பக்கங்கள்

சனி, 3 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (61-80)


நினைவை எட்டிய முதல்நூறு (61-80)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

பெரும்பாலான சினிமா பாடல்கள் அரைத்த மாவையே அரைத்தாலும், ஒரு சில நேரங்களில் அவற்றில் ஏதாவது ஒன்று நம் கவனத்தை ஈர்க்கத்தான் செய்கின்றன. நாமும் அதை முணுமுணுப்பதில் ஓர் இன்பத்தைக் காண்கிறோம்.

அவ்வண்ணம் நான் களித்தவற்றில் நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் இங்கே (நேற்றைய தொடர்ச்சிதான்):

முன்குறிப்பு:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

61. கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு எனக்கும் இருக்கு உனக்கு மேலே...
62. உன்னைப் பார்த்தெந்தன் தாய்மொழி மறந்தேன்
63. நீ தூரப்பச்சை, என் நெடுநாள் இச்சை
64. விண்ணப்பம் நீ போடு இந்நாளிலே, கன்னங்கள் பதில் போடும் பின்னாளிலே
65. என்ன நான் கேட்பேன் தெரியாதா? இன்னமும் என் மனம் புரியாதா?
66. பூவின் முகவரி காற்று அறியுமே, என்னை உன் மனம் அறியாதா?
67. நானுன்னைக் காணத்தானா யுகம் தோறும் காத்து கிடந்தேனா
68. உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை
69. துணியால் கண்ணையும் கட்டி, கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறேன் அவள, தனியா எங்கே போனாளோ!
70. என்னை மட்டும் விட்டு விட்டு பூமி இங்கு சுத்துதென்ன...
71. இரவில் காயும் முழுநிலா, எனக்கு மட்டும் சுடும் நிலா...
72. ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்?
73. அமுதென்பதா விஷம் என்பதா இல்லை அமுத விஷமென்பதா
74. அடி பூகம்ப வேளையிலும் இரு வான்கோழி கலவி கொள்ளும்... அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும் சுற்றி நின்றாடும் தீ வண்ணம் அணைவது திண்ணம்.
75. தள்ளி தள்ளி நிற்க நான் மழைத் தூறல் இல்லையே, கஷ்டப்பட்டு கற்க நான் கல்லூரி இல்லையே
76. கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ, தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்க்காதோ
77. அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே, வெட்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே
78. முடிவென்பதே ஆரம்பமே, வலைவில்லாமல் வழி கிடையாதே
79. தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி, வெற்றிக்கு அதுவே ஏணியடி
80. பழமை வேறு பழசு வேறு, வேறுபாட்டை தெரிஞ்சிக்கனும்
(எஞ்சியவை இருபது)

வெள்ளி, 2 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (41-60)


நினைவை எட்டிய முதல்நூறு (41-60)
- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

பாட்டு, இசை நாம் பிறந்தது தொட்டு கூடவே பயணிக்கும் ஒரு சொத்து. தமிழை மூன்று வகையாகப் பிரித்த போது கூட இசைக்கு ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. இசையில் மூழ்கும்போது நாம் நம்மை மறந்து போகின்ற தருணங்களும் உள்ளன. இசையைக் கொண்டு மருத்துவம் கூட செய்யப்படுகிறது.

இதெல்லாம் ஏன் திடீரென சொல்லிக்கிட்டு இருக்கேன்னு கேட்கலாம் நீங்க. போன ரெண்டு நாளா எனக்குப் புடிச்ச பாட்டு வரிய போட்டுக்கிட்டு வரேன், அதோட தொடர்ச்சிதான் இன்னிக்கும்.

உடனே ஞாபகத்துக்கு வந்த முதல் நூறு தமிழ்ப்பாட்டு வரிகள் கீழே:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
41. கடவுள் இருப்பது தூரமடா, உன் காதல் இருப்பது அண்மையடா... நீ கடவுளை அடைவது சாத்தியமா, இல்லை காதலை அடைவது சாத்தியமா?

42. காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ, மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ!

43. தலை சாய்த்து பார்த்தாயே, தடுமாறி போனேனே...

44. வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி... ~~~ நான் வாழ்வதும் விடை கொண்டு போவதும் உன் வார்த்தையில் உள்ளதடி

45. உனையன்றி வேறொரு நினைவில்லை, இனி இந்த ஊனுயிர் எனதில்லை, தடையில்லை சாவிலுமே உன்னோடு வர...

