பக்கங்கள்

செவ்வாய், 16 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (3)

கிசு கிசு குசுலக்குமாரி
"ஹேய் ஷுடால்"
காதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.
(பாகம் 3)



சுடலையின் முதுகில் ஒரு தட்டு தட்டி,
“ஷுடால்... எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்?” என்றாள். .


ஐய்யயோ, இதை யாராவது பார்த்து தொலைத்தால் என்ன ஆவது, முதல்லயே திரும்பி பார்த்திருக்கனும், உனக்கு இது தேவையாடா? சுடலையின் சுயத்தின் முனகல் அது.


“அட ஆமாவா? சத்தத்துல கேட்கலை. அதென்ன ஷுடால், சுடலைன்னு கூட்ப்பிடுங்கன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்?”


“ஷுடால் நல்லாத்தானே இருக்கு, கிளாமரா. இ..இ..இ..இ.. சாப்டாச்சா? எப்படி? நல்லாருக்கா?”


“என்ன கேள்வி இது, இன்னும் உணவு எடுக்கவே இல்லையே”


சுடலை என்ற அழகான பெயரை மாற்றி உச்சரித்த போதே அவனுக்கு மண்டையில் மணி அடித்தாற் போல் இருந்தது. மேற்கொண்டு இப்படி ஏரணமே இல்லாத ஒரு கேள்வி அவளுக்குத் தேவைதானா? சுடலையின் நேர்பதிலுக்கு வலிந்து சிரித்துக் கொண்டாள்.


“ஈ..இ.. ஈ.. இ...”
ஈயாடவில்லை.


“ அனேகமா நல்லாத்தான் இருக்கனும்”


“ எப்படி சொல்றிங்க?”


“ வாசம் மூக்கைத் துளைக்குதே”


“ ஆமாவா, நாய் மாதிரி உங்களுக்கு மோப்ப சக்தி வேற இருக்கோ”


அவள் செய்த ஆசியத்துக்கு அவளைத் தவிர வேறும் யாரும் சிரித்திருக்க வாய்ப்பில்லை. கூடவே ஒரு குண்டையும் போட்டாள்.


“சாப்பிட்டு உடனே கிளம்பிடாதிங்க, ஷுடால்”


“அது ஏன்?”


போச்சுடா, இந்த லூசு வில்லங்கமா ஏதாச்சும் செய்யறதுக்குள்ள, தப்பிச்சிடனும் எனத் தனக்குத் தானெ சொல்லிக் கொண்டான்.


“பத்திரிக்கை பேட்டி இருக்கு, நீங்களும் கலந்துக்கனும்”


“கண்டிப்பா. கலந்துக்கனும்ன்னு ஆசை தான், ஆனால்...”


“ஆனா ஊனான்னா இத ஒன்னு சொல்லிடுவீங்களே, என்ன ஆனா?”.


அப்போது குசுலின் கைப்பேசி அலற, அவள் பரபரப்பாகி விட்டாள்.
“எஸ் குஸ் மீ, வான் மினீட் ஆ...,” என்று அரை குறை ஆங்கிலத்தில் மேற்கத்திய நாகரிகத்தோடு அங்கிருந்து நகர்ந்தாள்.


சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரும் நிகழ்ந்ததைக் கூர்ந்து அவதானித்ததாகப் புலப்படவில்லை. பெருமூச்சை அடுத்து உணவை மங்கின் மீது குவிப்பதில் மும்முறமானான்.

(கிசுகிசு தொடரும்)

திங்கள், 15 டிசம்பர், 2008

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு




14 டிசம்பர் 2008 - மலேசிய தமிழ் வலைப்பதிவர் வரலாற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நாளாகவே இனி வருங்காலங்களில் உணரப்படும். தலைநகரில் செந்தூல் என்ற சிற்றூரில் முதலாவது மலேசிய தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடைப்பெற்றது.



கெடாய் காரி கெப்பாலா ஈக்கான் (மீன் தலைக்கறி கடை) என்ற உணவகத்தில் மதிய நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது. இடத்தை தேடிப் பிடிக்கவே படாத பாடு பட்டோம், எங்களில் பலர். நான் பினாங்கில் இருந்து பேருந்தில் சென்று புடுராயா பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அங்கே விக்னேசும் டாக்டர் சிந்தோக்கும் காத்துக் கொண்டிருந்தனர். மெது உணவு அருந்திவிட்டு செந்தூலுக்கு எல்.ஆர்.டீ மூலம் சென்றோம். அங்கே இனியவள் புனிதாவும் உணவகத்தைத் தேடும் வேட்டையில் இணைந்துக் கொண்டார். மழை தூற, பக்கத்தில் இருந்த ஓர் உணவகத்தில் தஞ்சம் புகுந்தோம். அந்த உணவகம்தான் “மீன் தலைக்கறி கடை” என பின்பு உறுதி செய்யப்பட்டது.

