புதன், 10 ஏப்ரல், 2013
புதன், 3 அக்டோபர், 2012
மிகப் பிடித்த
நிறைய பூக்கள்
ஒவ்வொன்றாய் பறிக்க
ஒரு முறை மட்டும் முள் குத்தியது
அந்த செடிக்கு அது மிகப் பிடித்த ரோஜா போல...
செவ்வாய், 2 அக்டோபர், 2012
200 வெள்ளியில் அரசியல் சுருக்கு
21 வயது முதல் 30 வயது வரைக்கான இளைஞர்கள் விவேக தொலைபேசி வாங்குவதற்கு அரசு 200 வெள்ளி உதவி தொகை நீட்டவுள்ளது.
மாத வருமானம் 3000க்குக் கீழ் இருக்க வேண்டும்.
3G விரிவலை வசதி இருத்தல் வேண்டும் போன்றவை இதுவரை நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள்.
இன்னும் சில மாதங்களில் இது அமலுக்கு வரும். அப்போது அதன் ஏனைய விதிமுறைகளும் வழிமுறைகளும் தெரிவிக்கப்படும்.
அதுவரை இதே அரசாங்கம் நிலைக்குமா? என்பது கேள்வி...
கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம்...
200 வெள்ளிக்குத் தகுதி பெற 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். வாக்களிக்க தகுதி பெறுவதற்கும் அதே 21 வயதுதான்... இல்லே?
செவ்வாய், 15 மார்ச், 2011
தித்திக்கும் உப்பு
–ஒரு வியக்கத்தகு காதல் கதை
(மொழி பெயர்ப்பு கதை)
அவன் அவளை ஒரு விருந்து நிகழ்ச்சியில் கண்டான். அவள் தேவதை போல இருந்தாள், நிறைய பேர் அவளை மொய்த்துக் கொண்டனர், இப்படியிருக்க அவன் ரொம்பவே சாதாரணமாய் இருந்தான், யாரும் கண்டுகொள்ளவில்லை.
விருந்து முடிய, அவன் அவளைக் கொட்டைநீர் பானம் அருந்த அழைத்தான், அவள் மிரண்டுப் பார்த்தாள், ஆயினும் அவனது அடக்கமான தொணி அவளைச் சம்மதிக்க வைத்தது. ஒரு கடையில் அமர்ந்தனர், பானம் வந்தது. அவளுக்கு சொல்ல முடியா நடுக்கம், சீக்கிரம் வீட்டுப் போனால் போதும் என்றிருந்தது... அவனுக்கு அதிகபட்ச பதற்றம், திடீரென கடை ஊழியனை நிறுத்தினான். "எனக்கு கொஞ்சம்... கொஞ்சம் உப்பு கிடைக்குமா, எனது பானத்தில் சேர்த்துக் கொள்ள." அங்கிருந்த அனைவரும் அவனை ஒரு விதமாக பார்த்தனர், என்ன விந்தையானவன்! சிவந்தது அவன் முகம், ஆனால் வந்த உப்பை, கொட்டைநீர் பானத்தில் கொட்டி கலக்கி குடிக்கலானான்.
அவள் ஆர்வமாகக் கெட்டாள், "எப்படி உங்களுக்கு இந்த பழக்கம்?" அவன் சொன்னான்: "நான் சின்ன வயசுல கடல் ஓரமாத்தான் வாழ்ந்து வந்தேன், கடல்லத்தான் வெள்ளாடுவேன், கடலோட சுவையே சுவை, ம்ம்ம்... இந்த கரிக்கும் கொட்டைநீர் பானம் போலவே... எப்போவெல்லாம் இந்த கரிக்கும் பானத்தைக் குடிக்கிறேனோ, அப்போவெல்லாம் எனது இளமைப் பருவத்த நினைச்சிப்பேன், என்னுடைய ஊரு ஞாபகம் வந்திடும், ரொம்பவே அத நினைச்சி ஏங்குறேன், அங்கு இன்னும் வசிக்கிற என் அப்பா அம்மா ஏக்கம் வந்திடும். சொல்லும்போதே அவன் கண்கள் கசிந்தன. அவள் உணர்ச்சி வசமானாள். அது அவனது உண்மை உணர்வுகள், அடிமனத்தின் வெளிப்பாடு. எந்த ஓர் ஆண் குடும்பபலவீனம் பூண்டிருக்கிறானோ, அவனே குடும்பத்தை நன்கு நேசிப்பவனாகவும், குடும்ப பொறுப்பு உள்ளவனாகவும் இருப்பான். பிறகு, அவளும் பேசத் தொடங்கினாள், அவளது சொந்த ஊர், அவளது சிறார் பருவம், குடும்பம் என. அரட்டை நீண்டது, மேலும் அவர்கள் கதைக்கு, அது நல்ல துவக்கமும் கூட.
அவர்கள் தொடர்ந்துச் சந்தித்தனர் அவ்வப்போது. அவனை அவள் தனது கோரிக்கைகளுக்கு உட்பட்டவனாய் பார்த்தாள்; விட்டுக் கொடுப்பவன், தூய மனம், இதமானவன், எச்சரிக்கையானவன். மொத்ததில் ஒரு குணாளன், அவனிடம் தன் மனதைப் பறிக்கொடுத்தாள்!
அந்த கரிக்கும் கொட்டைநீருக்கு நன்றிகள் பல!
பின், எல்லா காதல் கதையிலும் வருவதைப் போலவே, அந்த இளவரசன் இளவரசியைச் செவ்வனே கரம் பிடித்தான், இல்லற வாழ்வை இனிதே நடத்தினர். வேடிக்கை என்ன தெரியுமா? ஒவ்வொரு முறையும் அவள் கொட்டைநீர் தயாரிக்கும் போது, அவனது கோப்பையில் மட்டும் சீனிக்குப் பதில் உப்புதான், அவனுக்கு அப்படித்தான் பிடிக்குமென்று.