46. என்னைத் தந்து உன்னை வாங்க வந்தேனே, இள வேனில் காற்றின் வெப்பம் தாக்க நின்றேனே

47. சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும், புள்ளி மான்கள் புன்னகை செய்து வேடனை வீழ்த்தும்

48. கடல் மீதொரு துளி வீழ்ந்ததே, அதைத் தேடி தேடி பார்த்தேன்

49. கடலுக்கு மேல் ஒரு மழைத்துளி வந்து விழுந்ததே, உப்பென மாறுமா... இல்லை முத்தென மாறுமா? ~~~ தடுப்பதைப் போல நடித்திடும்போதும் தத்தித்தாவி கண்கள் ஓடும், அடுத்தது என்ன அடுத்தது என்ன அணையைத் தாண்டி உள்ளம் கேட்கும் இது சரியா....

50. தருகின்ற பொருளாய் காதல் இல்லை, தந்தாலே காதல் - காதல் இல்லை

51. நீ என்னைப் பிரிந்ததாய் யார் சொன்னது? என் உயிருள்ள புள்ளிதான் நீ வாழ்வது...

52. இனியொரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா, அதுவரை என்னைக் காற்றோடு சேர்த்திடவா

53. காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம், நரகம் சுகம் அல்லவா?

54. மாமன் பொண்ணே மச்சம் பாத்து நாளாச்சு, உன் மச்சானுக்கு மயிலப்பசுவு தோதாச்சு

55. அடி சூடான மழையே உடம்பு நனைஞ்சிக்கலாமா? கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா?

56. விடவேண்டும் அச்சத்தை, தொட வேண்டும் உச்சத்தை, அதிகாலை சேலை சொல்லுமடி மிச்சத்தை

57. அன்பே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி, சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி

58. யாரோ பெறுவார் பிள்ளை, இவரு தருவார் ‘பில்’-லை

59. உப்பு கடல வாங்கி தின்போம், தப்பா கடல போட மாட்டோம்

60. அவ தங்கச்சி பாப்பாக்கு முட்டாயி வாங்கியே தந்தேனே, முட்டாய் வாங்கி தந்தேனே, மாமு முட்டாளா ஆனேனே...

(எஞ்சியவை பின்னாளில்)

வியாழன், 1 ஜனவரி, 2009

நினைவை எட்டிய முதல்நூறு (21-40)


நினைவை எட்டிய முதல்நூறு (21-40)

- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு


பாடல் அல்லது இசை கேட்பதே ஓர் அலாதி இன்பம்தான், இல்லையா? ஒரு சிலர் இசை கேட்பதையே ஒரு பொழுது போக்காய் வைத்துள்ளனர்.


வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ அல்லது நண்பரின் கைப்பேசியிலோ ஒலித்த இசையை உள்வாங்குகிறோம், பின் நம்மை அறியாமலே அதை முணுமுணுக்க செய்கிறோம்.

ஒரு முழுப்பாடலில், ஏதோ ஒரு கட்டத்தை நாம் ஆழமாக ரசித்து விடுகிறோம். அதற்கு காரணம், அந்த குறிப்பிட்ட வரியின் மொழியாளுமையா? இசையின் கவர்ச்சியா? பாடகரின் குரல் ஈர்ப்பா? அல்லது காட்சியின் வசீகரமா? எதுவாயினும் அவ்வரிகளில் நாம் வீழ்ந்ததை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்?

அவ்வண்ணம் என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,

சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் இதோ:

முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?

முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21. நான் என்றால் நானில்லை நீதானே நானாயானேன், நீ அழுதால் நான் துடிப்பேன்

22. உந்தன் பார்வை எந்தன் மீது விழ ஏதோ நானும் காத்திருந்தேன், வெளியே சொன்னால் ரகசியமா? என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே!

23. விழிகளின் அருகினில் வானம், வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம்... இது முதல் முதல் அனுபவமோ?

24. உன்னை மட்டும் சுமந்து நடந்தால் உயரும் தூரம் தெரியாது, உன்னில் வந்தொரு பூ விழுந்தால் என்னால் தாங்க முடியாது.

25. சட்டென்று மாறுது வானிலை, பெண்ணே உன் மேல் பிழை

26. சுட்டு விரலாய் நீயும் கட்டை விரலாய் நானும் எழுதும் எதுவும் கவிதையாக மாறும்

27. என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும் உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்.

28. வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி...

29. வியந்து வியந்து உடைந்து உடைந்து சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு இந்த நிமிடம் மீண்டும் பிறந்து உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...

30. நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு, உனக்காகக் காத்திருப்பேன், உயிரோடு பார்த்திருப்பேன்...

31. மெய்யாக நீ என்னை விரும்பாதப் போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்... நிஜம் உந்தன் காதல் என்றால்!