இனி விவரங்கள் செய்தி வடிவில்:


அங்கே எழுத்தாளரும் கவிஞருமான திரு ஏ.எஸ்.பிரான்சிஸ் காத்துக் கொண்டிருந்தார். ஓர் அகண்ட மேசையில் அமர்ந்தோம். ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வந்து சேர்ந்தனர். இடைப்பட்ட நேரத்தில், கவிஞர் பிரான்சிஸ் தமது “சாசனம்” மற்றும் “மக்கள் சக்தி” புத்தகங்களை எங்களிடம் விநியோகித்தார். ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ள அறிமுக சுற்று நடந்தது. பள்ளிகளில் ஒரியேண்டேஷன் என்பார்களே... அது போல
உணவகம் என்றாலே கூச்சலுக்கும் இரைச்சலுக்கும் பஞ்சம் இருக்காது. அங்கேயும் அதே நிலைதான். ஆதலால், அறிமுக சுற்றில் எல்லார் பேசியதையும் ஒரு குத்து மதிப்பாகக் கேட்டு தான் இங்கே எழுதி உள்ளேன், பொறுத்தருள்க, சந்திப்பில் கலந்துக் கொண்ட நண்பர்கள் - திருத்த தயாராய் இருங்கள்.


முதலில் கவிஞர் பிரான்சிஸ் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார். இதுவரை இருபது புத்தகங்கள் எழுதியுள்ளார். அண்மையில்தான் இணைய வலைப்பூவில் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்தார். “கயல்விழி” இவரது கைவண்ணத்தில் மலரும் வலைப்பூ.


அவரை அடுத்து திரு மு.வேலனின் அறிமுகம். “அரங்கேற்றம்” இவரது பதிவேற்றம். ஆக்டோபரில் பிள்ளையார் சுழியிட்டு இன்றுவரை எழுதி வருகிறார். பொதுவாக தன்னைச் சுற்றி நிகழ்வதை மையமாக வைத்தே தனது வலைப்பூ பின்னப் படுவதாகச் சொன்னார். பன்னிரண்டு காலமாக இணையத்தில் வெறும் வாசகராகவே இருந்தவர். வலைப் பதிவு மக்களிடையே நல்ல கருத்து பரிமாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மூன்றாவது அறிமுக நண்பர், திரு ஜேஷாண்ட் (பெயர் சரியாக எழுதப்பட்டுள்ளதா என நண்பர்களே, சரிபாருங்கள்). இவர் இன்னும் வலைப்பூ தொடுக்காத நண்பர், விரைவில் துவங்குவார். “இங்கே எதுக்கு வந்திருக்கேன்ன்னு எனக்கே தெரியலை” என்று சிரிக்காமல் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


இவரை அடுத்து குமாரி பவானிஸ்-இன் அறிமுகம்“கனைகள்” என்ற ஒரு மாத வயதான வலைப்பூவின் உரிமையாளர். கவிதைகள் நிறைய எழுதுவாராம். தன்னை வலை உலகத்துக்கு இட்டு சென்ற வேலனை அப்போது நினைவு கூர்ந்தார். பலருக்கு வலைப்பதிவைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று வருத்தப் பட்டார். பதிவர்களின் மொழி திறன் தன்னைப் பிரமிக்க வைப்பதாகச் சொன்னார்.


குமாரி இனியவள் புனிதா என்னைப் போலவே அமைதியாகவே இருந்தவரில் ஒருவர். ஈராயிரத்தாறில் இருந்து இவர் எழுதி வரும் வலைப்பூ – “ஜில்லென்று ஒரு மலேசியா" . இவர் ஓர் அரசாங்க அதிகாரி, ஆக நண்பர்களே சற்று கவனம்...


அடுத்து திரு அனந்தனின் அறிமுகம். என்னைப் பற்றி என்ன சொல்வது? வெறும் நான்கு மாதமாகத்தான் “முடிவிலானின் எழுத்துக்கள்” என்ற வலைப்பூவின் மூலம் எழுதி வருகிறேன். சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.


என்னை அடுத்து, திரு ஜி.எஸ்.ஷான் அவர்களின் அறிமுகம். இன்னும் வலைப்பதிவு ஏற்படுத்திக் கொள்ளாதவர். தன்னை ஓர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். திரு சதீசின் மூலம் இந்த சந்திப்பு தெரிய வந்ததாகச் சொன்னார். வலைப்பதிவில் காலடி வைக்க நிறைய உழைக்க வேண்டும் போல என புன்னகையோடு சொன்னார்.


அடுத்த அறிமுகம், வந்தவர்களில் பலருக்கு ஏற்கனவே அறிமுகம். இன்னும் சொல்லப் போனால் இந்த சந்திப்பின் காந்தம், திரு விக்கினேஷ்வரன் அடைக்கலம். “வாழ்க்கை பயணம்” இவரின் வலைப்பூ. 2006ல் இருந்து வாசிக்கத் துவங்கியவர் இவ்வாண்டு எழுதத் துவங்கி உள்ளார். இணையத் தாக்கம் இளையோரிடம் குறைந்துக் காணப்படுவதாகத் தெரிவித்தார். சிங்கை வலைப்பதிவர்களின் கன எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டினார். நமது வலைப்பதிவர்களின் கருத்து சுதந்திரத்தைப் பற்றியும் கேள்வி எழுப்பினார்.