நாற்பது வருட தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிறகு அவன் இயற்கை எய்தினான், ஒரு கடிதத்தை அவளுக்கு எழுதி வைத்துவிட்டு: "என் ஆருயிரே, என்னை மன்னித்துவிடு, என் வாழ்நாள் பொய்யை மன்னித்துவிடு, இதுதான் நான் உன்னிடம் சொன்ன ஒரே பொய் – கரிக்கும் கொட்டைபானம்... நமது முதல் சந்திப்பு.... ஞாபகம் வருகிறதா? நான் அத்தருணம் பதற்றத்தோடு இருந்தேன், உண்மையில் சக்கரையைக் கேட்பதற்குப் பதிலாகத்தான் உப்பு என்று உளறித் தொலைத்தேன், அந்த சொதப்பலே நமது உரையாடலை வலுப்படுத்தும் என நான் அப்போது நினைக்கவில்லை.. பின்னாட்களில், எத்தனையோ முறை சொல்ல நினைத்தும், அச்சம் என்னை மிரட்டியது, எதற்காகவும் உன்னிடம் பொய் சொல்லமாட்டேன் என நான் கொடுத்த வாக்கு!
நான் இப்போழுது மரணப்படுக்கையில், இப்பொழுதும் இதைச் சொல்லாவிட்டால்...! எனக்கு கரிக்கும் பானமே பிடிக்காது, என்ன கொடுமையான சுவை... முன்னாளில் இதுபோன்ற கரிக்கும் பானத்தை நான் நாக்கில் வைத்ததேயில்லை. உன்னைப் பார்த்தப் பின்பு, உனக்காக செய்த எதற்கும் நான் வருந்தியதில்லை. உன்னை அடைந்ததே என் வாழ்நாளின் எல்லையில்லா மகிழ்ச்சி. இன்னொரு பிறவி இருந்தால், உன்னை நான் மீண்டும் பார்க்க வேண்டும், வாழ்க்கை முழுதும் உன்னோடே வேண்டும், உனக்காக மீண்டும் கரிக்கும் கொட்டைநீர் பானம் அருந்துவதாயினும் இன்பமாக ஏற்பேன்."
அவள் கண்கள் கனத்தன, கடிதம் ஈரமானது.
நாட்கள் உருண்டோடின.
பின்னாளில் யாரோ ஒருவர் அவளிடம் வேடிக்கையாய் கேட்டு வைத்தார்: "உப்பு போட்டு தண்ணீர் கலக்கினா எப்படி இருக்கும்...?"
அவள் தன்னிலை மறந்து சொன்னாள்: "அது தித்திக்கும்"
வியாழன், 2 செப்டம்பர், 2010
வேண்டும்
செவ்வாய், 18 மே, 2010
கொடுத்தால்தான் என்ன?
ஞாயிறு, 27 செப்டம்பர், 2009
வண்ணாரஸ் பட்டு கட்டி
விருவிருப்பான பாட்டு. கேட்கும் போதே கை கால்களை ஆட்டத் தோனும் வகை.

இசை, வரிகள் முக்கியம் என்றாலும் இந்த பாட்டுக்குக் கண்டிப்பாக பாடகரின் குரல், தொணி இரண்டும் பிரதான பலம்.
நான் கேட்டு எனக்கு இனித்த பாடல், உங்களுக்கும் இனிக்கும் என்ற எண்ணத்தில் இதோ!
(இதுவரை கேட்டிராதவர்களுக்காக மட்டும்)
நினைத்தாலே இனிக்கும் ~ விஜய் அந்தோணி

யூ நோ லேடிஸ், இட் ஸ்டார்ட் தி ஷோ ஒப் ரியல் லவ்.. மேரே பியா! எஹா
(You know ladies, it starts the show of real love… merre piya! Eh ha)
பும்பா அலக்கடி பும்பா... பும்பா அலக்கடி பும்பா
வண்ணாரஸ் பட்டு கட்டி மல்லிப்பூ கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா
அவ முந்தான பூவ கண்டு என் உயிரு புட்டுக்கிச்சு
சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா
வண்ணாரஸ் பட்டு கட்டி - பட்டு கட்டி
மல்லிப்பூ கொண்டை வெச்சி - கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா
சோ... ஃபோ சக்குரியா
சீ... ஃபோ லக்குரியா
சொல்லு, குத்த வெச்சி குத்திக்கவா சொல்லுடி என் லதா... வனிதா... தா....தாதாதாதாதா
உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் down down
hock down hock down hock down hock down
உன்னுடைய பேச்சினிலே ringtoneகள் down down
hock down hock down hock down hock down
உன் விழியின் போதையிலே டாஸ்மார்க்கே down down
hock down hock down hock down hock down
மயிலே உன் மாராப்பில் மல்கோவா down down
hock down hock down hock down hock...
மேரே பியா - பிரியா
மேரே பியா பியா ஹோ
மேரே பியா - freeயா
மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா
வண்ணாரஸ் பட்டு கட்டி - பட்டு கட்டி
அல்லிப்பூ கொண்டை வெச்சி - கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா
பளபளக்குது உன் மேனி கண்ணாடி down down
hock down hock down hock down hock down
ராத்திரி நீ கண் முழிச்சா நட்சத்திரம் down down
hock down hock down hock down hock down
பக்கத்துல நீ வந்தா pulse rateடு down down
hock down hock down hock down hock down
ஒன்ன பாத்த நாள் முதலா full mealsசு down down
hock down hock down hock down hock...
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா பியா ஹோ
மேரே பியா மேரே பியா
வண்ணாரஸ் பட்டு கட்டி - பட்டு கட்டி
அல்லிப்பூ கொண்டை வெச்சி - கொண்டை வெச்சி
சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா
படம் சன் பிக்ச்சர் வெளியீடு. விளம்பரம் செய்ய தெரிந்த மிகச் சிறந்த நிறுவனம். அதை நிரூபிக்கும் வண்ணம் சன் மியூசிக்கில் தனது சேட்டையை இம்முறையும் காட்ட மறக்கவில்லை. அடிக்கடி இந்த பாட்டை ஒளிபரப்புவதும், அதைப் பாதியிலேயே நிறுத்தி மக்களின் ஆவலைத் தூண்டுவதுமாய்.