32. கண்மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்... கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன், உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே

33. பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய், நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

34. இறுதிச் சடங்கில் மிதிகள்படும் பூவைப் போல் கசங்கிவிட்டேன்

35. தாத்தா ஓட்டிய குதிரை இன்று வேலைக்காகாது

36. விதைகளில் உள்ள பழங்களை எண்ண முடியாது, விழிகளில் உள்ள கனவுகள் சொல்லி துலையாது...

37. இன்னுங் கொஞ்சம் ஊத்து, சுதி கொஞ்சம் ஏத்து, மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து...

38. சாமி தவித்தான், தாயைப் படைத்தான் உன் காலடி மட்டும் தருவாய் தாயே, சொர்க்கம் என்பது பொய்யே

39. தாயழுதாளே நீ வர, நீயழுதாயே தாய் வர

40. நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்

(எஞ்சியவை பின்னாளில்)

புதன், 31 டிசம்பர், 2008

நினைவை எட்டிய முதற்நூறு (1-20)


நினைவை எட்டிய முதற்நூறு (1-20)

- கவர்ந்த பாடல் வரிகளின் திரட்டு

ஒரு நாளில் நாம் எத்தனையோ பாடல்களைச் செவியினூடே கேட்கிறோம், ஒரு சில பாடல்கள்தாம் நம்மைக் கவர்கின்றன, ஈர்க்கின்றன;
அப்படி ஈர்ப்பவையில் குறிப்பிட்ட ஓரிரு வரிகளில் நாம் விழுந்துவிடுவதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அவ்வண்ணம் என்னை விழ வைத்து இன்னும் எழ விடாமல் இது நாள்வரை நீட்டித்துக் கொண்டிருப்பவை இவை,
சட்டென்று நினைவை எட்டிய முதல் நூறு தமிழ்ப்பாடல் வரிகள் பின்வருமாறு:
முன்குறிப்பு 1: பாட்டோட தலைப்போ இல்லாட்டி படத்தோட தலைப்போ நீங்க கேட்காம சொல்ல மாட்டேன், பரவால்லியா...?
முன்குறிப்பு 2:
இன்பத்து காதல்
துன்பத்து காதல்
இ(கொ)ச்சை
மற்றவை (மேற்கண்டவையில் சேராதவை)


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. நேசம் மறக்கவில்லை நெஞ்சம், எனில் நினைவு முகம் மறக்கலாமோ?
2. உன் சேல காத்திலாட, என் நெஞ்சும் சேந்தாட
3. உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது... இது கம்பன்
பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது...
4. காதல்?... கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ஹூம்ம்ம் ம்ம்ம்... ம்ம்ம்?... நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவல்லோ...
5. அந்த நிலவை எடுத்து கவரி வீசவா, எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா...
6. சகாயமே உன்னருகினில் நிலைப்பெறுவேனே, தடாகமே புன்முறுவலில் நனைந்திடுவேனே...
7. அடிவானம் சிவந்தாலும் குடிப்பூக்கள் பிளந்தாலும் உனைப் போல இருக்காது அழகே
8. அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
9. யாவும் நீயாய் மாறிப் போக நானும் நானில்லையே... மேலும் மேலும் கூடும் காதல் நீங்கினால் தொல்லையே... தெளிவாகச் சொன்னால் தொலைந்தேனே உன்னால்...!
10. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் தவணை முறையில் மரணம் நிகழும், விலகிப் போகாதே தொலைந்துப் போவேனே நான்....!
11. என்ன இருந்தப் போதும் அவள் எனதில்லையே... மறந்துப்போ என் மனமே!
12. மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே... மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ...
13. மரபு வேலிக்குள் நீ இருக்க, மறக்க நினைக்கிறேன் முடியவில்லை!!!
14. நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை, நெருக்கமே காதல் பாஷை
15. மங்கை மான் விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன?
16. பாராமல் போன பௌர்ணமி எல்லாம் பறித்து கொடுக்கும் ஒருவன், கேளாமால் போன பாடலை எல்லாம் திரட்டி கொடுக்கும் ஒருவன்...
17. இழப்பதை இங்கே இன்பம் என்று கொண்டேன், நஷ்டங்களே லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன் சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான், லயித்து கிடந்தேன் லட்சியத்தை முடித்தான்
18. அழகிய துளி, அதிசய துளி தொட தொட பரவசமே
19. நதியும் குளிக்கின்றதே, நனைய வா என்றதே, பார்த்த இன்பம் பாதி, இன்பம் நனைவேன் நானே
20. வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனித்துளி ஆவேனோ
(எஞ்சியவை பின்னாளில்)

வெள்ளி, 26 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (5)

(கடைசி பாகமுங்கோ)


கிசு கிசு குசுலக்குமாரி


... ... சுடலையின் தட்டும் காலியாகி விட்டது. தட்டில் எஞ்சி இருந்த ஈரமும் காய ஆரம்பித்துவிட்டது. உணவு எடுக்கச் சென்ற உப்புலி மட்டும் திரும்பி வரவில்லை. நேரமாவதால் அவனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட நினைத்தான். அவன் கைப்பேசிக்கு இணைப்பு கிட்டியது, ஆனால் அவன் எடுக்கவில்லை. சுடலைக்குச் சந்தேகம் வலுத்தது.