அடுத்த அறிமுகம் டாக்டர் சிந்தோக். தனக்கென தனி வலைப்பதிவு ஒன்றைப் பின்னாமல் இருந்தாலும், நிறைய வலைப்பதிவை இன்றுவரை வாசித்து வருவதாகவும், வலைப்பூக்களுக்கு மறுமொழி இடுவதில்தான் தனக்கு விருப்பம் அதிகம் என சொன்னார். 2003 துவங்கி இவரது இணைய வலைப்பூ வாசிப்பு பழக்கம் இன்றுவரை நீடித்து வருகிறது. இணையத்தைப் பற்றியும் இணையத்தில் தமிழ் ஊடுருவல் பற்றியும் நிறையவே சொன்னார். “ஏன் நீங்கள் ஒரு தனி வலைப்பூ பின்னக்கூடாது?” - சபையில் எழுந்தக் கேள்விக்கு “சேம்பேறித்தனம்தான் காரணம்” என நகைச்சுவையோடு சமாளித்தார். வலைப் பதிவாளர்களுக்கு ஒரு முன்னோடி டாக்டர் சிந்தோக் என வர்ணித்தார், விக்னேஷ்.


திரு குமரன் மாரிமுத்து வேறொரு நிகழ்வில் கலந்துக் கொண்டு, கிட்டிய நேரத்தில் நம்மோடு இணைந்தார். விரைவில் வலைப்பூ துவங்க ஆவலாய் இருப்பதாய் சொன்னார். இவர் முன்பு வானொலியில் பேசி உள்ளதாகவும் தெரிவித்தார். நாளேடுகளுக்கு தான் அனுப்பும் எழுத்துக்கள் துண்டாடப் படுவதாகவும், இணையமே இனி நடுநிலை ஊடகம் என கோடி காட்டினார்.


திரு நேசா, ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதுபவர். கூடிய விரைவில் தமிழிலும் எழுதவுள்ளார். தமிழில் தட்டச்சு செய்வதைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டார், இங்கே கூடி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாய் தெரிவித்தார்.


சந்திப்பில் சஞ்சிகை வெளியீடு பற்றி பேசப்பட்டது. ஆண்டுக்கு இரு மலர்கள் என மு.வேலன் முன்மொழிந்தார். அச்சு இதழ்கள் எப்படி முறைப்படி செய்வது என விக்னேஷ், கவிஞர் பிரான்சிஸின் ஆலோசனையை நாடினார். பதிவர்கள் ஒருமித்த நோக்கத்தோடு எழுத வேண்டும் என பவானிஸ் முன்மொழிந்தார். அவ்வாறு செய்வதால், எழுத்தாளர் சுதந்திரம் மறித்துப் போகலாம் என விக்கினேஷ் தெரிவித்தார். பொது மக்களிடையே பதிவர் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என பவானிஸ் மேலும் கருத்து தெரிவித்தார். டாக்டர் சிந்தோக் பேசுகையில் இணையமே இனி மக்களுக்கு சிறந்த ஊடகம் என் ஆணித்தரமாகச் சொன்னார்.


முக்கிய அலுவல் இருப்பதால் பவானிஸ், முவேலன் மற்றும் ஜேஷாண்ட் விடைபெற்றனர்.


விக்னேஷும் டாக்டர் சிந்தோக்கும் வலைப்பூ எப்படி பதிவது, எவ்வாறு பின்னுவது போன்ற சூட்சமங்களைப் புதியவர்களுக்காக கற்று கொடுத்தனர்.
சில நேரம் கழித்து, எங்கே எங்கே என தேடப்பட்ட திரு மூர்த்தி வந்தார். கலகலப்பாக பேசினார். அவர் தான் அந்த சந்திப்புக்கான இடத்தை தேர்ந்தெடுத்தவர். அவர் அன்றைய இறுதி மற்றும் பன்னிரண்டாவது அறிமுகம். சித்த வைத்தியர். விக்னேஷின் தீவிர ரசிகர் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.


அடுத்த சந்திப்பு பற்றி பேசப்பட்டது. மேலும் சில நிமிடங்கள் பேசினோம், புகைப் படம் எடுத்துக் கொண்டோம். பின்பு மகிழ்ச்சியுடன் கிளம்பினோம்.


மேலும் விரிவான செய்திகளைப் பெற இதர நண்பர்களின் வலைப்பூக்களை வலம் வரவும்.


இப்போது கீழே ஒரு மறுமொழி இட்டு உங்கள் வருகையை அம்பலப் படுத்துங்கள்!

சனி, 13 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (2)


கிசு கிசு குசுலக்குமாரி


... ... ... குசுலக்குமாரி பிச்சைமுத்து என்ற இயற்பெயரைச் சுருக்கி குசுல் என்று வைத்துக் கொண்டாள். பெயரை இன்னும் சுருக்கி ஈரெழுத்தாக்க அவளுக்கு ஆசைதான், ஆனால் ஏதோ காரணத்தால் அவ்வாறு செய்யவில்லை. நல்லவேளை.
குசுல் என்ற பெயர், முழுப்பெயரைக் காட்டிலும் ரசிகர்களிடம் அவ்வளவாக சோபிக்கவில்லை.

