பக்கங்கள்

புதன், 28 ஜனவரி, 2009

இரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்புஇரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்பு


25 ஜனவரி 2009, ஞாயிறு. ஞாயிறைத்தான் தெளிவாகக் காண முடியவில்லை. வானம் மப்பும் (அதற்கு யார் ஊற்றிக் கொடுத்ததோ) மந்தாரமுமாய் சிறுசிறு தூறல்களைச் சிந்திக் கொண்டிருந்தது. அதென்ன மாயமோ மர்மமோ தெரியல, பதிவர் சந்திப்புன்னா, மழையும் அழையா விருந்தினராய் வந்திடுது.

மதியம் இரண்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, மூன்றுக்குத் துவங்கியது. அடிச்சி புடிச்சி ரெண்டு மணிக்கெல்லாம் ஏ.ஆர்.ரகுமான் உணவகத்துக்குப் போயிட்டேன். அங்க, விக்னேஷ் சொன்ன தமிழியல் நடுவம் இருக்கிற அறிகுறி ஏதும் தெரியல. சுத்தி சுத்தி மோட்டர்ல ஊர்வலம் அடிச்சி, அப்புறமா விக்னேசுக்குப் போன் பண்ணேன். அவர் சொன்னாரு, “நீங்களாவாது ஏ.ஆர்.ரகுமான் கடை வரைக்கும் போயிட்டீங்க, நாங்க இன்னமும் ஏ.ஆர்.ரகுமான் கடையைய தேடிட்டு இருக்கோம்.” இதுக்கு ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே... என்ன அது?

சரின்னுட்டு பைக்க ஓரமா நிப்பாட்டிட்டு அவங்களுக்குக் காத்திருந்தேன். பாரிட் புந்தார் (பேராக் மாநிலம்) நகரத்துல சீனப் பெருநாளுக்கான எந்த அலட்டலும் பாதிப்பும் தெரியல. ஒருவேளை அங்கே சீனர்கள் அதிகம் இல்லையோ என்னவோ.

இதற்கிடையில், கடையில் தமிழர்கள் கொஞ்ச பேரு கூட்டமா அமர்ந்து உணவருந்திக்கிட்டு இருந்தாங்க. அவங்க இவங்களா இருக்குமோ? போய் பேச்சு கொடுக்கலாமா? இவங்க அவங்களா இல்லாட்டி? அவங்கக்கிட்ட நீங்க அவங்க தானேன்னு கேட்டு அவங்க நீங்க எவுங்கள அவங்களானு கேட்குறிங்கன்னு கேட்டு குழப்பிட்டா? இப்படி தெளிவாக ஆய்ந்து, சிந்தித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன...? மனம் படர் தாமரையாய் விரிந்தது, சிந்தித்த மூளையை மெச்சியது.

பார்வை எதிரே வந்த மகிழுந்தின் மீது பாய்ந்தது. நான்கு பேர், உள்ளிருந்து விக்னேஷ் கையசைத்தார். அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து உணவகத்தின் உள் வரவேற்பு நடந்தது. தரை சிவப்பு நிறமுங்க. விக்னேஷ், து.பவனேஸ்வரி, குமரன், மற்றும் இன்னொரு புதிய நண்பர் வந்திறங்கினர்.

முன்னம் கடையினுள் பார்த்த தமிழ் அன்பர்கள், சந்திப்புக்காக வந்தவர்களே. தெளிவாகச் சொன்னால் – ‘அவங்க’த்தான். மதிய நேரம் இல்லையா, பசிக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தனர். நான் வீட்டிலேயே போதுமெனும் அளவுக்கு நிரப்பியதால், அங்கே சாப்பிடவில்லை. து.பவனேஸ் உண்ணாவிரதம் (அரசியல் நோக்கான்னு தெரியல). கிட்டிய சில நிமிடங்களில்கூட ஏதோ ஒரு நூலை வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டிருந்தார். படிக்கிற புள்ளைங்க.