(பாகம் 5)


உணவு எடுக்கும் இடத்திற்கு அருகில் கூட்டம் குழுவி இருந்தது. சலசலப்பான சூழ்நிலை சுடலையைக் கலவரப் படுத்தியது. என்ன, ஏது என மூக்கை நுழைப்பதில் நம்மவருக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்? சுடலையும் ஆவல் ததும்ப எட்டி பார்த்தான். அதிர்ச்சி. ஆனால் அவனை அறியாமல் சிரித்துக் கொண்டிருந்தான்.

அன்பு நண்பன் உப்புலிதான் கூட்டத்துக்குக் காரணம். அவன் மட்டும் அல்ல, அவனோடு குசுலக்குமாரியும். இருவரும் சேற்றில் வழுக்கி புரண்டு கொண்டிருந்தனர். சுற்றி இருந்தவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அவர்களுக்கு உதவவில்லை, சினிமாவில் காண்பிப்பது போல. அந்த இக்கட்டிலும் கூட குசுல் தனது கருமத்தில் இருந்து பின் வாங்கவில்லை. முடிந்த வரை பத்திரிக்கையில் கிசுகிசு வரும் அளவுக்கு அத்தனை சேட்டைகளையும் செய்தாள்.

சுடலை மனசு கேட்காமல், கூட்டத்தைக் கலைத்து நண்பனுக்குக் கை கொடுத்தான். அவளும் எழுந்து வந்தாள். விசாரித்த போது, உப்புலி சொன்னது சிரிப்பு சிரிப்பாக வந்தது. உப்புலி உணவு எடுக்க சென்ற போது குசுலக்குமாரியைச் சந்தித்து இருக்கிறான். அவள் பேசிக் கொண்டே அவசரமாக நடந்திருக்கிறாள். தூக்கு சப்பாத்து; சொத சொதவென இருந்த புட்தரை; நடக்கும் போது கால் சேற்றில் மாட்டிக் கொண்டு தடுமாறி இருக்கிறாள். உப்புலியும் ஹீரோவைப் போல பாய்ந்து அவளைத் தாங்கி பிடிக்க, அந்த 80 கிலோ இம்சையைத் தூக்க முடியாமல் மூச்சடைத்து தானும் சேற்றில் விழுந்திருக்கிறான். பிறகு நடந்தது தான் தெரியுமே.


உப்புலியின் மீது ஒட்டிக் கொண்டிருந்த சேற்றைக் கழுவி விட்டு அவனைத் தன் மகிழுந்திலேயே ஏற்றிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். பாவம் உப்புலி, அரண்டு போய் இருந்தான். முகம் வெளுத்து இருந்தது. சுடலைக்கு இதில் என்ன மகிழ்ச்சியான விசயம் என்றால், தான் இதன் வழியாக பத்திரிக்கை செவ்வியில் இருந்து தப்பித்ததே. ஒரு கண்டம் மீண்ட தெம்பு அவன் முகத்தில். வாகனத்தைச் செலுத்திக் கொண்டே அடிக்கடி உப்புலியைப் பார்த்து கேலியாகச் சிரித்தான்.

உப்புலியின் கைப்பேசி, குறுஞ்செய்திக்கான ஓசையை ஒலித்தது. அரை ஈரத்தோடு இருந்த காற்சட்டை பைக்குள் கையை விட்டு கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். அதிர்ச்சி விழிகளோடு செய்தியைச் சுடலையிடம் பகிர்ந்துக் கொண்டான்.