பாட்டு வரிய கேட்கும்போது, “நான் சிரித்தால் தீபாவளி” வகையில் சிவப்பு விளக்கு, ஜிகு ஜிகு பியூட்டிகள் என காட்சி அமைப்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இல்லை. இசையில் இருந்த வேகம் விருவிருப்பு நெருப்பு - எதிர் பார்த்த அளவுக்கு நடனத்துல இல்ல. பிருத்துவியும் ப்ரியாமணியும் ஆடுறாங்க. அவங்கள குத்தம் சொல்லி குத்திக்க முடியாது. அவங்களால முடிஞ்சத ஆடி இருக்காங்க. அதனால பாவம், காமிராவும் எடிட்டிங்கும் கூட சேர்ந்து நடனம் ஆட வேண்டியதாச்சு.
ஞாயிறு, 24 மே, 2009
பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது
பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது
யாரு நம்ம இங்கு தடுக்குறது...
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ!
இந்த பாட்டு வரிய படிச்சதுமே இது அந்த படம் தான்னு கண்டுப்புடிச்சி இருப்பிங்க. இருந்தாலும் கடமைக்குச் சொல்லிக்கிறேன். ஆமா, குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்.

படம் தொடக்கத்திலேயே ரொம்ப பில்டப்பு போடுறாங்க. ஏதோ அசம்பாவிதம் நடந்திட்ட மாதிரியும், ஊரே அழுதுட்டு இருக்கிற மாதிரியும் காட்டுறாங்க. எழவு வீட்டுல பேசிக்கிற மாதிரி சில வசங்கள் ஓட, நமக்கு ஓரளவு ஊகிக்க முடிஞ்சிடுது. காதல் தோல்வி, இல்ல சாதி கலவரம். கிராமத்துக் கதைன்னா வேறென்ன புதுசா யோசிச்சிடப் போறாங்க?
கடந்த காலத்துல என்னதான் நடந்திருக்கும் என்பதை நாம யோசிக்கிறதுக்குள்ளாகவே, ஒரு நண்பன் மூலமா, அவன் பழச அசைப் போடுவதாய் நமக்கு கதைய சொல்றாங்க.
குசேலன் (ராமகிருஷ்ணா)– துளசி (தக்சனா). இவங்க ரெண்டு பேரும் தான் கதையில வர்ற காதலர்கள். குசேலன் அசப்புல பாண்டியராஜன ஞாபகப் படுத்துறதாலேயே என்னவோ, நம்ம பாண்டியராஜனோட “வந்தனம், வந்தனம்” பாட்டோட அவருக்கு அறிமுகம் தராங்க. துளசி அப்படியே சினேகாவையும் ஷ்ரேயாவையும் கலந்து செஞ்ச கலவை.
சரி கதைக்குப் போகலாம்
குசேலனுக்கு ஓர் அம்மா. அப்பா யாரு, இருக்காறா, இல்லையான்னு சரியா சொல்லல, அது முக்கியமாவும் தெரியல. ஊர்ல சதா லொட லொடன்னு ஏதாச்சும் வம்பு பண்ணுற செமி-வில்லன் கேரக்டர் அம்மாவுக்கு.
துளசிக்கு அம்மா அப்பா இருந்தும் இல்லாத நிலை, வயதான பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறாள். பாட்டிக்கு இந்த வயசுலத்தான் வாழ்வு வந்திருக்கு, செண்டிமெண்டல்ல செம்மையா கலக்குறாங்க. இந்த வயசுல கோடம்பாக்கத்துல ஒரு ரவுண்டு வந்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லை.
குசேலன், நம்ம ஹீரோ, படிப்பில மந்தம். பிட்டு அடிச்சி பாஸ் பன்ற கேஸ். ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன், என்று குதூகலித்து ஓடி வரும் குசேலனை, அம்மா கேட்கிறார் “காப்பி அடிச்சி தானே ராசா பாஸ் பண்ணே”ன்னு. இந்த கிண்டலுக்குப் பிறகு இயக்குனர் ராஜமோகனின் பெயர் உதயமாகுது.
ஒருதலையாக துளசியைக் காதலித்து பின் அவளைச் சம்மதிக்க வைப்பது சுவாரசியம். காதலிக்கும் போது இவங்களும் அவங்க கடமைக்கு நிலாவுக்குப் புதிய அர்த்தம் ஒன்னு சொல்லுறாங்க. காதலியத் தேடித்தான் நிலா பூமிய சுத்தி வருவதாய்.
முதல் பாதி படு சுவாரசியமா ஓடுது. பசுமையாய், இளமையாய், துள்ளலாய், நிதர்சனமாய், யதார்த்தமாய். இரண்டாம் பாதி அழுகை, கொடுமை, அசிங்கம் என செம்ம ஜவ்வு.
பட்டணத்தில் தினத்திருடனுக்கு வாக்கப் படுகிறாள் துளசி, என்று கதையில் திருப்பம். அங்கு அவள் படும் சங்கடங்கள் கணவனால் ஏற்படும் நிந்தனைகள் எல்லாம் கடுப்பு. விசயம் அறிந்த குசேலன், தேவதாசாய் மாறுகிறான். ‘ஆட்டோகிராப்’ சேரன், ‘காதல்’ பரத், ‘7ஜீ’ ரவிகிருஷ்ணா - இப்படி ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். சிறையில் கணவன் அகப்பட்டதும், துளசி கிராமத்துக்கே வந்து விடுகிறாள். அவளை ஏக்கத்தோடு காண ஓடி வரும் குசேலனைப் பார்க்க மறுக்கிறாள். அப்போது கூட அவளது மனப்பாட்டை சரியாக சொல்லவில்லை.