அனைவரும் உண்டு மகிழும் வரை காத்திருந்தோம். அப்போது உணவருந்திய நம் பதிவர் நண்பர்களின் கட்டணச் சீட்டை ஒருவர் மர்மமாகச் சேகரித்து தாமே செலுத்துவதாக உணவக ஊழியரிடம் கிசிகிசுத்தார். அவர் வேறு யாரும் அல்லர், கோவி. மதிவரன் தான். கோவி நீங்க நிஜமாவே ரொம்ம்ம்ம்ப ரொம்ப நல்லவருங்க.

ஏற்கனவே சிலர் வந்திருக்க, மேலும் ஒரு சிலர் வந்தவுடன் சுப.நற்குணனின் ஆசியால் தமிழியல் நடுவத்துக்கு விரைந்தோம். உணவகத்தை அடுத்து இரண்டு கடைகள் தாண்டி, மூன்றாவது மாடியில் அந்த அறை.

வளமையான மேசை, நாற்காலி, குளிரூட்டி, ஒளிப்பெருக்கித் திரை என அமர்க்களமாக இருந்தது அந்த அறை. திரும்பும் திசை எல்லாம் ஆளுயர சுவரொட்டிகள். திருவள்ளுவரும் வல்லளாரும் கம்பீரமாக ஆங்காங்கே பொன்மொழிகளோடு வீற்றிருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு (ஒலிப்பதிவு வடிவில்) நிகழ்வு தொடங்கியது.

“கும்பிடப் போன தெய்வம்......“ என்ற ஒரு சினிமா பாடலில், முதலில் மெதுவாக ஆரம்பமாகி, “என்னடா இழுவ” என்ற மிரட்டலுக்குப் பிறகு, விறுவிறுப்பாக பாடல் தொடரும் இல்லையா? அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, ஓரிரு செய்யுள்கள் நிறுத்தி நிதானித்து வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டி ‘தொபக்கட்டி’யென சரிந்து விழுந்து கலவரத்தை ஏற்படுத்த, தமிழ்த்தாய் வாழ்த்தும் சூடு பிடித்து விறுவிறுப்புடன் இசைந்தது. (எதுக்கு எத முடிச்சி போடுறதுன்னு விவஸ்த இல்ல – அப்படின்னு நீங்க திட்டுறது காதுல விழுது, மனசுல பட்டத சொன்னேன், அவ்வளவுதான்....) எழுச்சியான வரிகள், ஆர்ப்பாட்டம் இல்லாத இசை. நண்பர்கள் சிலர் பாட்டோடு சேர்ந்து முணுமுணுத்தனர். இதற்கு முன் இப்பாடலைக் கேட்டதாய் ஞாபகம் இல்லை, ஏற்பாட்டு குழு இந்தப் பாடலை இணையத்தில் எப்படி பெறுவது என சொன்னால் நலம்.

அவைத் தலைவராய் கி.விக்கினேசு பொறுப்பேற்றி இருந்தார். நான் இதை சொல்லியே ஆகனும் (உபயம்: ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா) - கி.விக்கினேசு வேறு, விக்னேஷ்வரன் அடைக்கலம் வேறு. கி.விக்கினேசுவும் ஒரு பதிவு எழுதி வருகிறார். கவிதை பிரியர். அவர் பேசும்பொழுது மலேசிய செய்தி வாசிப்பு புகழ் பாண்டிதுரையின் தமிழ் உச்சரிப்பு பாணி ரொம்பவே எட்டிப்பார்த்தது. அழுத்த திருத்தமாக. முக சாயலும் லேசாக சந்தேகத்தைக் கிளப்ப, நிகழ்ச்சி முடியும் தருவாயில், அருகே சென்று கேட்டேன், நீங்க பாண்டிதுரையின் ரசிகரா என்று.... “ஆம்” என்று சொல்லி இருந்தால், உங்களுக்கு அவர் சொந்தமா என்று புரளியைக் கிளப்பி இருக்கலாம். சிரித்துக் கொண்டே அப்படி எல்லாம் இல்லை என சொல்லி நழுவி விட்டார். அடுத்த முறை பேட்டி எடுத்திட வேண்டியதுதான்.