அனுப்புனர்: குசுலக்குமாரி
செய்தி : “டியர் உப்புலி, நடந்தத எண்ணி வருத்தம் வேண்டாம், உங்க உதவிக்கு நன்றி, இனி அடிக்கடி சந்திக்கலாம். இன்று இரவு, இரவு வணக்கம் சொல்ல உங்களுக்கு அழைப்பு செய்வேன், காத்திருக்கவும்”

“ஹாஹா... ஐயோ.... மச்சா உனக்கு லாட்டரி அடிச்சிருச்சுடா... குசுலக்குமாரி மாதிரி ஒரு அட்டு பிகர் கேட்ட... இப்போ அவளே உன்னை தேடி வர்ர மதிரி தெரியுது... நீ சொன்ன சாமர்த்தியத்த இப்போ காட்டுடா மச்சா.”
அவனை வெறுப்பேற்றவே சொன்னான் சுடலை.
குசுல் இனி தன்னை அவ்வளவாக தொந்தரவு செய்ய மாட்டாள் என்று சுடலை உற்சாகமானான்.
அவன் சொல்லி வாய் மூடுவதற்குள்ளேயே உப்புலியின் கைப்பேசி அலற தொடங்கி விட்டது. அழைப்பு குசுலக்குமாரியிடம் இருந்து. எடுப்பதா இல்லையா என தெரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டே இருக்கிறான் உப்புலி.

(கிசுகிசு முற்றும்)

சனி, 20 டிசம்பர், 2008

எங்கே போகிறோம்? - நாவல்


எங்கே போகிறோம்?


- நாவல்


“எங்கே போகிறோம்”என்பது எனது கேள்வியன்று. அண்மையில் நான் படித்த ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளரின் பழைய புதினம். சென்னையின் ‘தாகம்’ நிறுவனத்தின் வெளியீடு. இது இலக்கிய பரிசு பெற்ற ஒரு நாவலும் கூட.



எனக்கு இதைப் பரிசாக அளித்தவர் நண்பர் விக்னேஷ்வரன் அடைக்கலம். அண்மைய சந்திப்பின் போது எனக்குள் வாசிக்கும் பழக்கத்தை விதைக்கும் பொருட்டு அவர் இதைப் பரிசளித்து இருக்க வேண்டும். முதலில் அவருக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகட்டும். அவரின் அன்பு கட்டளைக்கு இணங்க இதோ அந்நாவலை பற்றிய எனது எண்ணங்கள். (விமர்சனமன்று)



இந்திய நாட்டில், சுதந்திரத்திற்குப் பத்தாண்டு காலத்துக்குப் பிறகு நிகழ்ந்த பல உண்மை சம்பவங்களைக் கற்பனை கதாப்பாத்திரங்களோடு சொல்ல முற்பட்டுள்ளார் கதை ஆசிரியர். சுதந்திரத்துக்குப் பின்பும் நாட்டின் எதிர்கால பின்னடைவுக்கு யார் காரணம், நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்ற கதைக்கருவையே சுற்றி கதையும் கதையின் பாத்திர அமைப்புகளும் பின்னப்பட்டுள்ளன.



காந்திய நெடி நாவல் முழுக்க வலம் வந்துள்ளது. அதன் நிறைகளை மட்டுமின்றி குறைகளையும் அதன் வீழ்ச்சிக்கு எவை வித்தாக அமைந்திருக்கக் கூடுவன என்பதையும் கதையினூடே சொல்லியுள்ளார். காந்தியத்தின் தெளிவான நோக்கம், அதைப் பற்றிய மக்களின் குறுகலான கண்ணோட்டம், சுதந்திரத்துக்குப் பின்பு எவ்வாறு அதைச் சாத்தியப் படுத்துவது - இவற்றை வாசகர் மனத்தில் விதைப்பதாகவே இந்நாவல் புனையப் பட்டுள்ளது.

சுதந்திரத்துக்குப் பத்தாண்டுகள் கடந்து வந்து சென்னையை மையமகாக் கொண்டு கதை துவங்கப் பட்டுள்ளது. சுதந்திரத்துக்காக பாடுவட்டவர் ராமலிங்கம். அவரது மனைவி லட்சுமிஅம்மாள். அவர்களுக்கு சிதம்பரம், பாரதி, சுபாஷ் என மூன்று குழந்தைகள். குழந்தைகளின் பெயர்களில் சுதந்திரப் போராளிகள் வாழ்கின்றனர். அகிம்சைவாதியாக காந்தியின் கொள்கையில் வாழும் ராமலிங்கமும் அவரது மூத்த புதல்வன் சிதம்பரமும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், இழப்புகள், போராட்டங்கள் என கதை நகர்கிறது. இளைய மகள் பாரதி மற்றும் மகன் சுபாஷ் இருவரும் கார்ல்மாக்ஸ் பாதையை வாழ்க்கையில் கடைபிடிக்கின்றனர். கார்ல்மாக்ஸ் – காந்தியம், இவை இரண்டுக்கும் இருக்கும் ஒற்றுமைகளையும் ஆசிரியர் இனம் கண்டுள்ளார். நாடு மற்றும் அரசியல் தொடர்புடைய கதை என்றாலும் கூட, குடும்ப அன்பும் தோழமை பரிவும் காதலும் ஆங்காங்கே கதைக்குச் சுவாரசியம் ஊட்டுகின்றன.

