எங்கே போகிறோம்?
- நாவல்
“எங்கே போகிறோம்”என்பது எனது கேள்வியன்று. அண்மையில் நான் படித்த ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளரின் பழைய புதினம். சென்னையின் ‘தாகம்’ நிறுவனத்தின் வெளியீடு. இது இலக்கிய பரிசு பெற்ற ஒரு நாவலும் கூட.
எனக்கு இதைப் பரிசாக அளித்தவர் நண்பர் விக்னேஷ்வரன் அடைக்கலம். அண்மைய சந்திப்பின் போது எனக்குள் வாசிக்கும் பழக்கத்தை விதைக்கும் பொருட்டு அவர் இதைப் பரிசளித்து இருக்க வேண்டும். முதலில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும். அவரின் அன்பு கட்டளைக்கு இணங்க இதோ அந்நாவலை பற்றிய எனது எண்ணங்கள். (விமர்சனமன்று)
இந்திய நாட்டில், சுதந்திரத்திற்குப் பத்தாண்டு காலத்துக்குப் பிறகு நிகழ்ந்த பல உண்மை சம்பவங்களைக் கற்பனை கதாப்பாத்திரங்களோடு சொல்ல முற்பட்டுள்ளார் கதை ஆசிரியர். சுதந்திரத்துக்குப் பின்பும் நாட்டின் எதிர்கால பின்னடைவுக்கு யார் காரணம், நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்ற கதைக்கருவையே சுற்றி கதையும் கதையின் பாத்திர அமைப்புகளும் பின்னப்பட்டுள்ளன.
காந்திய நெடி நாவல் முழுக்க வலம் வந்துள்ளது. அதன் நிறைகளை மட்டுமின்றி குறைகளையும் அதன் வீழ்ச்சிக்கு எவை வித்தாக அமைந்திருக்கக் கூடுவன என்பதையும் கதையினூடே சொல்லியுள்ளார். காந்தியத்தின் தெளிவான நோக்கம், அதைப் பற்றிய மக்களின் குறுகலான கண்ணோட்டம், சுதந்திரத்துக்குப் பின்பு எவ்வாறு அதைச் சாத்தியப் படுத்துவது - இவற்றை வாசகர் மனத்தில் விதைப்பதாகவே இந்நாவல் புனையப் பட்டுள்ளது.
சுதந்திரத்துக்குப் பத்தாண்டுகள் கடந்து வந்து சென்னையை மையமகாக் கொண்டு கதை துவங்கப் பட்டுள்ளது. சுதந்திரத்துக்காக பாடுவட்டவர் ராமலிங்கம். அவரது மனைவி லட்சுமிஅம்மாள். அவர்களுக்கு சிதம்பரம், பாரதி, சுபாஷ் என மூன்று குழந்தைகள். குழந்தைகளின் பெயர்களில் சுதந்திரப் போராளிகள் வாழ்கின்றனர். அகிம்சைவாதியாக காந்தியின் கொள்கையில் வாழும் ராமலிங்கமும் அவரது மூத்த புதல்வன் சிதம்பரமும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், இழப்புகள், போராட்டங்கள் என கதை நகர்கிறது. இளைய மகள் பாரதி மற்றும் மகன் சுபாஷ் இருவரும் கார்ல்மாக்ஸ் பாதையை வாழ்க்கையில் கடைபிடிக்கின்றனர். கார்ல்மாக்ஸ் – காந்தியம், இவை இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமைகளையும் ஆசிரியர் இனம் கண்டுள்ளார். நாடு மற்றும் அரசியல் தொடர்புடைய கதை என்றாலும் கூட, குடும்ப அன்பும் தோழமை பரிவும் காதலும் ஆங்காங்கே கதைக்குச் சுவாரசியம் ஊட்டுகின்றன.
கதையின் ஓட்டத்தை வளப்படுத்த, ராமலிங்கத்தின் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து கதையில் இன்னும் பல பாத்திரப் படைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கதையில் வரும் கதைமாந்தர்களைப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
முதல் வகையானது நாட்டுக்கு நல்லது செய்ய போராடும் கூட்டம். இந்த பட்டியலில் சிதம்பரம், ராமலிங்கம், சலீம், கணேசன், எழுத்தாளர் ரத்தினம், ராகவன், கோபாலன், அன்பானந்தம், வளநாடன், நரசிம்மன், சுபாஷ், ராமநாதன், போன்றோரைச் சேர்க்கலாம்.
இரண்டாம் வகையானது, முன்னம் சொல்லப்பட்டதுக்கு மாறுபட்டு இருப்பது, அதாவது நாட்டுக்குத் துரோகம் இழைத்து, சொத்து குவிக்க அலைபவர்கள். இந்த வகை பட்டியலில் பொன்னையா, பஞ்சாபகேசன் (பஞ்சு), துரைசாமி, பாலசுந்தரம், சுந்தரேசன், உஷா, நடிகர் குமரேசன், சியாமளா, காதர்பாவா, கன்னையாலால், திருவேங்கிடம் போன்றோர் அடங்குவர்.
இந்த இரு வகைகளிலும் சம்பந்தப் படாமல் இருக்கும் பாத்திரப் படைப்புகளும் உள்ளன. லட்சுமிஅம்மாள், பாரதி, டாக்டர் ராஜன், மீனா போன்றோர் அவர்கள்.