(பாகம் 2)

தரையில் கால் படாமல் தான் குசுலக்குமாரி விழாவில் உலாவிக் கொண்டிருந்தாள். அரைசாண் உயரத்தில் தூக்கு சப்பாத்து அணிந்து, நடக்க முடியாமால் நடந்துக் கொண்டிருந்தாள். அனைவருக்கும் அன்றைய வேடிக்கை அவளின்றி வேறு யார்? யாருமே அவளைக் கண்டுக் கொள்ளா விட்டாலும், வலிய சென்று பேசி, தான் பரபரப்பாக இருப்பதைப் போல காட்டிக்கொள்ள தயங்கவில்லை. அப்படி யாருமே கிடைக்காத போது என்ன செய்திருப்பாள்? ஆம், அதே தான், கையில் இருக்கும் கைப்பேசியைக் காதோரம் வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் நண்பர்களை வழக்கம் போல வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.


உணவுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நடிகன் சுடலையைப் பார்த்து விட்டாள். சுடலையும் அவளைத் தூரத்திலே பார்த்து விட்டு பார்க்காதது போல் திரும்பிக் கொண்டான். குசுலக்குமாரி அவனை நோக்கித்தான் நடக்கிறாள்.


வாழ்த்து சொல்லி விட்டு கடமைக்குப் பரிசையும் கொடுத்துவிட்டு அப்பவே தப்பித்தோம் பிழைத்தோம் என நழுவினான் சுடலை. இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகுவதாய் பத்திரிக்கைகளில் வெளிவந்த கிசுகிசுக்களைக் கண்டு அரசியல்வாதியின் ஆட்கள் அவனைப் பலமுறை மிரட்டி உள்ளனர். ஒருமுறை அவர்கள், தாட்கள் வெட்டும் கத்தியோடு அவனைச் சீவ வந்தனர். ஏதோ பேசி தப்பித்தான் நடிகன். இப்போது ஞாபகத்தில் அதுதான் ஓடிக் கொண்டிருக்கிறது. கையில் அவன் ஏந்திக் கொண்டிருந்த தாள் தட்டும் அவனோடு சேர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது.


சுடலை செய்த ஒரே பாவம், குசுலக்குமாரியோடு "காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்" என்ற இருபத்து நான்கு அத்தியாயங்களைக் கொண்ட ஓர் அறுவை நாடகத்தில் நடித்து தொலைத்ததுதான். குசுலைக் காட்டிலும் சுடலைக்கு நடிப்பு நன்றாகவே வரும். பொழிவான முகத் தோற்றம். திடமான உடல். கம்பீரமான குரல். பழக இனிமையானவன். சுருங்கச் சொன்னால், ரசிகன்களைக் காட்டிலும் ரசிகைகளின் எண்ணிக்கை தான் அதிகம்.

பகட்டு இல்லாத மனிதன். முக்கியமாக, மணமாகாத நடிகர்களில் இவனும் ஒருவன். "காதல் கதைக்குக் கண்ணீர் வேண்டும்" நாடகத்துக்குப் பிறகு சுடலையின் நிசக் காதல் கதையும் கண்ணீரில் மூழ்கியது என்பது பிரிதொரு செய்தி. அது குசுலக்குமாரிக்கு நல்ல வசதியாகி போயிற்று. படப்பிடிப்பு இடங்களில் சுடலையுடன் பல்லி போல ஒட்டிக் கொள்வாள். சுடலை விலகிச் சென்றாலும் விடமாட்டாள். காரணம், கிசுகிசுக்கள் மூலம் தனக்கு இன்னும் பிரபலம் கிட்டும் என்பதில் குசுலக்குமாரிக்கு அசைகக்க முடியா நம்பிக்கை. ஊடகங்களில் வரும் கிசுகிசுக்களைச் சேகரித்து தருவதற்கே ஒருவரை வேலைக்குச் சேர்த்துள்ளாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

"ஹேய் ஷுடால்"

காதைப் பிளந்துக் கொண்டிருந்த ஹிப்ஹோப் ரக இசை அவனுக்கு வசதியாகி விட்டது, நுனி நாக்கில் அவள் கூப்பிட்டது விழாது போல பாசாங்கு செய்தான்.

(கிசுகிசு தொடரும்)

வெள்ளி, 12 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (1)

* பின்வரும் சிறுகதையும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் கற்பனை உலகின் பிம்பங்களே. யாரினது மனத்தைப் புண்செய்யும் நோக்கில் இது புனையப் படவில்லை. நன்றி.


கிசு கிசு குசுலக்குமாரி

அந்தி மூட்டையக் கட்ட, இருள் கடைத்திறந்த நேரம். கூரை துறந்த திறந்த வெளி. சற்றுமுன் தூறிய மழையால் சொத சொதவென இருந்த புட்தரை. கண்களைக் கூசும் மின்விளக்குகள். செவிகளைச் செவிடாக்கும் ஒலிப் பெருக்கிகள். அதிலிருந்து வந்த கதறல் இசை. அதையும் மிஞ்சும் வண்ணம் கூடியிருந்த மக்களின் அரட்டையும் கூச்சலும்.