கதையின் ஓட்டத்தை வளப்படுத்த, ராமலிங்கத்தின் குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து கதையில் இன்னும் பல பாத்திரப் படைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கதையில் வரும் கதைமாந்தர்களைப் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகையானது நாட்டுக்கு நல்லது செய்ய போராடும் கூட்டம். இந்த பட்டியலில் சிதம்பரம், ராமலிங்கம், சலீம், கணேசன், எழுத்தாளர் ரத்தினம், ராகவன், கோபாலன், அன்பானந்தம், வளநாடன், நரசிம்மன், சுபாஷ், ராமநாதன், போன்றோரைச் சேர்க்கலாம்.

இரண்டாம் வகையானது, முன்னம் சொல்லப்பட்டதுக்கு மாறுபட்டு இருப்பது, அதாவது நாட்டுக்குத் துரோகம் இழைத்து, சொத்து குவிக்க அலைபவர்கள். இந்த வகை பட்டியலில் பொன்னையா, பஞ்சாபகேசன் (பஞ்சு), துரைசாமி, பாலசுந்தரம், சுந்தரேசன், உஷா, நடிகர் குமரேசன், சியாமளா, காதர்பாவா, கன்னையாலால், திருவேங்கிடம் போன்றோர் அடங்குவர்.

இந்த இரு வகைகளிலும் சம்பந்தப் படாமல் இருக்கும் பாத்திரப் படைப்புகளும் உள்ளன. லட்சுமிஅம்மாள், பாரதி, டாக்டர் ராஜன், மீனா போன்றோர் அவர்கள்.

இந்த இரண்டு வகைகளிலும் கலந்து இருப்பவள், கதைக்கு நாயகி தரம் கொடுக்கப்பட்ட புவனா (புவனேசுவரி). முரண்பாட்டான பாத்திரப் படைப்பு. நல்லதும் செய்கிறாள், கெட்டதும் செய்கிறாள், ஆனால் நல்லவள்தான் என்று ஆணித்தரமாக உடனுக்குடன் வலியுறுத்துகிறார் ஆசிரியர். அவள் ஒரு புரியாத புதிர் என்று ஆசிரியரே ஓரிடத்தில் சொல்கிறார்.

‘விடிவெள்ளி’ கோபாலன், நடிகை சியாமளா, ராமநாதன் போன்றோர் கதைக்குத் தேவைப்பட்ட நிழல் கதாப்பாத்திரங்கள்.

கௌரவத் தோற்றம் போன்று, இந்தியப் பிரதமர் நேருவை ஒரு கட்டத்தில் கதைக்குள் திடீர் கதாப்பாத்திரமாக நுழைத்துள்ளார் ஆசிரியர்.

ஆசிரியர் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் மிக அருமையாகவே கையாண்டுள்ளார். தாம் சொல்ல வந்த கருத்தைச் சலிப்பு தட்டா வண்ணம், கதைமாந்தர்கள் வழிகாயாகவே சொல்லி இருக்கிறார். அவர்கள் நினைவு கூர்வதாகச் சொல்லி வரலாற்றின் முக்கிய கூற்றுகளை அழகாக இந்த தலைமுறைக்கு எடுத்துரைத்து உள்ளார். ஆயினும், முதல் சில அத்தியாயங்கள் சுவாரசியம் குன்றி இருப்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

விலைமாதுவாக புவனாவை அறிமுகப்படுத்தி, அவளைவிட கேவலமானவர்கள் இந்த நாட்டைக் கொள்ளையடிப்பவர்கள் என சுட்டிக் காட்டி இருப்பது ஆசிரியரின் துணிச்சல். சிதம்பரம் மற்றும் எழுத்தாளர் ரத்தினத்தின் மூலமாக ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவும் வாழவும் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தம்மைப் போன்ற எழுத்தாளர்களின் பலத்தையும் சொல்லாமால் இல்லை. ‘புது வாழ்வு’ பத்திரிக்கையின் நோக்கங்கள் என பட்டியல் போட்டுக் காட்டும்போது, ஒரு பத்திரிக்கைக்கான இலக்கணத்தை மறைமுகமாக மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

புவனாவின் கதாப்பத்திரத்தில் பல மர்மங்களைப் புகுத்தி பின் கதையோட்டத்தில் மர்மங்களை உடைத்துள்ளார். ஆசிரியருக்குக் கதையின் நாயகன் சிதம்பரத்தின் மீது என்ன கோபமோ? போராட்டம் குணம் இருப்பவனாய் காட்டினாலும், அடிக்கடி அழுது கரைபவனாகக் காட்டி இருக்கிறார். மற்றவர் இடித்துரைத்தப் பின்னே அதை உணரும் அப்பாவியாய் சில இடங்களில் சித்தரிக்கப் படுகிறான். மேலும், தழுதழுத்தக் குரல் ஆங்காங்கே அவன் மட்டுமின்றி பலர் வடிவிலும் ஒலித்துள்ளது.