ஒரு கட்டதில், “அவன் செத்திருந்தாலும் என்ன பார்க்க வந்துருக்கனும், பாட்டி” என்று குமுறுவது அவளின் பக்குவப்படாத குழந்தை மனதைச் சித்தரிக்கிறது.
துளசியின் கணவனை வெளியே மீட்டு வர குசேலன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தியாகி காதலனின் வழக்கமான சினிமாத்தனம். Kira இவரு ரொம்ம்ம்ம்ப நல்லவராம்.
நாய் வாலு சும்மா இருக்குமா? வெளியே வந்ததுமே கணவன் ஒரு கொலை செஞ்சிடுறாரு. குசேலன் அதை தான் செஞ்சதா பலிய ஏத்துக்கிறாரு. ஊர் மக்கள் குசேலனை அடியா அடிச்சு துவைச்சி எடுத்துடுறாங்க, அப்புறமா போலிஸ் கூட்டிட்டு போகுது.
குசேலனின் இந்த தியாகத்தினால், எங்கே தனக்கு அவன் மீது காதல் கூடிவிடுமோ என்ற அச்சத்தில், கணவனைக் காட்டிக் கொடுக்க ஓடுகிறாள், துளசி. வாகனம் மோதி சாகிறாள்; குசேலன் போலிஸ் வண்டியிலிருந்து அதைப் பாஎத்துக் கொண்டே துவைத்த துணியாய் துவண்டு மாய்கிறான். இப்படி கதை முடிகிறது.
கதை புதுசு இல்லைன்னாலும், முதற் பாதி அமைந்த விதம் நம்மை கௌவி இழுக்குது. ராமகிருஷ்ணா ஆட்டத்திலும் நடிப்பிலும் டப்பிங்லயும் வெளுத்து கட்டுறாரு. ஹீரோயிஸம் அவ்வளவா தெரியல. தக்ஷ்னாவும் நல்லாவே பண்ணிருக்காங்க. அழுகைய குறைச்சிருக்கலாம், சரி அவங்க என்ன பண்ணுவாங்க, எல்லாம் இயக்குனர் சொல்ற மாதிரி தானே செய்யனும். அழுகையின் உச்சத்துக்கு போய் பின் சந்தோசத்த முகத்தில் கொண்டுவரணும். அந்த கட்டத்துல கொஞ்சம் சிரமம் பட்டிருக்காங்கன்னு நல்லாவே தெரியுது. யாருக்கும் ஒப்பனை அதிகமா இல்லை.
குசேலன் துளசியை விட சில செண்டிமீட்டர் குள்ளம் தான், ஆனால் இதை ஆசியமாகக் கூட சுட்டிக் காட்டலை. (ஏன், சூர்யா கூட சிம்ரன விட குள்ளமா தானே இருந்தாரு, ‘ஏங்கினேன் ஏங்கினேன்’ பாட்டுக்கு துரத்தி துரத்தி டூயட் பாடுலயா! ஹிஹிஹி...)
இரண்டாம் பாதியில் என்ட்ரீ ஆகிற துளசியின் கணவரும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குறார். அவரோட அக்கா பாகம் கொஞ்சம் நெருடலா இருக்கு
படத்தின் இசை, யுவனின் வழக்கமான ரகம் தான். “சின்னஞ் சிருசுக மனசுக்குள்” பாட்டு மனச அள்ளுது. பருத்தி வீரன் படப் பாடலை ஞாபகப் படுத்துது.
“கடலோரம் ஒரு ஊரு” என்ற பாட்டு ஆடியோவில் ரெண்டு பேரு தனித்தனியா பாடி இருந்தாங்க. யுவன் பீலிங் பிச்சிக்கிற அளவுக்குப் பாடி இருப்பாரு. சரண் ரொம்ப கூலா பாடி இருப்பாரு, இதுல எது திரை ஏறும் என்ற கேள்வி இருந்துக்கிட்டே இருந்திச்சு. ரொம்ப சாமர்த்தியமா, முதல் பாதி பாட்டு யுவன் குரல்லயும் ரெண்டாவது பாதி சரண் குரல்லயும் போட்டிருந்தாங்க.
கனவு பாடலகள் இல்லாததும் கவர்ச்சி இல்லாததும் ஆரோக்கியமான விசயங்கள். ரெட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் அதைக் கொச்சையாக தராத வரை பாராட்டலாம். காதலர்கள் முத்தம் பரிமாறிக் கொள்வதை மேகம் நிலவை மூடுவதைக் கொண்டு உவமானம் செய்திருப்பது கவிதை. (இது ஏற்கனவே வேற படங்கள்ல வந்திருக்கான்னு தெரியல)
குசேலனைச் ‘கொச்சி’ என்றும் துளசியைத் ‘தொளசி’ என்றும் அழைப்பதும், ஏதோ பகத்து வீட்டில் நடப்பதைப் போன்ற உள்வாங்கலைக் கொண்டுவருகிறது.

அதென்னவோ, கடைசியில காதலர்களைக் கொன்னுட்டா படம் வெற்றி அடைஞ்சிடும் என்ற எண்பதுகளின் senti'mental' formula இந்தப் படத்திலும் ஆளப்பட்டிருப்பது வருத்தம் தான். அண்மையில் வந்த வெண்ணிலா கபடிகுழு, பட்டாளம் போன்றவையும் பட இறுதியில் ஒரு பிரதான கதாப்பாத்திரத்தைக் காவல் கொடுத்திருக்கிறது இங்கே குறிப்பிட வேண்டிய விசயம்.