பிரபலங்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், பொது மக்கள் என பலதரப்பட்டவர்கள் கூடி களித்துக் கொண்டிருந்தனர். நாட்டின் இன்றைய பிரபலமான நடிகையும் ஓர் அரசியல்வாதிக்குக் கழுத்தை நீட்ட போகும் பலிகடாவுமான குமாரி குசுலக்குமாரிக்கு இவ்வாண்டின் மூன்றாவது பிறந்தநாள் விழா. ஒரே ஆண்டில் அடிக்கடி பிறந்தநாள் கொண்டாடினாலும், நடிக்க வந்து பத்தாண்டுகளில் அதே இருபத்தொன்று வயதைக் கடக்கவில்லையாம்.


கேக்கை வெட்டினாள், அரசியவாதிக்கு ஊட்டினாள். குமாரி குசுலக்குமாரியோடு நடித்த நடிகர்களும், கல்லையும் நடிக்க வைக்க முடியும் என நிரூபித்த இயக்குனர்களும், அவளைத் திரையில் அழகாய் காட்ட முயன்று தோற்றுப்போன ஒளிப்பதிவாளர்களும், அத்தோல்வியைத் தோள் கொடுத்து சுமந்த ஒப்பனையாளர்களும் இன்ன பிற திரைப்பட கலைஞர்களும் அவளோடு இணைந்து புகைப் படம் எடுத்துக் கொண்டனர். மேலே சொன்ன பட்டியலில் தயாரிப்பாளரைத் தனியாக குறிப்பிட தேவையில்லை. அந்த அரசியவாதியைத் தவிர வேறு யார் இவளை நம்பி பணம் முதலீடு செய்திருக்க போகிறார்கள்?

நடிகை என்றதும் அவள் திரைப்பட நடிகை என்று நீங்கள் தவறான எண்ணம் கொண்டிருக்கலாம். அவள் உள்நாட்டு தொலைக்காட்சி நாடக நடிகை. ஆயினும், புகழ் உச்சியில் இருக்கும் திரை நட்சத்திரத்தின் அத்துணை பந்தாவும் அலட்டலும் இவளிடம் காணலாம்.

மக்களிடம் தனது பெயர் எளிதாக சென்றடைய, குசுலக்குமாரி பிச்சைமுத்து என்ற இயற்பெயரைச் சுருக்கி குசுல் என்று வைத்துக் கொண்டாள். பெயரை இன்னும் சுருக்கி ஈரெழுத்தாக்க அவளுக்கு ஆசைதான், ஆனால் ஏதோ காரணத்தால் அவ்வாறு செய்யவில்லை. நல்லவேளை.

குசுல் என்ற பெயர், முழுப்பெயரைக் காட்டிலும் ரசிகர்களிடம் அவ்வளவாக சோபிக்கவில்லை.


(கிசுகிசு தொடரும்)

வியாழன், 27 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (7)


எவ்வளவோ தடுக்க முயன்றும், உரைநடையின் இயல்பு தன்மை சுணங்காமல் இருக்க சேர்த்துக் கொள்ளப்பட்ட சில வேற்றுமொழி சொற்களுக்கான தமிழாக்கம் கீழே: (பாகம் 6 மற்றும் பாகம் 7)
போட்டோ - நிழற்படம்
ஷீட் – ச்சீ, எச்சம்
லவ்- காதல், அன்பு
வாவ் – பூரிப்பை உணர்த்தும் ஓர் ஓசை, அடேங்கப்பா
குட் - நன்று, சரி
செமினார் – சொற்பொழிவு
போன் – (தொலை)பேசி, அழைப்பு
குட் லக் - நல்வாழ்த்து
மோட்டார் வண்டி – இரு சக்கர (இயந்திர) வண்டி

வினாக்களோடு சில கனாக்கள் (7)



இதுவரை மனதுக்குள் பறந்துக் கொண்டிருந்த ஆயிரம் பட்டாம் பூச்சிகள், நொடியில் காணாமல் போய் விட்டன. ஒருவேளை அந்த பட்டாம் பூச்சி பூங்காவுக்குள் பறந்து சென்று கலந்து விட்டனவோ. இதற்கு முன் இருந்த குதூகலம் என்னிடம் இப்போது இல்லை என்பது உண்மை. எனது இத்தனை நாள் கனவு வெறும் கனவாகவே இருந்து விடுமா? இந்த வினாவுக்கு யார் பதில் சொல்வது? கடவுளா? கலிகாலத்தில் அவர் எப்படி தோன்றுவார்?

“நம்மள பத்தியும் அவருக்குத் தெரியும், சொல்லி இருக்கேன்” நல்லவள் பேசினாள்.

“யாரு, கடவுளுக்கா”

“அட இல்லப்பா, வெய்யிலைச் சொன்னேன்”

“என்ன சொல்லுற, நீ என்னை இங்க வந்து சந்திக்கிறது... தெரியுமா அவருக்கு?”
“அவருக்குத் தெரியாமலா? இன்னும் சொல்லப் போனால், உன்னையும் என்னையும் ரொம்பவே பெருமையா நினைக்கிறாரு. நீயே சொல்லு எத்தனை பேரு, காதல் முறிஞ்சாலும் தொடர்ந்து நண்பர்களாய் இருக்காங்க, நம்மள மாதிரி? அதை நினைச்சி ரொம்பவே பூரிச்சு போவாரு”

சுளீரென இருந்தது எனக்கு. இதற்கு இவள் என்னைக் கன்னத்தில் நான்கு அறை விட்டிருக்கலாம்.