ஐந்நூறு ரூபாயும் அதன் மடங்குகளும் (ஐயாயிரம், ஐந்து லட்சம்) அடிக்கடி கதையில் அடிபடுகிறது. புவனாவின் வரதட்சணை, அவளது ஒரு மணிநேர ஊதியம், சலீம் தந்து உதவும் பணம் இப்படி பல இடங்களில்.

கதையில் நரசிம்மன் என்ற பாத்திர புகுத்தல், ஆசிரியரின் ஆற்றலைப் பிரமிக்க வைக்கும் ஓர் உதாரணம். காரணம், பஞ்சுவின் பத்திரிக்கை கூட்டத்துக்கு அழையா விருந்தினராய் அவரைப் புகுத்தி, ஆசிரியர் தனது கொள்கை கருத்தை அங்கேயும் தெவிட்டாமல் சொல்லி இருக்கிறார். ஆயினும், ஆசிரியர் மற்ற பல இடங்களில் வரலாற்று சம்பவங்களை வலிய திணிப்பது நெருடல்தான். சலிப்பையும் ஏற்படுத்துகிறது. ஹிட்லர் வீழ்ச்சியை எளிய முறையில் சொல்லி இருப்பது அருமை.

உஷா, சியாமளா, பஞ்சு, குமரேசன் முதலியோர் பந்தாடப்படுவது சிரிப்புக்கு விருந்து. சிதம்பரமும் புவனாவும் சந்திக்கும் தருணங்கள் பக்குவப்பட்ட காதலின் வெளிப்பாடு.

பக்கம் 225ல், கால விரயம் – பண விரயம் இதில் ஏதாவது ஒன்றை அடைந்தே இன்னொன்றைத் தவிர்க்க முடிகிறது என்பதை எடுத்துக்காட்டோடு எதார்த்தமாகச் சொல்லி இருக்கிறார்.

பக்கம் 221ல், 22வது வரியில் நாவலின் தலைப்பை ஞாபகப் படுத்தும் வண்ணம், சலீம் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் “இந்த நாடு இப்ப எங்கே போகுது?” என்று வினா எழுப்பப்படுகிறது. இதன்வழி “எங்கே போகிறோம்?” என்ற கேள்வியானது நாட்டு மக்களைப் பார்த்து கேட்கப் படுவதாக உணரப்படுகிறது.

நீங்களும் உடனே இந்த நாவலைப் படித்து (ஏற்கனவே படித்திராத பட்சத்தில்) உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமே!

புதன், 17 டிசம்பர், 2008

கிசு கிசு குசுலக்குமாரி (4)

கிசு கிசு குசுலக்குமாரி

சுடலைக்கு விட்டது “வெள்ளிக்கிழமையின் மறுநாள்” என்றிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரும் நிகழ்ந்ததைக் கூர்ந்து அவதானித்ததாகப் புலப்படவில்லை. பெருமூச்சை அடுத்து உணவை மங்கின் மீது குவிப்பதில் மும்முறமானான்.


(பாகம் 4)




சாப்பிட்டக் கையோடு உடனே கிளம்பி விட திட்டம் தீட்டினான். உட்கார இடம் தேடினான். தூரத்தில் சக நடிகன் உப்புலி உணவு அருந்திக் கொண்டிருந்தான். அவன் மேசையில் இடம் காலியாக இருந்தது. அங்கே விரைந்தான். உப்புலியும் சுடலையும் நல்ல நண்பர்கள். சற்றுமுன் குசுலிடம் பேசிக் கொண்டிருந்ததை அவனிடம் சொன்னான்.



உப்புலிக்குச் சிரிப்பு தாங்க முடியவில்லை.
“மச்சா நீ ரொம்ப பாவம்டா”

“என்னை பார்த்தா சிரிப்பா இருக்குல்ல? சிரிடா சிரி”

“அதில்லடா, இந்த மாதிரி லூசெல்லாம் எப்படிடா சினிமால சேர்த்துக்குறாங்க?”

“என்னமோ நடிச்சி சாதனை படைச்சிட்ட மாதிரி, அப்புறமா ப்ரஸ்க்கு இண்டர்வியூ வேற, என்ன கொடுமைடா இது?”

“அத விடு மச்சா, உன்னைக் கூப்பிட்டதா சொன்னியே, போவ போறியா?”

