மாறி மாறி செய்துக் கொள்வோம். பொது இடங்களில் வழிப் போக்கர்களைப் பார்த்து விமர்சிப்பது, தொலைக்காட்சியில் பார்த்த சம்பவங்களை நினைவிற் கொண்டு சிரிப்பது, அப்படியும் பொழுது போகவில்லையென்றால் நகைச்சுவை நடிகர்களைப் போல பேசிக் கொள்வது என இன்னும் என்னென்னவோ அரட்டை அடிப்போம். அடிக்கடி இதில் அக்காவும் அண்ணனும் இணைந்துக் கொள்வர்.இதுவரை காணாத என்னை நான் இப்பொழுது காண்கிறேன்; குதூகலத்துடனும் சுறுசுறுப்புடனும். இரண்டு வருடங்களாகச் செதுக்கிய எனது காதலைக்கூட இந்த மூன்று மாதக் காலம் காரணமின்றி மறக்க வைத்தது. தினம் குறைந்தது இருபது குறுஞ்செய்திகளாவது பகிர்ந்துக் கொள்வோம் முன்பு. காலப் போக்கில் அவளது குறுஞ்செய்திக்கு மறுமொழி அனுப்பக்கூட மறந்திருக்கிறேன். இப்படி பாசமான மக்களோடு ஒன்றித்ததால் என்னவோ காதல் கூட இரண்டாம் பட்சமானது. கம்பத்து நண்பர்களிடம் எப்போதாவது தொலைபேசியில் உரையாடுவதுதான். இரவு உணவு அருந்தியதும் புகைப் பிடிக்கும் பழக்கம் அதுவாகவே மறைந்தது.பன்னிரண்டாவது வாரம் அது. வந்த முதல் வாரமே சொல்லிவிட்டேன், பன்னிரண்டு வாரங்களோடு பயிற்சி முடிந்து விடுமென்று. ஆனால் கால ஓட்டத்தில் அவர்கள் மறந்திருக்கக் கூடும். எப்படி நினைவு படுத்துவது? அன்று திங்கட்கிழமை. வேலை முடிந்து வீடு செல்லும் வழியிலே மேக் டோனல்ட் விரைவுணவு வாங்கிச் சென்றேன். இன்றைக்கு இரவு உணவு என் செலவு என்று சொன்னேன் சின்னம்மாவிடம். எல்லோரும் குடும்பமாக உணவு அருந்த அமர்ந்தோம். அண்ணன் கேட்டார், “ஏன் திடீர்ன்னு கோழியெல்லாம்.” இதுதான் தருணம் “சொல், சொல்” என்றது மனம். அக்கா இடைமறித்து, “கடைசி வாரம் என்பதால....,”என இழுத்தார். சின்னம்மா குறுக்கிட்டு“என்னய்யா கணக்கு செட்டல் பண்ணுறியா?” என்ன சொல்வது தெரியாமல் “அப்படி இல்லம்மா, நான் சந்தோசமா வாங்கித் தரேன்... கூடாதா”சின்ன புன்முறுவலோடு நான் சொன்னேன். சின்னம்மா மௌனமானார்.“அப்ப அடுத்த வாரத்திலிருந்து திரும்பவும் படிக்க போயிடனுமா?” அண்ணன் கேட்டார். ஆமாம் என்று தலையை ஆட்டினேன். “நீ இல்லன்னா எங்களுக்கு போர் அடிக்குமே” மாதுளையாள் அக்கா சொன்னார். மழைநங்கை மட்டும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அதிர்ச்சியோடு என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.அன்றிலிருந்து அவள் சரியாகப் பேசுவதில்லை என்னிடம். “அண்ணன், அண்ணன்” என்று பின்னாலே வருபவள் நங்கை. என்ன ஆனது. அறையை விட்டு அவள் வெளியே வருவது இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அறைக்குள் சென்றால், படித்துக் கொண்டேதான் இருப்பாள். சரி படிக்கட்டும் என்று வந்து விடுவேன்.வெள்ளிக்கிழமை அன்று. வேலையிடத்து நண்பர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்தேன், சோகத்தோடு. எனது அறைக்குள் நுழைந்தேன். ஒரு வாழ்த்து அட்டை, பிரமாண்டமான கைவண்ணத்தோடு மேசையின் மேல் இருந்தது. ‘வீ மிஸ் யூ’ (நாங்கள் உன்னை நினைத்து ஏங்குகிறோம்) என்று அட்டையின் முதல் பக்கம் எழுதப் பட்டிருந்தது. முழுக்க முழுக்க நங்கையின் கைவேலைப்பாடு. பூரிப்பில் கை நடுங்கியது திறந்து படிக்க. உள்ளே எனது பெயர் சிறு சிறு குச்சிகளால் பொறிக்கப் பட்டிருக்க, காய்ந்த இலைகளிலும் வண்ணத் தாட்களிலும் இதர இடங்கள் அலங்கரிக்கப் பட்டிருந்தன. நிச்சயம் பல நாள் உழைப்பு அதிலே பளிச்சிட்டது. அனைவரது கையோப்பமும் அங்கே இடம் பெற்றிருந்தது.அட்டையைக் கையில் ஏந்திக் கொண்டு வெளியே வந்தேன். அவர்கள் அனைவருக்கும் எப்படி நன்றி நவிழ்வது என்று புரியவில்லை. நங்கை கண்கள் கணக்க ஒரு கேள்வி கேட்டாள்.
“இனி வர மாட்டிங்கல்ல? என்னோட பேச யாரும் இருக்க மாட்டாங்கல்ல?”
“ஏன் அப்படி சொல்ற, லீவு கிடைச்சா வராமலா போய்டுவேன்?”