“நம்மள மாதிரி எத்தனை பேரு இருக்காங்கன்னு தெரியல. ஆனா, நமது பழைய காதல் தெரிஞ்சும் என்னை சந்திக்க அனுமதி கொடுத்திருக்காரே... இந்த மாதிரி மனுசங்கள பார்க்கிறது தான் அரிது”

மனம் கசப்பில் வாடி போய் இருந்தாலும், அந்த நிதர்சனத்தை நான் ஒப்புக்கொண்டுத்தானே ஆக வேண்டும். கொஞ்ச நேரம் பட்டாம் பூச்சிகளோடு நேரத்தைக் கழித்தோம்.
இருட்டுவதற்குள் அவளை விடுதியில் பாதுகாப்பாக விட்டு, நான் வீடு திரும்ப முடிவு செய்தேன். விடுதியை நெருங்க நெருங்க உள்ளம் குமுறியது. நெஞ்சத்தின் எடை கூடியதாய் உணர்வு. வண்டியை விட்டு இறங்கினாள். “எனை விட்டு போகாதே” உதட்டோடே நின்றது வார்த்தை.

“ஹப்பா, நல்...லா இருந்திச்சுல. இந்த மாதிரி சந்தோசமா இருந்ததே இல்ல மறவ். ரொம்ப ரொம்ப நன்றி”

“ஏய், எதுக்கு”

“சுத்திக் காட்டியதுக்கு... அப்படின்னு சொல்லமாட்டேன். நமக்குள்ள இதுக்கு எல்லாம் நன்றி சொல்லிக்கலாமா? நன்றி சொன்னது, நீ இன்னைக்கு எல்லா ப்ளானையும் எனக்காக தூக்கிப் போட்டுட்டு என்னோடு வந்ததுக்கு”

“ச்சே... அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல”

“இல்லப்பா, நீ இல்லாட்டி இன்னைக்கு நான் திண்டாடி போய் இருப்பேன்”

“சரி நேரமாகுது, கிளம்புறேன், பத்திரமா இரு. ஏதாவது உதவின்னா உடனே எனக்கு போன் செய்யு”

“உன்னைச் சந்திச்சதுல எனக்கு...”

“உனக்கு?”

“எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம். நீ ரொம்ப நல்லவன்பா”

அடிப்பாவி, அவ்வளவு தானா? வேறு ஏதும் சொல்வாள் என எதிர்பார்த்தேன்; எல்லாம் ஒரு நப்பாசை தான்.

“அப்படியா? இருக்கட்டும். சனிக்கிழமை எப்படி திரும்பி போவ?”

“ஏன் நீ வர மாட்டியா? வந்தா நல்லாருக்கும். இல்லாட்டிக் கூட பரவா இல்லை. கூட பரீட்சை எழுதுற நண்பர்கள் இருக்காங்கல்ல, அவங்க கூட போயிடுவேன். ஆனா, நீ வந்தா நல்லாருக்கும்.”

“பாக்குறேன், செமினார் இல்லாட்டி அவசியம் வரேன். இந்த நாள மறக்க மாட்டேன். குட் லக் - உன் தேர்வுக்கும், உன் எதிர்காலத்துக்கும்”

சொல்லிக் கொண்டே எனது மோட்டார் நகர்ந்தது.


அவள் புன்முறுவலோடு கைகளை அசைத்து வழி அனுப்பி வைத்தாள். அவள் முகத்தில் ஓர் இனம் புரியா சோகம் தெரிந்தது. எதனால்? அட, எதுவாய் இருப்பின் எனக்கென்ன? “என்ன இருந்தப்போதும் அவள் எனதில்லையே, மறந்து போ என் மனமே...” என்ற பாடல் வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தது.



எல்லாம் சரி, சனிக்கிழமை மீண்டும் அவளைச் சந்தித்தேனா இல்லையா எனபது தானே உங்கள் வினா? அதே குழப்பம் தான் எனக்கும். நாளை விடிந்தால் சனிக்கிழமை. இன்னும் யோசித்துக் கொண்டே இருக்கிறேன், போகலாமா வேண்டாமா என்று.
நீங்கள் சொல்லுங்கள், நான் போகட்டுமா?