‘காதலர்கள் கொண்டாடும்’ கு.பூவும் கொ.புறாவும் அல்ல, காதலர்களைக் கொன்றாடும் ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’
வியாழன், 12 பிப்ரவரி, 2009
என்னமோ
இருட்டு, குளிர். அதிகாலை ஆறு. மக்கள் கூட்டம். ஆண், பெண், இளைஞர், குமரி, பொடியன், பிள்ளை, குழந்தை, பெரியவர், கிழவர், காவல் அதிகாரி, சிறப்பு பாதுகாவல் அதிகாரி, தமிழர், ஆங்கில உரையாடல், வடமொழி பிரார்த்தனை, ரதம், காளை, வண்ணக் கொடி, முருகப்பாடல், தேங்காய் குவியல், ஆட்டக் காவடி, வேட்டி, சேலை, தாவணி, தங்க ஆபரணம், ஒப்பனை, பக்தர், வேடிக்கையாளர், அர்ச்சனை தாம்பளம், ஊதுபத்தி, சீனர், வெளிநாட்டவர், ஒளிப்படக் கருவி, ஊடகத்தார்.
ஆம், தைப்பூசத்தின் முதன் நாள், முருக ரத ஊர்வலம் விமரிசையாக அனுசரிக்கப் படுகிறது. அந்நாளைச் செட்டி பூசம் என்றும் அழைக்கப் படுவதுண்டு. இந்தியாவிலிருந்து வணிகத்தை நம்பி வந்தவர்கள் செட்டி என்ற இப்பிரிவினர். ஆரம்பக் காலங்களில் இவர்கள் துவக்கி வைத்த செட்டி பூசமானது, பிற்காலங்களில் மற்ற தமிழ் பக்தர்களாலும் வரையறு இன்றி கொண்டாடப் பட்டு வருகிறது. தைப்பூசத்தன்று வேடிக்கை பார்க்க நினைக்கும் மக்கள், வேண்டுதல் இருப்பின் அதை இந்த செட்டி பூசத்தன்றே செலுத்தி விடுபவர்களும் உள்ளனர்.
பினாங்கு மார்க்கெட் தெருவில் புறப்படும் இந்த முருகன் ரதம், பல மணி நேர பவனிக்குப் பிறகு நாட்டுக் கோட்டை செட்டியார் முருகன் கோயிலை அடைகிறது. ரதம் வரும் பாதைகளில் தேங்காய் உடைத்து, சாலையைக் குளுமை செய்து பக்தர்கள் தங்களின் வேண்டுதலையை நேர்த்தி செய்தனர். சிலர் பக்தர்களுக்குப் பானமும், அண்ணதானமும் வழங்கி புண்ணியம் தேடினர். சிலர் போட்டிக்காக தேங்காய் உடைத்தனர். வாங்கிய தேங்காயை உடைக்க ஆள்பலம் இன்றி சிலர் தத்தளித்தனர். வழக்கம்போல கொம்தாருக்கு எதிரே உள்ளே தெருவில் தேங்காய் குவியலுக்குப் பஞ்சம் இல்லை.
சரி, நம்ம கதைக்கு வருவோம். சிறு சிறு மேகங்கள் சூரிய ஒளியை 11.30 மணிவரை வடிக்கட்டி அனுப்பி வைத்தன. அதற்குப் பின் அவற்றுக்குச் சோம்பல் வந்ததால் என்னவோ, வரும் என்ற எண்ணிய தூறல் ஓடி ஒழிந்துக்கொண்டது.
நண்பகலுக்கு மேல் வெயிலின் அட்டகாசம், பக்தர்களைப் பாடாய் படுத்தியது. எதற்கும் அஞ்சா நெஞ்சங்கள் முருக பக்தர்கள், தேங்காய் வீச்சில் பின் வாங்கவில்லை.
சுற்றுபயணிகளுக்கு எங்கிருந்து கிடைக்குமோ உயர்தர புகைப்படக்கருவிகள்... தோளில் ஒரு பை, அதில் வித விதமான ஒளிப்பெருக்கி லென்ஸ்கள். ஆளுக்கொன்று ஏந்திக் கொண்டு வளைந்து நெளிந்து போட்டோ எடுத்தனர். அவர்களுக்குப் போட்டியாக பத்திரிக்கையாளர்கள் மாய்ந்து மாய்ந்து போட்டோ எடுத்தனர், நமக்கா தெரியாது, எடுத்தது ஆயிரம் என்றாலும், போடப்போவது ஒன்றோ இரண்டோ...
பக்தர்கள் தார் சாலையைத் தேங்காயால் அடித்து நொறுக்கும் பணியில் திளைத்திருந்தனர், அவ்வப்போது சிறு ரக ட்ராக்டர், உடைப்பட்ட தேங்காய் பிரவாகத்தை ஒரு பக்கமாக குவித்தது. அப்போத்தானே நல்லா உடைக்கலாம். கருமமே கண்ணாய் இருந்த ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரர் மெய்மறந்து போட்டோ எடுத்து குவிப்பதில் மூழ்கி போய் இருந்தார். அதி அருகில் சென்று தேங்காய்க்கும் தார் சாலைக்கும் நடக்கும் யுத்தத்தைப் பக்கம் பக்கமாக பதிவு செய்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் வந்த ட்ராக்டரைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை, அவர் கவனித்த நேரத்தில் கால் அவர் வசம் இல்லை; ட்ராக்டரின் வட்டையின் அடியில் அது சிக்கிக் கொண்டது. பரபரப்பு. தெரித்துப் போயிருக்க வேண்டும் ஓட்டுனர், அவரது காலினை உடனடியாக விடுதலை செய்தார். வண்டியை விட்டு இறங்கி திருதிருவென விழித்தார், கலங்கி இருக்க வேண்டும், தவறு முழுக்க முழுக்க அவரோடது இல்லை என்றாலும் கூட.
வடக்கிலும் தெற்கிலும் ஏகப்பட்ட நெரிசல், அம்புலன்ஸ் கூட்டி வருவது அசாத்தியமே, மிதித்த ட்ராக்டரே பரிகாரத்தைத் தேடிக்கொண்டது. அவரை அதிலேயே ஏற்றிக் கொண்டு முதலுதவி இடத்துக்குக் கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவரை வேறொரு சாலையில் பார்த்தோம், காமிராவில் அதே தேங்காய் உடைக்கும் அழகைப் பதிவு செய்துக் கொண்டிருந்தார். என்ன கடமை உணர்ச்சி. காலுக்கு ஒன்னும் ஆகலையா? நிச்சயம் கடவுளின் கிருபை என்றே முழங்கி இருப்பார்.