பொருட்களை எல்லாம் மூட்டை கட்டினேன். அம்மா, அக்கா மற்றும் அண்ணன் ஆகியோரோடு விடைப் பெற்றுக் கொண்டு இறுதியாக நங்கையிடம் போனேன். அவள் முகம் கொடுத்தே பேசவில்லை. வேறு புறமாக முகத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பேசாமல் இருந்தாள். சின்னம்மா அவளைக் கண்டிக்க, “போய்ட்டு வா...........ங்க,” என சொல்லும்போதே அழுகை கொப்பளித்திக் கொண்டு வந்தது அவளுக்கு. அவள் அழ, அம்மா அக்கா இருவரும் சேர்ந்து அழுதனர். எனக்காக அவர்கள் கண்ணீர் சிந்தும்போது அடிவயிற்று பிசைந்தது. ஊற்றெடுத்த கண்ணீரைக் கட்டுப்படுத்தி அங்கிருந்துக் கிளம்பினேன்.
பிரிய மனமில்லை; ஆயினும் கட்டாயம். பாசம் கூட கரைய வைக்கும் என்பதை இன்று உணர்ந்துக் கொண்டேன். இன்னும் அரை மணி நேரத்தில் தைப்பிங் வீடு வந்து விடும். என் பெற்றோர்களுக்கு அவர்கள் பிள்ளையாகவே என்னை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா? என்னைப் பதப்படுத்திக் கொண்டேன்.“மலைப்பாதை என்றால் அது கண்டிப்பாக வளைந்து நெளிந்துதான் போகும். வாழ்க்கை என்பது இன்பம் துன்பம் கலந்தது. இன்பத்திலிருந்து வரும் சங்கடமும் உண்டு. வாழ்க்கை பயணம் அனுபவம் நிறைந்தது,” என எப்போதோ தாத்தா சொன்னது அப்போது ஒலித்தது. கார்மேகம் வானத்தை மூட, மீண்டும் இருண்டது சாலை. மழைக்கு முன் வீடு சேர வேண்டுமென்று மோட்டார் பிடியை முறுக்கினேன்.
பொருளுணர்வு:

தார் : சாலை அமைப்பில் பயன்படுத்தப்படும் கெட்டியான கருநிற எரித் திரவம் (tar)
மோட்டார் வண்டி : இருசக்கர இயந்திர வண்டி (motorcycle)
சம்பால் : மிளகாயில் செய்யப்படும் உறைப்பு குழம்பு வகை
ஓகே : ஏற்புடையது, பரவாயில்லை (okay / o.k.)
ஸ்கோர் : தேர்ச்சி, மதிப்பெண் (score)
மேக் டோனல்ட் : ஒரு விரைவு உணவகத்தின் பெயர். (Mc Donald’s)
செட்டல் : நிவர்த்தி (settle)
போர் : வெறுமை உணர்வு (bore)
பிரேக் : நிறுத்தும் விசை (brake)
சிகரட் : சுருட்டு, புகைத்தண்டு (cigarette)
ஸ்ப்ரே : காற்றைப் பாய்ச்சும் எளிய கருவி (spray)
கம்பம் : சிற்றூர், கிராமம்

6 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

வணக்கம்,

வலைப்பூ பயணத்தைத் தொடங்கிவிட்ட முடிவிலானுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இப்பொழுது நீங்களும் மலேசியத் தமிழ் வலைப்பதிவர் குழுமியத்தில் அதிகாரப்பூர்வ உறுப்பினர்.. :)

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

ஆனந்தன் அசத்திட்டிங்க... வாழ்த்துக்கள்...

பின்னூட்டில் காணும் எழுத்துரு பரிசோதனையை நீக்கிவிட்டால் பின்னூட்டம் போட இலகுவாக இருக்கும்.. :-)

Unknown சொன்னது…

என் கண்கள் கூட குளமானது படித்து..

அனுபவித்த உங்களுக்கு வலி இருக்கதான் செய்யும்.

A N A N T H E N சொன்னது…

//வலைப்பூ பயணத்தைத் தொடங்கிவிட்ட முடிவிலானுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். இப்பொழுது நீங்களும் மலேசியத் தமிழ் வலைப்பதிவர் குழுமியத்தில் அதிகாரப்பூர்வ உறுப்பினர்.. :)//

- என்னைக் குழுமத்தில் ஏகமனதாக ஏற்றுக் கொண்ட, எங்கள் தலை, மன்னாதி மன்னன், அரண் காக்கும் சிங்கம் சதீசு அவர்களுக்கு எனது தாழ்மையான நன்றியை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்ள வேண்டுகிறேன்... கட்சி பணி இருப்பதால் இத்தோடு உரையை முடித்துக் கொள்கிறேன்... வாழ்க தமிழ் :D

A N A N T H E N சொன்னது…

//ஆனந்தன் அசத்திட்டிங்க... வாழ்த்துக்கள்...

பின்னூட்டில் காணும் எழுத்துரு பரிசோதனையை நீக்கிவிட்டால் பின்னூட்டம் போட இலகுவாக இருக்கும்.. :-)//

- உங்கள் மேலான கருத்துக்கும் ஆலோசனைக்கும் தலை வணங்குகிறேன்
நன்றி

A N A N T H E N சொன்னது…

//என் கண்கள் கூட குளமானது படித்து..

அனுபவித்த உங்களுக்கு வலி இருக்கதான் செய்யும்.//

- ஐயா பாஸ்கி, உங்களுக்கு ரொம்பவே இளகிய மனசுதான்
நன்றி

இது கொஞ்சம் உண்மை, மீதி கற்பனையில் மலர்ந்த கதையாக்கும்

இப்படி வம்புல மாட்டி விடுரீங்களே
இ..இ..இ...இ.....