(கனாக்கள் முற்றும்)

வினாக்களோடு சில கனாக்கள் (6)


வினாக்களோடு சில கனாக்கள் (6)
வண்ணத்துப் பூச்சி பூங்காவில் எனக்கு காத்துக் கொண்டிருந்த அதிர்ச்சியைப் பற்றி இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும். அப்பூங்காவுக்கு முன்னம் நாங்கள் சென்ற தலம், பத்து பெர்ரிங்கி கடற்கரை. கடல் அலைகளின் ஓசை, யாரும் இல்லா ரம்மியமான தனிமை, காலை வருடி சென்ற உப்புநீர், உலர்ந்தப் பின் உணரப்பட்ட குளிர் போன்றவை இதமாக இருந்தன. அவளும் அதை என்னோடு சேர்ந்து ரசித்தது, இன்பத்தை இரட்டித்தது.
மனதுக்குள் இதுவரை பூட்டி வைத்திருந்த பல வினாக்களுக்கு அவளிடம் விடை தேட துடித்தது உள்ளம். காதலிக்கும் போது அவளைப் பற்றி நான் கண்ட கனவுகள் மெய்ப்படுவது போல தோன்றியது. என்னையே அறியாமல் அவளை இப்பொழுது எனது சொந்தமாகவே உணரத் தொடங்கி விட்டேன். துளியும் அவள் எனக்கு அன்னியமாய்த் தெரியவில்லை. இந்த உணர்வானது சரியா தவறா என யோசிக்க விருப்பமுமில்லை.


இன்று என்னோடு ஊரெல்லாம் விரும்பி சுற்றி இருக்கிறாள். இப்போது என்னுடன் கடற்கரைக்குக் கூட வந்துள்ளாள். என் மீது அவளுக்கு ஈர்ப்பு இல்லாமலா இருக்கும்? அங்கே என்னுடன் ஓடிப் பிடித்து விளையாடியது, நெருந்தூரம் நடந்தது, தலையில் தட்டி நகைத்தது, சிப்பிகளைக் கொண்டு ஏதோ செய்து எனக்கு பரிசு அளித்தது - எனது மனக்கோட்டையை வலுப்படுத்தின.

எதிர்காலத்தை ஒட்டி அவளிடம் பேச எண்ணினேன்.

“என்னை இன்னமும் காதலிக்கிறாயா?, என்னோடு சேர்ந்து வாழ சம்மதமா? முன்பு என்னை எதற்காக வேண்டாமென ஒதுக்கினாயோ, அதை நான் இப்போது விட்டுக் கொடுத்தால், என்னை மணந்துக் கொள்வாயா?, கோவம் கொஞ்சம் அவ்வப்போது வரும், ஆனால் நல்லவன். கொஞ்சம் சுயநலம். அம்மா சொல்லி திட்டுவாங்க. நீயே நானாகியப் பிறகு, சுயநலம் என்பது நம்மைப் பற்றித்தானே? இதில் என்ன தவறு? உன் முகத்தைப் பார்த்தப் பின்பே இனி எனது ஒவ்வொரு விடியலும் விடியனும், இப்படி என் ஆசை, கனவு எல்லாம் பலிக்குமா?”எனது வினாக்கள் இத்தோடு மட்டும் நிற்கவில்லை, இன்னும் இருக்கின்றன. அதை இங்கே விரிவாக எழுத தயக்கமாய் உள்ளது.

m

மூச்சை இழுத்து, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பேச்செடுக்க முற்பட்டேன். அத்தருணம் ஒரு முக்கியமான கேள்வி சிந்தையை எட்டியது. “அவளது அந்த புதிய காதலின் நிலைமை என்ன? அவள் இன்னும் அவனோடுதான் உள்ளாளா?”இது தெரியாமல் நான் ஏதாவது எடக்கு மடக்காகப் பேசி தொலைத்தால் என்ன ஆவது? மூச்சை உள்வாங்கிக் கொண்டேன். பொறுமை உடையான் புவி ஆள்வான் என்பது முதுமொழி. பூமி வேண்டாம், என் பொறுமையானது எழில்விழியை ஆள உதவுமாயின் அதுவே போதும்.


அங்கிருந்து கிளம்பினோம். 20 நிமிடங்கள். வண்ணத்துப் பூச்சி பூங்காவை அடைந்தோம். நுழைவுச் சீட்டு தான்தான் வாங்குவேன் என விடாப்பிடி செய்தாள். விட்டு விட்டேன். பணம் எடுக்க அவள் தனது பணப்பையைத் திறக்க, அதிர்ச்சி அதனுள்ளே தான் காத்திருக்கிறது எனக்கு மட்டும் தெரியுமா என்ன? அவள் புகைப் படத்துக்கு அருகே ஓர் ஆடவனின் புகைப் படமும் இருப்பதை கண்டேன். கண்டும் காணாமல் இருக்க முயன்றேன். நல்லவள் நான் பார்க்கும் படி காண்பித்து,


“மறவ், இங்கே பாரேன். இந்த போட்டோல இருப்பது யாருன்னு சொல்லு,”என்றாள்.
வழியில் செல்லும் ஓணானை மடியில் கட்டாமல் விட மாட்டாள் போலிருக்கே. அசடாய் சிரித்துக் கொண்டு,

“உங்கப்பாவோட சிறு வயது போட்டோவா? நல்லா இருக்காரு”

“ஷீட்... கெக்கபுக்க கெக்கபுக்க”சிரித்தாள்

“ஷீட்டா? எங்கே?”