பிறகு உச்சி வெயில். சிவன் கோயிலுக்கு முன் சன்வே விடுதியின் அன்னதான பந்தல். “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” என்ற பக்தி பாடல், புதிதாய் மீள்கலவையில் (ரீமிக்ஸ்) அதிதுரித இசையில் எல்லா பந்தல்களிலும் துள்ளிக் கொண்டிருந்தது. அதிலும் வேடிக்கை, ஒரு நாடோடி வகை பாடல் ஹிப்ஹோப் ரகமாய் மாற்றப்பட்டிருந்தது. இடையிடையே, ரேப் (ஏகாரத்தைத் தவறாக உச்சரித்தால் நான் பொறுப்பிலை) குரல். என்ன கொடுமடா சாமி. (“ஏரிக்கரை ஓரத்திலே, தோசை ஒன்னாங்க, தோசை ரெண்டாங்க” இப்படித்தான் வரும்ன்னு நினைக்கிறேன், அந்த பாட்டு). இன்னொரு விசயம், முதல்ல 4 பையனுங்கத்தான் இந்த பாட்டுக்கு ஆடிச்சு இருந்தானுங்க, அப்புறமா ரெண்டு பொன்னுங்க வந்திச்சுங்க, சுமார் 15-16 வயசு இருக்கும். நெருப்பாட்டம். அதுங்கள பாத்துட்டு, கொஞ்ச நேரத்துல பசங்க குமிஞ்சிட்டாய்ங்க. எல்லார் பார்வையும் அங்கேதான். நல்லவேளை, முதல்ல சொன்ன கடமையான புகைப்படக்காரர் அங்கில்லை, இருந்திருந்தால் எல்லார் மானமும் கப்பல் ஏறியிருக்கும்.
மதியத்துக்கு அப்புறம் நான் வீடு திரும்பிட்டேன், கூட்டாளிங்க எல்லாம் அங்கேயே தங்கி மறுநாள் தான் கிளம்பி வந்தானுங்க, மிச்ச கதைய அவனுங்க கிட்டத்தான் விசாரிக்கனும்.
என்னவோ எழுத வந்து என்னமோ எழுதி முடிச்சிருக்கேன், அதனால தலைப்பு, “என்னமோ”ன்னே வெச்சிக்கலாம், தப்பில்லையே?


புதன், 4 பிப்ரவரி, 2009
இந்த தாகம் பெருசு...
(பாம்பு படம் எடுக்குது... உசாரய்யா உசாரு)ஒரு பெரிய விஷப்பாம்பை ஒரு சுண்டக் கஞ்சிக்கான கண்ணாடி ஜாடியில் புகுத்துகின்றனர். பெரும்பாலும் அதனோடு சிறுவகை பாம்புகளும், ஆமைகளும், பூச்சிகளும், பறவைகளும் சேர்க்கப்பட்டு பதப்படுத்தப் படுகின்றன. இவ்வகை வைன்கள், நலம் ஊக்கி அல்லது உற்சாக பானமாக சிற்றளவில் பருகப் படுகின்றன.




(வெள்ளைக்கார பெருசு, குடிச்சிட்டு உசுரோட இருந்தியா?)
மேற்கண்ட செய்தி உண்மையா பொய்யான்னு என்னைக் கேட்காதிங்க... பன்னனுப்பி மடல்ல எனக்கு வந்திச்சு, இங்கே போட்டேன்... அவ்வளவுதான்
மொழியில குத்தம் குறை இருந்தா, கீழே மறுமொழியிட்டு குமுறுங்க...
புதன், 28 ஜனவரி, 2009
இரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்பு
இரண்டாம் தமிழ்ப்பதிவர் சந்திப்பு
25 ஜனவரி 2009, ஞாயிறு. ஞாயிறைத்தான் தெளிவாகக் காண முடியவில்லை. வானம் மப்பும் (அதற்கு யார் ஊற்றிக் கொடுத்ததோ) மந்தாரமுமாய் சிறுசிறு தூறல்களைச் சிந்திக் கொண்டிருந்தது. அதென்ன மாயமோ மர்மமோ தெரியல, பதிவர் சந்திப்புன்னா, மழையும் அழையா விருந்தினராய் வந்திடுது.
மதியம் இரண்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, மூன்றுக்குத் துவங்கியது. அடிச்சி புடிச்சி ரெண்டு மணிக்கெல்லாம் ஏ.ஆர்.ரகுமான் உணவகத்துக்குப் போயிட்டேன். அங்க, விக்னேஷ் சொன்ன தமிழியல் நடுவம் இருக்கிற அறிகுறி ஏதும் தெரியல. சுத்தி சுத்தி மோட்டர்ல ஊர்வலம் அடிச்சி, அப்புறமா விக்னேசுக்குப் போன் பண்ணேன். அவர் சொன்னாரு, “நீங்களாவாது ஏ.ஆர்.ரகுமான் கடை வரைக்கும் போயிட்டீங்க, நாங்க இன்னமும் ஏ.ஆர்.ரகுமான் கடையைய தேடிட்டு இருக்கோம்.” இதுக்கு ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே... என்ன அது?
சரின்னுட்டு பைக்க ஓரமா நிப்பாட்டிட்டு அவங்களுக்குக் காத்திருந்தேன். பாரிட் புந்தார் (பேராக் மாநிலம்) நகரத்துல சீனப் பெருநாளுக்கான எந்த அலட்டலும் பாதிப்பும் தெரியல. ஒருவேளை அங்கே சீனர்கள் அதிகம் இல்லையோ என்னவோ.