வரவேற்புரை வழங்கியவர், திரு சுப. நற்குணன். நிறைய செய்திகளையும், கருத்துகளையும் பக்குவப்பட்ட பேச்சாளர் பாணியில் பகிர்ந்துக் கொண்டார். வலைப்பூக்களுக்கு சிலர் வைத்துள்ள வேடிக்கையான அல்லது காலித்தனமான பெயர்களைச் சுட்டி வந்திருந்த செம்பருத்தி இதழின் ஒரு கட்டுரையைப் படித்துக் காட்டினார். சிரிப்பலை பொங்கியது.

தமிழ்ப்பதிவர்களின் வலைப்பதிவுகளைச் சுமந்து பவர்பாயிண்ட் படைப்பு ஒன்று கணினித்திரையில் காட்டப்பட்டது. அதைச் சேகரித்தமைக்கும், ஒவ்வொரு பதிவுக்கும் கவிதையான அறிமுகத் தலைப்பு இட்டமைக்கும் நிச்சயம் ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்டியே தீரவேண்டும்.

பிறகு வழக்கம் போல அறிமுகச் சுற்று. ஒருவர் பின் ஒருவராக அறிமுகம். ஏறக்குறைய முப்பது பேர் கொண்ட கூட்டம். பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர் கல்லூரி மாணாக்கர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசு அதிகாரிகள்/ஊழியர்கள், பொது சேவையாளர்கள், தனியார் ஊழியர்கள் என பல தரப்பட்ட பதிவர்களும், பதிவ எண்ணம் கொண்டிருந்தோரும் அதில் அடங்குவர். போம்பா ரவியின் ஆய்வுக் கட்டுரை, தமிழ்மாறனின் குழந்தைகளுக்கான வலைப்பூ, இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முன் கருத்தை மட்டுறத்த வேண்டுமா என்ற பல ஐயங்களும், கேள்விகளும் வெளிக்கொணரப் பட்டன. (குறிப்பெடுக்க இயலவில்லை, எல்லார் பேசியதையும் நினைவில் வைக்க முடியவில்லை, வருந்துகிறேன்)

சிறப்புரை ஆற்றியவர் “மலேசிய இன்று” சி.ம.இளந்தமிழ். அப்பப்பா, என்ன தன்னடக்கம். இயன்றவரை தூய தமிழில் தகவல் தொழில்நுட்பத்தை அவர் பேச முற்பட்டது போற்றுதலுக்கு உரியது. பல விசயங்களைத் தடையின்றி மறைவின்றி பகிர்ந்துக் கொண்டார்.

விக்னேஷ்வரன் முந்தைய சந்திப்பின் மணித்துளிகளைப் பகிர்ந்துக்கொண்டார். உள்ளூர் நாளிதழில் தனக்கு நடந்த கசப்பான சம்பவத்தைச் சொன்னார். இணைய ஊடகத்தின்பால் அச்சு ஊடகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைக் கோடி காட்டினார்.

பிறகு விக்னேஷ்வரன் அடைக்கலம் சில நிமிட ஆசானாக வேடம் பூண்டார்; கையில் பிரம்பு தான் இல்லை. புதிதாய் வலைப்பதிவு துவங்க எண்ணும் அன்பர்களுக்கு வழிகாட்டினார்.

(நன்றி: புகைப்படம் - மலேசிய இன்று)


பிறகு சிறு அளவளாவல். சிரித்த முகத்தோடு முடிவுரை வழங்கியவர் ரொம்ப நல்லவர் - கோவி மதிவரன். திருக்குறள், செய்யுள் என அவரது உரை மிளிர்ந்தது. இவரது வலைப் பதிவில் கேள்வி அங்கம் இருக்கிறதாம். நண்பர்களே, கேள்வி இருந்தால் உடனே இவரை நாடுவோம். (விவேக் கேட்பது போன்ற ‘தாஸ்’ கேள்விகள் கேட்பதாயினும் கோவி கோவிக்காமல் பதில் சொல்லுவார்)

பிறகு விடை பெறும் நேரம். சுப நற்குணன் அனைவருக்கும் தமிழ் நாட்காட்டியையும், ‘நாள் வழிபாடு’ என்னும் கையடக்க நூலையும் அன்பளிப்பாக அளித்தார். அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டேன்.

