பக்கங்கள்

திங்கள், 15 டிசம்பர், 2008

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு

மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு




14 டிசம்பர் 2008 - மலேசிய தமிழ் வலைப்பதிவர் வரலாற்றில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நாளாகவே இனி வருங்காலங்களில் உணரப்படும். தலைநகரில் செந்தூல் என்ற சிற்றூரில் முதலாவது மலேசிய தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு இனிதே நடைப்பெற்றது.



கெடாய் காரி கெப்பாலா ஈக்கான் (மீன் தலைக்கறி கடை) என்ற உணவகத்தில் மதிய நேரம் இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது. இடத்தை தேடிப் பிடிக்கவே படாத பாடு பட்டோம், எங்களில் பலர். நான் பினாங்கில் இருந்து பேருந்தில் சென்று புடுராயா பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அங்கே விக்னேசும் டாக்டர் சிந்தோக்கும் காத்துக் கொண்டிருந்தனர். மெது உணவு அருந்திவிட்டு செந்தூலுக்கு எல்.ஆர்.டீ மூலம் சென்றோம். அங்கே இனியவள் புனிதாவும் உணவகத்தைத் தேடும் வேட்டையில் இணைந்துக் கொண்டார். மழை தூற, பக்கத்தில் இருந்த ஓர் உணவகத்தில் தஞ்சம் புகுந்தோம். அந்த உணவகம்தான் “மீன் தலைக்கறி கடை” என பின்பு உறுதி செய்யப்பட்டது.

னி விவரங்கள் செய்தி வடிவில்:


அங்கே எழுத்தாளரும் கவிஞருமான திரு ஏ.எஸ்.பிரான்சிஸ் காத்துக் கொண்டிருந்தார். ஓர் அகண்ட மேசையில் அமர்ந்தோம். ஒருவர் பின் ஒருவராக அனைவரும் வந்து சேர்ந்தனர். இடைப்பட்ட நேரத்தில், கவிஞர் பிரான்சிஸ் தமது “சாசனம்” மற்றும் “மக்கள் சக்தி” புத்தகங்களை எங்களிடம் விநியோகித்தார். ஒருவரை ஒருவர் தெரிந்துக் கொள்ள அறிமுக சுற்று நடந்தது. பள்ளிகளில் ஒரியேண்டேஷன் என்பார்களே... அது போல
உணவகம் என்றாலே கூச்சலுக்கும் இரைச்சலுக்கும் பஞ்சம் இருக்காது. அங்கேயும் அதே நிலைதான். ஆதலால், அறிமுக சுற்றில் எல்லார் பேசியதையும் ஒரு குத்து மதிப்பாகக் கேட்டு தான் இங்கே எழுதி உள்ளேன், பொறுத்தருள்க, சந்திப்பில் கலந்துக் கொண்ட நண்பர்கள் - திருத்த தயாராய் இருங்கள்.


முதலில் கவிஞர் பிரான்சிஸ் தம்மை அறிமுகப் படுத்திக் கொண்டார். இதுவரை இருபது புத்தகங்கள் எழுதியுள்ளார். அண்மையில்தான் இணைய வலைப்பூவில் நுழைந்துள்ளதாகவும் தெரிவித்தார். “கயல்விழி” இவரது கைவண்ணத்தில் மலரும் வலைப்பூ.


அவரை அடுத்து திரு மு.வேலனின் அறிமுகம். “அரங்கேற்றம்” இவரது பதிவேற்றம். ஆக்டோபரில் பிள்ளையார் சுழியிட்டு இன்றுவரை எழுதி வருகிறார். பொதுவாக தன்னைச் சுற்றி நிகழ்வதை மையமாக வைத்தே தனது வலைப்பூ பின்னப் படுவதாகச் சொன்னார். பன்னிரண்டு காலமாக இணையத்தில் வெறும் வாசகராகவே இருந்தவர். வலைப் பதிவு மக்களிடையே நல்ல கருத்து பரிமாற்றத்தைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மூன்றாவது அறிமுக நண்பர், திரு ஜேஷாண்ட் (பெயர் சரியாக எழுதப்பட்டுள்ளதா என நண்பர்களே, சரிபாருங்கள்). இவர் இன்னும் வலைப்பூ தொடுக்காத நண்பர், விரைவில் துவங்குவார். “இங்கே எதுக்கு வந்திருக்கேன்ன்னு எனக்கே தெரியலை” என்று சிரிக்காமல் சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


இவரை அடுத்து குமாரி பவானிஸ்-இன் அறிமுகம்“கனைகள்” என்ற ஒரு மாத வயதான வலைப்பூவின் உரிமையாளர். கவிதைகள் நிறைய எழுதுவாராம். தன்னை வலை உலகத்துக்கு இட்டு சென்ற வேலனை அப்போது நினைவு கூர்ந்தார். பலருக்கு வலைப்பதிவைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று வருத்தப் பட்டார். பதிவர்களின் மொழி திறன் தன்னைப் பிரமிக்க வைப்பதாகச் சொன்னார்.


குமாரி இனியவள் புனிதா என்னைப் போலவே அமைதியாகவே இருந்தவரில் ஒருவர். ஈராயிரத்தாறில் இருந்து இவர் எழுதி வரும் வலைப்பூ – “ஜில்லென்று ஒரு மலேசியா" . இவர் ஓர் அரசாங்க அதிகாரி, ஆக நண்பர்களே சற்று கவனம்...


அடுத்து திரு அனந்தனின் அறிமுகம். என்னைப் பற்றி என்ன சொல்வது? வெறும் நான்கு மாதமாகத்தான் “முடிவிலானின் எழுத்துக்கள்” என்ற வலைப்பூவின் மூலம் எழுதி வருகிறேன். சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.


என்னை அடுத்து, திரு ஜி.எஸ்.ஷான் அவர்களின் அறிமுகம். இன்னும் வலைப்பதிவு ஏற்படுத்திக் கொள்ளாதவர். தன்னை ஓர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் என அறிமுகப் படுத்திக் கொண்டார். திரு சதீசின் மூலம் இந்த சந்திப்பு தெரிய வந்ததாகச் சொன்னார். வலைப்பதிவில் காலடி வைக்க நிறைய உழைக்க வேண்டும் போல என புன்னகையோடு சொன்னார்.


அடுத்த அறிமுகம், வந்தவர்களில் பலருக்கு ஏற்கனவே அறிமுகம். இன்னும் சொல்லப் போனால் இந்த சந்திப்பின் காந்தம், திரு விக்கினேஷ்வரன் அடைக்கலம். “வாழ்க்கை பயணம்” இவரின் வலைப்பூ. 2006ல் இருந்து வாசிக்கத் துவங்கியவர் இவ்வாண்டு எழுதத் துவங்கி உள்ளார். இணையத் தாக்கம் இளையோரிடம் குறைந்துக் காணப்படுவதாகத் தெரிவித்தார். சிங்கை வலைப்பதிவர்களின் கன எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டினார். நமது வலைப்பதிவர்களின் கருத்து சுதந்திரத்தைப் பற்றியும் கேள்வி எழுப்பினார்.


அடுத்த அறிமுகம் டாக்டர் சிந்தோக். தனக்கென தனி வலைப்பதிவு ஒன்றைப் பின்னாமல் இருந்தாலும், நிறைய வலைப்பதிவை இன்றுவரை வாசித்து வருவதாகவும், வலைப்பூக்களுக்கு மறுமொழி இடுவதில்தான் தனக்கு விருப்பம் அதிகம் என சொன்னார். 2003 துவங்கி இவரது இணைய வலைப்பூ வாசிப்பு பழக்கம் இன்றுவரை நீடித்து வருகிறது. இணையத்தைப் பற்றியும் இணையத்தில் தமிழ் ஊடுருவல் பற்றியும் நிறையவே சொன்னார். “ஏன் நீங்கள் ஒரு தனி வலைப்பூ பின்னக்கூடாது?” - சபையில் எழுந்தக் கேள்விக்கு “சேம்பேறித்தனம்தான் காரணம்” என நகைச்சுவையோடு சமாளித்தார். வலைப் பதிவாளர்களுக்கு ஒரு முன்னோடி டாக்டர் சிந்தோக் என வர்ணித்தார், விக்னேஷ்.


திரு குமரன் மாரிமுத்து வேறொரு நிகழ்வில் கலந்துக் கொண்டு, கிட்டிய நேரத்தில் நம்மோடு இணைந்தார். விரைவில் வலைப்பூ துவங்க ஆவலாய் இருப்பதாய் சொன்னார். இவர் முன்பு வானொலியில் பேசி உள்ளதாகவும் தெரிவித்தார். நாளேடுகளுக்கு தான் அனுப்பும் எழுத்துக்கள் துண்டாடப் படுவதாகவும், இணையமே இனி நடுநிலை ஊடகம் என கோடி காட்டினார்.


திரு நேசா, ஆங்கிலத்தில் வலைப்பூ எழுதுபவர். கூடிய விரைவில் தமிழிலும் எழுதவுள்ளார். தமிழில் தட்டச்சு செய்வதைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டார், இங்கே கூடி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாய் தெரிவித்தார்.


சந்திப்பில் சஞ்சிகை வெளியீடு பற்றி பேசப்பட்டது. ஆண்டுக்கு இரு மலர்கள் என மு.வேலன் முன்மொழிந்தார். அச்சு இதழ்கள் எப்படி முறைப்படி செய்வது என விக்னேஷ், கவிஞர் பிரான்சிஸின் ஆலோசனையை நாடினார். பதிவர்கள் ஒருமித்த நோக்கத்தோடு எழுத வேண்டும் என பவானிஸ் முன்மொழிந்தார். அவ்வாறு செய்வதால், எழுத்தாளர் சுதந்திரம் மறித்துப் போகலாம் என விக்கினேஷ் தெரிவித்தார். பொது மக்களிடையே பதிவர் பற்றிய விழிப்புணர்வு அவசியம் என பவானிஸ் மேலும் கருத்து தெரிவித்தார். டாக்டர் சிந்தோக் பேசுகையில் இணையமே இனி மக்களுக்கு சிறந்த ஊடகம் என் ஆணித்தரமாகச் சொன்னார்.


முக்கிய அலுவல் இருப்பதால் பவானிஸ், முவேலன் மற்றும் ஜேஷாண்ட் விடைபெற்றனர்.


விக்னேஷும் டாக்டர் சிந்தோக்கும் வலைப்பூ எப்படி பதிவது, எவ்வாறு பின்னுவது போன்ற சூட்சமங்களைப் புதியவர்களுக்காக கற்று கொடுத்தனர்.
சில நேரம் கழித்து, எங்கே எங்கே என தேடப்பட்ட திரு மூர்த்தி வந்தார். கலகலப்பாக பேசினார். அவர் தான் அந்த சந்திப்புக்கான இடத்தை தேர்ந்தெடுத்தவர். அவர் அன்றைய இறுதி மற்றும் பன்னிரண்டாவது அறிமுகம். சித்த வைத்தியர். விக்னேஷின் தீவிர ரசிகர் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.


அடுத்த சந்திப்பு பற்றி பேசப்பட்டது. மேலும் சில நிமிடங்கள் பேசினோம், புகைப் படம் எடுத்துக் கொண்டோம். பின்பு மகிழ்ச்சியுடன் கிளம்பினோம்.


மேலும் விரிவான செய்திகளைப் பெற இதர நண்பர்களின் வலைப்பூக்களை வலம் வரவும்.


இப்போது கீழே ஒரு மறுமொழி இட்டு உங்கள் வருகையை அம்பலப் படுத்துங்கள்!

