பக்கங்கள்

செவ்வாய், 15 மார்ச், 2011

தித்திக்கும் உப்பு

*தித்திக்கும் உப்பு*

ஒரு வியக்கத்தகு காதல் கதை

(மொழி பெயர்ப்பு கதை)


அவன் அவளை ஒரு விருந்து நிகழ்ச்சியில் கண்டான். அவள் தேவதை போல இருந்தாள், நிறைய பேர் அவளை மொய்த்துக் கொண்டனர், இப்படியிருக்க அவன் ரொம்பவே சாதாரணமாய் இருந்தான், யாரும் கண்டுகொள்ளவில்லை.


விருந்து முடிய, அவன் அவளைக் கொட்டைநீர் பானம் அருந்த அழைத்தான், அவள் மிரண்டுப் பார்த்தாள், ஆயினும் அவனது அடக்கமான தொணி அவளைச் சம்மதிக்க வைத்தது. ஒரு கடையில் அமர்ந்தனர், பானம் வந்தது. அவளுக்கு சொல்ல முடியா நடுக்கம், சீக்கிரம் வீட்டுப் போனால் போதும் என்றிருந்தது... அவனுக்கு அதிகபட்ச பதற்றம், திடீரென கடை ஊழியனை நிறுத்தினான். "னக்கு கொஞ்சம்... கொஞ்சம் உப்பு கிடைக்குமா, எனது பானத்தில் சேர்த்துக் கொள்ள." அங்கிருந்த அனைவரும் அவனை ஒரு விதமாக பார்த்தனர், என்ன விந்தையானவன்! சிவந்தது அவன் முகம், ஆனால் வந்த உப்பை, கொட்டைநீர் பானத்தில் கொட்டி கலக்கி குடிக்கலானான்.




அவள் ஆர்வமாகக் கெட்டாள், "எப்படி உங்களுக்கு இந்த பழக்கம்?" அவன் சொன்னான்: "நான் சின்ன வயசுல கடல் ஓரமாத்தான் வாழ்ந்து வந்தேன், கடல்லத்தான் வெள்ளாடுவேன், கடலோட சுவையே சுவை, ம்ம்ம்... இந்த கரிக்கும் கொட்டைநீர் பானம் போலவே... எப்போவெல்லாம் இந்த கரிக்கும் பானத்தைக் குடிக்கிறேனோ, அப்போவெல்லாம் எனது இளமைப் பருவத்த நினைச்சிப்பேன், என்னுடைய ஊரு ஞாபகம் வந்திடும், ரொம்பவே அத நினைச்சி ஏங்குறேன், அங்கு இன்னும் வசிக்கிற என் அப்பா அம்மா ஏக்கம் வந்திடும். சொல்லும்போதே அவன் கண்கள் கசிந்தன. அவள் உணர்ச்சி வசமானாள். அது அவனது உண்மை உணர்வுகள், அடிமனத்தின் வெளிப்பாடு. எந்த ஓர் ஆண் குடும்பபலவீனம் பூண்டிருக்கிறானோ, அவனே குடும்பத்தை நன்கு நேசிப்பவனாகவும், குடும்ப பொறுப்பு உள்ளவனாகவும் இருப்பான். பிறகு, அவளும் பேசத் தொடங்கினாள், அவளது சொந்த ஊர், அவளது சிறார் பருவம், குடும்பம் என. அரட்டை நீண்டது, மேலும் அவர்கள் கதைக்கு, அது நல்ல துவக்கமும் கூட.


அவர்கள் தொடர்ந்துச் சந்தித்தனர் அவ்வப்போது. அவனை அவள் தனது கோரிக்கைகளுக்கு உட்பட்டவனாய் பார்த்தாள்; விட்டுக் கொடுப்பவன், தூய மனம், இதமானவன், எச்சரிக்கையானவன். மொத்ததில் ஒரு குணாளன், அவனிடம் தன் மனதைப் பறிக்கொடுத்தாள்!


அந்த கரிக்கும் கொட்டைநீருக்கு நன்றிகள் பல!


பின், எல்லா காதல் கதையிலும் வருவதைப் போலவே, அந்த இளவரசன் இளவரசியைச் செவ்வனே கரம் பிடித்தான், இல்லற வாழ்வை இனிதே நடத்தினர். வேடிக்கை என்ன தெரியுமா? ஒவ்வொரு முறையும் அவள் கொட்டைநீர் தயாரிக்கும் போது, அவனது கோப்பையில் மட்டும் சீனிக்குப் பதில் உப்புதான், அவனுக்கு அப்படித்தான் பிடிக்குமென்று.


நாற்பது வருட தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிறகு அவன் இயற்கை எய்தினான், ஒரு கடிதத்தை அவளுக்கு எழுதி வைத்துவிட்டு: "என் ஆருயிரே, என்னை மன்னித்துவிடு, என் வாழ்நாள் பொய்யை மன்னித்துவிடு, இதுதான் நான் உன்னிடம் சொன்ன ஒரே பொய் கரிக்கும் கொட்டைபானம்... நமது முதல் சந்திப்பு.... ஞாபகம் வருகிறதா? நான் அத்தருணம் பதற்றத்தோடு இருந்தேன், உண்மையில் சக்கரையைக் கேட்பதற்குப் பதிலாகத்தான் உப்பு என்று உளறித் தொலைத்தேன், அந்த சொதப்பலே நமது உரையாடலை வலுப்படுத்தும் என நான் அப்போது நினைக்கவில்லை.. பின்னாட்களில், எத்தனையோ முறை சொல்ல நினைத்தும், அச்சம் என்னை மிரட்டியது, எதற்காகவும் உன்னிடம் பொய் சொல்லமாட்டேன் என நான் கொடுத்த வாக்கு!



நான் இப்போழுது மரணப்படுக்கையில், இப்பொழுதும் இதைச் சொல்லாவிட்டால்...! எனக்கு கரிக்கும் பானமே பிடிக்காது, என்ன கொடுமையான சுவை... முன்னாளில் இதுபோன்ற கரிக்கும் பானத்தை நான் நாக்கில் வைத்ததேயில்லை. உன்னைப் பார்த்தப் பின்பு, உனக்காக செய்த எதற்கும் நான் வருந்தியதில்லை. உன்னை அடைந்ததே என் வாழ்நாளின் எல்லையில்லா மகிழ்ச்சி. இன்னொரு பிறவி இருந்தால், உன்னை நான் மீண்டும் பார்க்க வேண்டும், வாழ்க்கை முழுதும் உன்னோடே வேண்டும், உனக்காக மீண்டும் கரிக்கும் கொட்டைநீர் பானம் அருந்துவதாயினும் இன்பமாக ஏற்பேன்."


அவள் கண்கள் கனத்தன, கடிதம் ஈரமானது.


நாட்கள் உருண்டோடின.


பின்னாளில் யாரோ ஒருவர் அவளிடம் வேடிக்கையாய் கேட்டு வைத்தார்: "உப்பு போட்டு தண்ணீர் கலக்கினா எப்படி இருக்கும்...?"


அவள் தன்னிலை மறந்து சொன்னாள்: "அது தித்திக்கும்"