து.பவனேஸ் அந்த கவிதாவைக் கூட்டி வரவே இல்லை, கேட்டதுக்கு அவரது தோள்பைக்குள்ளே இருப்பதாய் சொல்லி ஏமாற்றி விட்டார். விக்னேஷ் அடைக்கலத்திடம் இம்முறை அதிகமாகப் பேச முடியவில்லை. சென்ற முறை சந்தித்த பதிவ நண்பர்கள் டாக்டர் சிந்தோக், மு.வேலன், இனியவள் புனிதா, கவிஞர் பிரான்சிஸ், மூர்த்தி முதலியோர் மிஸ்ஸிங். விவேகானந்தர் சதீசு, தேடுபவன், மைஃப்ரண்ட் அனுராதா, ஆய்தன் போன்றோரை இம்முறையும் காண முடியவில்லை.

(எனது கட்டுரையில் ஏதும் அங்கம் அல்லது கருத்து விடுபட்டிருப்பின் அது எனது ஞாபக மறதியே தவிர, இருட்டடிப்போ அல்லது நுண்ணரசியலோ அல்ல.)

மேலும் விபரம் அறிய ஏனைய நண்பர்களின் வலைப்பதிவையும் வலம் வரவும்.

இந்த கட்டுரையைப் பொறுமையுடன் வாசித்தவரா நீங்கள்? அப்படியானால், உடனே கீழே ஒரு மறுமொழி இட்டு உங்கள் வருகையை அம்பலப் படுத்துங்கள்.

14 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சூப்பர்ப்பு... அசத்திட்டேல்...

A N A N T H E N சொன்னது…

VIKNESHWARAN கூறியது...
//சூப்பர்ப்பு... அசத்திட்டேல்...//
எல்லாம் உங்க ஆசி! :D

சுப.நற்குணன்,மலேசியா. சொன்னது…

சந்திப்புக்கு வராதவர்களுக்கும் வந்தது போன்றதொரு பட்டறிவை ஏற்படுத்திவிட்டீர் ஐயா..!

நல்ல தொகுப்பு. அருமையான வருணனை.

அங்குப் பேசிய செய்திகளை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம். வராத நண்பர்களுக்கும் அது போய் சேர்ந்திருக்கும்.

தேவன் மாயம் சொன்னது…

வாழ்த்துக்கள்
நல்ல தொகுப்பு. அருமையான வருணனை.
தேவா..

பெயரில்லா சொன்னது…

யதார்த்த இலக்கியம் இதுதானோ!
நகைச்சுவையான நடையழகு,
நினைவில் நிற்கும் நீள் தொகுப்பு.

நிகழ்வில் கலந்து கொண்ட
மு.நாகராஜன்.

சி தயாளன் சொன்னது…

அட்டகாசமா தமிழ் தாய் வாழ்த்து என்றெல்லாம் கலக்கியிருக்கிறியள்..வாழ்த்துகள்...

//“நீங்களாவாது ஏ.ஆர்.ரகுமான் கடை வரைக்கும் போயிட்டீங்க, நாங்க இன்னமும் ஏ.ஆர்.ரகுமான் கடையைய தேடிட்டு இருக்கோம்.” இதுக்கு ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே... என்ன அது?
//

ஹாஹாஹ்ஹா...

A N A N T H E N சொன்னது…

//சந்திப்புக்கு வராதவர்களுக்கும் வந்தது போன்றதொரு பட்டறிவை ஏற்படுத்திவிட்டீர் ஐயா..!//
அப்படியா? நன்றி ஐயா

//வாழ்த்துக்கள்//
நன்றிங்க தேவா

//யதார்த்த இலக்கியம் இதுதானோ!
நகைச்சுவையான நடையழகு,
நினைவில் நிற்கும் நீள் தொகுப்பு.