“ஏய் விளையாடாதேப்பா, இதுதான் வெய்யில்”

“வெய்யிலா? எது, மத்தியானம் வானத்துல இருக்குமே அதுவா? என்னாலா சொல்லுற”

“ஐயோ படுத்துறானே... இவர் தான் வெய்யில்முருகன். சொல்லி இருக்கேனே... மறந்துட்டியா?”
எச்சில் தொண்டைக்கும் அடியில் சென்று மறைந்துக் கொண்டது. நாக்கு வரண்டதால், என் பேச்சிலும் தடுமாற்றம் நிலவியது. காட்டிக் கொள்ளவில்லை நான்.

“ஓகோ, அவரா? நல்லா இருக்காரு. இன்னுமா அவரை லவ் பண்ணுற?”விளையாட்டாய் கேட்பது போன்று வினையமாகவே கேட்டேன்.

“ஏய், என்ன கேள்வி இது? படிப்பு முடிஞ்சதும் நிச்சயதார்த்தம் வெச்சிக்கலாமுன்னு வீட்டுல சொல்லி இருக்காங்க”

“வாவ்... குட் குட்”அரை மனதுக் கூட இல்லாமல் சொல்லி வைத்தேன்.

(கனாக்கள் தொடரும்)

புதன், 26 நவம்பர், 2008

வினாக்களோடு சில கனாக்கள் (5)

வினாக்களோடு சில கனாக்கள் (5)



பினாங்கிற்கு மோட்டார் வண்டியில் செல்வதாக முடிவு செய்தோம். இருசக்கர வண்டி என்பதால், பின்னே அமர்ந்து வர தயங்குவாள் என அஞ்சினேன். அவள் அதைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

30 நிமிட பயணம். வழக்கமாக, ரொம்ப நேரம் பயணிப்பது போல தோன்றும். ஆனால், அவள் அருகில் இருந்ததால் என்னவோ நேரம் நொடிகளுக்குள் சுருங்கியது. 30 நிமிடம் என்பது 30 வினாடிகள் போல இருந்தது.
(கவிதை போன்ற பொய்தான்... கண்டுக்காதிங்க)

சாலையில் பேசிக் கொண்டேதான் போனோம். ஒரே ஒரு முறை மட்டும் அவள் என் தோள்பட்டையைப் பற்றிக் கொண்டாள், தற்காப்பு கருதி. முதலில் வித்தியாசமாக இருந்தது. வித்தியாசமாக இருந்தது என்று நான் சொன்னதற்குப் பிடிக்கவில்லை என்று பொருட்படாது. ஆயினும், அதை ரசித்து ஏற்க மனம் தயங்கியது. அவள் என் மேல் நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். தற்பெருமை தலைக்கேறியது.
பினாங்கு பால நெடுஞ்சாலையின் மீது அதிகப்படியான கோபம், இவ்வளவு சீக்கிரம் கரையைக் கடக்கச் செய்ததால். அங்கிருந்து அந்த விடுதிக்குச் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. தேடிப் பிடித்து விட்டோம். மையத்தில் பதிவும் செய்தாகிவிட்டது.

“தேர்வு எப்போ?”

“நாளைக்குக் காலையில”

“அது வரைக்கும் என்ன செய்வே? படிக்கனுமோ...”

“படிக்கிறதா? இது ரொம்ப சுலபமான தேர்வுதான், ஏற்கனவே தயார் பண்ணியாச்சு.”

“ஹ்ம்ம்”

“ஏன், நீ பினாங்கைச் சுத்தி காட்ட மாட்டியா?”

“காட்டலாமே, எப்போ?”

பகட்டாக சொல்லிவிட்டேன் - ஏதோ பினாங்கில் எல்லா இடங்களும் பரிட்சயம் போன்று! ஆடிக்கு ஒரு முறை அமாவசைக்கு ஒரு முறை தான் அக்கரைப் பக்கமே எட்டிப் பார்ப்பேன்.

“இப்போ தான்பா… நேரத்தைக் கடத்த வேண்டாமா?”



மோட்டார் பிறகு பர்மா சாலை, தஞ்சோங் பூங்கா சாலை, நீர்வீழ்ச்சி பூங்கா சாலை என சகட்டு மேனிக்கு பறந்துக் கொண்டிருந்தது. “மெதுவா மெதுவா!” அவளது அலறலை நான் கேட்டாலும், வண்டி செவிமடுப்பதாயில்லை.
எனக்குத் தெரிந்த சில இடங்களை அவளுக்குச் சுற்றி காட்டினேன். பள்ளிக் கொண்ட புத்தர் கோவில், நின்று வீற்றிருக்கும் பர்மா பொன்புத்தர் கோவில், பாம்பு கோவில், நீர்வீழ்ச்சி பூங்கா, பினாங்கு பொருட்காட்சி சாலை, ஜெர்ஜாக் வண்டலின் இக்கரை துறைமுகம், பத்து பெர்ரிங்கி கடற்கரை மற்றும் வண்ணத்துப் பூச்சி பூங்கா. ஏனைய இடங்களுக்குச் செல்ல நேரம் ஒத்துழைக்கவில்லை.

ஆம், வண்ணத்துப் பூச்சி பூங்காவில் எனக்கு காத்துக் கொண்டிருந்த அதிர்ச்சியைப் பற்றி இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும்.

(கனாக்கள் தொடரும்)