13 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

உள்ளேன் ஐயா...

Sathis Kumar சொன்னது…

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைப்பெறுவதில் கைக்கோர்த்த அன்பர் அனந்தனுக்கு வாழ்த்துகள்..

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

உள்ளேன் ஐயா!!

ஜோ/Joe சொன்னது…

பதிவர்களின் வலைப்பூக்களை குறிப்பிடும் போது அதற்கான சுட்டிகளையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

A N A N T H E N சொன்னது…

//பதிவர்களின் வலைப்பூக்களை குறிப்பிடும் போது அதற்கான சுட்டிகளையும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.//

இன்னும் முழுமையான பட்டியலுக்கு இங்கே தாவுங்கள்
http://ta.wikipedia.org/wiki/மலேசியத்_தமிழ்_வலைப்பதிவர்கள்

வருகைக்கு நன்றி

A N A N T H E N சொன்னது…

வருகைக்கு நன்றி @ சதீசு குமார் & Viknes

சி தயாளன் சொன்னது…

வாழ்த்துகள்...

பெயரில்லா சொன்னது…

//குமாரி இனியவள் புனிதா என்னைப் போலவே அமைதியாகவே இருந்தவரில் ஒருவர். ஈராயிரத்தாறில் இருந்து இவர் எழுதி வரும் வலைப்பூ – “ஜில்லென்று ஒரு மலேசியா". //

தயவு செய்து திருத்திக் கொள்ளவும் .. ஈரமான நினைவுகள் என்பதுதான் சரி...ஜில்லென்று ஒரு மலேசியா அல்ல :-)

//இவர் ஓர் அரசாங்க அதிகாரி, ஆக நண்பர்களே சற்று கவனம்...//

அரசாங்க அதிகாரி மட்டும்தானே ISA அதிகாரியில்லையே :-)

து. பவனேஸ்வரி சொன்னது…

வணக்கம்,
பதிவர் சந்திப்பில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனது பெயரில் மாற்றம் செய்துள்ளீர்கள்...பரவாயில்லை...:) வரும் காலங்களில் பெயர் கொலை செய்யாமல் இருங்கள்.

ஜெகதீசன் சொன்னது…

வருகையை அம்பலப் படுத்திவிட்டேன்...
:)

A N A N T H E N சொன்னது…

து. பவனேஸ்வரி @ அப்பவே விக்கினேஷ் தவற்றைச் சுட்டி காட்டினார், நானும் மாற்றினேன், அது முழுமையாகச் செய்யப்படவில்லை என நினைக்கிறேன். சரி லூஸ்ல விடுங்க

இனியவள் புனிதா @ அது ஒரு பெரிய கதைங்க... உங்க PROFILE போய் தேடினேனா, அங்கெ உங்க வலைப்பூ பட்டியல் கீழே"ஈரமனா நினைவுகள்" இல்லை, அதனால, இருந்த தலைப்பை இங்கே எழுதிட்டேன்.

ஜெகதீசன் @ வருகைக்கு நன்றி, அம்பலமாயிடுச்சு!

'டொன்' லீ @ நன்றி

பெயரில்லா சொன்னது…

//இனியவள் புனிதா @ அது ஒரு பெரிய கதைங்க... உங்க PROFILE போய் தேடினேனா, அங்கெ உங்க வலைப்பூ பட்டியல் கீழே"ஈரமனா நினைவுகள்" இல்லை, அதனால, இருந்த தலைப்பை இங்கே எழுதிட்டேன்.//

அது மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் என்னுடைய வலைப்பதிவு 'ஈரமான நினைவுகள்' என்பது மட்டுமே சரி.. அதனால் தயவு செய்து மாற்றி விடுங்கள் அனந்தன். நன்றி. தங்களின் அறிமுகம் பதிவர் சந்திப்பில் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி :-)

A N A N T H E N சொன்னது…

வருகைக்கு நன்றி தூயா