நிகழ்வில் கலந்து கொண்ட
மு.நாகராஜன்.//
நன்றி மு.நாகராஜன், சந்திப்ப பற்றி நீங்க எழுதலையா?

//கலக்கியிருக்கிறியள்..வாழ்த்துகள்...//
நன்றி டொன் லி. இந்த வாழ்த்து ஏற்பட்டு குழுவைச் சாரட்டும்


//ஹாஹாஹ்ஹா...//
இத்தனைச் சுருக்கமாக ஒரு பழமொழியா? பேஷ் பேஷ்

குமரன் மாரிமுத்து சொன்னது…

மிகச் சிறப்பானதொரு செய்தியை வெளுத்து கட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

ivalo alaga eluthi irukkinga.... good job. keep up the word.


p/s: i laughed maximum

A N A N T H E N சொன்னது…

//மிகச் சிறப்பானதொரு செய்தியை வெளுத்து கட்டியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.//

நன்றி குமரன்... நீங்க எப்போ சந்திப்ப பத்தி எழுதப் போறிங்க?

சந்திப்பு முடிஞ்சதும் கால்ல சுடுதண்ணி ஊத்திக்கிட்டு சுங்கை சீப்பூட்டுக்கு போனீங்களே... சீப்புட் ஏதும் கிடைச்சதா?

//viji கூறியது...
ivalo alaga eluthi irukkinga.... good job. keep up the word.//

நன்றிங்க விஜி.... நீங்க அவங்கத்தானே?

//p/s: i laughed maximum//

சிரிங்க சிரிங்க சிரிச்சிட்டே இருங்க... கடைசியில என்ன ஜோக்கரா ஆக்கிட்டீங்களே!

பெயரில்லா சொன்னது…

one question, in most sentence u kept mentioning viknesh name, is he gave any RASUAH for you?? LOL

பெயரில்லா சொன்னது…

Sirithe vazha vendum pirar sirika valnthidathey...

Yevanga??

கிருஷ்ணா சொன்னது…

குமரன், விக்கினேசுவரன், பவனேசுவரி.. அந்த மூவரோடு வந்த புதியவன் அடியேநன்தான்!

குமரனின் அழைப்பை ஏற்று வந்த எனக்கு பல ஆச்சர்யங்கள்! முதல் ஆச்சரியம், அந்த சிறிய பட்டனத்தில் தமிழுக்கென்று ஒரு இடம். தமிழை வாழவைக்க இத்தனை பேரா என்று புளகாங்கிதம் அடைந்தேமன்.

எல்லாரும் அருமையாக தமிழ்ல் உரையாடியது இன்னொரு ஆச்சர்யம். அதுவும் நிறைய புதுப்புது கலைச்சொற்களை அறிமுகப் படுத்தி வைத்தனர்! வானொலியின் பல நாள் அறிவிபுப் பணிகளை செய்த எனக்கே.. தமிழில் பேசுவது கொஞ்சம் கடினமாக (தற்சமயம் நான் வானொலியில் இல்லை) இருக்கும் போது, இவர்களெல்லாம் மிகச் சாதாரணமாக தமிழ் பேசுகிறார்களே என்று ஆச்சர்யப் பட்டேன். பிறகு, தமிழர்கள்.. தமிழ் பேசாமல் இருந்தால்தானே ஆச்சர்யம் என்று எனக்கு நானே தெளிவு கொண்டேன். வாழ்க தமிழியம்!

Vasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன் சொன்னது…

அழகாய் வலைப்பதிவிடும் அன்பருக்கு
ஒரு 'சபாஷ்!'. வாழ்த்துக்கள்!

அன்பு சக மலேசிய வலைப்பதிவாளர்களே..!

நன்றியுடன் வணங்குகிறேன்.

உங்கள் பணி + இயக்கம் தொடர வாழ்த்துகிறேன்.