இந்த இரண்டு வகைகளிலும் கலந்து இருப்பவள், கதைக்கு நாயகி தரம் கொடுக்கப்பட்ட புவனா (புவனேசுவரி). முரண்பாட்டான பாத்திரப் படைப்பு. நல்லதும் செய்கிறாள், கெட்டதும் செய்கிறாள், ஆனால் நல்லவள்தான் என்று ஆணித்தரமாக உடனுக்குடன் வலியுறுத்துகிறார் ஆசிரியர். அவள் ஒரு புரியாத புதிர் என்று ஆசிரியரே ஓரிடத்தில் சொல்கிறார்.
‘விடிவெள்ளி’ கோபாலன், நடிகை சியாமளா, ராமநாதன் போன்றோர் கதைக்குத் தேவைப்பட்ட நிழல் கதாப்பாத்திரங்கள்.
கௌரவத் தோற்றம் போன்று, இந்தியப் பிரதமர் நேருவை ஒரு கட்டத்தில் கதைக்குள் திடீர் கதாப்பாத்திரமாக நுழைத்துள்ளார் ஆசிரியர்.
ஆசிரியர் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் மிக அருமையாகவே கையாண்டுள்ளார். தாம் சொல்ல வந்த கருத்தைச் சலிப்பு தட்டா வண்ணம், கதைமாந்தர்கள் வழிகாயாகவே சொல்லி இருக்கிறார். அவர்கள் நினைவு கூர்வதாகச் சொல்லி வரலாற்றின் முக்கிய கூற்றுகளை அழகாக இந்த தலைமுறைக்கு எடுத்துரைத்து உள்ளார். ஆயினும், முதல் சில அத்தியாயங்கள் சுவாரசியம் குன்றி இருப்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
விலைமாதுவாக புவனாவை அறிமுகப்படுத்தி, அவளைவிட கேவலமானவர்கள் இந்த நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் என சுட்டிக் காட்டி இருப்பது ஆசிரியரின் துணிச்சல். சிதம்பரம் மற்றும் எழுத்தாளர் ரத்தினத்தின் மூலமாக ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவும் வாழவும் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தம்மைப் போன்ற எழுத்தாளர்களின் பலத்தையும் சொல்லாமால் இல்லை. ‘புது வாழ்வு’ பத்திரிக்கையின் நோக்கங்கள் என பட்டியல் போட்டுக் காட்டும்போது, ஒரு பத்திரிக்கைக்கான இலக்கணத்தை மறைமுகமாக மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
புவனாவின் கதாப்பத்திரத்தில் பல மர்மங்களைப் புகுத்தி பின் கதையோட்டத்தில் மர்மங்களை உடைத்துள்ளார். ஆசிரியருக்குக் கதையின் நாயகன் சிதம்பரத்தின் மீது என்ன கோபமோ? போராட்டம் குணம் இருப்பவனாய் காட்டினாலும், அடிக்கடி அழுது கரைபவனாகக் காட்டி இருக்கிறார். மற்றவர் இடித்துரைத்தப் பின்னே அதை உணரும் அப்பாவியாய் சில இடங்களில் சித்தரிக்கப் படுகிறான். மேலும், தழுதழுத்தக் குரல் ஆங்காங்கே அவன் மட்டுமின்றி பலர் வடிவிலும் ஒலித்துள்ளது.
ஐந்நூறு ரூபாயும் அதன் மடங்குகளும் (ஐயாயிரம், ஐந்து லட்சம்) அடிக்கடி கதையில் அடிபடுகிறது. புவனாவின் வரதட்சணை, அவளது ஒரு மணிநேர ஊதியம், சலீம் தந்து உதவும் பணம் இப்படி பல இடங்களில்.
கதையில் நரசிம்மன் என்ற பாத்திர புகுத்தல், ஆசிரியரின் ஆற்றலைப் பிரமிக்க வைக்கும் ஓர் உதாரணம். காரணம், பஞ்சுவின் பத்திரிக்கை கூட்டத்துக்கு அழையா விருந்தினராய் அவரைப் புகுத்தி, ஆசிரியர் தனது கொள்கை கருத்தை அங்கேயும் தெவிட்டாமல் சொல்லி இருக்கிறார். ஆயினும், ஆசிரியர் மற்ற பல இடங்களில் வரலாற்று சம்பவங்களை வலிய திணிப்பது நெருடல்தான். சலிப்பையும் ஏற்படுத்துகிறது. ஹிட்லர் வீழ்ச்சியை எளிய முறையில் சொல்லி இருப்பது அருமை.
உஷா, சியாமளா, பஞ்சு, குமரேசன் முதலியோர் பந்தாடப்படுவது சிரிப்புக்கு விருந்து. சிதம்பரமும் புவனாவும் சந்திக்கும் தருணங்கள் பக்குவப்பட்ட காதலின் வெளிப்பாடு.
பக்கம் 225ல், கால விரயம் – பண விரயம் இதில் ஏதாவது ஒன்றை அடைந்தே இன்னொன்றைத் தவிர்க்க முடிகிறது என்பதை எடுத்துக்காட்டோடு எதார்த்தமாகச் சொல்லி இருக்கிறார்.
பக்கம் 221ல், 22வது வரியில் நாவலின் தலைப்பை ஞாபகப் படுத்தும் வண்ணம், சலீம் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் “இந்த நாடு இப்ப எங்கே போகுது?” என்று வினா எழுப்பப்படுகிறது. இதன்வழி “எங்கே போகிறோம்?” என்ற கேள்வியானது நாட்டு மக்களைப் பார்த்து கேட்கப் படுவதாக உணரப்படுகிறது.
நீங்களும் உடனே இந்த நாவலைப் படித்து (ஏற்கனவே படித்திராத பட்சத்தில்) உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமே!