பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது
பாட்டன் பூட்டன் செஞ்ச தவறுயிது
யாரு நம்ம இங்கு தடுக்குறது...
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ!
இந்த பாட்டு வரிய படிச்சதுமே இது அந்த படம் தான்னு கண்டுப்புடிச்சி இருப்பிங்க. இருந்தாலும் கடமைக்குச் சொல்லிக்கிறேன். ஆமா, குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்.
நேத்திக்குத்தான் பார்த்தேன், தியேட்டர்க்கு எல்லாம் போகல. வீட்டுலேயே, திருட்டு டிவிடியிலத்தான்.
படம் தொடக்கத்திலேயே ரொம்ப பில்டப்பு போடுறாங்க. ஏதோ அசம்பாவிதம் நடந்திட்ட மாதிரியும், ஊரே அழுதுட்டு இருக்கிற மாதிரியும் காட்டுறாங்க. எழவு வீட்டுல பேசிக்கிற மாதிரி சில வசங்கள் ஓட, நமக்கு ஓரளவு ஊகிக்க முடிஞ்சிடுது. காதல் தோல்வி, இல்ல சாதி கலவரம். கிராமத்துக் கதைன்னா வேறென்ன புதுசா யோசிச்சிடப் போறாங்க?
கடந்த காலத்துல என்னதான் நடந்திருக்கும் என்பதை நாம யோசிக்கிறதுக்குள்ளாகவே, ஒரு நண்பன் மூலமா, அவன் பழச அசைப் போடுவதாய் நமக்கு கதைய சொல்றாங்க.
குசேலன் (ராமகிருஷ்ணா)– துளசி (தக்சனா). இவங்க ரெண்டு பேரும் தான் கதையில வர்ற காதலர்கள். குசேலன் அசப்புல பாண்டியராஜன ஞாபகப் படுத்துறதாலேயே என்னவோ, நம்ம பாண்டியராஜனோட “வந்தனம், வந்தனம்” பாட்டோட அவருக்கு அறிமுகம் தராங்க. துளசி அப்படியே சினேகாவையும் ஷ்ரேயாவையும் கலந்து செஞ்ச கலவை.
சரி கதைக்குப் போகலாம்
குசேலனுக்கு ஓர் அம்மா. அப்பா யாரு, இருக்காறா, இல்லையான்னு சரியா சொல்லல, அது முக்கியமாவும் தெரியல. ஊர்ல சதா லொட லொடன்னு ஏதாச்சும் வம்பு பண்ணுற செமி-வில்லன் கேரக்டர் அம்மாவுக்கு.
துளசிக்கு அம்மா அப்பா இருந்தும் இல்லாத நிலை, வயதான பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறாள். பாட்டிக்கு இந்த வயசுலத்தான் வாழ்வு வந்திருக்கு, செண்டிமெண்டல்ல செம்மையா கலக்குறாங்க. இந்த வயசுல கோடம்பாக்கத்துல ஒரு ரவுண்டு வந்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்லை.
குசேலன் படிக்கும் பள்ளிக்குப் புதிதாய் சேர்கிறாள் துளசி. ஆண் நண்பர்களோடு சகஜமாய் பழகுபவள். உன்பெயர் என்ன என ஒருவன் வழிந்து கேட்கும்போது, தயக்கமோ அல்லது (பெண்களுக்கே உரிய) பந்தா/திமிரு/நாணம் இல்லாமல் ‘தொளசி’ என்று சொல்லிவிட்டு லேசாக புன்னகை காயாமல் பார்ப்பதில் பளிச்சென்று அவளது கதாப்பாத்திரத்தைச் சித்தரிக்கிறார்கள். படிப்பில் கெட்டி, விளையாட்டிலும்.
குசேலன், நம்ம ஹீரோ, படிப்பில மந்தம். பிட்டு அடிச்சி பாஸ் பன்ற கேஸ். ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன், என்று குதூகலித்து ஓடி வரும் குசேலனை, அம்மா கேட்கிறார் “காப்பி அடிச்சி தானே ராசா பாஸ் பண்ணே”ன்னு. இந்த கிண்டலுக்குப் பிறகு இயக்குனர் ராஜமோகனின் பெயர் உதயமாகுது.
ஒருதலையாக துளசியைக் காதலித்து பின் அவளைச் சம்மதிக்க வைப்பது சுவாரசியம். காதலிக்கும் போது இவங்களும் அவங்க கடமைக்கு நிலாவுக்குப் புதிய அர்த்தம் ஒன்னு சொல்லுறாங்க. காதலியத் தேடித்தான் நிலா பூமிய சுத்தி வருவதாய்.
முதல் பாதி படு சுவாரசியமா ஓடுது. பசுமையாய், இளமையாய், துள்ளலாய், நிதர்சனமாய், யதார்த்தமாய். இரண்டாம் பாதி அழுகை, கொடுமை, அசிங்கம் என செம்ம ஜவ்வு.
பட்டணத்தில் தினத்திருடனுக்கு வாக்கப் படுகிறாள் துளசி, என்று கதையில் திருப்பம். அங்கு அவள் படும் சங்கடங்கள் கணவனால் ஏற்படும் நிந்தனைகள் எல்லாம் கடுப்பு. விசயம் அறிந்த குசேலன், தேவதாசாய் மாறுகிறான். ‘ஆட்டோகிராப்’ சேரன், ‘காதல்’ பரத், ‘7ஜீ’ ரவிகிருஷ்ணா - இப்படி ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். சிறையில் கணவன் அகப்பட்டதும், துளசி கிராமத்துக்கே வந்து விடுகிறாள். அவளை ஏக்கத்தோடு காண ஓடி வரும் குசேலனைப் பார்க்க மறுக்கிறாள். அப்போது கூட அவளது மனப்பாட்டை சரியாக சொல்லவில்லை.
ஒரு கட்டதில், “அவன் செத்திருந்தாலும் என்ன பார்க்க வந்துருக்கனும், பாட்டி” என்று குமுறுவது அவளின் பக்குவப்படாத குழந்தை மனதைச் சித்தரிக்கிறது.
துளசியின் கணவனை வெளியே மீட்டு வர குசேலன் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தியாகி காதலனின் வழக்கமான சினிமாத்தனம். Kira இவரு ரொம்ம்ம்ம்ப நல்லவராம்.
நாய் வாலு சும்மா இருக்குமா? வெளியே வந்ததுமே கணவன் ஒரு கொலை செஞ்சிடுறாரு. குசேலன் அதை தான் செஞ்சதா பலிய ஏத்துக்கிறாரு. ஊர் மக்கள் குசேலனை அடியா அடிச்சு துவைச்சி எடுத்துடுறாங்க, அப்புறமா போலிஸ் கூட்டிட்டு போகுது.
குசேலனின் இந்த தியாகத்தினால், எங்கே தனக்கு அவன் மீது காதல் கூடிவிடுமோ என்ற அச்சத்தில், கணவனைக் காட்டிக் கொடுக்க ஓடுகிறாள், துளசி. வாகனம் மோதி சாகிறாள்; குசேலன் போலிஸ் வண்டியிலிருந்து அதைப் பாஎத்துக் கொண்டே துவைத்த துணியாய் துவண்டு மாய்கிறான். இப்படி கதை முடிகிறது.
கதை புதுசு இல்லைன்னாலும், முதற் பாதி அமைந்த விதம் நம்மை கௌவி இழுக்குது. ராமகிருஷ்ணா ஆட்டத்திலும் நடிப்பிலும் டப்பிங்லயும் வெளுத்து கட்டுறாரு. ஹீரோயிஸம் அவ்வளவா தெரியல. தக்ஷ்னாவும் நல்லாவே பண்ணிருக்காங்க. அழுகைய குறைச்சிருக்கலாம், சரி அவங்க என்ன பண்ணுவாங்க, எல்லாம் இயக்குனர் சொல்ற மாதிரி தானே செய்யனும். அழுகையின் உச்சத்துக்கு போய் பின் சந்தோசத்த முகத்தில் கொண்டுவரணும். அந்த கட்டத்துல கொஞ்சம் சிரமம் பட்டிருக்காங்கன்னு நல்லாவே தெரியுது. யாருக்கும் ஒப்பனை அதிகமா இல்லை.
குசேலன் துளசியை விட சில செண்டிமீட்டர் குள்ளம் தான், ஆனால் இதை ஆசியமாகக் கூட சுட்டிக் காட்டலை. (ஏன், சூர்யா கூட சிம்ரன விட குள்ளமா தானே இருந்தாரு, ‘ஏங்கினேன் ஏங்கினேன்’ பாட்டுக்கு துரத்தி துரத்தி டூயட் பாடுலயா! ஹிஹிஹி...)
இரண்டாம் பாதியில் என்ட்ரீ ஆகிற துளசியின் கணவரும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்குறார். அவரோட அக்கா பாகம் கொஞ்சம் நெருடலா இருக்கு
படத்தின் இசை, யுவனின் வழக்கமான ரகம் தான். “சின்னஞ் சிருசுக மனசுக்குள்” பாட்டு மனச அள்ளுது. பருத்தி வீரன் படப் பாடலை ஞாபகப் படுத்துது.
“கடலோரம் ஒரு ஊரு” என்ற பாட்டு ஆடியோவில் ரெண்டு பேரு தனித்தனியா பாடி இருந்தாங்க. யுவன் பீலிங் பிச்சிக்கிற அளவுக்குப் பாடி இருப்பாரு. சரண் ரொம்ப கூலா பாடி இருப்பாரு, இதுல எது திரை ஏறும் என்ற கேள்வி இருந்துக்கிட்டே இருந்திச்சு. ரொம்ப சாமர்த்தியமா, முதல் பாதி பாட்டு யுவன் குரல்லயும் ரெண்டாவது பாதி சரண் குரல்லயும் போட்டிருந்தாங்க.
கனவு பாடலகள் இல்லாததும் கவர்ச்சி இல்லாததும் ஆரோக்கியமான விசயங்கள். ரெட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் அதைக் கொச்சையாக தராத வரை பாராட்டலாம். காதலர்கள் முத்தம் பரிமாறிக் கொள்வதை மேகம் நிலவை மூடுவதைக் கொண்டு உவமானம் செய்திருப்பது கவிதை. (இது ஏற்கனவே வேற படங்கள்ல வந்திருக்கான்னு தெரியல)
குசேலனைச் ‘கொச்சி’ என்றும் துளசியைத் ‘தொளசி’ என்றும் அழைப்பதும், ஏதோ பகத்து வீட்டில் நடப்பதைப் போன்ற உள்வாங்கலைக் கொண்டுவருகிறது.
அதென்னவோ, கடைசியில காதலர்களைக் கொன்னுட்டா படம் வெற்றி அடைஞ்சிடும் என்ற எண்பதுகளின் senti'mental' formula இந்தப் படத்திலும் ஆளப்பட்டிருப்பது வருத்தம் தான். அண்மையில் வந்த வெண்ணிலா கபடிகுழு, பட்டாளம் போன்றவையும் பட இறுதியில் ஒரு பிரதான கதாப்பாத்திரத்தைக் காவல் கொடுத்திருக்கிறது இங்கே குறிப்பிட வேண்டிய விசயம்.
‘காதலர்கள் கொண்டாடும்’ கு.பூவும் கொ.புறாவும் அல்ல, காதலர்களைக் கொன்றாடும் ‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’
3 கருத்துகள்:
//குசேலன் போலிஸ் வண்டியிலிருந்து அதைப் பாஎத்துக் கொண்டே துவைத்த துணியாய் துவண்டு மாய்கிறான். இப்படி கதை முடிகிறது. //
அடடே..,
//குசேலனைச் ‘கொச்சி’ என்றும் துளசியைத் ‘தொளசி’ என்றும் அழைப்பதும்,//
என்னவோ நெரடுதே..,
சிறப்பு...கடைசியா வரும் அந்த மனதை நெருடும் பாடலைப் பற்றி போடலையா??? அது சூப்பருங்க...
//தெய்வம் போட்ட கணக்கு, தீர்ப்பைக் கேளு உனக்கு, காலம் என்பது கண்மூடுது, மீண்டும் பிறந்திடு...
உண்மை அன்பு உறங்கவிடாது, உன்னை என்னை இறங்கவிடாது, கண்னை மூடி உள்ளே வாழும் கனவு கதையிது...
வந்த போதும் தனித்தனியாக, வாழ்ந்த காலம் பிரிவினையாக, செல்லும் போது வாழ்ந்தகூடு சேர்ந்து போகுது...
ஆட வந்த மேடையிது, ஆட்டம் முடிந்து அடங்கியது, பாட வந்த பாடலெது, பதில் தேடுது...
தெய்வம் போட்ட கணக்கு, தீர்ப்பைக் கேளு உனக்கு, காலம் என்பது கண்மூடுது, மீண்டும் பிறந்திடு...//
கருத்துரையிடுக