“அதான்டா, எப்படி எஸ்கேப்பு ஆவுறதுன்னு தெரியல. எடக்கு மடக்கா ஏதாச்சும் அவ பேச, அவ வருங்கால புருசன் என்னை வகுந்திடப் போறான்”

“ஐய்யோ... என்னால சிரிக்காம இருக்க முடியலடா....”

“இப்போ உன்னை சிரிக்க வேணாமுன்னு யாரு அழுதா”
சுடலைக்கு வெறுப்பை யாரிடம் காட்டுவது என்று தெரியவில்லை.

சுடலைக்கு எண்ணமெல்லாம் வரப் போகும் பேட்டியின் மீதே இருந்தது. முந்தைய பேட்டியின் போது அவள் அவனைத் தொட்டு தொட்டு பேசி, அவசியமின்றி நொடிக்கொரு முறை கெக்கபுக்கெ என சிரித்து வைத்து அவன் பெயரையும் சேர்த்து நாறடித்தாள். செவ்விகளின் போது, அவளது பெரும்பேச்சுக்கும் பெறுமை பேச்சுக்கும் அவளுக்கு அவளே நிகர். கூடுதல் மழலை கொஞ்சி குலாவும். அவள் செய்யும் “நோனா” தர வித்தைகளைக் கண்டு சிரிக்காமல் இருப்பதற்கே ஆயிரம் முனிவர்களின் பக்குவம் தேவை. வெறுமனே தன்னோடு நடிக்கும் நடிகரோடு, தான் அன்னோன்யமாக இருப்பதைப் போலவே பேசுவாள்; காட்டிக் கொள்வாள். யோசித்துப் பார்த்தால் இப்படியும் ஒருத்தியா என நமக்கே வியப்பாய் இருக்கும்.



இன்றைய பேட்டியின் போது, அந்த அரசியல்வாதியான தயாரிப்பாளர் அரிவாளோடு நின்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஒரு வகையில் அவனை மெச்சியாகவே வேண்டும், இவளைக் கட்டி மேய்க்கும் பலப்பரீட்சையில் குத்தித்தற்கு. அவனும் லேசு பட்டவன் அல்லன். நடிகையைக் கரம் பிடித்தால் அரசியலில் எளிதாக வெற்றி காணலாம் என்ற குருட்டு நம்பிக்கை அவனுக்கு.


நண்பன் உப்புலி இன்னும் சிரிப்பை நிறுத்தவில்லை. சிரித்துக் கொண்டே எழுந்தான்.
“இருடா மச்சா, ஊடான் சம்பால் ரொம்ப நல்லாருக்கு, போட்டுட்டு வந்திடுறேன்”



“டேய் ஊடான் அளவா தின்னுடா... இப்பவே அங்க இங்க சொறிஞ்சிக்கிட்டு இருக்கே... இப்படியே போனா, உன்னை சொறி சிரங்கு விளம்பரத்துக்குத்தான் கூப்பிடுவாங்க... எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...”


“ஏன்டா சொல்ல மாட்டே? உனக்கு சினிமால அடிக்கடி வாய்ப்பு கொடுக்கிற குசுலக்குமாரி மாதிரி எனக்கு ஏதாவது ஒரு அட்டு பிகரு மாட்டாமலா போயிடும்?”




“மச்சா, அந்த நரக வேதனை உனக்கு வேணாம்டா. அவ வளைய சொல்லுற இடத்துல வளைஞ்சாகனும், இதோ இப்ப இந்த பேட்டியிலேந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு இருக்கேன் பாரு... இன்னும் இந்தியன் படத்துல கமல் நாடா கோக்குற வேலை மட்டும் தான் பாக்கி”




“அடப்போடா, உனக்கு சாமர்த்தியம் பத்தலை. அதைவிடு, உனக்கு ஏதாவது வேணுமா?” என தட்டைக் காட்டி கேட்டான்.




“ஒன்னும் வேணாம்டா சாமி, தட்டுல இருக்கிறத முடிச்சிட்டு முதல்ல வீடு போய் சேரணும்.”




சுடலையின் தட்டும் காலியாகி விட்டது. தட்டில் எஞ்சி இருந்த ஈரமும் காய ஆரம்பித்துவிட்டது. உணவு எடுக்கச் சென்ற உப்புலி மட்டும் திரும்பி வரவில்லை. நேரமாவதால் அவனிடம் சொல்லி விட்டு கிளம்பி விட நினைத்தான். அவன் கைப்பேசிக்கு இணைப்பு கிட்டியது, ஆனால் அவன் எடுக்கவில்லை. சுடலைக்குச் சந்தேகம் வலுத்தது.





(கிசுகிசு தொடரும்)