இதற்கிடையில், கடையில் தமிழர்கள் கொஞ்ச பேரு கூட்டமா அமர்ந்து உணவருந்திக்கிட்டு இருந்தாங்க. அவங்க இவங்களா இருக்குமோ? போய் பேச்சு கொடுக்கலாமா? இவங்க அவங்களா இல்லாட்டி? அவங்கக்கிட்ட நீங்க அவங்க தானேன்னு கேட்டு அவங்க நீங்க எவுங்கள அவங்களானு கேட்குறிங்கன்னு கேட்டு குழப்பிட்டா? இப்படி தெளிவாக ஆய்ந்து, சிந்தித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன...? மனம் படர் தாமரையாய் விரிந்தது, சிந்தித்த மூளையை மெச்சியது.
பார்வை எதிரே வந்த மகிழுந்தின் மீது பாய்ந்தது. நான்கு பேர், உள்ளிருந்து விக்னேஷ் கையசைத்தார். அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து உணவகத்தின் உள் வரவேற்பு நடந்தது. தரை சிவப்பு நிறமுங்க. விக்னேஷ், து.பவனேஸ்வரி, குமரன், மற்றும் இன்னொரு புதிய நண்பர் வந்திறங்கினர்.
முன்னம் கடையினுள் பார்த்த தமிழ் அன்பர்கள், சந்திப்புக்காக வந்தவர்களே. தெளிவாகச் சொன்னால் – ‘அவங்க’த்தான். மதிய நேரம் இல்லையா, பசிக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தனர். நான் வீட்டிலேயே போதுமெனும் அளவுக்கு நிரப்பியதால், அங்கே சாப்பிடவில்லை. து.பவனேஸ் உண்ணாவிரதம் (அரசியல் நோக்கான்னு தெரியல). கிட்டிய சில நிமிடங்களில்கூட ஏதோ ஒரு நூலை வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டிருந்தார். படிக்கிற புள்ளைங்க.
அனைவரும் உண்டு மகிழும் வரை காத்திருந்தோம். அப்போது உணவருந்திய நம் பதிவர் நண்பர்களின் கட்டணச் சீட்டை ஒருவர் மர்மமாகச் சேகரித்து தாமே செலுத்துவதாக உணவக ஊழியரிடம் கிசிகிசுத்தார். அவர் வேறு யாரும் அல்லர், கோவி. மதிவரன் தான். கோவி நீங்க நிஜமாவே ரொம்ம்ம்ம்ப ரொம்ப நல்லவருங்க.
ஏற்கனவே சிலர் வந்திருக்க, மேலும் ஒரு சிலர் வந்தவுடன் சுப.நற்குணனின் ஆசியால் தமிழியல் நடுவத்துக்கு விரைந்தோம். உணவகத்தை அடுத்து இரண்டு கடைகள் தாண்டி, மூன்றாவது மாடியில் அந்த அறை.
வளமையான மேசை, நாற்காலி, குளிரூட்டி, ஒளிப்பெருக்கித் திரை என அமர்க்களமாக இருந்தது அந்த அறை. திரும்பும் திசை எல்லாம் ஆளுயர சுவரொட்டிகள். திருவள்ளுவரும் வல்லளாரும் கம்பீரமாக ஆங்காங்கே பொன்மொழிகளோடு வீற்றிருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு (ஒலிப்பதிவு வடிவில்) நிகழ்வு தொடங்கியது.
“கும்பிடப் போன தெய்வம்......“ என்ற ஒரு சினிமா பாடலில், முதலில் மெதுவாக ஆரம்பமாகி, “என்னடா இழுவ” என்ற மிரட்டலுக்குப் பிறகு, விறுவிறுப்பாக பாடல் தொடரும் இல்லையா? அதே போல் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது, ஓரிரு செய்யுள்கள் நிறுத்தி நிதானித்து வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த நாட்காட்டி ‘தொபக்கட்டி’யென சரிந்து விழுந்து கலவரத்தை ஏற்படுத்த, தமிழ்த்தாய் வாழ்த்தும் சூடு பிடித்து விறுவிறுப்புடன் இசைந்தது. (எதுக்கு எத முடிச்சி போடுறதுன்னு விவஸ்த இல்ல – அப்படின்னு நீங்க திட்டுறது காதுல விழுது, மனசுல பட்டத சொன்னேன், அவ்வளவுதான்....) எழுச்சியான வரிகள், ஆர்ப்பாட்டம் இல்லாத இசை. நண்பர்கள் சிலர் பாட்டோடு சேர்ந்து முணுமுணுத்தனர். இதற்கு முன் இப்பாடலைக் கேட்டதாய் ஞாபகம் இல்லை, ஏற்பாட்டு குழு இந்தப் பாடலை இணையத்தில் எப்படி பெறுவது என சொன்னால் நலம்.
அவைத் தலைவராய் கி.விக்கினேசு பொறுப்பேற்றி இருந்தார். நான் இதை சொல்லியே ஆகனும் (உபயம்: ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா) - கி.விக்கினேசு வேறு, விக்னேஷ்வரன் அடைக்கலம் வேறு. கி.விக்கினேசுவும் ஒரு பதிவு எழுதி வருகிறார். கவிதை பிரியர். அவர் பேசும்பொழுது மலேசிய செய்தி வாசிப்பு புகழ் பாண்டிதுரையின் தமிழ் உச்சரிப்பு பாணி ரொம்பவே எட்டிப்பார்த்தது. அழுத்த திருத்தமாக. முக சாயலும் லேசாக சந்தேகத்தைக் கிளப்ப, நிகழ்ச்சி முடியும் தருவாயில், அருகே சென்று கேட்டேன், நீங்க பாண்டிதுரையின் ரசிகரா என்று.... “ஆம்” என்று சொல்லி இருந்தால், உங்களுக்கு அவர் சொந்தமா என்று புரளியைக் கிளப்பி இருக்கலாம். சிரித்துக் கொண்டே அப்படி எல்லாம் இல்லை என சொல்லி நழுவி விட்டார். அடுத்த முறை பேட்டி எடுத்திட வேண்டியதுதான்.
வரவேற்புரை வழங்கியவர், திரு சுப. நற்குணன். நிறைய செய்திகளையும், கருத்துகளையும் பக்குவப்பட்ட பேச்சாளர் பாணியில் பகிர்ந்துக் கொண்டார். வலைப்பூக்களுக்கு சிலர் வைத்துள்ள வேடிக்கையான அல்லது காலித்தனமான பெயர்களைச் சுட்டி வந்திருந்த செம்பருத்தி இதழின் ஒரு கட்டுரையைப் படித்துக் காட்டினார். சிரிப்பலை பொங்கியது.
தமிழ்ப்பதிவர்களின் வலைப்பதிவுகளைச் சுமந்து பவர்பாயிண்ட் படைப்பு ஒன்று கணினித்திரையில் காட்டப்பட்டது. அதைச் சேகரித்தமைக்கும், ஒவ்வொரு பதிவுக்கும் கவிதையான அறிமுகத் தலைப்பு இட்டமைக்கும் நிச்சயம் ஏற்பாட்டுக் குழுவைப் பாராட்டியே தீரவேண்டும்.
பிறகு வழக்கம் போல அறிமுகச் சுற்று. ஒருவர் பின் ஒருவராக அறிமுகம். ஏறக்குறைய முப்பது பேர் கொண்ட கூட்டம். பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர் கல்லூரி மாணாக்கர், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், அரசு அதிகாரிகள்/ஊழியர்கள், பொது சேவையாளர்கள், தனியார் ஊழியர்கள் என பல தரப்பட்ட பதிவர்களும், பதிவ எண்ணம் கொண்டிருந்தோரும் அதில் அடங்குவர். போம்பா ரவியின் ஆய்வுக் கட்டுரை, தமிழ்மாறனின் குழந்தைகளுக்கான வலைப்பூ, இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முன் கருத்தை மட்டுறத்த வேண்டுமா என்ற பல ஐயங்களும், கேள்விகளும் வெளிக்கொணரப் பட்டன. (குறிப்பெடுக்க இயலவில்லை, எல்லார் பேசியதையும் நினைவில் வைக்க முடியவில்லை, வருந்துகிறேன்)
சிறப்புரை ஆற்றியவர் “மலேசிய இன்று” சி.ம.இளந்தமிழ். அப்பப்பா, என்ன தன்னடக்கம். இயன்றவரை தூய தமிழில் தகவல் தொழில்நுட்பத்தை அவர் பேச முற்பட்டது போற்றுதலுக்கு உரியது. பல விசயங்களைத் தடையின்றி மறைவின்றி பகிர்ந்துக் கொண்டார்.
விக்னேஷ்வரன் முந்தைய சந்திப்பின் மணித்துளிகளைப் பகிர்ந்துக்கொண்டார். உள்ளூர் நாளிதழில் தனக்கு நடந்த கசப்பான சம்பவத்தைச் சொன்னார். இணைய ஊடகத்தின்பால் அச்சு ஊடகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைக் கோடி காட்டினார்.
பிறகு விக்னேஷ்வரன் அடைக்கலம் சில நிமிட ஆசானாக வேடம் பூண்டார்; கையில் பிரம்பு தான் இல்லை. புதிதாய் வலைப்பதிவு துவங்க எண்ணும் அன்பர்களுக்கு வழிகாட்டினார்.

(நன்றி: புகைப்படம் - மலேசிய இன்று)
பிறகு சிறு அளவளாவல். சிரித்த முகத்தோடு முடிவுரை வழங்கியவர் ரொம்ப நல்லவர் - கோவி மதிவரன். திருக்குறள், செய்யுள் என அவரது உரை மிளிர்ந்தது. இவரது வலைப் பதிவில் கேள்வி அங்கம் இருக்கிறதாம். நண்பர்களே, கேள்வி இருந்தால் உடனே இவரை நாடுவோம். (விவேக் கேட்பது போன்ற ‘தாஸ்’ கேள்விகள் கேட்பதாயினும் கோவி கோவிக்காமல் பதில் சொல்லுவார்)
பிறகு விடை பெறும் நேரம். சுப நற்குணன் அனைவருக்கும் தமிழ் நாட்காட்டியையும், ‘நாள் வழிபாடு’ என்னும் கையடக்க நூலையும் அன்பளிப்பாக அளித்தார். அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டேன்.
து.பவனேஸ் அந்த கவிதாவைக் கூட்டி வரவே இல்லை, கேட்டதுக்கு அவரது தோள்பைக்குள்ளே இருப்பதாய் சொல்லி ஏமாற்றி விட்டார். விக்னேஷ் அடைக்கலத்திடம் இம்முறை அதிகமாகப் பேச முடியவில்லை. சென்ற முறை சந்தித்த பதிவ நண்பர்கள் டாக்டர் சிந்தோக், மு.வேலன், இனியவள் புனிதா, கவிஞர் பிரான்சிஸ், மூர்த்தி முதலியோர் மிஸ்ஸிங். விவேகானந்தர் சதீசு, தேடுபவன், மைஃப்ரண்ட் அனுராதா, ஆய்தன் போன்றோரை இம்முறையும் காண முடியவில்லை.
(எனது கட்டுரையில் ஏதும் அங்கம் அல்லது கருத்து விடுபட்டிருப்பின் அது எனது ஞாபக மறதியே தவிர, இருட்டடிப்போ அல்லது நுண்ணரசியலோ அல்ல.)
மேலும் விபரம் அறிய ஏனைய நண்பர்களின் வலைப்பதிவையும் வலம் வரவும்.
இந்த கட்டுரையைப் பொறுமையுடன் வாசித்தவரா நீங்கள்? அப்படியானால், உடனே கீழே ஒரு மறுமொழி இட்டு உங்கள் வருகையை அம்பலப் படுத்துங்கள்.
















